Published:Updated:

“சசிகலா அரசியலுக்கு வருவதும் வராததும் அவரது விருப்பம்!”

விந்தியா அதிரடி

பிரீமியம் ஸ்டோரி
ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு கட்சியாக மின்னி மறைந்துவிடும் நட்சத்திரப் பேச்சாளர்களுக்கு மத்தியில், விந்தியா வித்தியாசமானவர். 2006-ல் அ.தி.மு.க-வின் நட்சத்திரப் பேச்சாளராகக் கட்சிக்குள் களம் இறங்கியவருக்கு 2020-ல் ‘கொள்கை பரப்பு துணைச் செயலாளர்’ புரொமோஷன் கிடைத்திருக்கிறது!

“தேர்தல் நெருக்கத்தில் மட்டுமே விந்தியா கவனம் பெறுகிறாரே..?”

“இதுநாள் வரை அ.தி.மு.க-வின் நட்சத்திரப் பேச்சாளராக மட்டுமே இருந்தேன். பொதுக்கூட்டம், தேர்தல் பிரசார கூட்டம், தலைவர்களின் பிறந்தநாள் கூட்டங்களில் பேசுவேன். இப்படி மக்களை நேரடியாக சந்தித்துப் பேசும் வாய்ப்பு அதிகமிருந்ததால், கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவி கிடைத்திருக்கலாம்.”

“இ.பி.எஸ்., ஓ.பி.எஸ் ஆகியோரின் அணிகளைச் சமாதானப்படுத்தும் வகையில் கட்சியில் பொறுப்புகள் பிரிக்கப்பட்டிருக்கின்றன. இது குறித்து மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றன், ‘அ.தி.மு.க உங்கள் சொத்து அல்ல... இஷ்டப்படி பிரிக்க...’ என்று விமர்சித்திருக்கிறாரே?’’

“பூங்குன்றன் சார் சொல்லியிருப்பது அவரது தனிப்பட்ட கருத்து. உண்மை என்னவென்று நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஏனெனில், கடந்த முறை இடைத்தேர்தலின்போதும்கூட, ‘இவர்கள் இடைத்தேர்தலை சந்திப்பது கஷ்டம்தான்’ என்றரீதியில் பதிவிட்டிருந்தார். ஆனால், தேவைப்பட்ட இடங்களில் வெற்றி பெற்றதுடன், கட்சியையும் ஆட்சியையும் ஸ்ட்ராங்காகத்தானே நடத்திக்கொண்டிருக் கிறார்கள்... எனவே, யூகங்களுக்கு நாம் பதில் சொல்ல முடியாது.’’

“சென்னை உயர் நீதிமன்றம், ‘வேதா நிலையம், ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகளான தீபா, தீபக் ஆகியோருக்குத்தான் சொந்தம்’ என்று அங்கீகரித்துவிட்ட நிலையில், தமிழக அரசு அதை நினைவு இல்லமாக்க அவசரச் சட்டம் பிறப்பிப்பதன் நோக்கம் என்ன?’’

“நீதிமன்றம் மூலம் காகிதத்தில் வேண்டுமானால் அங்கீகாரத்தை தீபா வாங்கியிருக்கலாம். ஆனால், உண்மை என்னவென்று எல்லோருக்குமே தெரியும். அம்மாவுடன் நான் பழகிய அளவுகூட தீபா பழகியது இல்லை. எனவே, அம்மாவின் நேரடி ரத்த சொந்தமாக தீபாவை என்றைக்குமே நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். அம்மா என்றைக்குமே மக்கள் சொத்துதான்! அம்மா வாழ்ந்து மறைந்த வேதா நிலையம், நினைவு இல்லமாக்கப்பட வேண்டும் என்பதுதான் தொண்டர்களின் ஆசை. அதைத்தான் தமிழக அரசு செய்கிறது.”

விந்தியா
விந்தியா

“ஆனால், ‘அத்தையுடன் என்னைச் சேரவிடாமல் தடுத்ததே சசிகலாதான்’ என்று தீபா ஏற்கெனவே புகார் கூறியிருக்கிறாரே?”

“அதை அந்த அத்தை உயிருடன் இருந்தபோதே பேசியிருக்க வேண்டும்.”

“உங்கள் கட்சி வட்டாரத்திலேயே ‘விரைவில் சசிகலா சிறையிலிருந்து வெளியே வருவார். அ.தி.மு.க அவரின் தலைமையின்கீழ் போய்விடும்’ என்கிறார்களே?’’

“எல்லாமே யூகம்தான். அம்மாவுடன் நீண்டகாலம் இருந்தவர் சசிகலா. ‘இனிமேல் நமக்கு அரசியல் வேண்டுமா, வேண்டாமா?’ என்பதைத் தீர்மானிப்பது அவரது தனிப்பட்ட விருப்பம். அதேசமயம் மீண்டும் அவர் அரசியலுக்குள் வருவதாக இருந்தால், அதை மக்களும் தொண்டர்களும் ஏற்றுக் கொள்வார்களா, மாட்டார்களா என்பதைக் காலம்தான் முடிவு செய்யும்!’’

“இன்றைய அ.தி.மு.க தலைவர்கள் சசிகலா தலைமையை ஏற்றுக்கொள்வார்களா?’’

“இதற்கு எனக்கு பதில் சொல்லத் தெரியாது. இதற்கு முன்னர் கேட்டிருந்தால்கூட, என்னுடைய தனிப்பட்ட கருத்தை நான் சொல்லியிருக்க முடியும். ஆனால், இப்போது கட்சியின் பொறுப்புக்கு வந்துவிட்ட பிறகு, என் தனிப்பட்ட கருத்தையெல்லாம் சொல்லிக்கொண்டிருக்க முடியாது. கட்சி எடுக்கும் முடிவின் பக்கம்தான் நான் நிற்க முடியும்!’’

“கார்த்தி சிதம்பரம்கூட, ‘சசிகலா வருகைக்குப் பிறகு அ.ம.மு.க-அ.தி.மு.க இணைந்துவிடும்’ என்கிறாரே?”

“கார்த்தி சிதம்பரம், முதலில் அவரது கட்சியிலுள்ள கோஷ்டிகளை ஒன்றிணைக்கட்டும். பிறகு அ.ம.மு.க., அ.தி.மு.க கட்சிகள் ஒன்றிணையுமா என்பதைப் பற்றியெல்லாம் பேசட்டும்.”

“ஆனால், உங்கள் கட்சிக்குள்ளேயே இது பற்றி முரண்பாடுகள் நிலவுகின்றனவே... ‘சசிகலா குறித்து கட்சித் தலைமை முடிவு செய்யும்’ என்கிறார் அமைச்சர் ஓ.எஸ்.மணியன். உடனே, ‘கட்சி, ஆட்சி இரண்டிலும் சசிகலாவுக்கு இடம் இல்லை’ என்கிறார் அமைச்சர் ஜெயக்குமார். ஏன் இந்தப் பதற்றம்?’’

“கொரோனா தொற்றிலிருந்து மக்களை எப்படி மீட்டெடுப்பது என்பதில் மட்டுமே தமிழக அரசு கவனம் செலுத்திவருகிறது. மற்ற விஷயங்களில் கட்சித் தலைமை எந்தவொரு முடிவும் எடுக்கவில்லை. எனவே, அமைச்சர்கள் கூறுவதெல்லாம் அவரவர் தனிப்பட்ட கருத்துகளே.”

“தலைவர்கள் சிலை அவமரியாதை... அதைத் தொடர்ந்து அ.தி.மு.க செய்தித் தொடர்பாளரான கோவை செல்வராஜ் பா.ஜ.க-வினரை ‘வெளியில் நடமாட முடியாது’ என மிரட்டியது என அ.தி.மு.க-பா.ஜ.க உரசல்கள் தொடர்கின்றனவே?”

“இரண்டு கட்சிகளுமே நல்ல உறவில்தான் இருக்கின்றன. எம்.ஜி.ஆர், அண்ணா, பெரியார் போன்ற பொதுவான தலைவர்கள் மக்களின் சொத்து. அவர்கள்மீது குறிப்பிட்ட சாயம் பூசி, ஒரு சார்பான அரசியல் செய்ய நினைப்பவர்களை நிச்சயம் நாங்கள் கண்டிப்போம், தண்டிப்போம். ஏனெனில், அ.தி.மு.க மதச்சார்பற்ற கட்சி!’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு