Published:Updated:

உறவா... பகையா? - வெட்டாட்டத்தில் அ.தி.மு.க - பா.ஜ.க!

அண்ணாமலை - எடப்பாடி பழனிசாமி
பிரீமியம் ஸ்டோரி
அண்ணாமலை - எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க-வைக் கடுமையாக விமர்சித்தால், உடனடியாக எதிர்வினை வந்துவிழும் என்பது பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு நன்கு தெரியும்.

உறவா... பகையா? - வெட்டாட்டத்தில் அ.தி.மு.க - பா.ஜ.க!

அ.தி.மு.க-வைக் கடுமையாக விமர்சித்தால், உடனடியாக எதிர்வினை வந்துவிழும் என்பது பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு நன்கு தெரியும்.

Published:Updated:
அண்ணாமலை - எடப்பாடி பழனிசாமி
பிரீமியம் ஸ்டோரி
அண்ணாமலை - எடப்பாடி பழனிசாமி

“சட்டமன்றத்தில் ஆண்மையோடு, முதுகெலும்போடு பேசக்கூடிய அ.தி.மு.க-வைப் பார்க்க முடியவில்லை. எதிர்க்கட்சியாக அ.தி.மு.க செயல்படவில்லை. சட்டமன்றத்தில் பேசாமல் இருந்தாலும், ஓர் எதிர்க்கட்சியாக பா.ஜ.க திறம்படச் செயல்படுகிறது!” சமீபத்தில் ஆவேசம் பொங்க பா.ஜ.க எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் உதிர்த்த வார்த்தைகள்தான் இவை. அவரின் கருத்து அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், “நயினாரின் கருத்து தவறாகத் திரிக்கப்பட்டுவிட்டது. அ.தி.மு.க - பா.ஜ.க உறவு ஓர் இயற்கையான உறவு. அந்த உறவில் எந்தப் பதற்றமும் இல்லாமல் பார்த்துக்கொள்வோம்” என்று விளக்கமளித்திருக்கிறார் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை. இந்த விளக்கமும், அ.தி.மு.க முகாம் சமூக வலைதளங்களில் பொங்கிய பிறகே வந்திருக்கிறது. அரியலூர் மாணவி தற்கொலை விவகாரத்தில் தொடங்கியிருக்கும் இந்த அரசியல், அ.தி.மு.க - பா.ஜ.க வெட்டாட்டமாக நீண்டிருப்பதாகச் சொல்கிறார்கள் விவரமறிந்தவர்கள்!

உறவா... பகையா? - வெட்டாட்டத்தில் அ.தி.மு.க - பா.ஜ.க!

ஒத்துழைக்காத எடப்பாடி... தூபம் போட்ட மையக்குழு கூட்டம்!

அரியலூர் மாணவி மதமாற்றப் புகார் சர்ச்சையில், அ.தி.மு.க எந்தக் கருத்தும் சொல்லவில்லை என்பதே பா.ஜ.க வட்டாரத்தில் அனலைக் கிளப்பியிருந்தது. இது குறித்து அ.தி.மு.க தலைமை ஏதாவது பேசும் என கமலாலயத்தில் எதிர்பார்ப்புகள் எழுந்திருந்தன. ஆனால், “இது பா.ஜ.க-வினர் செய்யும் அரசியல். நாம் ஏன் வண்டியில் ஏற வேண்டும்?” என்று நாசுக்காகத் தவிர்த்துவிட்டாராம் அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி. இந்த விவகாரமெல்லாம் ஜனவரி 24-ம் தேதி கமலாலயத்தில் நடைபெற்ற பா.ஜ.க மையக்குழுக் கூட்டத்தில் தீவிரமாக விவாதிக்கப்பட்டிருக்கின்றன. நயினாரின் சர்ச்சைப் பேச்சுக்குக்கூட அங்கேதான் பிள்ளையார்சுழி போடப்பட்டதாகச் சொல்கிறார்கள் பா.ஜ.க சீனியர்கள்.

இது குறித்து நம்மிடம் பேசினார் பா.ஜ.க மாநிலத் துணைத் தலைவர் ஒருவர். “பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் அ.தி.மு.க இடம்பெற்றிருக்கிறது. கூட்டணிக் கட்சி என்கிற வகையில், எங்களது கோரிக்கைகள் குறித்து அ.தி.மு.க பேசியாவது இருக்க வேண்டும். ஒற்றுமையோடு தி.மு.க அரசை எதிர்த்திருக்க வேண்டும். ஆனால், அரியலூர் மாணவி தற்கொலை விவகாரம் தொடர்பாக, தொடக்கத்திலிருந்தே அ.தி.மு.க வாய் திறக்கவே இல்லை. ஜனவரி 24-ம் தேதி நடந்த மாநில மையக்குழுக் கூட்டத்தில், இந்த விவகாரம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் சற்று காட்டமாகவே பேசியிருக்கிறார். ‘பஞ்சாப்புல பிரதமர் கான்வாய் தாக்கப்பட்டபோது, நாமல்லாம் ஒண்ணு சேர்ந்து போய் கவர்னர்கிட்ட புகார் கொடுத்தோம். ஆனால், வெறும் அறிக்கையோட அ.தி.மு.க-காரங்க கடமையை முடிச்சுக்கிட்டாங்க. மாணவி விவகாரத்துலயும் அந்த மாதிரி அறிக்கைகூட வெளிவரலை. நம்ம சொந்தப் பிரச்னையவா பேசச் சொல்றோம்?’ என்று கொதித்திருக்கிறார் நயினார்.

இக்கருத்தை ஆமோதித்த பொன்.ராதாகிருஷ்ணன், ‘நம்ம சப்போர்ட் இருந்ததாலதான் மேற்கு மாவட்டங்கள்ல அ.தி.மு.க-வுக்கு இத்தனை எம்.எல்.ஏ-க்கள் கிடைச்சுருக்காங்க. 2021 சட்டமன்றத் தேர்தல்ல நம்ம ஆதரவு மட்டும் இருந்திருக்கலைன்னா, அவங்களுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்துகூட கிடைச்சுருக்காது. சட்டமன்றத் தேர்தல்ல 20 சீட் மட்டும் கொடுத்து நம்மளை ஓரங்கட்டுன மாதிரி, வரப்போற உள்ளாட்சித் தேர்தல்லயும் நம்மை ஓரங்கட்டுறதுக்கு அ.தி.மு.க தயங்காது. இப்படியே போனா, இந்தக் கூட்டணியில மேயர் பதவியெல்லாம் நாம கனவுலகூட எதிர்பார்க்க முடியாது. மத்தியில நாம அதிகாரத்துல இருக்குறதுனாலதான், அ.தி.மு.க தலைவர்கள் மேல அழுத்தமா கைவைக்க தி.மு.க-வும் தயங்குது. நம்ம சப்போர்ட் இல்லைன்னா, இந்நேரத்துக்கு தி.மு.க-காரங்க அ.தி.மு.க-வை மொத்தமா துவம்சம் பண்ணியிருப்பாங்க. அந்த நன்றி அ.தி.மு.க தலைவர்களுக்குக் கொஞ்சம்கூட இல்லை’ என்றிருக்கிறார். அ.தி.மு.க தலைமைக்கு ‘ஜெர்க்’ கொடுத்தால் மட்டுமே, பா.ஜ.க-வின் பலம் என்னவென்பது புரியும் என்று கூடியிருந்த தலைவர்கள் பலரும் பேசியிருக்கிறார்கள். இதைத் தொடர்ந்துதான், ஜனவரி 25-ம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ‘மாணவி மரணத்துக்கான நீதி கேட்பு போராட்டத்தில்’ நயினார் நாகேந்திரன் அ.தி.மு.க-வைத் தாக்கிப் பேசியிருக்கிறார். அப்போது, மேடையிலிருந்த அண்ணாமலை, ஹெச்.ராஜா போன்றவர்கள் ரசித்து, சிரித்துக் கருத்தை ஆமோதித்தார்கள்.

உறவா... பகையா? - வெட்டாட்டத்தில் அ.தி.மு.க - பா.ஜ.க!

பா.ஜ.க-வின் 75 சதவிகித அரசியல் கணக்கு!

அ.தி.மு.க-வைக் கடுமையாக விமர்சித்தால், உடனடியாக எதிர்வினை வந்துவிழும் என்பது பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு நன்கு தெரியும். எதிர்பார்த்தபடியே, அ.தி.மு.க ஐடி விங்கைச் சேர்ந்த ராஜ் சத்யன், சிங்கை ராமச்சந்திரன், அமைப்புச் செயலாளர் சுதா பரமசிவம் எனப் பலரும் சமூக வலைதளங்களில் நயினாரைக் கடுமையாக விமர்சித்தனர். ஆனால், பா.ஜ.க-விலிருந்து எதுவும் உடனடியாக ‘ரியாக்ட்’ செய்யவில்லை. இவர்கள் ஒருபக்கம் விமர்சித்துக் கொண்டிருக்கும்போது, அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திடமிருந்து ஓர் அறிக்கை வந்து விழுந்தது. அந்த அறிக்கையில், ‘மாணவி தற்கொலைக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கோரியிருந்தார் ஓ.பி.எஸ். ஆக மொத்தத்தில் நாங்கள் தொடங்கிய போராட்டம் குறித்து, நாங்கள் எதிர்பார்த்தபடி அ.தி.மு.க கருத்து தெரிவித்துவிட்டது. இதன் பிறகுதான், ‘நயினாரின் கருத்து தவறாகத் திரிக்கப்பட்டுவிட்டது’ என்று தன்னிலை விளக்கம் கொடுத்தார் அண்ணாமலை. மேலோட்டமாகப் பார்த்தால், அ.தி.மு.க-வை ஒரு தட்டு தட்டி வைப்பதற்காக நடந்துள்ள அரசியலாகவே இது தெரியும். ஆனால், உண்மையில் பா.ஜ.க-வின் ‘75 சதவிகித அரசியல்’ கணக்கு இதன் பின்னணியில் ஒளிந்திருக்கிறது.

தமிழகத்தில் சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த வாக்காளர்கள் 15 சதவிகிதம் பேர் இருக்கிறார்கள். நாம் தமிழர் கட்சி, அ.ம.மு.க., மக்கள் நீதி மய்யம் கட்சிகளெல்லாம் தனித்தே போட்டியிட்டு சுமார் 10 சதவிகித வாக்குகளைப் பெற்றிருக்கிறார்கள். ஆக மொத்தம், இந்த 25 சதவிகித வாக்குகள் ஒருபோதும் பா.ஜ.க-வுக்கு விழப்போவதில்லை. மீதியிருக்கும் 75 சதவிகித வாக்குகளில்தான் நாங்கள் அரசியல் செய்தாக வேண்டும். அதுதான் நடக்கிறது.

தி.மு.க-வுக்குச் சிறுபான்மையினரும், சாதி இந்துக்களும்தான் வாக்குப் பின்புலமாக இருக்கிறார்கள். அதேபோல, அ.தி.மு.க-வுக்கு ‘சாஃப்ட் இந்துத்துவா’ மனநிலையிலுள்ளவர்களும், சாதி இந்துக்களும் பின்புலத்தில் இருக்கிறார்கள். சிறுபான்மையினர் வாக்குகள் பறிபோய்விடக் கூடாது என்பதற்காக மாணவி விவகாரத்தில் தி.மு.க எதுவும் பேசப்போவதில்லை. ‘மதமாற்றமே நடைபெறவில்லை’ என்று அமைச்சர் அன்பில் மகேஷில் ஆரம்பித்து, தஞ்சாவூர் எஸ்.பி வரை பேட்டியும் கொடுத்துவிட்டார்கள். இந்த விவகாரத்தில் பேசியிருக்கவேண்டிய அ.தி.மு.க-வும் மெளனம் காத்துவிட்டது. இதை வாய்ப்பாக எடுத்துக்கொண்டுதான், ‘இந்துக்களின் காவலன் பா.ஜ.க-தான்’ என்பதை நிறுவிட முயல்கிறது கமலாலயம். அ.தி.மு.க-வின் ‘சாஃப்ட் இந்துத்துவா’ வாக்குகளில் ஓட்டையைப் போடும் யுக்திதான் இது. பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவே நான்கு பெண் பா.ஜ.க உறுப்பினர்கள்கொண்ட விசாரணைக்குழுவை அமைக்கும் அளவுக்கு ‘மாணவி தற்கொலை’ விவகாரத்தைக் கொண்டு சென்றிருக்கிறோம். தமிழகத்தில் நாங்கள் இழப்பதற்கு எதுவுமில்லை. எங்களுக்கு வாய்ப்புள்ள 75 சதவிகித வாக்குகளைக் கவர, எந்த அரசியல் யுக்தியையும் கையிலெடுக்க நாங்கள் தயார்” என்றார் அந்த மாநிலத் துணைத் தலைவர்.

உறவா... பகையா... என்னவாகும் கூட்டணி?

இதற்கிடையே, நயினார் நாகேந்திரனின் பேச்சால், ‘கூட்டணிக்குள் விரிசல் விழுமா?’ என்கிற கேள்வியும் எழுந்திருக்கிறது. ஜனவரி 25-ம் தேதி இரவு, எடப்பாடி பழனிசாமிக்கு போன் போட்ட அ.தி.மு.க-வின் வழிகாட்டுதல் குழு உறுப்பினர் ஒருவர், ‘அவங்க என்ன வேணாலும் பேசுவாங்க. நாம அமைதியா இருக்கணுமா? 30 வருஷத்துக்கு மேல ஆட்சியில இருந்த கட்சிண்ணே இது. குருமூர்த்தி, நயினார் நாகேந்திரன்லாம் கட்சியோட ஆண்மை பத்திப் பேசுற அளவுக்குத் தரம் தாழ்ந்து போயிட்டோமா? இதுக்கும் அமைதியா இருந்தோம்னா வெட்கக் கேடுண்ணே’ என்று ஏகத்துக்கும் கொதித்திருக்கிறார். அவரைச் சாந்தப்படுத்திய எடப்பாடி, ‘நாம ரியாக்ட் செய்யணும்கறதுதான் அவங்க எதிர்பார்ப்பு. பேசாம அமைதியா இருங்க. அவங்களே நம்ம வழிக்கு வருவாங்க’ என்றிருக்கிறார். ஆனால், அ.தி.மு.க தலைவர்கள் யாரும் எதிர்பாராத விதமாக, மாணவி தற்கொலையைத் தீர விசாரிக்கக் கோரி பன்னீரிடமிருந்து அறிக்கை வெளிவந்ததை யாரும் எதிர்பார்க்கவில்லை. அதுவும் ஊரே ஊரடங்காகி உறங்கச் செல்லும் சமயத்தில், ஜனவரி 25-ம் தேதி இரவு ஒன்பது மணிக்கு மேல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறார் பன்னீர்.

உறவா... பகையா? - வெட்டாட்டத்தில் அ.தி.மு.க - பா.ஜ.க!

நம்மிடம் பேசிய அ.தி.மு.க அமைப்புச் செயலாளர்கள் சிலர், “இந்த விவகாரம் தொடர்பாக விளக்கமளிக்க எடப்பாடிக்கு போன் போட்டிருக்கிறார் அண்ணாமலை. முதலில் எடப்பாடி அதற்கு ரெஸ்பான்ஸ் செய்யவே இல்லை. ‘அவர்கூட நான் பேச விரும்பலை’ என்று சொல்லிவிட்டாராம். பின்னர், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு போன் போயிருக்கிறது. அவரும் பா.ஜ.க-விடமிருந்து வந்த சமாதானத் தூதை ஏற்கவில்லை. அடுத்து, முன்னாள் அமைச்சர் தங்கமணியைப் பிடித்து, அவர் மூலமாக எடப்பாடியைச் சமாதானம் செய்திருக்கிறார் அண்ணாமலை. ‘வாய் தவறி வந்துவிட்டது’ என ஆண்மை விவகாரப் பேச்சுக்கு பா.ஜ.க விளக்கமளித்தாலும், அதை ஏற்கும் மனநிலையில் அ.தி.மு.க இல்லை. இப்போதைக்குக் கூட்டணிக்குள் விரிசல் ஏற்படவில்லையென்றாலும், நெருப்பு கனன்று கொண்டுதான் இருக்கிறது. வரும் உள்ளாட்சித் தேர்தலில், இதற்கான எதிர்வினை கண்டிப்பாகத் தெரியவரும்” என்றனர்.

தி.மு.க-வை அடித்து, பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பிடிக்க முயன்ற பா.ஜ.க., இப்போது கூட்டணிக் கட்சியான அ.தி.மு.க-வையும் சேர்த்துத் தாக்க ஆரம்பித்திருக்கிறது. அ.தி.மு.க., பா.ஜ.க இருவருமே ஒருவரை மற்றொருவர் குதிரையாக நினைத்து, அதன் முதுகில் சவாரி செய்ய நினைப்பதுதான், இத்தனை களேபரங்களுக்கும் காரணம். இதற்காக ஒருவரை ஒருவர் குத்திக் கிழிக்கும் வெட்டாட்டத்துக்கும் தயாராகிவிட்டனர். ‘உறவா... பகையா?’ என்ற கேள்விக்கு இச்சமயம் இரு தரப்பிடமும் சரியான பதில் இல்லை என்பதுதான் யதார்த்தம். இந்த அரசியல் ஆட்டத்துக்குள், தங்களுக்கென ஓர் அரசியல் கணக்கை வைத்துக்கொண்டு காய்நகர்த்த ஆரம்பித்துவிட்டது பா.ஜ.க. இனி அ.தி.மு.க மூவ் என்னவென்பதுதான் புதிர்க் கேள்வி. புதிருக்கான முடிச்சை எம்.ஜி.ஆர் மாளிகைதான் இனி அவிழ்க்க வேண்டும்!

“குட்டியைவிட்டு ஆழம் பார்க்கக் கூடாது!” - கண்டிக்கும் ஜெயக்குமார்

நயினாரின் கருத்து, பா.ஜ.க-வின் அரசியல் குறித்து, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் பேசினோம். “கூட்டணி தர்மம் என்று ஒன்று இருக்கிறது. கூட்டணியில் இருந்துகொண்டே எங்களை விமர்சிப்பது ஆரோக்கியமான விஷயம் கிடையாது. நயினார் நாகேந்திரன் பேசியதை மேடையிலேயே, கட்சித் தலைவர் அண்ணாமலை கண்டித்திருக்க வேண்டும். ஆனால், அவர் செய்யாமல்விட்டது கண்டனத்துக்குரியது. எங்கள் கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் கொதித்தெழுந்த பிறகே வருத்தம் தெரிவிக்கிறார். இந்த நிலை எதிர்காலத்தில் தொடரக் கூடாது. குட்டியைவிட்டு ஆழம் பார்க்கும் வேலையை பா.ஜ.க இதோடு கைவிட வேண்டும். பா.ஜ.க-வுக்குக் கட்சியை வளர்க்க ஆசை இருக்கலாம். ஆனால், மக்கள் அங்கீகாரம் இருக்க வேண்டும். மக்கள் அங்கீகாரம் பெற்ற பிரதான எதிர்க்கட்சியான எங்களை விமர்சித்து, அந்த இடத்துக்கு வர நினைக்கக் கூடாது. தமிழகத்தில் கட்சியை வளர்க்க வேண்டுமென்றால், உங்கள் கொள்கைகளைச் சொல்லி அதைச் செய்ய வேண்டும்!’’ என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism