Published:Updated:

`முதல்வர் பிக்பாஸ் பார்க்குறாரா, அவருக்கு 18 வயசா, சரித்திரம் தெரியாதவர்!' - ஶ்ரீப்ரியா அதிரடி

ஶ்ரீப்ரியா
ஶ்ரீப்ரியா

கமல்ஹாசன் பற்றி முதல்வர் தெரிவித்த கருத்துகள் குறித்து, மக்கள் நீதி மய்யம் கட்சியைச் சேர்ந்த நடிகை ஶ்ரீப்ரியாவிடம் பேசினோம்.

ரியலூரில் நேற்றைய முன் தினம் நடந்த அரசு நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். அதில் பேசியவர், ``புதிதாக கட்சியில் சேர்ந்துள்ள கமல், ரிட்டயர்டு ஆகி அரசியலுக்கு வந்துள்ளார். அவருக்கு அரசியல் பற்றி என்ன தெரியும்? 70 வயதாகும் அவர் `பிக்பாஸ்' நடத்திக்கொண்டிருக்கிறார். அந்த நிகழ்ச்சியை நடத்துபவரெல்லாம் அரசியல் செய்தால் எப்படி இருக்கும்? `பிக்பாஸ்' பார்த்தால் ஒரு குடும்பம்கூட நன்றாக இருக்காது. அந்த நிகழ்ச்சியைப் பார்த்தால், குழந்தைகளும் கெட்டுப்போய்விடும், நன்றாக இருக்கும் குடும்பமும் கெட்டுவிடும். கமலின் படங்களைப் பார்த்தால் அதோடு அந்தக் குடும்பம் காலி" எனக் காட்டமாக கமல்ஹாசனை விமர்சித்திருந்தார்.
கமல்ஹாசன் - ஶ்ரீப்ரியா
கமல்ஹாசன் - ஶ்ரீப்ரியா

இதற்கு எதிர்வினையாற்றும் வகையில் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள கமல்ஹாசன், ``முதல்வரும் `பிக்பாஸ்' பார்க்கிறார் என்பது மகிழ்ச்சியளிக்கிறது" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

கொரோனா பிரச்னை விஸ்வரூபம் எடுத்த நிலையில், அவற்றையெல்லாம் கடந்தும் பேசுபொருளாக மாறியது தற்போது நடைபெற்றுவரும் விஜய் டிவியின் `பிக்பாஸ்' நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியின் வார இறுதியில் தொகுப்பாளராக வரும் கமல்ஹாசன், தனது பேச்சில் அரசியல் கருத்துகளை மறைமுகமாக முன்வைப்பது வழக்கம். சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரத்தைத் தொடங்கியுள்ள கமல், மத்திய, மாநில அரசுகளை விமர்சித்துப் பல்வேறு கருத்துகளையும் தெரிவித்துவருகிறார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

இந்த நிலையில், கமல்ஹாசன் பற்றி முதல்வர் தெரிவித்த கருத்துகள் குறித்து, மக்கள் நீதி மய்யம் கட்சியைச் சேர்ந்த நடிகை ஶ்ரீப்ரியாவிடம் பேசினோம். இவர், `பிக்பாஸ்' நிகழ்ச்சியைத் தொடர்ந்து பார்ப்பதோடு ட்விட்டரில் கருத்து தெரிவித்துவருவது குறிப்பிடத்தக்கது.

``கமல் சாருக்கு 70 வயசுன்னு முதல்வர் சொன்னதே தவறு. அவருக்கு இன்னும் 70 வயசாகல. டொனால்டு ட்ரம்ப் 70 வயசுலதான் அமெரிக்காவின் அதிபர் ஆனாரு. இப்ப அமெரிக்காவின் புதிய அதிபராகப்போற ஜோ பைடனும் 70 வயசைக் கடந்தவர்தான். நம்ம நாட்டுலயே 70 வயசைக் கடந்த அரசியல் தலைவர்கள் யாரும் இல்லையா? அவங்க நல்ல பணிகள் செஞ்சு மக்கள் மனசுல இடம் பிடிக்கலையா? வயசுக்கும் ஒருவர் திறமைக்கும் என்ன சம்பந்தம்? இதெல்லாம் முதல்வருக்குத் தெரிய வாய்ப்பில்லைனு நினைக்கிறேன். ஏன்னா, அவர் வரலாற்றுப் பாடத்துல கொஞ்சம் வீக். முன்பு ஒருமுறை, `கம்பராமாயணம் எழுதினது சேக்கிழார்'னு சரித்திரம் தெரியாமல் சொன்னவர்தானே முதல்வர் பழனிசாமி!

கமல்ஹாசன்.
கமல்ஹாசன்.

எந்த வயசுலயும் கமல் சார் லஞ்சம் வாங்கலையே. இன்னும் உழைச்சுத்தானே சம்பாதிக்கிறாரு. கமல் சாரின் வயசை விமர்சனம் செய்யுற முதல்வருக்கு வயசு 18 இல்லையே! நாம வாக்களிச்சு வெற்றி பெற்ற முதல்வர் அவர் இல்ல. ஆனாலும், முதல்வரா இருக்காரு. அந்தப் பொறுப்புக்கு ஏற்ப அவர் பேசத் தவறிட்டார்னுதான் நினைக்கிறேன். ஆளும் அ.தி.மு.க அரசைப் பத்தி எங்க தலைவர் உட்பட எதிர்க்கட்சியினர் ஒரு குற்றச்சாட்டு முன்வெச்சா, அதுக்கு உரிய விளக்கம் கொடுக்கிறதும், தவறு நடக்கலைனு நிரூபிக்கிறதும்தானே ஆளும்கட்சி செய்ய வேண்டிய வேலை. அதைவிட்டுட்டு, `பிக்பாஸ்' நிகழ்ச்சி நடத்துபவரெல்லாம் அரசியல் பண்றாருனு சொல்றது எப்படி நியாயம்?

சனி, ஞாயிறுகள்ல அதிக டி.ஆர்.பி உள்ள நிகழ்ச்சி `பிக்பாஸ்'தான். கமல் சார் தொகுத்து வழங்குறதுதான் அதுக்குக் காரணம். இதை விவரம் தெரிஞ்சவங்க மறுக்க முடியுமா? `எல்லோரும் `பிக்பாஸ்' நிகழ்ச்சியைப் பாருங்க'ன்னு கமல் சார் சொல்லல. அதைப் பார்க்கறதும் தவிர்க்கறதும் அவரவர் விருப்பம். அந்த நிகழ்ச்சியைப் பார்த்துட்டு முதல்வர் கருத்து சொல்லியிருந்தா, அந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து பார்க்கிறவர் அதைத் தவறான நிகழ்ச்சினு எப்படிச் சொல்லலாம். ஒருவேளை பார்க்காம கருத்து சொல்லியிருந்தா, ஒரு விஷயத்தைப் பத்தி முழுசா தெரிஞ்சுக்காம கருத்து சொல்லறதும் தப்புதான். நாட்டில் பல்வேறு விஷயங்கள் நடந்தாலும், `பிக்பாஸ்' நிகழ்ச்சி பத்தி முதல்வர் உட்பட பலரும் பேசுறதுதான் அந்த நிகழ்ச்சியின் வெற்றி.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

ஒரு குழந்தை பார்க்க உகந்த நிகழ்ச்சி எதுனு பெற்றோர் ஆலோசனை கொடுப்பாங்க. அவரவர் தங்களுக்குப் பிடிச்ச நிகழ்ச்சிகளைப் பார்க்குறாங்க. `பிக்பாஸ்' நிகழ்ச்சியை வெறும் பொழுதுபோக்கு நிகழ்ச்சியா பார்த்துட்டு கடந்துபோறதுதான் சிறந்தது. கமல் சாரின் படங்கள் பத்தியும் முதல்வர் பேசியிருக்காரு. `உன்னால் முடியும் தம்பி' உட்பட சமூகத்துக்கு நல்ல கருத்துகளைச் சொல்ற மாதிரி கமல் சார் பல படங்கள்ல நடிச்சிருக்கார். அந்தப் படங்களையெல்லாம் முதல்வர் பார்த்ததில்லையா? பார்த்தும் அவருக்கு ஞாபகம் இல்லையானு தெரியல.

பிரசாரத்துல எம்.ஜி.ஆரைப் பத்தி கமல் சார் பேசுறதைப் பத்தியும் விமர்சனம் செய்யுறாங்க. அவங்கள்ல பலரும் அரசியலுக்கு வர்றதுக்கு முன்னாடியே கமல் சாருக்கு எம்.ஜி.ஆரைத் தெரியும். எம்.ஜி.ஆர் உடனான பழக்கத்தை வாய்ப்பு கிடைக்கிறப்போதானே சொல்ல முடியும். அதுல என்ன தப்பு? எல்லாமே பார்க்கிறவங்க பார்வையிலதான் இருக்கு" என்று அதிரடியாக வெடித்தவர், `பிக்பாஸ்' நிகழ்ச்சி குறித்துத் தனது தனிப்பட்ட கருத்துகளைப் பகிர்ந்தார்.

ஶ்ரீப்ரியா
ஶ்ரீப்ரியா

``இது சர்வதேச அளவிலான நிகழ்ச்சி. தமிழ்ல எப்படி இருக்கப்போகுதுனு தெரிஞ்சுக்கவே முதல் சீஸனைப் பார்த்தேன். வார இறுதி எபிசோடுகள்ல கமல் சாரின் தொகுப்பாளர் பணி பிடிச்சிருந்துச்சு. அதனால, அந்த நிகழ்ச்சியின் ரெகுலர் பார்வையாளர் ஆனேன். முதல் சீஸன்ல அந்த நிகழ்ச்சியின் அரங்கத்துக்கே ஒருமுறை போய் கமல் சார்கிட்ட பேசினேன். மூணு சீஸனையும் பார்த்தேன். இப்ப நடக்கிற நாலாவது சீஸனையும் தொடர்ந்து பார்க்கிறேன்.

ஒவ்வொரு சீஸனிலும் வெவ்வேறு விதமான மனிதர்களைப் பார்க்கிறோம். சில நேரங்கள்ல அவங்களோடு நம்மைப் பொருத்தியும், அவங்க இடத்துல நாம இருந்திருந்தா எப்படி நடந்திருப்போம்னு யோசிக்கிறோம். அந்தக் கண்ணோட்டத்துலதான் நானும் அந்த நிகழ்ச்சியைப் பார்க்கிறேன். போட்டியாளர்கள் வெளியேற்றம் செய்யப்படுறதுல நியாயமில்லாத நிலைப்பாடு எடுக்கப்படுதுனு பேசப்படுது. அதில் கமல் சாரும் மக்கள் முடிவுக்கு மாறுபட்ட நிலைப்பாட்டை எடுக்கிறதாவும், அந்த முடிவுகள்ல தலையீடு செய்றதாகவும் சிலர் பேசறாங்க. அதில் எனக்கு உடன்பாடில்லை. கட்சி விஷயம் சார்ந்தும், தனிப்பட்ட முறையில் பேசும்போதும், `இந்த வாரம் யார் சார் வெளியேறுவாங்க?'ன்னு அவர்கிட்ட முன்பு சிலமுறை விளையாட்டா கேட்டிருக்கேன். `இந்த வாரம் நிகழ்ச்சியைப் பார்த்துத் தெரிஞ்சுக்கோங்க'ன்னுதான் சொல்வார். அந்த நிகழ்ச்சி பத்தி வேறு எதையும் பகிர மாட்டார்.

ஶ்ரீப்ரியா
ஶ்ரீப்ரியா

தொகுப்பாளரா கமல் சார் பாரபட்சம் இல்லாம சரியா செயல்படுறாரு. மக்களின் குரலா வாரம்தோறும் சரியான முறையில கேள்விகள் கேட்குறாரு. `கன்டென்ட்' கொடுக்கிறவங்கதான் தொடர்ந்து நிகழ்ச்சியில் நீடிப்பாங்கன்னு சொல்லப்படுது. அப்படின்னா, சுரேஷ் சக்ரவர்த்தி சீக்கிரமே வெளியேறியது எப்படி? இதுபோல சேனல் தரப்பில் எடுக்கற முடிவுகள் பத்தி எனக்குத் தெரியாது. என்னதான் பேசினாலும், அது ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சி. அந்தக் கண்ணோட்டத்துல பார்த்துட்டுக் கடந்து போயிடணும்" என்று முடித்தார் ஶ்ரீப்ரியா.

அடுத்த கட்டுரைக்கு