அலசல்
சமூகம்
Published:Updated:

சீனா - அதானி தொடர்பு... மூடி மறைக்கிறதா மோடி அரசு?

மோடி
பிரீமியம் ஸ்டோரி
News
மோடி

சீன நாட்டவரான சாங் சியான்-டிங், அதானி குழுமத்தின் துணை ஒப்பந்ததாரர்; கெளதம் அதானியின் சகோதரர் வினோத் அதானியின் பங்குதாரர். எல்லையில் பலமுறை அத்துமீறலில் ஈடுபட்ட சீனா, நமது ராணுவ வீரர்கள் 20 பேரைக் கொன்றிருக்கிறது.

அதானி குழுமத்துக்கு எதிரான ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை, இந்திய அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியது. அந்த அறிக்கையில், சீனாவைச் சேர்ந்த சாங் சுங்-லிங் என்பவருக்கும், அதானி குழுமத்துக்கும் நெருங்கிய தொடர்பிருப்பதாகக் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இந்த நிலையில், இந்தியாவின் முக்கியக் கட்டுமானங்கள் அனைத்தும் சீன நிறுவனத்தால் கட்டுப்படுத்தப்படுவதாகக் கூறி, மீண்டும் அனலைக் கிளப்பியிருக்கிறது காங்கிரஸ் கட்சி!

காங்கிரஸின் குற்றச்சாட்டு!

அதானி குழுமம் தொடர்பாக, சமீபத்தில் வெளியான ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கையில் சீனாவைப் பூர்வீகமாகக்கொண்ட சாங் சுங்-லிங் என்பவரின் பெயர் மூன்று இடங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது. `கெளதம் அதானியின் சகோதரர் வினோத் அதானியுடன் சுங்-லிங் நீண்டகாலமாகத் தொடர்பில் இருக்கிறார். சிங்கப்பூரிலுள்ள வினோத் அதானியின் முகவரியைத்தான் தனது முகவரியாகச் சொல்லிவருகிறார் சுங்-லிங். மேலும், மொரீஷியஸில் இயங்கும் ‘குரோமோர்’ நிறுவனத்தை, `அதானி பவர்’ நிறுவனம் வாங்கிய பிறகு, சுங்-லிங்தான் அதை நடத்திவருகிறார்’ என்று ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை சொல்கிறது. சமீபத்தில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ் முன்னாள் எம்.பி ராகுல் காந்தி, `அதானி - மோடி தொடர்பு’ குறித்து இந்த ஆய்வறிக்கை வெளியானது முதலே பல்வேறு கேள்விகளை எழுப்பிவருகிறார்.

சீனா - அதானி தொடர்பு... மூடி மறைக்கிறதா மோடி அரசு?

இந்த நிலையில், ``இந்தியாவின் முக்கியமான துறைமுகங்கள், விமான ஓடுதளங்கள், ரயில் பாதைகள், மின்சார இணைப்புப் பாதைகள் ஆகியவை ஏன் சீன நிறுவனத்தால் கட்டப்பட்டு, கட்டுப்படுத்தப்படுகின்றன?’’ என்று ட்விட்டரில் கேள்வியெழுப்பியிருக்கிறார் ராகுல் காந்தி. அதானி குழுமத்தின் நகர்வுகளைக் கூர்ந்து கவனிக்கும் `அதானி வாட்ச்’ நிறுவனம் வெளியிட்டிருக்கும் செய்தியின் ஸ்கிரீன் ஷாட்டையும் பதிவிட்டிருக்கிறார் ராகுல். சுங்-லிங்குடன் அதானி நிற்கும் புகைப்படம் இடம்பெற்றிருந்த அந்த ஸ்கிரீன் ஷாட்டில், சுங்-லிங்கின் மகன் சாங் சியான்-டிங் நடத்தும் பி.எம்.சி புராஜெக்ட்ஸ் நிறுவனத்துக்கு அதானி குழுமத்துடன் நெருங்கிய தொடர்பிருப்பதாகச் சொல்லப்பட்டிருந்தது. இதனால், பி.எம்.சி நிறுவனத்தை - `Pradhan Mandiri Chinese’ (PMC) என்று கிண்டலாகக் குறிப்பிட்டிருந்தார் ராகுல்.

தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்!

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாதே, ``சீன நாட்டவரான சாங் சியான்-டிங், அதானி குழுமத்தின் துணை ஒப்பந்ததாரர்; கெளதம் அதானியின் சகோதரர் வினோத் அதானியின் பங்குதாரர். எல்லையில் பலமுறை அத்துமீறலில் ஈடுபட்ட சீனா, நமது ராணுவ வீரர்கள் 20 பேரைக் கொன்றிருக்கிறது. அருணாச்சலப் பிரதேசத்திலுள்ள இடங்களுக்கு மூன்று முறை பெயர்களை மாற்றியிருக்கிறது. ஆனால், சீன நாட்டவரின் நிறுவனத்துடன் அதானி குழுமம் நெருங்கிய தொடர்பு வைத்திருப்பது, சீனாவுடனான பிரதமர் மோடியின் சிறப்பான உறவையே காட்டுகிறது. இது முற்றிலும் தேசத்துக்கு விரோதமானது. இது தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லையா?’’ என்று கேள்வியெழுப்பியிருக்கிறார்.

மோடி
மோடி

காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், ``சீனர்களுடன் அதானிக்கு நெருக்கமான தொடர்பிருப்பதன் காரணமாகவே, சீனாவுக்கு எதிராக மோடி எதுவும் பேசாமல் மெளனம் காக்கிறார்’’ என்று குற்றம்சாட்டியதோடு, அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார். அதில், ``மகாராஷ்டிராவிலிருக்கும் ஜவஹர்லால் நேரு துறைமுகத்தில் கன்டெய்னர்களைக் கையாளும் தைவானைச் சேர்ந்த `வான் ஹாய் லைன்ஸ்’ (Wan Hai Lines) நிறுவனத்துக்கு, சீன நிறுவனங்களுடன் தொடர்பிருப்பது கண்டறியப்பட்டதும், அந்த நிறுவனம் துறைமுகத்தில் கன்டெய்னர்களைக் கையாள அனுமதி மறுக்கப்பட்டதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இதன் மூலம், நமது துறைமுகங்கள், முனையங்களில் சீனாவுடன் தொடர்புகொண்ட எந்த நிறுவனமும் முதலீடு செய்யக் கூடாது என்பது இந்திய அரசின் கொள்கை என்பது தெளிவாகிறது. ஆனால், அதானி நிறுவனம் மட்டும் இதில் விதிவிலக்கு’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

காங்கிரஸ் கட்சியின் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு, அதானி குழுமத் தரப்பிலிருந்து இதுவரை விளக்கமளிக்கப்படவில்லை என்றாலும், பா.ஜ.க ஆதரவாளர்கள் சிலர், ``சாங் சுங்-லிங் சீனாவைச் சேர்ந்தவரல்ல, தைவான் நாட்டைச் சேர்ந்தவர். ராகுலின் எம்.பி பதவி பறிபோய்விட்டதால், வேலை எதுவும் இல்லாமல் கட்டுக்கதைகளைக் கட்டவிழ்த்துவிடுகிறார்’’ என ட்விட்டரில் எழுதிவருகிறார்கள்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

அதானி குழுமம் - சீனா தொடர்பு?

காங்கிரஸ் கட்சியின் தீவிர குற்றச்சாட்டுகளையடுத்து பி.எம்.சி நிறுவனம் குறித்த தகவல்களைச் சேகரிக்க முயன்றோம். அப்போது, பி.எம்.சி நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையதளமான `www.pmcprojects.com’, 2019-ம் ஆண்டு முதல் செயல்பாட்டில் இல்லை என்பது தெரியவந்தது. பி.எம்.சி நிறுவனம் எப்போது தொடங்கப்பட்டது என்பதற்கான சரியான தரவுகள் இல்லையென்றாலும், அகமதாபாத்தில் இயங்கிவந்த இந்த நிறுவனம் 2005, மே 3-ம் தேதி அன்று `பிஎம் & சிஎல்’ என்ற மொரீஷியஸ் நிறுவனத்துடன் (PM&CL) இணைக்கப்பட்டிருப்பது தெரியவருகிறது. அதானியின் நெருங்கிய நண்பரான மலாய் மஹாதேவியா (Malay Mahadevia), பி.எம்.சி நிறுவனத்தின் இயக்குநராக இருந்திருக்கிறார்.

வினோத் அதானி
வினோத் அதானி

கடந்த ஜூலை 1, 2006-ம் ஆண்டு பி.எம்.சி நிறுவனத்தின் பங்குகள் அனைத்தும் சிங்கப்பூரில் இயங்கும் குடாமி இன்டர்நேஷனல் பிரைவேட் லிட்., (GIPL) நிறுவனத்துக்கு மாற்றப்பட்டிருக்கின்றன. வினோத் அதானியின் நெருங்கிய நண்பரும், சீனாவைச் சேர்ந்தவருமான சாங் சுங்-லிங்தான் இந்த ஜி.ஐ.பி.எல் நிறுவனத்தின் இயக்குநர் என்று சொல்லப்படுகிறது.

அதானி வாட்ச் வெளியிட்டிருக்கும் செய்தியில், ``தங்களது குழும நிறுவனங்களில் ஒன்றுதான் பி.எம்.சி என்று அதானி நிறுவனம் எங்கும் பதிவுசெய்ய வில்லை. என்றாலும், பல இடங்களில் இவர்களுக்கிடையேயான தொடர்பு வெளிப்படையாகத் தெரிகிறது. குறிப்பாக, குஜராத்தில் அதானிக்குச் சொந்தமான கட்டடத்தில்தான் பி.எம்.சி நிறுவனம் அமைந்திருக்கிறது. இந்த நிறுவனத்தின் மெயில் ஐடி-யாக info@adanigroup.com என்பதே கொடுக்கப்பட்டிருக்கிறது. அதானி குழுமத்துடன் இணைந்து இந்த நிறுவனம்தான் இந்தியாவின் முக்கியமான உள்கட்டமைப்புகளை உருவாக்குகிறது’’ என்று சொல்லப்பட்டிருக்கிறது.

வாய் திறப்பாரா மோடி?

`சமீப ஆண்டுகளாக `சீனா’ என்ற வார்த்தையை, பிரதமர் மோடி பயன்படுத்துவதே இல்லை’ எனக் குற்றம்சாட்டுகின்றன எதிர்க்கட்சிகள். கடந்த சில மாதங்களாக அதானி குழுமம் பற்றிக் கேள்விகள் எழுப்பப்படும் நிலையில், `அதானி’ என்ற வார்த்தையையும் பிரதமர் மோடி பயன்படுத்துவதில்லை. தற்போது, அவர் பயன்படுத்தாத இரண்டு வார்த்தைகளையும் தொடர்புபடுத்திக் கேள்வியெழுப்பியிருக்கிறது காங்கிரஸ் கட்சி.

அதானி குறித்த சர்ச்சைகளுக்கு மெளனம் காக்கும் பிரதமர் மோடி, `சீனத் தொடர்பு’, `தேசப் பாதுகாப்புக்கே அச்சுறுத்தல்’ என்று எழுந்திருக்கும் இந்தச் சர்ச்சைகளுக்காவது வாய் திறக்கவேண்டும்.