Published:Updated:

என்னால் ஸ்டாலினை விமர்சிக்க முடியாது! - ஒப்புக்கொள்கிறார் குட்டி பத்மினி

குட்டி பத்மினி
பிரீமியம் ஸ்டோரி
குட்டி பத்மினி

தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் எனப் பல்வேறு கட்சிகளிலிருந்து என்னை அழைத்தார்கள். ஆனால், எனக்கு மோடியை மிகவும் பிடித்திருந்தது.

என்னால் ஸ்டாலினை விமர்சிக்க முடியாது! - ஒப்புக்கொள்கிறார் குட்டி பத்மினி

தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் எனப் பல்வேறு கட்சிகளிலிருந்து என்னை அழைத்தார்கள். ஆனால், எனக்கு மோடியை மிகவும் பிடித்திருந்தது.

Published:Updated:
குட்டி பத்மினி
பிரீமியம் ஸ்டோரி
குட்டி பத்மினி

பா.ஜ.க-வில் மாநில செயற்குழு உறுப்பினராக இருந்த நடிகை குட்டி பத்மினி, அந்தக் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார். சமீபத்தில் நடந்த நடிகர் சங்கத் தேர்தலில் துணைத் தலைவராக வெற்றி பெற்றிருப்பவரிடம் பா.ஜ.க-விலிருந்து விலகியதற்கான காரணம், தி.மு.க., அ.தி.மு.க விவகாரங்கள், நடிகர் சங்கத் தேர்தல் சர்ச்சை எனப் பல்வேறு விஷயங்கள் குறித்து உரையாடினோம்...

“பா.ஜ.க-விலிருந்து விலகியதற்கு உண்மையான காரணம் என்ன?”

“முதல்வர் ஸ்டாலின் சிறப்பாகச் செயல்பட்டுவரும் நிலையில், அவரை எதிர்த்து பேசவேண்டியிருக்கிறது. ஆளுங்கட்சியினரைத் திட்டுவதுதான் எதிர்க்கட்சி செய்யவேண்டிய அரசியல் என்கிறார்கள். அதற்காக பா.ஜ.க-வினர் என்னை, ஸ்டாலினைத் திட்டச் சொன்னார்கள் என்று எடுத்துக்கொள்ள வேண்டாம். பொதுவாக இருக்கும் அரசியல் நடைமுறையைச் சொன்னேன். காரணமில்லாமல், பிற கட்சியினரைக் குறை சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. அதனால், அரசியல் எனக்குச் சரிப்படாது என்று விலகிவிட்டேன்!”

“சென்சார் போர்டு உறுப்பினர் பதவியை நீங்கள் எதிர்பார்த்ததாகவும்... அது கிடைக்காததால்தான் பா.ஜ.க-விலிருந்து விலகியதாகவும் சொல்கிறார்களே?

“யார் சொன்னது? பா.ஜ.க-வில் இல்லாமலேயே எனக்கு சென்சார் போர்டில் பணியாற்றுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. நான்தான் தவிர்த்துவிட்டேன். இப்போது வரும் அறுவையான சினிமாக்களை யார் தினமும் பார்ப்பது?”

“தி.மு.க மீது பா.ஜ.க-வினர் வைக்கும் கடுமையான விமர்சனங்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“சொந்த உழைப்பில் ஸ்டாலின் இந்த நிலைமைக்கு வந்திருக்கிறார். பல ஆண்டுகளாகக் கலைஞர் டி.வி-யில் `ராமானுஜர்’ உள்ளிட்ட பல நாடகங்களில் நடித்திருக்கிறேன். ‘முரசே முழங்கு’ உள்ளிட்ட ஸ்டாலின் எழுதிய நாடகங்களிலும் நடித்திருக்கிறேன். சிறு வயதிலிருந்தே ஸ்டாலினை எனக்கு நன்றாகத் தெரியும். என்னால் அவரை விமர்சிக்க முடியாது. விமர்சிக்கும் அளவிலும் அவரது ஆட்சி இல்லை. தமிழ்நாட்டில் தி.மு.க-வை எதிர்த்து இனி யாருமே வர முடியாது என்பதுதான் என் கருத்து. இதைச் சொல்வதால் நான் தி.மு.க-வில் சேரப்போகிறேன் என்று நினைக்க வேண்டாம்.”

“இவ்வளவு சொல்லும் நீங்கள் ஏன் பா.ஜ.க-வில் இணைந்தீர்கள்?”

“தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் எனப் பல்வேறு கட்சிகளிலிருந்து என்னை அழைத்தார்கள். ஆனால், எனக்கு மோடியை மிகவும் பிடித்திருந்தது. மோடி முதல்வரான பிறகு குஜராத் அடைந்த வளர்ச்சியைப் பார்த்து, மோடி பிரதமரானால் நன்றாக இருக்குமே என நினைத்தேன். அவரது வாழ்க்கை வரலாற்றைப் படித்தபோது அவரது எளிமை, அவர் செய்த சாதனைகள் என்னைக் கவர்ந்தன. நான் தீவிரமான இந்து மத நம்பிக்கையாளர் என்பதால் என் மனம் பா.ஜ.க-வை நோக்கிச் சென்றது.”

“ஆனால், 11 வருடங்கள் பா.ஜ.க-வில் பொறுப்பில் இருந்தாலும் நீங்கள் ஆக்டிவ்வாக இல்லையே?”

“உள்ளூர் அரசியலில் எனக்கு விருப்பமில்லை. எனது ஆர்வமெல்லாம் தேசிய அரசியலில்தான் இருந்தது. தேசிய அளவிலான பொறுப்புகளில் செயல்பட வேண்டும் என்பதுதான் என் நோக்கமாக இருந்தது. குறிப்பாக ‘பிருந்தாவன்’ என்று அழைக்கப்படும் மதுராவில் வேலை செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால், இவர்கள் என்னை தேசிய அரசியலுக்கு அனுப்பவில்லை.”

என்னால் ஸ்டாலினை விமர்சிக்க முடியாது! - ஒப்புக்கொள்கிறார் குட்டி பத்மினி

“ஒருமுறை நீங்கள் அளித்த பேட்டியில், ‘ஜெயலலிதா போன் பண்ணியிருந்தால் நான் வழக்கே போட்டிருக்க மாட்டேன்’ என்று கருணாநிதி சொன்னதாகச் சொல்லியிருக்கிறீர்கள்... எந்தச் சந்தர்ப்பத்தில் இது நடந்தது?”

“சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா கைதானபோது தனியார் தொலைக்காட்சிக்கு நான் அளித்த பேட்டியில், ‘ஒரு நடிகையாக என்னிடமே ஐந்தாயிரம் புடவைகள் இருக்கும்போது, ஜெயலலிதாவிடம் இருக்கக் கூடாதா?’ என்று சொன்னேன். அப்போது பலரும் என்னை விமர்சனம் செய்தார்கள். ஆனால், கலைஞர் என்னை அழைத்து ‘அந்தம்மா என்னிடம் ஒரு போன் பண்ணிச் சொல்லியிருந்தால் வழக்கே போட்டிருக்க மாட்டேன்... ஆனா, அவங்க பேசலையே’ என்று ஆதங்கப்பட்டார். அப்போது ‘ஜெயலலிதா, கலைஞருக்கு ஒரு போன் பண்ணியிருக்கலாம். ஈகோவால் இப்படிக் கஷ்டப்பட்டுட்டாங்களே’ என்று நினைத்தேன்!”

“ஜெயலலிதாவின் மரணத்தையொட்டி அ.தி.மு.க-வில் தற்போது வரை நடக்கும் விவகாரங்களை கவனித்துவருகிறீர்களா?”

“ஒரு பெண்ணாக ஜெயலலிதாவுக்கு நடந்ததைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அவருக்காக அவ்வளவு அழுதிருக்கிறேன். பிரார்த்தனை செய்திருக்கிறேன். ஆனால், அவர்கள் முறையாக அவருக்குச் சாந்தி அடையும் சடங்கைக்கூடச் செய்யவில்லை. ஜெயலலிதா மரணத்தை வைத்து அவர்கள் செய்த அரசியலையெல்லாம் பார்க்கும்போது எனக்கு விரக்தியாக இருக்கிறது!”

“நடிகர் சங்கத் தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாகச் சொன்னார்களே?”

“அதனால்தான் மறு வாக்குப்பதிவே நடந்தது. 300-க்கும் மேற்பட்ட வாக்குகள் பதிவாகாதபோதும் அனைத்து வாக்குகளும் பதிவுசெய்யப்பட்டன என்றார்கள். அது தவறு. அதோடு ஐசரி கணேசன் நடிகர் சங்கத்தை முறையாக நடத்தவில்லை. பூச்சி முருகன், நான் உட்பட எந்த மூத்த உறுப்பினர்களுக்கும் சரியான மரியாதை தரப்படவில்லை. அதனால்தான் நீதிமன்றம்வரை சென்று மறு வாக்குப்பதிவுக்கான உத்தரவை வாங்கி தற்போது சிறப்பாக நடத்தி முடித்திருக்கிறார்கள். இப்போது பொறுப்பேற்றுள்ள விஷால், கார்த்தி தலைமையிலான அணியினர் நிச்சயம் நடிகர் சங்கத்திலிருக்கும் சிக்கல்களையெல்லாம் சரி செய்து, விரைவில் சங்க கட்டடப் பணிகளையும் முடிப்பார்கள்.”

“அரசியலிருந்து விலகுவதாகச் சொல்கிறீர்கள்... இதற்கு 11 ஆண்டுகள் தேவைப்பட்டனவா?”

“ஆமாம், மனது இப்போதுதான் பக்குவப்பட்டிருக்கிறது. என் மனதில் ஆன்மிகம் குடிகொண்டுவிட்டது. ஆச்சார்யாரிடம் தீட்சை எடுத்துக்கொண்டேன். இனி என் வாழ்வில் அரசியலுக்கு இடமே இல்லை!”