Published:Updated:

இல்லாத சட்டியில் இலவச அகப்பைகள்!

இல்லாத சட்டியில் இலவச அகப்பைகள்!
பிரீமியம் ஸ்டோரி
இல்லாத சட்டியில் இலவச அகப்பைகள்!

தமிழகத்தில் பட்ஜெட்படி நாம் ஓராண்டுக்குச் செய்கிற மொத்தச் செலவு 2.6 லட்சம் கோடி. இதில் பெண்களுக்குத் தரும் பணம் என்பது பத்து சதவிகிதம் வரலாம்.

இல்லாத சட்டியில் இலவச அகப்பைகள்!

தமிழகத்தில் பட்ஜெட்படி நாம் ஓராண்டுக்குச் செய்கிற மொத்தச் செலவு 2.6 லட்சம் கோடி. இதில் பெண்களுக்குத் தரும் பணம் என்பது பத்து சதவிகிதம் வரலாம்.

Published:Updated:
இல்லாத சட்டியில் இலவச அகப்பைகள்!
பிரீமியம் ஸ்டோரி
இல்லாத சட்டியில் இலவச அகப்பைகள்!

ஏற்கெனவே தமிழகத்தின் பொருளாதாரம் தள்ளாடுகிறது. ஒரு பக்கம் வருவாய் பற்றாக்குறை... இன்னொரு பக்கம் கடன்... வரும் நிதியாண்டின் இறுதியில் தமிழக அரசின் கடன் மட்டும் கிட்டத்தட்ட ரூ.5.7 லட்சம் கோடி. இதுகுறித்து மார்ச் 4, 2021 ஆனந்த விகடன் இதழில் விரிவாக அலசியிருந்தோம். இந்தச் சூழலில், தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் தேர்தல் வாக்குறுதிகளில் இலவசங்களை வாரி வழங்கியிருக்கின்றன. இலவச வாஷிங்மெஷின், சூரிய சக்தி அடுப்பு, இலவச கேபிள், மாதந்தோறும் குடும்பத்தலைவிகளுக்கு 1,500 ரூபாய், வருடத்துக்கு 6 சிலிண்டர்கள் என அறிவிப்புகளால் திணறவைத்திருக்கிறது அ.தி.மு.க. தி.மு.க-வும் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத்தொகை, எரிவாயு சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம், மாணவர்களுக்கு டேப்லட் என இலவச அறிவிப்புகளைக் கொட்டியிருக்கிறது.

இலவசங்களைத் தேர்தல் அறிக்கைகளில் அள்ளிவிடுவது தமிழகத்துக்கு வழக்கம்தான். பொருளாதாரம் நிலைகுலைந்துள்ள இந்தச் சூழலிலும் இலவச அறிவிப்புகளை வெளியிட்டுள்ளதுதான் விவாதமாகி யிருக்கிறது.

குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் உரிமைத்தொகை வழங்குவது இந்தியாவில் புதிதல்ல. அசாம் மாநில பி.ஜே.பி அரசு, கடந்த டிசம்பர் 1-ம் தேதி முதல் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருக்கும் ஒவ்வொரு குடும்பத்தலைவிக்கும் மாதந்தோறும் 830 ரூபாய் வழங்கும் திட்டத்தைத் தொடங்கிச் செயல்படுத்திவருகிறது. இதில் 400 ரூபாய் நேரடியாக பெண்களின் வங்கிக்கணக்குக்குச் செல்லும். மீதமுள்ள தொகைக்கு பருப்பு, பழங்கள், சர்க்கரை போன்றவற்றை மானிய விலையில் பெற்றுக்கொள்ளலாம். ‘இந்த 830 ரூபாயை விரைவில் 3,000 ரூபாயாக மாற்றவிருக்கிறோம்’ என்று அறிவித்திருக்கிறார் அம்மாநில நிதித்துறை அமைச்சர். அங்கு காங்கிரஸும் இதைத் தேர்தல் வாக்குறுதியாகக் கொடுத்திருக்கிறது.

தமிழகத்தில் இப்படியொரு திட்டத்துக்கான விதையைத் தூவியவர், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன். ‘பெண்கள் குடும்பத்தின் பெரும் சுமையைச் சுமக்கிறார்கள். அதை யாரும் அங்கீகரிப்பதே கிடையாது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் குடும்பத்தலைவிகளின் உழைப்புக்குச் சம்பளம் தருவோம்’ என்றார். தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் அடுத்தடுத்து தங்கள் வாக்குறுதிகளில் அதை இணைத்திருக்கின்றன.

இல்லாத சட்டியில் இலவச அகப்பைகள்!

இந்த இலவச அறிவிப்புகளும் குடும்பத் தலைவிகளுக்கான மாத உரிமைத்தொகை அறிவிப்புகளும் ‘சரியா, தவறா’ என்ற கேள்வியை விட ‘சாத்தியமா’ என்பதே ஆராயப்பட வேண்டிய கேள்வி.

‘இன்னும் பல லட்சம் பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் ஒரு மாநிலத்தில், அம்மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த விலையில்லாமல் பொருள்களை வழங்குவது வரவேற்கத்தக்கது. ஆனால், அவை அவர்களின் வாழ்க்கையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவதாக இருக் கவேண்டும். ஏற்கெனவே கடன் தள்ளுபடிகள், இலவசத் திட்டங்களால் நாட்டின் பொருளாதாரம் அதல பாதாளத்தில் தத்தளிக்கிறது. இப்படியான கவர்ச்சித் திட்டங்கள் ஓட்டு வாங்க உதவலாம். நாட்டுக்கு நல்லதுமில்லை... சாத்தியமுமில்லை’ என்று ஒரு தரப்பு சொல்கிறது. ‘இந்தியாவின் பிறமாநிலங்களோடு ஒப்பிடும்போது சமூக நலத்திட்டங்கள் தமிழகத்தில்தான் சிறப்பாகச் செயல்படுகின்றன. அதனால்தான் சுகாதாரம், தனிமனிதப் பொருளாதார வளர்ச்சியில் நாம் முன்னிற்கிறோம். நம் வளர்ச்சி விகிதத்தோடு ஒப்பிடும்போது இந்தக் கடனெல்லாம் ஒன்றுமேயில்லை... நிச்சயம் இவற்றை நிறைவேற்ற முடியும்’ என்கிறது இன்னொரு தரப்பு.

வறுமைக்கோட்டுக்குக் கீழேயிருக்கும் முன்னுரிமை உள்ள குடும்பங்கள், அந்தியோதயா அன்ன யோஜனா திட்டத்தின் கீழுள்ள குடும்பங்கள், வறுமைக்கோட்டுக்கு மேலேயிருக்கும் முன்னுரிமையற்ற குடும்பங்கள், சர்க்கரை மட்டும் வாங்கும் குடும்பங்கள், எந்தப் பொருளும் வேண்டாதவர்கள் எனத் தமிழகத்தில் குடும்ப அட்டைகள் பிரிக்கப்பட்டுள்ளன. 2012 ஜனவரி நிலவரப்படி சுமார் 2,07,54,751 அரிசி பெறும் குடும்ப அட்டைகள் தமிழகத்தில் உள்ளன.

உத்தேசமாக 2 கோடி குடும்ப அட்டைகள் என்று எடுத்துக் கொண்டால்கூட தற்போது தி.மு.க அறிவித்துள்ள 1,000 ரூபாய் திட்டத்துக்கு ஓராண்டுக்கு சுமார் 24,000 கோடி செலவாகும். அ.தி.மு.க-வின் 1,500+6 இலவச எரிவாயு சிலிண்டர் திட்டத்துக்கு ஆண்டுக்கு 46,000 கோடி தேவை. உத்தேசமாக ஒரு வாஷிங்மெஷின் 4,000 ரூபாய் என்று வைத்தால்கூட மொத்தமுள்ள 2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்குத் தர ரூ. 8,000 கோடி தேவைப்படும்.

சமீபத்தில் ஓபிஎஸ் தாக்கல் செய்த பட்ஜெட்படி, தமிழக அரசின் மொத்த வருவாய் 2.19 லட்சம் கோடி. செலவு 2.6 லட்சம் கோடி. மொத்தத்தில் 41,000 கோடி வருவாய்ப் பற்றாக்குறை இருக்கிறது. ஏற்கெனவே வருவாய்ப் பற்றாக்குறை இருக்கும்போது, இவ்வளவு பெருந்தொகையை இத்திட்டத்துக்கு எங்கிருந்து செலவிடுவார்கள் என்ற கேள்வியை எழுப்புகிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.

‘கனிமவளங்கள் மூலம் வருமானத்தை அதிகரிப்போம். பொதுத்துறை நிறுவனங்களைச் சீரமைத்து லாபம் ஈட்டுவோம்’ என்று தி.மு.க-வாவது வழிகளைச் சொல்கிறது. அ.தி.மு.க அதைப் பற்றிக்கூடக் கவலைப்படவில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பூர்ணலிங்கம், கோபால், சுரேஷ் சம்பந்தம்
பூர்ணலிங்கம், கோபால், சுரேஷ் சம்பந்தம்

“இலவசங்கள் வழங்கும் திட்டங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு எந்த அளவுக்கு உதவும் என்பதுதான் முக்கியமான கேள்வி. கடன் வாங்கிக்கூட இந்தத் திட்டங்களைச் சாத்தியப்படுத்திவிடலாம். ஆனால் அது குடும்பங்களின் நிலையை மாற்றப்போவதில்லை. மக்களின் உற்பத்தித்திறனை பாதிக்கவே செய்யும்.

இப்போதைக்கு தமிழ்நாட்டின் ஆகப்பெரிய வருவாய் தருவது டாஸ்மாக். ஒரு பக்கம் டாஸ்மாக்கால் ரூ.35,000 கோடி வருமானம் வருகிறது. இன்னொரு பக்கம், மதுவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்காக மருத்துவமனைகளில் பல்லாயிரம் கோடிகள் செலவிடப்படுகின்றன. குற்றச்செயல்கள், குடும்ப வன்முறைகள் எனப் பல பிரச்னைகள் ஏற்படுகின்றன. இப்படியான இலவசத் திட்டங்களைவிட மதுவிலக்கு போன்ற ஆக்கபூர்வமான திட்டங்கள்தான் தேசத்தை மாற்றும். நாட்டுக்கான வரிவருவாய் வாய்ப்புகள் முடக்கப்பட்டுள்ள இந்தச்சூழலில் இதுமாதிரியான இலவசத் திட்டங்கள் மது விற்பனையை அதிகப்படுத்துவதற்கான தேவையைத்தான் உருவாக்கும்” என்கிறார் பொருளாதார நிபுணர் வி.கோபால்.

‘ஆண்டுக்கு 6 சமையல் எரிவாயு சிலிண்டர் இலவசம்’ என்று அ.தி.மு.க-வும், ‘ஒவ்வொரு சிலிண்டருக்கும் 100 ரூபாய் மானியம்’ என்று தி.மு.க-வும் வாக்குறுதி அளித்துள்ளன. தமிழகத்தில் இப்போது 14.2 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 835 ரூபாய். 300 ரூபாய்க்கு மேல் வழங்கப்பட்டுவந்த மானியத்தை, கடந்த இரண்டாண்டுகளில் படிப்படியாகக் குறைத்து 24.95 ரூபாய்க்குக் கொண்டுவந்துவிட்டது மத்திய அரசு. தமிழகத்தில் சுமார் 2.5 கோடி குடும்பங்கள் சமையல் எரிவாயு பயன்படுத்திவருகின்றன. ‘மத்திய அரசு கைவிட்ட நிலையில் மாநில அரசு மானியம் வழங்கி சமையல் எரிவாயு விலையைக் கட்டுப்படுத்த வேண்டும்’ என்று நுகர்வோர் அமைப்புகள் விடுத்த கோரிக்கைக்கு ‘நிதி நிலைமை சரியில்லை’ என்ற முதலமைச்சர், இப்போது இலசமாகவே சிலிண்டர் தருவோம் என்று வாக்குறுதி அளித்திருக்கிறார்.

இல்லாத சட்டியில் இலவச அகப்பைகள்!

“பட்ஜெட்டை ஆய்வு செய்தால், 31.3.2022 அன்று நிலவரப்படி தமிழகத்துக்கு 6.01 லட்சம் கோடி கடன் இருக்கும். வருவாயோடு ஒப்பிடும்போது இது கிட்டத்தட்ட மூன்று மடங்கு. ஒரு நபர் தன் ஓராண்டு சம்பளத்தைப்போல மூன்று மடங்குத் தொகையைக் கடனாக வாங்குவதற்கு சமம் இது. உற்பத்தி விகிதம் அனுமதிக்கிற அளவுக்குத்தான் கடன் பெற்றிருக்கிறோம் என்று சொல்வதெல்லாம் ஏமாற்றுவேலை. உண்மையில் கவலையளிக்கும் நிலை இது.

மின்வாரியம், அரசுப் போக்குவரத்துக் கழகம் போன்ற அரசு நிறுவனங்கள் பல லட்சம் கோடி கடனில் மூழ்கியுள்ளன. இந்த நிறுவனங்கள் கடன் வாங்க அரசு கொடுத்துள்ள உத்தரவாதங்களே 50,000 கோடிக்கு மேல் இருக்கிறது. இவ்வளவு பிரச்னைகள் இருக்கும்போது எப்படி இலவசங்கள் கொடுக்க முடியும்? ஏற்கெனவே பட்ஜெட்டில் ரூ. 40,000 கோடி துண்டு விழுந்திருக்கிறது.

வரி வருமானம் வெகுவாகக் குறைந்துவிட்டது. ஜி.எஸ்.டியிலும் உரிய பங்கு வந்துசேரவில்லை. சொத்துப் பதிவுக்கட்டணம், மோட்டார் வாகனப் பதிவு, டாஸ்மாக் - மூன்று வாய்ப்புகள்தான் அரசுக்கு உள்ளன. இந்த இலவசத் திட்டங்களையெல்லாம் செயல்படுத்த வேண்டுமென்றால் ஒரேவழி, டாஸ்மாக்கில் விற்பனையை அதிகப்படுத்த வேண்டும். சொத்துப் பதிவு, வாகனப்பதிவு கட்டணங்களை உயர்த்த வேண்டும். இதனால் பாதிக்கப்படப் போவது எளிய மக்கள்தான். ஒரு நல்ல அரசு தரமான கல்வியையும் தரமான மருத்துவ வசதியையும் மக்களுக்கு வழங்கவேண்டும். ஆசைகாட்டும் திட்டங்களை அறிவிப்பது வளர்ச்சிக்கு உதவாது...” என்கிறார் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி பூர்ணலிங்கம்.

அதேநேரத்தில், பொருளாதாரப் புரிதலோடு உணர்ச்சிவசப்படாமல் ஆய்வு செய்தால் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாயோ, 1,500 ரூபாயோ கொடுப்பதென்பது பெரிய விஷயமில்லை என்றும் சில பொருளாதார நிபுணர்கள் சொல்கிறார்கள்.

“தமிழகத்தில் பட்ஜெட்படி நாம் ஓராண்டுக்குச் செய்கிற மொத்தச் செலவு 2.6 லட்சம் கோடி. இதில் பெண்களுக்குத் தரும் பணம் என்பது பத்து சதவிகிதம் வரலாம். இதுமாதிரியான திட்டங்களால் ஏற்படக்கூடிய பொருளாதாரப் பரிவர்த்தனையையும் சேர்த்துப் பார்க்கவேண்டும். இந்தத் திட்டம் பெரும்பாலும் ஏழைப் பெண்களுக்குத்தான் போய் சேரப்போகிறது. பணம் கிடைத்தால் அதைக்கொண்டு பொருள்கள் வாங்குவார்கள். சந்தையில் வணிகம் நடக்கும். வணிகம் நடந்தால் பொருளாதாரம் வளரும்...” என்கிறார் பொருளாதாரச் சிந்தனையாளரும் ‘ட்ரீம் தமிழ்நாடு’ அமைப்பின் நிறுவனருமான சுரேஷ் சம்பந்தம்.

“சில குடும்பங்களில் இந்தப்பணத்தை ஆண்கள் பறித்து டாஸ்மாக்கில் செலவழிக்கலாம். ஆனால் 90 சதவிகிதம் குடும்பங்களுக்கு இதுமாதிரியான திட்டங்கள் பயனளிக்கவே செய்யும். புதிதாகப் பொறுப்பேற்கும் அரசு வருவாயை அதிகப்படுத்த முயலவேண்டும். அப்போது இது சாத்தியமே!

தமிழ்நாடு கடனில் தத்தளிக்கிறது என்பதே மிகைப்படுத்தப்பட்டது. நாம் வீட்டுக்குப் போடும் பட்ஜெட்டையும் நாட்டுக்குப் போடும் பட்ஜெட்டையும் ஒப்பிட்டுக் குழப்பிக் கொள்கிறோம். வீட்டுக்குப் போடும் பட்ஜெட் படி, கடன் இருக்கக்கூடாது. சேமிக்க வேண்டும். நாட்டுக் கான பட்ஜெட்டில் சேமித் தீர்கள் என்றால் பொருளாதாரம் வளராது. பணத்தைப் பரிவர்த்தனை செய்ய வேண்டும்.

10 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட அமெரிக்காவில், மொத்த உற்பத்தித் திறன் 10 டாலர் என்றால் அதே 10 டாலர் அளவுக்குக் கடன் வாங்கு கிறார்கள். வேறு வேறு திட்டங் களில் முதலீடு செய்கிறார்கள். அதனால் அங்கு பொருளாதாரம் வளர்கிறது. நமது மொத்த உள்நாட்டு உற்பத்தித்திறன் என்பது ரூ.20 லட்சம் கோடி. கடன், சுமார் 5.7 லட்சம் கோடி. உத்தேசமாக 20 முதல் 25 சதவிகிதம். என்னைக் கேட்டால், இன்னொரு 5 லட்சம் கோடிகூட கடன் வாங்கலாம். ஆனால் அதை எதில் முதலீடு செய்கிறோம் என்பதில் தெளிவு வேண்டும்.

தமிழ்நாட்டில் பொருளாதார நிர்வாகம் மோசமாக இருப்பதை மறுக்கமுடியாது. நிறைய கடன்களை அதிக வட்டிக்கு வாங்கியுள்ளோம். சர்வதேச அளவில் வட்டி விகிதங்கள் வெகுவாகக் குறைந்துவிட்டன. இதுகுறித்து முழுமையாக ஆய்வு செய்து கடன் பெற்ற அமைப்புகளிடம் பேசி வட்டி விகிதத்தைக் குறைக்கலாம். கட்ட வேண்டிய வட்டியளவு பாதியாகக் குறைய வாய்ப்பிருக்கிறது. ரூ. 5.7 லட்சம் கோடி கடனுக்கு ஏறக்குறைய 40,000 கோடி வட்டி கட்ட வேண்டியிருக்கும். வட்டி விகிதத்தைக் குறைத்து இந்தத் தொகையைப் பாதியாக்கினால், அதை வைத்தேகூட குடும்பத்தலைவிக்கு உரிமைநிதித் திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியும்.” என்கிறார் சுரேஷ் சம்பந்தம்.

தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் அறிவித்துள்ள குடும்பத் தலைவிகளுக்கான உரிமைநிதித் திட்டம் முழுமையாக, முறையாக நடைமுறைக்கு வந்தால் பல குடும்பங்களுக்கு நம்பிக்கை கிடைக்கும் என்பது உண்மை. ஆனால் அதற்கான வழிவகைகள் என்ன என்று ஆராயாமல் இலவச அறிவிப்புகளை அள்ளி விடக்கூடாது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism