Published:Updated:

ஜெயலலிதா ஆன்மா இவர்களை மன்னிக்காது! #Jayalalithaa

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என இரண்டு ஆளுமைகளின் கட்டுப்பாட்டில் 44 ஆண்டுகாலமாக இருந்த அ.தி.மு.க, மத்திய பி.ஜே.பி ஆட்சியின் கட்டுப்பாட்டுக்குள் போன தினம் டிசம்பர் 5.

எடப்பாடியும் பன்னீரும்
எடப்பாடியும் பன்னீரும்

அப்போலோவில் மத்திய அரசின் கழுகு வட்டமடித்த தினம் நேற்று!

3 ஆண்டுக்கால தமிழக அரசியலில் நடக்கும் அத்தனை அக்கப் போர்களுக்கும் அது சான்று.

நேற்று ஜெயலலிதா இறந்த தினம் மட்டுமல்ல... அப்போலோவில் கழுகு வட்டமடித்த தினமும்கூட.

இது, `மிஸ்டர் கழுகு' அல்ல. மத்திய அரசின் `மாண்புமிகு' கழுகு. 2018 ஜனவரி 17-ம் தேதி, மன்னார்குடியில் நடந்த எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழாவில் பேசிய சசிகலாவின் சகோதரர் திவாகரன், ``ஜெயலலிதா மறைந்தபோது அப்போலோவில் மத்திய அரசின் கழுகு ஒன்று இருந்தது. அந்தக் கழுகுக்கு வேண்டப்பட்டவருக்கு முதல்வர் பதவி வழங்க வேண்டும் என சிபாரிசு செய்தது. அவர் உயர்ந்த பதவிக்குச் சென்றுவிட்டதால், அவர் பெயரைச் சொல்ல முடியாது'' என்றார்.

மிஸ்டர் கழுகு
மிஸ்டர் கழுகு
விகடன்

அந்தக் கழுகு யார்? என்பதை க்ளைமேக்ஸில் பார்ப்போம். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என இரண்டு ஆளுமைகளின் கட்டுப்பாட்டில் 44 ஆண்டுகாலமாக இருந்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், மத்திய பி.ஜே.பி ஆட்சியின் கட்டுப்பாட்டுக்குள் போன தினம்தான் 2016 டிசம்பர் 5. `நாடோடி மன்னன்’ விழாவில் பேசிய அண்ணா, ``இந்தக் கனி மடியில் விழாதா எனப் பலர் எதிர்பார்த்தனர். அது என் மடியில் வந்து விழுந்தது. அதை என் இதயத்தில் எடுத்து வைத்துக் கொண்டேன்” என்றார். அந்த அண்ணாவின் பாசத்துக்குரிய எம்.ஜி.ஆர், `இதயக்கனி’யும் தந்தார் `அண்ணா தி.மு.க’-வையும் படைத்தார். அந்த அண்ணா தி.மு.க-வும் அதன் ஆட்சியும் இப்போது பி.ஜே.பி-யின் மடியில் விழுந்துகிடக்கிறது.

எம்.ஜி.ஆர், 15 ஆண்டுகள்தான் அ.தி.மு.க-வுக்கு தலைமை தாங்கினார். ஜெயலலிதாவோ 27 ஆண்டுகள் ஒற்றை ஆளுமையாகக் கட்சியை வழிநடத்தினார். ஜெயலலிதா இல்லாத மூன்றாண்டுக் காலத்தில் அ.தி.மு.க மட்டுமல்ல... தமிழகமும் மாறித்தான்போனது. இந்த மூன்றாண்டுக் காலத்தில் தமிழக அரசியலில் என்னவெல்லாம் நடந்தது? அ.தி.மு.க-வும் அதன் ஆட்சியும் எப்படியிருக்கிறது?

எம்.ஜி.ஆர் மறைந்த பிறகு, அவர் இடத்தில் அமர பலரும் முட்டி மோதினார்கள். ஏன்? எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகியே அதற்கு ஆசைப்பட்டார். ஆனால், ஜெயலலிதாவைத்தான் தொண்டர்கள் ஏற்றுக்கொண்டார்கள். அந்த ஜெயலலிதா மறைந்தபிறகு கட்சியை வழிநடத்தக்கூடிய ஆளுமைத்திறன் அ.தி.மு.க-வில் யாருக்கும் இல்லை.

ஜெயலலிதா உடல்
ஜெயலலிதா உடல்
Photo: Vikatan

45 ஆண்டு கால வரலாற்றைக் கொண்ட... மாநிலத்தை ஆண்டுகொண்டிருக்கிற... நாடாளுமன்றத்தில் மூன்றாவது இடத்தில் இருந்த ஒரு கட்சிக்கு, தலைவனைக்கூட தேடிக் கண்டெடுக்க முடியவில்லை. பன்னீரையும் எடப்பாடியையும் அ.தி.மு.க உறுப்பினர் அட்டையே இல்லாத மோடி வழி நடத்திக் கொண்டிருக்கிறார். அ.தி.மு.க-வின் ஒரே மக்களவை எம்.பி ரவீந்திரநாத் குமார், தன்னுடைய லெட்டர் பேடிலேயே மோடியின் படத்தைப் போட்டு விசுவாசத்தைக் காட்டுகிறார். ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் இந்தத் துணிச்சல் பன்னீர்செல்வத்தின் மகனுக்கு வந்திருக்குமா?

``இதெல்லாம் மக்களின் வரிப்பணம் இல்லையா?'' - ரவீந்திரநாத் குமாருக்கு பத்து கேள்விகள்!

அடுத்த மூன்றாண்டில் பொன்விழாவைக் கொண்டாடப் போகிறது அ.தி.மு.க. அந்தக் கட்சியைத் தோற்றுவித்த எம்.ஜி.ஆர் சொன்ன ஒரு பொன்மொழிக்கு, இப்போது பொன்விழா ஆண்டு என்பது பன்னீருக்கும் எடப்பாடிக்கும் தெரியுமா? ``கட்சியிலும் ஆட்சியிலும் ஒருவரே அதிகாரம் செலுத்த வேண்டும். கட்சித் தலைமையும் ஆட்சித்தலைமையும் ஒருவரிடம் இருக்க வேண்டும். இரட்டைத் தலைமை சரிப்பட்டு வராது'' என 1969-ம் ஆண்டே சொன்னவர் எம்.ஜி.ஆர். இதை எம்.ஜி.ஆர் சொல்லி 50 ஆண்டுகள் ஆகிவிட்டன.

ரவீந்திரநாத் லெட்டர் பேடில் மோடி...
ரவீந்திரநாத் லெட்டர் பேடில் மோடி...

அண்ணா மறைந்த பிறகு, கட்சியிலும் ஆட்சியிலும் நம்பர் 2-வாக இருந்த நெடுஞ்செழியன், முதல்வராக ஆசைப்பட்டார். ஆனால், தி.மு.க முன்னோடிகளும் தொண்டர்களும் கருணாநிதி முதல்வர் ஆவதை விரும்பினார்கள். எம்.ஜி.ஆரின் விருப்பமும் அதுதான். 1969 பிப்ரவரி 10-ம் தேதி கருணாநிதி அமைச்சரவை பதவியேற்றது. ஆட்சி அதிகாரம் பறிபோனதால், கட்சியின் அதிகாரத்தை கைப்பற்ற நினைத்தார் நெடுஞ்செழியன். 1969 ஜூலை 26-ம் தேதி, தி.மு.க பொதுச் செயலாளரைத் தேர்வு செய்வதற்காக பொதுக்குழு கூடும் என அறிவிப்பு வெளியானது.

அப்போது பொதுச் செயலாளராக இருந்த நெடுஞ்செழியன், ``பொதுச் செயலாளர் பதவிக்கு மீண்டும் போட்டியிடப் போகிறேன்'' என்றார். முதல்வராக கருணாநிதியும் பொதுச் செயலாளராக நெடுஞ்செழியனும் இருந்தால், பிரச்னைகள் ஏற்படும், கட்சியிலும் ஆட்சியிலும் ஒருவரே அதிகாரம் செலுத்த வேண்டும். இரட்டைத் தலைமை சரிப்பட்டு வராது என்கிற வாதம் வலுக்க ஆரம்பித்தது.

நெடுஞ்செழியன், கருணாநிதி, எம்.ஜி.ஆர்
நெடுஞ்செழியன், கருணாநிதி, எம்.ஜி.ஆர்

கருணாநிதியை முதல்வராக்க காய் நகர்த்திய அதே எம்.ஜி.ஆர் தான், `கட்சியிலும் கருணாநிதிதான் தலைமைதாங்க வேண்டும்' என முயற்சிகளை முன்னெடுத்தார். 1969 ஏப்ரலில் சென்னை ஆயிரம் விளக்கில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய எம்.ஜி.ஆர், ``அமைச்சராக இருப்பவரே தி.மு.க-வின் பொதுச் செயலாளராகவும் இருக்க வேண்டும்'' என்றார். அதன் பிறகு ஜூலை மாதம் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்த எம்.ஜி.ஆர், ``கட்சித் தலைமையும் ஆட்சித் தலைமையும் ஒருவரிடம் இருக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பம். அதனால்தான், முதலமைச்சர் பொதுச்செயலாளராக இருக்க வேண்டும் என விரும்புகிறேன். கட்சியின் தலைமை ஒருவரிடமும் ஆட்சியின் தலைமை இன்னொருவரிடமும் இருந்ததால்தான் காங்கிரஸ் தமிழ்நாட்டில் சீர்குலைந்தது. அந்த நிலை தி.மு.க -வுக்கு வரக்கூடாது என்ற எண்ணத்தில்தான் இரண்டு பதவிகளையும் ஒருவரே வகிக்க வேண்டும்'' எனச் சொன்னார்.

அன்றைக்கு தி.மு.க-வில் இருந்த எம்.ஜி.ஆர் சொன்ன இந்த விஷயம்தான், இன்றைக்கு அவருடைய கட்சிக்கே ஏற்பட்டிருக்கிறது. கட்சிக்கு பன்னீரும் ஆட்சிக்கு எடப்பாடியும் என இரட்டைத் தலைமை. இவர்களுக்கு மேலே டெல்லியில் சூப்பர் தலைமை வேறு.

மோடியுடன் எடப்பாடி
மோடியுடன் எடப்பாடி

நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, `ஒற்றைத் தலைமை' கோஷத்தை ராஜன் செல்லப்பா எழுப்பியபோது, `அதுபற்றி யாரும் பேச வேண்டாம்' என கட்சியினருக்கு வாய்ப்பூட்டு போட்டார்கள் எடப்பாடியும் பன்னீரும். அ.தி.மு.க-வை தோற்றுவித்த எம்.ஜி.ஆரே தீர்க்கதரிசனமாகத் தீர்வு சொன்ன பிறகும் அதை மதிக்காத இவர்கள்தான், அவருக்கு நூற்றாண்டு விழா எடுத்து கபடவேடம் போட்டார்கள். எம்.ஜி.ஆர் பெயரை உச்சரிக்கும் எடப்பாடியும் பன்னீரும் ஒற்றைத் தலைமையை ஏற்காதது புரட்சித்தலைவருக்கே செய்யும் துரோகம்.

அண்ணா மறைந்த பிறகு, நெடுஞ்செழியன் தற்காலிக முதல்வராக நியமிக்கப்பட்டபோது வரவேற்ற பெரியார்கூட, ``அண்ணாவின் இடத்தைப் பூர்த்திசெய்யக்கூடிய ஆற்றலும் திறமையும் படைத்தவர், கருணாநிதிதான்'' என்றார். அப்போது இன்னொரு விஷயத்தையும் சொன்னார். ``தி.மு.க கெட்டியான பூட்டுதான். ஆனால், யாரும் கள்ளச்சாவி போடாமல் பார்த்துக் கொள்வது நல்லது'' என்றார். இது, பெரியாரின் தீர்க்கதரிசனம். ஆனால், இன்றைக்கு அ.தி.மு.க-வை மத்திய அரசு கள்ளச்சாவி போட்டுவிட்டது.

பெரியார்
பெரியார்

எம்.ஜி.ஆரை மட்டுமல்ல... ஜெயலலிதாவையும்கூட இவர்கள் மதிக்கவில்லை. அ.தி.மு.க-வில் மட்டும்தான் பொதுச் செயலாளரைத் தேர்வுசெய்வதற்கான வாக்குரிமை, கட்சியின் அனைத்து உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. பொதுக்குழு உறுப்பினர்களில் இருந்து தலைமை தேர்வுசெய்யப்படுவது சரியாக இருக்காது என நினைத்த எம்.ஜி.ஆர், 'கட்சியின் அனைத்து அடிப்படை உறுப்பினர்களால்தான் பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்' என்கிற விதியை கட்சியின் பை-லாவில் கொண்டு வந்தார். இந்த விதியின்படிதான் எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் பொதுச் செயலாளராகத் தொடர்ந்து தேர்வுசெய்யப்பட்டு வந்தார்கள்.

இந்த சட்டதிட்ட விதிக்கு இன்னொரு மகுடமும் சூட்டப்பட்டிருக்கிறது. கட்சியின் எந்த விதியையும் உருவாக்கவோ, திருத்தம் செய்யவோ, நீக்கவோ பொதுக்குழுவுக்கு உரிமை இருக்கிறது. ஆனால், `கட்சியின் அனைத்து அடிப்படை உறுப்பினர்களால்தான் பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்' என்கிற விதியை மாற்றவோ திருத்தவோ முடியாது. எம்.ஜி.ஆர் கொண்டுவந்த இந்த விதியை ஜெயலலிதா மாற்றவில்லை. ஆனால், எம்.ஜி.ஆரையும் ஜெயலலிதாவையும் மதிப்பதாக மார்தட்டிக்கொள்ளும் எடப்பாடியும் பன்னீரும் மாற்றினார்கள். பொதுச்செயலாளர் பதவியை ஒழித்துவிட்டு, ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை ஏற்படுத்தி, அதில் இருவரும் அமர்ந்துகொண்டார்கள்.

எடப்பாடியும் பன்னீரும்
எடப்பாடியும் பன்னீரும்
Illustration : Vikatan

பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட்டு, கட்சியின் அனைத்து அடிப்படை உறுப்பினர்களும் வாக்களித்து, யாருக்கு செல்வாக்கு உண்டு என நிரூபிக்கும் திறமை எடப்பாடிக்கும் பன்னீருக்கும் இல்லை. உள்ளாட்சித் தேர்தலில் உதறல் கண்டவர்களா உட்கட்சித் தேர்தலுக்கு உள்ளாவார்கள். எம்.ஜி.ஆரையும் ஜெயலலிதாவையும் மதித்த... துதித்த... காலில் விழுந்து வணங்கிய எடப்பாடியும் பன்னீரும் இன்றைக்கு மோடியைப் போற்றி கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள்.

1995 டிசம்பர் 12-ம் தேதி, ரஜினியின் 44-வது பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றபோது, நேயர்களின் கேள்விகளுக்கு ரஜினி அளித்த பதில்கள் தூர்தர்ஷனில் ஒளிபரப்பானது. அதில் வந்த ஒரு கேள்வி பதில் இது. ``வெடிகுண்டு கலாசாரம் தொடங்கி வன்முறைகள் வரை பேசுகிறீர்கள். அ.தி.மு.க ஆட்சியின்மீது உங்களுக்கு அப்படி என்ன கோபம்?’’ ``அ.தி.மு.க மீது எனக்கு எந்தக் கோபமும் இல்லை. இப்ப இருக்கிறது ஏ.டி.எம்.கே இல்லீங்க... ஜெ.டி.எம்.கே’’ என்றார் ரஜினி.

ரஜினி
ரஜினி

எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு, 1989 முதல் 2016 வரை 27 வருடங்களாக ஜெ.டி.எம்.கே-யாக இருந்த ஏ.டி.எம்.கே., ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, `மோடி.எம்.கே’ ஆனது. அப்போலோவுக்குள் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட அந்தத் தருணத்தில் தொடங்கியது இந்த மாற்றம்.

ஜெயலலிதாவின் அப்போலோ அட்மிட் முதல் அ.தி.மு.க அணிகள் இணைப்பு வரை நடந்த அத்தனை சம்பவங்களுக்கும் `மாஸ்டர் பிரைன்’ டெல்லிதான். `எடப்பாடியும் பன்னீரும் இணைய வேண்டும்’ என்பதில் மற்றவர்களைவிட பி.ஜே.பி-க்குத்தான் அதிக அக்கறை. ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் அணிகள் இணைப்பு நடந்த அன்றே, பன்னீருக்கு பட்டாபிஷேகம். துணை முதல்வர் பதவிப் பிரமாணத்தைத் தாண்டி, எடப்பாடியையும் பன்னீரையும் கரம் பற்றிக் கைகுலுக்கவைத்தார் அப்போதைய ஆளுநர் வித்யாசாகர் ராவ். இது, கட்சியில் மட்டுமா... இல்லை ஜெயலலிதா இல்லாத அரசிலும் இதே தலையீடுகள்தான்!

எடப்பாடியையும் பன்னீரையும் சேர்த்து வைக்கும் வித்யாசாகர் ராவ்
எடப்பாடியையும் பன்னீரையும் சேர்த்து வைக்கும் வித்யாசாகர் ராவ்

இந்தியா முழுவதும் மாநில மின்வாரியங்களைப் புனரமைப்பதற்காக மோடி அரசு கொண்டுவந்த உதய் மின் திட்டத்தை ஆரம்பத்திலிருந்தே எதிர்த்தவர் ஜெயலலிதா. அவர் இறந்தபிறகு, உதய் திட்டம் நிறைவேறியது. மன்மோகன் சிங் அரசு, உணவு பாதுகாப்புச் சட்டத்தை அவசர சட்டமாகக் கொண்டுவந்த காலத்திலிருந்தே எதிர்த்துவந்தவர் ஜெயலலிதா. மோடி ஆட்சிக்கு வந்தபிறகும் அந்த எதிர்ப்பு தொடர்ந்தது. ஒரு பிரதமர், ஒரு மாநில முதல்வர் வீட்டுக்கு தேடிப் போன சம்பவங்கள் அரிது. போயஸ் கார்டனில் தன்னைத் தேடிவந்து பிரதமர் மோடி சந்தித்தபோதும்கூட `உணவு பாதுகாப்புச் சட்டத்திலிருந்து தமிழகத்துக்கு விலக்கு வேண்டும்’ என அடித்துச் சொன்னார்.

ஜெயலலிதா வீட்டுக்குப் போயும் நிறைவேற்ற முடியாத அந்தத் திட்டத்தை அவர் அப்போலோவில் இருந்தபோது நிறைவேற்றிவிட்டார்கள். ஜெயலலிதா துணிச்சலோடு எதிர்த்தார். எடப்பாடியும் பன்னீரும் பயத்தோடு ஆதரிக்கிறார்கள். தலைவியின் கொள்கைகளைத் தீயிட்டு, டெல்லிக்குத் தீபம் ஏற்றுகிறார்கள். ஆனால், இவர்கள் அடிக்கடி உச்சரிக்கும் மந்திரம் மட்டும் `அம்மா வழியில் நடக்கும் அரசு’.

எடப்பாடி, பன்னீர்
எடப்பாடி, பன்னீர்
விகடன்

பொதுப்பணித்துறை ஒப்பந்தக்காரர் சேகர் ரெட்டியும் அந்தத் துறையை வைத்திருந்த பன்னீரும் ஒன்றாக மொட்டை போட்டு, திருப்பதியில் போஸ் கொடுத்தார்கள். பன்னீர் முதல்வராக இருந்தபோதுதான் சேகர் ரெட்டி வீட்டில் ரெய்டு. சேகர் ரெட்டி கைதானார். அவரைக் கொழுத்த கிடாவாக மாற்றிய பன்னீர்செல்வத்தை மட்டும் வருமானவரித் துறை வஞ்சிக்கவே இல்லை. ஜெயலலிதா இருந்திருந்தால் இந்த ரெய்டுகள் சாத்தியமா? துணை ராணுவத்தை துணைக்கு வைத்துக்கொண்டு, தலைமைச் செயலகத்திலேயே சோதனை போட முடியுமா?

''உதய் மின் திட்டம் தொடர்பாக ஜெயலலிதாவைச் சந்திக்க முடியவில்லை'' என 2016 சட்டமன்றத் தேர்தலின்போது மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சொன்னபோது, ''அரசியல் ஆதாயம் தேடும் வகையிலான விஷமப் பிரசாரங்களில் பியூஷ் கோயலும் பொன் ராதாகிருஷ்ணனும் ஈடுபடுகிறார்கள்'' என அன்றைக்கு நிதி அமைச்சராக இருந்த பன்னீர்செல்வத்திடமிருந்து காட்டமாக அறிக்கை வெளியானது. இன்றைக்கோ, அதே உதய் திட்டத்தை ஆதரிக்கிறார் பன்னீர்செல்வம்.

சேகர் ரெட்டியுடன் பன்னீர்செல்வம்
சேகர் ரெட்டியுடன் பன்னீர்செல்வம்

`ஜெயலலிதாவைப் பார்க்க முடியவில்லை' என பியூஸ் கோயல் சொன்னதற்கே பொங்கிய பன்னீர்தான், தலைமைச் செயலகத்தில் வருமானவரித்துறை சோதனை போட்டபோது வாய் திறக்கவில்லை. எங்கோ மேற்கு வங்காளத்தில் இருந்த மம்தா, இந்தச் சோதனையைக் கண்டித்தார். பன்னீரோ பம்மினார். அதே பியூஸ் கோயலுடன்தான் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினார் பன்னீர்.

இப்போது மத்திய அரசுக்குத் தாளம் போடுகிறவர்கள்தான், அம்மா மறைவுக்குப் பிறகு கட்சிக்கு சின்னம்மாதான் தலைமை தாங்க வேண்டும் எனத் தாளமும் போட்டார்கள். எங்கே பதவி கிடைக்கும்... எங்கே பதவி நிலைக்கும்... என நிறம் மாறும் பச்சோந்திகள் ஆனார்கள்.

பியூஸ் கோயலுடன் பன்னீர்செல்வம்
பியூஸ் கோயலுடன் பன்னீர்செல்வம்

`அம்மா வைத்திருந்த ராணுவ அமைப்புபோல கட்சியைத் தொடர்ந்து கொண்டுசெல்ல ஒரே வழி, சசிகலா கட்சியின் பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்க வேண்டும்’ என அன்றைக்கு `சின்னம்மாதாசனாக’ மாறி அறிக்கை விட்ட பன்னீர்செல்வத்தை, தடம் மாற்றினார்கள். `குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கலாம் என்ற ஆசை நிச்சயம் நிறைவேறாது’ என அந்த அறிக்கையில் சொன்ன பன்னீரைக் குழம்பவைத்துப் பிடித்துச் சென்றார்கள்.

பன்னீரும் குருமூர்த்தியும்
பன்னீரும் குருமூர்த்தியும்

சசிகலா பொதுச் செயலாளராக ஆதரவு தந்தவர்... அதற்கான தீர்மானத்தை அவர் கரங்களில் கொண்டுபோய் ஒப்படைத்தவர்... சசிகலா பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றபோது காலில் விழுந்தவர்... சசிகலாவை வரவேற்று அறிக்கை விட்டவர்... சசிகலா முதல்வராக ராஜினாமா செய்தவர்... இத்தனைக்கும் காரணமான `மிஸ்டர் பணிவு’ திடீர் `துணிவு’ பெற்று, ஜெயலலிதா சமாதியில் புரட்சித் தீ மூட்டினார். இந்த நவீன புத்தர் ஞானோதயம் பெறுவதற்குப் போதி மரமாக இருந்தது டெல்லி. அவருக்கு குருவாக இருந்து குருமூர்த்தி.

மோடியின் மந்திரிகளே பிரதமரைப் பார்க்க முடிவதில்லை. ஆனால், எம்.எல்.ஏ-வாக இருந்த பன்னீர், நினைத்த நேரத்தில் எல்லாம் மோடியைச் சந்தித்தார். பன்னீர்செல்வத்தின் சகோதரர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டால், ராணுவ ஆம்புலன்ஸைக்கூட மத்திய அரசு அனுப்பிவைக்கிறது. `சசிகலாவின் பொதுச்செயலாளர் நியமனம் செல்லாது’, ‘இரட்டை இலைக்கு உரிமை’ எனத் தேர்தல் ஆணையத்தில் நடந்த முறையீடுகள் பன்னீரை வைத்தே பதம் பார்க்கப்பட்டன.

எடப்பாடி
எடப்பாடி
Illustration : Vikatan

ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா புகாரில் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டுக்குள் நுழைந்தது வருமான வரித்துறை. அந்த ரெய்டுக்குப் பிறகுதான், சசிகலா ஆதரவு எடப்பாடி அரசு, பி.ஜே.பி ஆதரவு அரசாக மாறியது. பன்னீரை வளைத்ததுபோல எடப்பாடியையும் மடக்கினார்கள். `பணமதிப்பிழப்பு’ விவகாரத்தில் நடந்த வருமானவரித்துறை சோதனையில் எடப்பாடி உறவுகளும் சிக்கினார்கள். நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தக்காரர் செய்யாதுரை, சத்துணவுத் திட்டத்தில் முட்டை வழங்கும் நிறுவனம், டிஜிபி அலுவலகம்என அடுத்தடுத்து ரெய்டு பயத்தைக் காட்டி, பன்னீரைப் போலவே எடப்பாடிக்கும் தலைநகர் கம்பளம் விரித்து, சுருட்டிக்கொண்டது.

கூவத்தூரில் புழுவைப்போல ஊர்ந்துசென்று சசிகலா காலில் விழுந்த எடப்பாடிதான், தன்னை முதல்வராக்கிய சசிகலாவை விட தன்னைச் சிறையில் அடைக்காத மோடியே பெட்டர் என நினைத்தார். அது, தினகரனையே எதிர்ப்பதற்கான துணிச்சலை எடப்பாடிக்குக் கொடுத்தது. எடப்பாடியையும் பன்னீரையும் சுற்றியிருந்தவர்களின் வீடுகளில் எல்லாம் ரெய்டு நடந்தது. எடப்பாடி - பன்னீர் தரப்பில் யாரும் கைதாகவில்லை. ஆனால், 'இரட்டை இலை' சின்னத்தைப் பெற பேரம் பேசிய தினகரன், திகார் சிறையில் அடைக்கப்பட்டார். சசிகலா குடும்பத்தினரை மொத்தமாகக் குறிவைத்து ரெய்டு மேளா நடத்தினார்கள்.

கூவத்தூரில் சசிகலா காலில் விழும் எடப்பாடி
கூவத்தூரில் சசிகலா காலில் விழும் எடப்பாடி

எடப்பாடி - பன்னீர் அணிக்கு இரட்டை இலை சின்னத்தைக் கொடுத்த அடுத்த நாளே, ஆர்.கே.நகர் தேர்தல் தேதி அறிவிப்பு. ஜெயலலிதா நின்ற ஆர்.கே. நகரில் வெற்றி மகுடம் சூட்ட மாண்புமிகுக்கள் உழைத்த உழைப்பு, தினகரன் நின்றபோது எங்கேபோனது? தலைவி நின்ற தொகுதியைக்கூட தக்கவைக்க முடியவில்லை.

திருச்சி மேற்கு, சங்கரன்கோவில், புதுக்கோட்டை, ஏற்காடு, ஆலந்தூர், ஸ்ரீரங்கம், ஆர்.கே.நகர், திருப்பரங்குன்றம், தஞ்சாவூர், அரவக்குறிச்சி என ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது நடந்த இடைத்தேர்தல்களில் எல்லாம் ஜெயித்தவர்கள், அவர் இல்லாதபோது நடந்த ஆர்.கே.நகர் தேர்தலில் தோற்றார்கள். ஆர்.கே.நகரில் நடந்தது இடைத்தேர்தல் அல்ல. அ.தி.மு.க-வின் உட்கட்சித் தேர்தல். அதில் அ.தி.மு.க-வின் செல்வாக்கு யாருக்கு எனத் தெரிந்தது. ஜெயலலிதா காலத்தில் சில சுயேச்சைகளுக்கு ஆதரவு அளித்து அவர்களை ஜெயிக்க வைத்த அ.தி.மு.க, ஒரு சுயேச்சையிடமே தோற்றுப்போன வரலாற்றை எழுதினார்கள் எடப்பாடியும் பன்னீரும்.

தினகரனுடன் பன்னீரும் எடப்பாடியும்
தினகரனுடன் பன்னீரும் எடப்பாடியும்
விகடன்

தன் கட்சிக்காரர் தவறு செய்தால் அவரின் கட்சிப் பதவியை, அமைச்சர் பதவியைப் பறிப்பார் ஜெயலலிதா; எம்.எல்.ஏ பதவியையோ எம்.பி பதவியையோ பறித்ததில்லை. அந்தப் பாதகத்தையும் செய்தார்கள். தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேரைத் தகுதிநீக்கம் செய்தார்கள். தாங்கள்தான் தலைமை என்பதை மறந்து, தங்களுக்கு மேலே இருக்கிற தலைவனின் சொல்படி, ஆசிப்படி கட்சியையும் ஆட்சியையும் வழி நடத்தினார்கள்.

எடப்பாடி
எடப்பாடி
Illustration : Vikatan

முரசொலி மாறன் இறப்புக்கு இரங்கல் தெரிவிக்காத... அஞ்சலி செலுத்த ஆள் அனுப்பாத ஜெயலலிதா, உயிருடன் இருந்திருந்தால் கருணாநிதி மரணத்துக்கு நிச்சயம் அஞ்சலிசெலுத்தப் போயிருக்க மாட்டார். ஜெயலலிதா இறந்து சில நாள்களே ஆன நிலையில், கருணாநிதி காவேரி மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுக் கொண்டிருந்தார். சசிகலாவின் உத்தரவால் அவரைப்போய் மருத்துவமனையில் பார்த்தார்கள், அன்றைக்கு நாடாளுமன்ற மக்களவைத் துணைச் சபாநாயகராக இருந்த தம்பிதுரையும் அமைச்சர் ஜெயக்குமாரும். `அரசியல் நாகரிகம்' அரங்கேறுவதைக்கூட அர்த்தத்தோடு பார்த்தது, பி.ஜே.பி.

கருணாநிதி இறந்தபிறகு, `கலைஞருக்குப் புகழஞ்சலி’க் கூட்டங்களை நடத்தியது தி.மு.க. கருணாநிதியின் சிலையைத் திறக்க அகில இந்தியத் தலைவர்களை அழைக்கிறார்கள். ஜெயலலிதா இறந்தபிறகு இரங்கல் கூட்டம் ஒன்றையாவது அ.தி.மு.க. நடத்தியதா? ஜெயலலிதா சிலை திறப்பு விழாவுக்குக்கூட, தாங்கள் வணங்கும் மோடியை அழைத்து வர முடியவில்லை.

மோடியுடன் பன்னீரும் எடப்பாடியும்
மோடியுடன் பன்னீரும் எடப்பாடியும்

தலைமைச் செயலாளர், அமைச்சர்கள் வீடுகள்கூட ரெய்டுக்குத் தப்பவில்லை. தங்கள் வீட்டை சோதனை போட்டவர்கள்மீது பாய்ச்சலைக் காட்டாதவர்கள்தான், முதல்வரை விமர்சித்துவிட்டார்கள் என அவதூறு வழக்குகளைப் போட்டார்கள். மக்களுக்கு ஆதரவாக, ஆட்சிக்கு எதிராகக் குரல் கொடுத்த திருமுருகன் காந்தி, வளர்மதி, நந்தினி, திவ்யபாரதி, சுந்தரவல்லி `ஆகியோரை சிறைக்கு அனுப்பினார்கள். கலவரத்தைத் தூண்டும் வகையில் ஃபேஸ்புக்கில் பதிவு போட்டதற்காக, பி.ஜே.பி-யின் கல்யாணராமனைக் கைது செய்தார் ஜெயலலிதா. இப்போது, ஹெச்.ராஜா பேசும் பேச்சுகளுக்கு எல்லாம் எதுவும் நடக்கவில்லை. ஜெயலலிதா இருந்திருந்தால் ஹெச்.ராஜா இப்படிப் பேசியிருப்பாரா? அவருக்கும் துணிச்சலைக் கொடுத்துவிட்டுப் போயிருக்கிறார் ஜெயலலிதா. பெரியாரையும் அம்பேத்கரையும் திராவிட இயக்கத்தையும் நீதித் துறையையும் தூற்றிய ஹெச்.ராஜா மீது எடப்பாடி அரசால் ஒரு நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை. பத்திரிகையாளரை மோசமாக இழிவுபடுத்தி, முகநூலில் பதிவு போட்ட எஸ்.வி.சேகர் தலைமறைவாகிவிட்டதாக நீதிமன்றத்தில் காவல்துறை சொன்னது. ஆனால் அவரோ, அமைச்சர் வீட்டு விசேஷத்தில் கலந்துகொண்டு, செல்ஃபி தட்டிக்கொண்டிருந்தார். அங்கே கோட்டை விட்ட காவல்துறைதான், தமிழிசை சௌந்தரராஜனைப் பார்த்து `பாசிச பா.ஜ.க ஒழிக' எனப் பறக்கும் விமானத்தில் முழக்கமிட்ட தூத்துக்குடி ஷோபியாவைக் கைதுசெய்தது. ``நீங்களெல்லாம் ஆம்பளையா...'' எனக் கேட்ட குருமூர்த்தி மீது அவதூறு வழக்குகூட போட முடியவில்லை.

சுதி, ஜதி, லயம் மாறாமல் பி.ஜே.பி-க்கு ஜால்ரா தட்டுகிறார்கள். `மாநில சுயாட்சி'க்குக் குரல்கொடுத்த ஜெயலலிதாவையும் இவர்கள் மதிக்கவில்லை. சுயமரியாதையும் காக்கவில்லை. ஜனாதிபதித் தேர்தலில் ராம்நாத் கோவிந்த் நிறுத்தப்பட்டபோது எடப்பாடியும் பன்னீரும் தினகரனும் வலிந்துபோய் ஆதரித்தார்கள். ஜெயலலிதா இருந்திருந்தால், ஆதரவு கேட்டு மோடியும் அருண் ஜெட்லியும் போயஸ் கார்டன் வாசலுக்கு வந்து நின்றிருப்பார்கள். 2007-ல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் காங்கிரஸின் பிரதீபா பாட்டீலுக்கும் பி.ஜே.பி-யின் பைரான் சிங் ஷெகாவத்தும் போட்டி ஏற்பட்டபோது, ``எனக்குத் தெரியாமலேயே எம்.பி-களும் எம்.எல்.ஏ-களும் ஓட்டு போட்டுவிட்டார்கள்'' என விநோத அறிக்கையை அப்போது வெளியிட்டார் ஜெயலலிதா. பத்தாண்டுகள் கழித்து நடந்த இந்த ஜனாதிபதித் தேர்தலிலும் அதே காட்சி. ஆனால், ஜெயலலிதா மட்டும் உயிருடன் இல்லை. அன்றைக்கு போயஸ் கார்டன் கட்டுப்பாட்டில் இருந்தவர்கள், இப்போது ரேஸ் கோர்ஸ் சாலை கட்டுப்பாட்டுக்குப் போனார்கள்.

பச்சை குத்தும் விழா
பச்சை குத்தும் விழா

ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது, அவர் பிறந்தநாளையொட்டி ஜெயலலிதா படத்தை பச்சைகுத்தும் விழாவை எடுத்தார், அப்போது சட்டமன்ற உறுப்பினராக இருந்த எம்.கே.அசோக். அமைச்சர்கள் முன்னிலையில் ஒரு சிறுமிக்கு கதறக் கதறப் பச்சை குத்தியது சமூக வலைதளங்களில் வெளியாகிக் கடும் விமர்சனத்தை உண்டாக்கியது. இதைக் கேள்விப்பட்டதும், அசோக்கின் பகுதிச் செயலாளர் பதவியைப் பறித்தார் ஜெயலலிதா. கட்டாய பச்சை குத்துவதையே விரும்பாத ஜெயலலிதாவுக்கு, இப்போது நடந்திருப்பது `பச்சைத் துரோகம்'.

ஜெயலலிதாவைப் போல ஆடம்பரம் காட்டுவதில்தான் அவரை அப்படியே பின்பற்றுகிறது அ.தி.மு.க. மாலைகளும் மேளங்களுமாக எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா தொடங்கி அனைத்து நிகழ்ச்சிகளும் இன்றைக்கு ஜெயலலிதா ஸ்டைலிலேயே நடந்துகொண்டிருக்கின்றன. மகாமகம், தேர்தல் பிரசாரக் கூட்டம் என நெரிசல் மரணங்கள் ஜெயலலிதா இருந்தபோது நடந்தது. அவரைப் போலவே அனுமதியின்றி பேனர்கள் வைத்து ஆட்களைக் காவுவாங்கிறது இன்றைய அ.தி.மு.க தலைமை.

ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி
ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி

ஆய்வு நாயகனாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உருவெடுத்தார். அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தராக பெங்களூரைச் சேர்ந்த சரப்பாவை நியமித்தார்கள். இவற்றையெல்லாம் ஜெயலலிதா இருந்திருந்தால் செய்திருக்க முடியுமா? எடப்பாடி இருப்பதால் மட்டுமே இவையெல்லாம் சாத்தியம்.

``குட்கா விற்பனைக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் லஞ்சம் வாங்கினார். அவர்மீது நடவடிக்கை எடுங்கள்" எனத் தலைமைச் செயலாளருக்கும் டிஜிபி-க்கும் கடிதம் எழுதியது வருமானவரித் துறை. விசாரணைக்கு எல்லாம் ஆஜரான விஜயபாஸ்கர், விட்டு வைக்கப்பட்டிருக்கிறார். சிதம்பரம் சிக்க வைக்கப்பட்டிருக்கிறார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்காக கோடிக்கணக்கான பணத்தைப் பட்டுவாடா செய்ததற்கான ஆதாரம் சிக்கியும் எடப்பாடியும் மற்றவர்களும் தப்பித்துக் கொள்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம் அ.தி.மு.க-வின் அடிமைத்தனம்தானே...

விஜயபாஸ்கர்
விஜயபாஸ்கர்
Illustration : Vikatan

உச்சபட்சமாக, ``அம்மாவால் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை, டி.டி.வி. தினகரன் மூலம் 18 எம்.எல்.ஏ-க்கள் பெற்றுக்கொண்டு, மக்களை ஏமாற்றுகிறார்கள்’’ எனச் சொல்லி ஜெயலலிதாவின் இமேஜையும் சரித்தார், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் செல்லூர் ராஜுவின் தெர்மக்கோல் எபிசோட் நடந்திருக்குமா? நொய்யல் ஆற்றில் சோப்பு நுரை பொங்கியிருக்குமா?

ஜெயலலிதா இருந்தவரை அவருடைய கொடநாடு எஸ்டேட்டுக்குள் அமைச்சர்களே நுழைய முடியாது. அவர் உயிருடன் இல்லாதபோது, அவர் வாழ்ந்த எஸ்டேட்டைக்கூட எடப்பாடியால் பாதுகாக்க முடியவில்லை. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அங்கே தொடர் கொலைகளும் கொள்ளைச் சம்பவங்களும் நடந்தன.

கொடநாடு
கொடநாடு
விகடன்
`சரிவைத் தொடங்கிவைத்த 5 மாநிலத் தேர்தல்!' - பலிக்காத மோடி-அமித்ஷா வியூகம்

தேர்தல் ஆணையம், வருமானவரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ என அனைத்துக்கும் அச்சப்பட்டு, அடிபணிந்துகிடக்கிறது அ.தி.மு.க.

``அ.தி.மு.க-வை வெளியில் இருந்து யாரும் வீழ்த்த முடியாது. மோடியை வைத்துக்கொண்டு, மோடி வித்தை காட்டாதீர்கள்’’ என 2017 பொங்கல் விழாவில் கொதித்தார் நடராசன். அ.தி.மு.க-வை வெளியிலிருந்துதான் வீழ்த்தியிருக்கிறார்கள்.

`அப்போலோவை வட்டமடித்த மத்திய அரசின் கழுகு' எனத் திவாகரன் சொன்னது அன்றைய மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடுவைத்தான் என சசிகலா வட்டாரம் சொல்லிக் கொண்டிருக்கிறது. ``அம்மா இறந்ததும் சின்னம்மா முதல்வர் ஆக ஆசைப்பட்டார். வெங்கையா நாயுடுதான் தடுத்துவிட்டார். பன்னீர் முதல்வர் ஆனார். பிறகு அவரை ராஜினாமா செய்யச் சொல்லி சின்னம்மா வற்புறுத்த, தர்மயுத்தம் நடந்தது, கூவத்தூர் கூத்தை அரங்கேற்றி எடப்பாடி முதல்வர் ஆனார்'' என்கிறார்கள் அவர்கள்.

2014 நாடாளுமன்றத் தேர்தலில், ``இந்தியாவின் சிறந்த நிர்வாகி மோடி இல்லை... இந்த லேடிதான்’’ என்றார் ஜெயலலிதா. அவர் இருக்கும் வரை அ.தி.மு.க-வை அசைக்க முடியாதவர்கள், அந்த லேடி இறந்தபிறகு கட்சியைக் கைப்பற்ற முடிகிறது என்றால், ஜெயலலிதாவின் ஆளுமைக்கு இதைவிட வேறு உதாரணத்தைச் சொல்லமுடியுமா? ஜெயலலிதா ஆன்மா இவர்களை மன்னிக்காது!