`அதானிக்கும் சீன நிறுவனங்களுக்குமிடையிலான உறவுகள் தொடர்பான சர்ச்சைகள், ஹிண்டர்பர்க் அறிக்கையில் தொடங்கி காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் தொடர்ச்சியான குற்றச்சாட்டுகள் வரை நீண்டுகொண்டே செல்கிறது. என்ன நடக்கிறது... எங்கிருந்து இந்தச் சர்ச்சை தொடங்கியது... அலசுவோம்.

பரபரப்பைக் கிளப்பிய ஹிண்டன்பர்க் அறிக்கை:
அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் வெளியிட்ட ஆய்வறிக்கையால் அதானி குழுமத்தின் பங்குகள் கடுமையான சரிவைச் சந்தித்தன. அதைத் தொடர்ந்து, உலகப் பணக்காரர்கள் வரிசையில் இரண்டாம் இடத்தில் இருந்த கௌதம் அதானி, இரட்டை இலக்க இடத்துக்கு தூக்கியடிக்கப்பட்டார். குறிப்பாக, அதானி குழுமம் பல ஆண்டுகளாக நிதி மோசடி, வரி ஏய்ப்பு, சட்டவிரோத பணப் பரிமாற்றம் என பல மோசடிகளில் ஈடுபட்டிருப்பதாகக் குற்றம்சாட்டி, 88 கேள்விகளையும் முன்வைத்தது ஹிண்டன்பர்க். இந்த நிலையில், ஹிண்டன்பர்க் எழுப்பியிருந்த கேள்விகள் சிலவற்றுக்குப் பதிலளித்த அதானி நிறுவனம், `ஹிண்டன்பர்க் அறிக்கை இந்தியாமீது நடத்தப்பட்ட தாக்குதல்' என சால்சாப்புக் காட்டியது.
அதற்கு பதிலடி கொடுத்த ஹிண்டன்பர்க், `தாங்கள் எழுப்பிய பல கேள்விகளுக்கு அதானி குழுமம் பதிலளிக்கவில்லை எனவும் அதிலும் குறிப்பாக, `சீனாவைச் சேர்ந்த சாங் சங் லிங் என்பவருக்கும், அதானி குழுமத்துக்குமிடையே என்ன தொடர்பு?' என எழுப்பிய கேள்விக்கு இதுவரை அதானி குழுமம் பதிலளிக்கவில்லை எனவும் குற்றம்சாட்டியது. மேலும், `மோசடிகளை மறைக்க தேசியவாதத்துக்குள் ஒளிந்துகொள்ள வேண்டாம்' என அதானி நிறுவனத்தை விமர்சித்ததோடு, சீன நாட்டவர் சாங் சங் லிங்குக்கும் அதானி குழுமத்துக்குமிடையேயான தொடர்பையும் போட்டுடைத்தது.

குறிப்பாக, ``சாங் சங் லிங்குக்கும் அதானி குழுமத்துக்கும் நீண்டகால தொடர்பிருக்கிறது. அவர் கௌதம் அதானியின் சகோதரர் வினோத் அதானிக்கு மிகவும் நெருக்கமானவர். மொரீஷியஸிலுள்ள க்ரோமோர் என்ற ரகசிய நிறுவனத்தை அதானி குழுமத்தின் அதானி பவர் நிறுவனம் சுமார் 42.3 கோடி டாலர் கொடுத்து வாங்கியது. அந்த நிறுவனத்தை சாங் சுங் லிங்தான் நடத்திவருகிறார். சிங்கப்பூரிலுள்ள கௌதம் அதானியின் சகோதரர் வினோத் அதானியின் உள்ளூர் முகவரியைத்தான் சாங் சுங் லிங் தனது முகவரியாகக் கொடுத்திருக்கிறார்" என பகிரங்கமாகக் குற்றம்சாட்டியது.

மேலும், ``அதானி குழும நிறுவனம், பி.எம்.சி. புராஜெக்ட்ஸ் (PMC Projects) என்ற தனியார் ஒப்பந்த நிறுவனத்துக்கு கடந்த 12 ஆண்டுகளில் சுமார் 6,300 கோடி ரூபாய் வழங்கியிருக்கிறது. இந்தப் பணம் வழங்கப்பட்டதற்கான ஆவணங்கள் ஏதும் இல்லை. மேலும், சாங் சுங் லிங்கின் மகன்தான் இந்த நிறுவனத்தின் உரிமையாளர். அதானி குழுமத்தால் அதிகம் லாபமடைபவர்" என பரபரப்பு கிளப்பியது.
நாடாளுமன்றத்தில் எழுப்பிய ராகுல் காந்தி:
ஹிண்டன்பர்க் அறிக்கை இந்திய அரசியலையே உலுக்கியெடுத்த நிலையில், `அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணை நடத்தப்பட வேண்டும்; அதானியின் மிகவும் நெருங்கிய நண்பரான பிரதமர் மோடி ஹிண்டர்பர்க் அறிக்கை குறித்து ஏன் வாய்திறக்கவில்லை?' என சரமாரியாகக் கேள்வியெழுப்பினார் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி. குறிப்பாக நாடாளுமன்றத்தில் பேசிய ராகுல் காந்தி, ``நீங்கள்(மோடி) வெளிநாட்டுக்குச் சென்றபோது, எத்தனை முறை உங்களை அதானி சந்தித்திருப்பார். வெளிநாடுகளில் நீங்கள் இருந்தபோது, ஒப்பந்தங்களைப் பேசி முடிப்பதற்காக எத்தனை முறை அதானி அந்த நாடுகளுக்குப் பயணித்திருப்பார். கடந்த 20 ஆண்டுகளில், தேர்தல் பத்திரங்கள் உட்பட பா.ஜ.க-வுக்கு கௌதம் அதானி நன்கொடையாக அளித்த பணம் எவ்வளவு?" என்று பிரதமர் மோடியைப் பார்த்து அடுக்கடுக்கான கேள்விகளையெழுப்பினார். மேலும், அதானியுடன் மோடி இருக்கும் புகைப்படத்தை உயர்த்திக்காட்டி, `மோடிக்கும் அதானிக்குமிடையேயான உறவுகள் இது’ என ஆக்ரோஷம் காட்டினார்.

குறிப்பாக, ``காஷ்மீர் முதல் குமரி வரை அதானி பற்றிய பேச்சுகள்தான் இந்தியா முழுக்கவும் இருக்கிறது. துறைமுகங்கள், விமான நிலையங்கள், சாலைகள் என்று எல்லா இடத்திலும் அதானிதான் இருக்கிறார். மோடிக்கும் அதானிக்கும் இடையேயான உறவு குஜராத்தில் மோடி முதல்வராக இருந்தபோது தொடங்கியது. மோடியுடன் நெருக்கமான நட்பு பாராட்டினார் அதானி. அதன் பின்னர் 2014-ல் மோடி மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் பெரிய மேஜிக் நடக்கத் தொடங்கியது.
2014-ல் 8 பில்லியன் டாலராக இருந்த அதானியின் மொத்த மதிப்பு 140 பில்லியன் டாலராக உயர்ந்திருக்கிறது. அதானிக்கு எஸ்.பி.ஐ ஒரு பில்லியன் டாலர் கடன் கொடுத்திருக்கிறது. அதானிக்காக விதிகளைக்கூட மாற்றியமைத்தார் பிரதமர் மோடி. விமான நிலையங்களில் முன் அனுபவம் இல்லாதவர்கள் விமான நிலைய வளர்ச்சியில் ஈடுபடக் கூடாது என்ற விதி இருந்தது. ஆனால், அந்த விதியை அதானிக்காக மாற்றினார் மோடி. அதன் பின்னர், அதானி வசம் ஆறு விமான நிலையங்கள் சென்றன. இந்தியாவின் மிகவும் லாபகரமான `மும்பை விமான நிலையம்' கூட அதானிக்குக் கொடுக்கப்பட்டது.

அதானிக்குப் பாதுகாப்புத்துறையிலெல்லாம் அனுபவம் இல்லை. ஆனாலும், அவருக்கு தற்போது பெரிய ஒப்பந்தங்கள் வழங்கப்படுகின்றன. அதானி ஒருபோதும் டிரோன்களை உருவாக்கியது இல்லை. ஆனால், பிரதமர் மோடி இஸ்ரேலுக்கு சென்று டிரோன் ஒப்பந்தத்தை அதானிக்காகப் பெற்றுத் தந்திருக்கிறார். அதேபோல, மோடி ஆஸ்திரேலியாவுக்குச் செல்கிறார், ஒரு மேஜிக்போல அதானிக்கு முதலீடு கிடைக்கிறது. மோடி பங்களாதேஷ் செல்கிறார், உடனே அங்கு அதானிக்கு என்று 25 ஆண்டுகள் மின்சாரத்துறை ஒப்பந்தம் வழங்கப்படுகிறது. 2022-ல், இலங்கை மின்சார வாரியத் தலைவர் இலங்கையிலுள்ள நாடாளுமன்றக் குழுவில் வெளிப்படையாகவே அதானி பற்றி பேசினார். அதானிக்கு காற்றாலை மின்சாரத் திட்டத்தை வழங்குமாறு பிரதமர் மோடியால் அழுத்தம் கொடுக்கப்பட்டதாக அப்போதைய அதிபர் ராஜபக்சே தன்னிடம் கூறியதாகத் தெரிவித்தார்.
இது இந்தியாவின் வெளியுறவுக்கொள்கை அல்ல. இது அதானியின் கொள்கை. ஆனால், இதைத்தான் இந்தியாவின் கொள்கைபோல காட்டிவருகிறார்கள். முன்பு அதானியின் விமானத்தில் பிரதமர் மோடி பயணித்தார். தற்போது மோடியின் விமானத்தில் அதானி பயணிக்கிறார்!" எனச் சரமாரியாக விமர்சித்துப் பேசினார் ராகுல்காந்தி. ஆனால், அதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய பிரதமர் மோடி, அதானி குறித்து அறவே வாய்த்திறக்கமால் தவிர்த்தார்.

`அதானி குறித்த கேள்வியால் பதவிநீக்கம்' - ராகுல் காந்தி
அந்த நிலையில், பிரதமர் மோடி குறித்த அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது குஜராத்தின் சூரத் நீதிமன்றம். அதன் விளைவால் ராகுல் காந்தியின் எம்.பி பதவியும் பறிக்கப்பட்டது. இது குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, ``பிரதமர் மோடிக்கும் அதானிக்குமிடையேயுள்ள தொடர்பு குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினேன். எனது கேள்விகளைத் திசை திருப்பவே தகுதிநீக்கம் மற்றும் சிறைத் தண்டனை போன்ற நாடகம் நடத்தப்படுகிறது. இது குறித்தெல்லாம் நான் கவலைப்படவில்லை" எனத் தெரிவித்தார்.
மேலும், ``என்னை இன்னும் இவர்கள் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. நான் அவர்களுக்கு பயப்படப்போவதில்லை. இது போன்ற நடவடிக்கைகளும் என்னை தடுத்து நிறுத்தாது. கேள்வி கேட்பதையும் நான் நிறுத்த மாட்டேன். பிரதமர் மோடிக்கும் அதானிக்குமிடையேயுள்ள தொடர்பு குறித்து நான் தொடர்ந்து கேள்வி எழுப்புவேன்!" எனத் தெரிவித்தார்.

குறிப்பாக, ``அதானிக்கும் பிரதமருக்குமிடையேயுள்ள தொடர்புகள் குறித்து ஆதாரங்களுடன் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினேன். அதற்கு ஆதாரமாக, அதானியின் விமானத்தில் ரிலாக்ஸ் செய்த பிரதமரின் படத்தைக் காட்டினேன். பாதுகாப்புத்துறையில் அதானியின் நிறுவனத்தில் செய்யப்பட்டிருக்கும் முதலீடு குறித்த ஆவணங்களை அளித்தேன். ஆஸ்திரேலியாவின் ஸ்டேட் வங்கித் தலைவருடன் பிரதமர் மோடி அமர்ந்திருக்கும் படங்களை ஆதாரமாக அளித்தேன். இந்தச் சம்பவங்களுக்குப் பிறகே பா.ஜ.க தனது வேலையை ஆரம்பித்தது. நாடாளுமன்றத்தில் எனது பேச்சுகள் நீக்கப்பட்டன.
எனினும், சபாநாயகருக்கு இரண்டு கடிதங்கள் எழுதி, எனது குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருப்பதையும் சுட்டிக்காட்டி அனுப்பினேன். பாதுகாப்புத்துறை, விமான நிலைய அதானி முதலீடுகள் குறித்த பத்திரிகைச் செய்திகள், சட்ட ஆவணங்களையும் இணைத்து இதுவே எனது பேச்சுக்கு ஆதாரமான அடித்தளம் என சபாநாயகருக்கு விரிவான விளக்கமும் கொடுத்தேன். ஆனால், எனது பேச்சுகள் எதுவும் நாடளுமன்றத்தில் பதிவாகவில்லை" என்றார்.

மேலும், ``அதானி குறித்த எனது உரை பிரதமர் மோடிக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதை நான் அவரது கண்களில் பார்த்தேன். அதன் காரணமாகவே முதலில் திசை திருப்பல்களைச் செய்தார்கள். அடுத்ததாக தகுதிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறேன். நான் நிரந்தரமாகவே தகுதிநீக்கப்பட்டாலும் நான் எனது வேலையைத் தொடர்ந்து செய்வேன். நான் நாடாளுமன்றத்துக்குள் பேசுகிறேனா அல்லது வெளியே பேசுகிறேனா என்பது அல்ல முக்கியம். நாட்டுக்காகத் தொடர்ந்து போராடுவேன். ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்காக உள்ள அமைப்புகளைப் பாதுகாப்பது, ஏழைகளுக்காகக் குரல் கொடுப்பது, பிரதமர் மோடி உடனான உறவைத் தவறாகப் பயன்படுத்தும் அதானி போன்றவர்கள் குறித்த உண்மைகளை மக்களுக்குத் தெரியப்படுத்துவது போன்ற ஜனநாயகப் பணியைத் தொடர்ந்து செய்வேன்" என சூளுரைத்தார்.
`அதானி நிறுவனத்தில் ரூ.20,000 கோடி யாருடையது?'- தொடர்ந்து கேள்வி எழுப்பும் ராகுல் காந்தி
ராகுல் காந்தி சொன்னபடியே பதவிநீக்கத்துக்குப் பின்னரும் தொடர்ச்சியாக அதானி - மோடி - சீன நாட்டவர் குறித்த கேள்விகளைப் பொதுவெளியில் தொடர்ந்து எழுப்பிவருகிறார். கடந்த வாரம் டெல்லியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி, ``அதானி நிறுவனத்தின் ஷெல் நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டிருக்கும் ரூ.20,000 கோடி பற்றி பிரதமர் ஏன் மௌனம் காக்கிறார். அது பினாமி பணமென்றால், அதன் உரிமையாளர் யார்?" என்று கேள்வியெழுப்பினார். தொடர்ந்து, தனது ட்விட்டர் பக்கத்திலும் இதே கேள்விகளை எழுப்பி, ``பிரதமரே, ஏன் இத்தனை பயம்?" எனப் பதிவிட்டிருக்கிறார்.

தொடர்ந்து மற்றொரு ட்விட்டர் பதிவில் அதானியுடன் சீன நாட்டவர் சாங் சங் லிங் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, ``PMC திட்டங்கள் - 'பிரதான் மந்திரி சீன' திட்டங்கள்? - இந்தியாவிலுள்ள முக்கியமான துறைமுகங்கள், விமான ஓடுபாதைகள், ரயில் பாதைகள், மின்சாரப் பகிர்மானப் பாதைகள் உள்ளிட்டவை ஏன் சீன நிறுவனத்தால் அமைக்கப்பட்டு கட்டுப்படுத்தப்படுகின்றன?" எனக் கேள்வியெழுப்பியிருக்கிறார்.

இது தொடர்பாக அதானி நிறுவனம், ``அதானி குழும புரொமோட்டர்கள், அதானி நிறுவனத்தில் கணிசமான பங்குகளை வைத்திருக்கிறார்கள். அவர்கள் அதானி டோட்டல் காஸ் நிறுவனத்தின் 20 சதவிகித பங்குகள், அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தின் 35 சதவிகிதப் பங்குகள் ஆகியவற்றை பிரான்ஸைச் சேர்ந்த டோட்டல் எனர்ஜீஸ் நிறுவனத்துக்கு விற்று 287 கோடி டாலர் திரட்டினர்.
2019-ம் ஆண்டிலிருந்து படிப்படியாக இந்தப் பணம் திரட்டப்பட்டது. பிரான்ஸ் நிறுவனத்திடம் இப்படிக் கிடைத்த பணத்தில் 255 கோடி டாலர் (ரூ.20,000 கோடி) அதானி குழும துணை நிறுவனங்களான அதானி என்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ், அதானி பவர், அதானி டிரான்ஸ்மிஷன், சிறப்புப் பொருளாதார மண்டலம் போன்றவற்றில் மறுமுதலீடு செய்யப்பட்டது.
புதிய வணிகங்களின் வளர்ச்சிக்காக இப்படிச் செய்யப்பட்டது. இந்தப் பணத்தைத்தான் போலி நிறுவனங்களில் முதலீடு செய்ததாக சிலர் வர்ணிக்கிறார்கள். எல்லாப் பரிமாற்றங்களும் பங்குச்சந்தைக் கணக்குத் தாக்கலில் வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன.
அனைத்தும் பொதுவெளியிலும் வைக்கப்பட்டிருக்கின்றன. பங்குச்சந்தை விதிமுறைகளை முழுமையாகக் கடைப்பிடித்துவருகிறோம். இருப்பினும் திசைதிருப்பும் வகையில் செய்தி பரப்புவது வருந்தத்தக்கது" எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியிட்டபோதிலும், ராகுல் காந்தி தொடர்ந்து கேள்வி எழுப்பிவரும்போதிலும் சீன நாட்டவருடனான தொடர்பு குறித்தும் பிரதமர் மோடி வாய்த்திறக்காமல் இருந்துவருவது ஏன்... என்ற கேள்வி, கேள்வியாகவே நிற்கிறது..!