தஞ்சாவூர் மாநகராட்சியின் மாதந்தரக் கூட்டம் மேயர் சண்.இராமநாதன் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் சரவணக்குமார், மாநகராட்சி கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதில் அ.தி.மு.க கவுன்சிலர்கள், ``கீழவாசல் தரைப்பாலம் கட்டி முடித்து 15 நாள்களில் இடிந்து விழுந்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தரமில்லாமல் கட்டியதாலேயே இடிந்து விழுந்தது" எனப் பேசினர்.

அதைத் தொடர்ந்து தி.மு.க கவுன்சிலர்கள், `அ.தி.மு.க ஆட்சியின் அவலம்', `தரமில்லாமல் கட்டப்பட்ட மேம்பாலத்தில் விரிசல்', `அ.தி.மு.க ஆட்சியில் கட்டப்பட்ட மரணப் பாலம்... உயிர்ப்பலி கேட்கிறது' உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பலகைகளை கையில் வைத்திருந்தனர். இதனால் இரு தரப்புக்குமிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டு, கூச்சல் குழப்பத்துடன் கூட்டம் முடிவடைந்தது. அதையடுத்து, அ.தி.மு.க., அ.ம.மு.க., பா.ஜ.க கவுன்சிலர்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து அ.தி.மு.க-வைச் சேர்ந்த 25-வது வார்டு கவுன்சிலரான தெட்சிணாமூர்த்தியிடம் பேசினோம். ``தி.மு.க கவுன்சிலர் புண்ணியமூர்த்தி, `அ.தி.மு.க கவுன்சிலர்கள் தற்போது எந்த அணியில் இருக்கின்றனர் எனத் தெரியவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பது குறித்துக் கடிதம் கொடுத்திருக்கிறார்களா?' எனக் கேள்வி எழுப்பினார். உடனே மேயர், `அடுத்த கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் தொடர்பான கடிதத்தைக் கொடுக்க வேண்டும்' எனக் கூறினார்.

நாங்கள், `இது உங்களுக்குத் தேவையில்லாத விஷயம்' என எதிர்ப்பைப் பதிவுசெய்தோம். அதைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் மணிகண்டன் உள்ளிட்ட அ.தி.மு.க கவுன்சிலர்கள், அ.ம.மு.க கவுன்சிலர் கண்ணுக்கிணியாள் உள்ளிட்டோர், `கட்டி முடித்த 15 நாள்களில் கீழவாசல் தரைப்பாலம் இடிந்து விழுந்ததற்கு, தரமில்லாமல் கட்டப்பட்டதே காரணம். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடைபெறும் பணிகள் தரமில்லாமல் இருக்கின்றன. அவற்றை மறுபரிசீலனை செய்ய வேண்டும்' என்றோம்.
உடனே மேயர் இராமநாதன், `அ.தி.மு.க ஆட்சியில் கட்டப்பட்ட மரணப் பாலமான மேரீஸ்கார்னர் மேம்பாலம் சேதமடைந்தது. நாங்கள் போராடிய பின்னர் பாலம் சீரமைக்கப்பட்டது' என்றார். இதையடுத்து, `மேரீஸ்கார்னர் பாலம் கட்டும்போது ஏற்பட்ட ஏர் கிராக் உடனடியாகச் சரிசெய்யப்பட்டது. அதில் தற்போது போக்குவரத்து அனுமதிக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் கட்டிய பாலம் 15 நாள்களில் இடிந்தது. அதை ஏன் இரவோடு இரவாக அகற்றினீர்கள்?' என மணிகண்டன் பேசிக்கொண்டிருக்கும்போதே மைக் ஆஃப் செய்யப்பட்டது.

அதையடுத்து நாங்கள் முன் பகுதிக்குச் சென்று முறையிட்டோம். அப்போது தி.மு.க கவுன்சிலர்கள், குறிப்பாக பெண் கவுன்சிலர்கள், `அ.தி.மு.க ஆட்சியின் அவலம்' என எழுதப்பட்ட போர்டைக் கையில் வைத்திருந்தனர். நாங்கள் இடிந்த பாலம் குறித்து கேள்வி எழுப்புவோம் எனத் தெரிந்து, அதை மறைப்பதற்காக மேயர் முன்கூட்டியே திட்டமிட்டு, பதாகைகளை ரெடி செய்து கொடுத்து எடுத்து வர அறிவுறுத்தியிருக்கிறார்.
அதை எதிர்த்து நாங்கள் கோஷமிட்டோம். பின்னர் தி.மு.க கவுன்சிலர்களும் எழுந்து வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது 30-வது வார்டு அ.தி.மு.க கவுன்சிலர் கேசவனை, 11-வது வார்டு தி.மு.க கவுன்சிலரான பாலசுப்பிரமணியன் `போய்யா...' என ஒருமையில் பேசி, நெஞ்சில் கைவைத்து தள்ளிவிட்டார். உடனே மேயர் இராமநாதன், லைட்டை ஆஃப் செய்யச் சொல்லிவிட்டு அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டதாகக் கூறி எழுந்து சென்றுவிட்டார்.

பெண் கவுன்சிலர்கள் உள்ளே இருக்கும்போது லைட்டை ஆஃப் செய்ததை, என்னவென்று சொல்வது... இதைத் தொடர்ந்து அ.தி.மு.க., அ.ம.மு.க., பா.ஜ.க கவுன்சிலர்கள் கோஷமிட்டு உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினோம். பின்னர் ஆணையர் சரவணக்குமார் எங்களைச் சமாதானம் செய்தார். இதையடுத்து மாநகராட்சி அலுவலகத்துக்கு வெளியே வந்து எங்கள் கட்சி நிர்வாகிகளுடன் சேர்ந்து, `மேயர் இராமநாதனைக் கண்டிக்கிறோம். ஊழல் நிறைந்த மாநகராட்சியைக் கண்டிக்கிறோம்' என கோஷமிட்டோம். மாமன்றக் கூட்டத்தில் கேள்வி எழுப்பும் கவுன்சிலர்களின் மைக் ஆஃப் செய்யப்படுகிறது. பெண் கவுன்சிலர்கள் இருப்பதை கவனத்தில் கொள்ளாமல் லைட்டை ஆஃப் செய்து, அநாகரிகமாகப் பேசுவதும் தொடர்கிறது" என்றார்.
அ.தி.மு.க-வைச் சேர்ந்த நிர்வாகிகளான காந்தி, சரவணன், அ.ம.மு.க மாநிலப் பொருளார் ரெங்கசாமி, மாநகரச் செயலாளர் ராஜேஷ்வரன், ஓ.பி.எஸ் அணியைச் சேர்ந்தவர்கள் என அனைவரும் ஒன்றாக இணைந்து, தி.மு.க மேயருக்கு எதிராக கோஷமிட்டது குறிப்பிடத்தக்கது. தி.மு.க கவுன்சிலர்கள் இது குறித்துப் பேசுகையில், ``குறைந்த நிதியில் கட்டப்பட்ட தரைப்பாலம் சில காரணங்களால் இடிந்தது. இதை அ.தி.மு.க கவுன்சிலர்கள் அரசியலாக்குவதற்காக அதைச் சுட்டிக்காட்டிப் பேசினார்கள். நாங்கள் அ.தி.மு.க ஆட்சியில் கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கி கட்டப்பட்ட மேம்பாலம், தரமாகக் கட்டவில்லை என எடுத்துக் கூறியதை ஏற்றுக்கொள்ள முடியாமல் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி கோஷமிட்டனர்" என்று தெரிவித்தனர்.