Published:Updated:

தி.மு.க அரசு, மிருக வெறியோடு பழிவாங்க துரத்துகிறது! - அதிரடி விந்தியா

விந்தியா
பிரீமியம் ஸ்டோரி
விந்தியா

பா.ம.க வேண்டுமானால், பல கட்சிகளையும் நம்பியிருக்கலாம். அ.தி.மு.க என்ற கட்சி, பா.ம.க-வை நம்பி ஆரம்பிக்கப்பட்ட கட்சி அல்ல.

தி.மு.க அரசு, மிருக வெறியோடு பழிவாங்க துரத்துகிறது! - அதிரடி விந்தியா

பா.ம.க வேண்டுமானால், பல கட்சிகளையும் நம்பியிருக்கலாம். அ.தி.மு.க என்ற கட்சி, பா.ம.க-வை நம்பி ஆரம்பிக்கப்பட்ட கட்சி அல்ல.

Published:Updated:
விந்தியா
பிரீமியம் ஸ்டோரி
விந்தியா

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், ‘பா.ம.க-வின் தொடர் விமர்சனங்கள், ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ-வின் ஆபாச ஆடியோ லீக், லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டுகள், ஆண்மையில்லாத-முதுகெலும்பில்லாத கட்சி’ என்ற விமர்சனம் வரையிலாக அடுத்தடுத்த தாக்குதல்களால் நிலைகுலைந்து போயிருக்கிறது அ.தி.மு.க. இந்தச் சூழ்நிலையில், அ.தி.மு.க கொள்கைப் பரப்பு துணைச் செயலாளர் விந்தியாவிடம் பேசினோம்...

“முன்னாள் அமைச்சர்கள் மீதான ரெய்டு - குற்றச்சாட்டுக்கு பதிலளிக்காமல், ‘இது தி.மு.க-வின் அரசியல் பழிவாங்கல்’ என பிரச்னையை திசைதிருப்புகிறதே அ.தி.மு.க?’’

“வேலுமணி, ராஜேந்திர பாலாஜி ஆகியோரைக் குறிவைத்துத்தான் ஸ்டாலின் எப்போதுமே பொங்கி எழுவார். ஆனால், யாரும் எதிர்பாராத வகையில், கே.பி.அன்பழகன் வீட்டுக்கும் ரெய்டு வருகிறதென்றால், பொங்கல் பரிசுத்தொகுப்பு கலப்பட மோசடிப் புகாரிலிருந்து மக்களின் கவனத்தைத் திருப்ப வேண்டும் என்ற நோக்கத்தைத் தவிர வேறு என்ன இருக்கிறது... அண்மையில் ரெய்டுக்குள்ளான அன்பழகன், தங்கமணி ஆகியோர் 2016 தேர்தலின்போது கொடுத்திருந்த சொத்தின் மதிப்பைவிடவும், 2021 தேர்தலின்போது கொடுத்திருந்த சொத்தின் மதிப்பு அதிகமாகியிருக்கிறது என்றுதான் சோதனை நடத்தப்பட்டிருக்கிறது. ‘சொத்தின் மதிப்பு அதிகரித்திருக்கிறது’ என்று நாங்களேதான் தேர்தல் ஆணையத்துக்குத் தகவல் கொடுத்திருக்கிறோம். ஆக, ‘எப்படி அதிகமானது’ என்ற கேள்வியைக் கேட்டால், அதற்கான பதிலை நாங்களே சொல்லிவிடப் போகிறோம். அப்படி எந்தக் கேள்வியும் கேட்காமல், நேரடியாக ரெய்டுக்கு வருகிறார்களென்றால், அது அரசியல்ரீதியான பழிவாங்கல்தானே!’’

தி.மு.க அரசு, மிருக வெறியோடு பழிவாங்க துரத்துகிறது! - அதிரடி விந்தியா

“நீங்கள் சொல்வதுபோல், மடியில் கனமில்லையென்றால், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஏன் ஓடி ஒளிந்தார்?’’

“தி.மு.க அரசு, மிருக வெறியோடு பழிவாங்கத் துரத்துகிறது என்கிறபோது நாம் ஓடித்தான் ஆக வேண்டும். ஏனெனில், ‘எங்கள்மீது தவறும் எதுவும் இல்லை’ என்பதைச் சொல்வதற்கும்கூட முதலில், நாங்கள் உயிரோடு இருக்க வேண்டும். அதனால்தான், ‘சம்மனே கொடுக்காமல் இப்படி துரத்திப் பிடிப்பது ஏன்?’ என்று உச்ச நீதிமன்றமே தமிழக அரசைக் கேள்வி கேட்டிருக்கிறது. ராஜேந்திர பாலாஜி மீது சுமத்தப்பட்டுள்ள அதே வழக்குதான், ஆளுங்கட்சி அமைச்சரான செந்தில் பாலாஜி மீதும் சுமத்தப்பட்டிருக்கிறது. அவரும்கூட கடந்தகாலத்தில், ஜாமீனுக்காக ஓடி ஒளிந்தார்தானே... இப்போது அதே நபருக்கு நான்கு துறைகளைக் கொடுத்து, தன் பக்கத்திலேயே வைத்துக்கொண்டிருக்கிறார்களே... இது என்ன நியாயம்?’’

“கூட்டணியில் பா.ம.க இருந்தும் தோல்வியைச் சந்தித்துவந்த அ.தி.மு.க., பா.ம.க-வும் இல்லாத இந்தச் சூழலில், எப்படி வெற்றிபெறப்போகிறது?’’

“பா.ம.க வேண்டுமானால், பல கட்சிகளையும் நம்பியிருக்கலாம். அ.தி.மு.க என்ற கட்சி, பா.ம.க-வை நம்பி ஆரம்பிக்கப்பட்ட கட்சி அல்ல. அ.தி.மு.க கூட்டணியில் பா.ம.க இருந்ததால், கடந்த தேர்தல்களில் தோற்றோம். ஆக, தேவையில்லாத அந்தச் சுமை இப்போது குறைந்துவிட்டது. எனவே, அ.தி.மு.க கூட்டணி வண்டி முன்பைவிடவும் மிக வேகமாகச் செல்லும்; எளிதில் வெற்றிபெறும்.’’

“தமிழக பா.ஜ.க-வும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், தனித்துப் போட்டியிடுகிறதே?”

“அவர்கள் கட்சி; அவர்கள் முடிவு... அதில் தலையிடவோ, கருத்து தெரிவிக்கவோ எங்கள் கட்சிக்கு என்ன அவசியம் இருக்கிறது? எத்தனை கட்சிகள் கூட்டணியில் இருந்தாலும், கூட்டணிக்குத் தலைமை தாங்குகிற தகுதியுடைய கட்சி அ.தி.மு.க. கூட்டணியே இல்லாமல், போட்டியிட்டு ஆட்சியைப் பிடித்த கட்சியும் அ.தி.மு.க. அதனால், மற்ற கட்சிகளுடைய முடிவுகள் எங்களை பாதிக்காது.’’

“தற்போதைய நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், அ.தி.மு.க-வின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும்?’’

“நாங்கள் மக்களை நம்புகிறோம்; மக்களும் எங்களை நம்புகிறார்கள். மக்கள் தொண்டாற்ற எங்களுடன் இணைந்து பயணிக்க, யார் முற்பட்டாலும் வரவேற்போம். அதேசமயம், அ.தி.மு.க-வின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது!”

“சட்டமன்றத் தேர்தல் தோல்விக்கு யார் காரணம் என்பதில் ஆரம்பித்த அ.தி.மு.க - பா.ஜ.க தலைவர்களிடையேயான மோதல், ‘அ.தி.மு.க ஆண்மையில்லாத கட்சி’ என்றெல்லாம் விமர்சிக்கும் வகையில் வளர்ந்துவிட்டதே?’’

“அ.தி.மு.க - பா.ஜ.க தலைவர்கள், கடந்த சட்டமன்றத் தேர்தல் தோல்வி குறித்து தங்களது தனிப்பட்ட கருத்துகளைத்தான் தெரிவித்துவந்தனர். மற்றபடி கட்சித் தலைமை என்று யாரும் அதிகாரபூர்வமாக எதையும் அறிவிக்கவில்லை. ஆனால், நயினார் நாகேந்திரன் விமர்சனத்தில் பேசப்பட்ட வார்த்தைகள் மிகக்கடுமையானவை, தரம் குறைந்தவை என்பதில் எங்களுக்கு மாற்றுக்கருத்து கிடையாது. ஆனால், அந்தப் பேச்சுக்குப் பொறுப்பேற்று ‘அது தவறுதலாக வந்துவிட்டது’ என்று தமிழக பா.ஜ.க தலைவரே எங்கள் தலைமையிடமும், தொண்டர்களிடமும் மன்னிப்புக் கேட்டு விளக்கமளித்துவிட்டார். எனவே, இது குறித்து மேற்கொண்டு பெரிதுபடுத்துவது எங்களுக்கு அழகில்லை.’’

தி.மு.க அரசு, மிருக வெறியோடு பழிவாங்க துரத்துகிறது! - அதிரடி விந்தியா

“ஸ்ரீவைகுண்டம் தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ பேசியதாக வெளியாகியிருக்கும் ஆபாச ஆடியோ, அ.தி.மு.க-வில் மகளிர் அணியினருக்குப் பாதுகாப்பில்லை என்ற குற்றச்சாட்டை நிரூபிப்பதுபோல் உள்ளதே?’’

“2016-லேயே ஜெயலலிதா மறைந்துவிட்டார். அதன் பிறகு கட்சியில் மகளிருக்கு மரியாதை இல்லையெனில், முழுமையாக ஐந்து வருடங்கள் அ.தி.மு.க ஆட்சி நடந்து முடிகிறவரை கட்சியில் ஏன் இருந்தார்கள்? இனி, கட்சி மாறினால்தான் ஆதாயம் கிடைக்கும் என்ற நோக்கில் விஜிலா சத்யானந்த், புவனேஸ்வரி, வசந்தி முருகேசன் போன்றவர்கள் தி.மு.க-வுக்குத் தாவிவிட்டார்கள். ஆனால், தி.மு.க-வில் கனிமொழிக்கு எந்தவிதமான மரியாதை கொடுக்கப்படுகிறது என்பது உங்களுக்கே தெரியும். மற்றபடி, ஆபாச ஆடியோ குறித்த தகவல் எதையும் நான் இதுவரை கேள்விப்படவில்லை. சத்தியமாக இதைப் பற்றி எனக்கு எதுவும் தெரியவில்லை. பெண்களுக்கு ஒரு பாதிப்பு என்றால், எங்கள் கட்சித் தலைமை சம்பந்தப்பட்டவர்கள்மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கும்.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism