Published:Updated:

`தி.மு.க., அ.தி.மு.க இடையே போட்டி!' - டெண்டரை நிறுத்தச் சொன்ன ஓ.பி.எஸ்?

டெண்டர் விவகாரம் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் காதிற்குச் செல்ல, டெண்டரை தற்காலிகமாக நிறுத்திவைக்கச் சொன்னதாகக் கூறப்படுகிறது.

நிர்வாகப் பொறியாளர் அலுவலகம்
நிர்வாகப் பொறியாளர் அலுவலகம்

தேனி மாவட்டம் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் கீழ் 25 பராமரிப்புப் பணிகளுக்கான ஒப்பந்த டெண்டர் விடுவது வழக்கம். கடந்த 7 ஆண்டுகளாக ஆளும் அ.தி.மு.க தரப்பினரே டெண்டர் எடுத்து குடிநீர்த் திட்டத்தின் பராமரிப்புப் பணிகளை தேனி மாவட்டம் முழுவதும் செய்துவந்தனர்.

டெண்டரைப் புறக்கணித்து அலுவலக வாசலில் அமர்ந்திருந்த அ.தி.மு.க’வினர்
டெண்டரைப் புறக்கணித்து அலுவலக வாசலில் அமர்ந்திருந்த அ.தி.மு.க’வினர்

இந்நிலையில், 2019 ஆகஸ்ட் 1 முதல் 2020 மார்ச் 31வரையிலான ஒப்பந்தப் பணிகளுக்கான டெண்டர் இன்று தேனி என்.ஆர்.டி நகரில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் நிர்வாகப் பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாலை 3 மணி முதல் 5.45 வரை டெண்டர் கோர நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது.

ஏற்கெனவே டெண்டர் எடுத்து பணிகள் செய்துவரும் ஆளும் தரப்பு ஒப்பந்தக்காரர்கள் 25 பேர் அங்கு வந்திருந்தனர். இந்நிலையில், தி.மு.க தரப்பிலிருந்து 3 பேர் டெண்டர் கேட்டனர். அதைக் கண்டு கோபமடைந்த அ.தி.மு.க தரப்பு ஒப்பந்தக்காரர்கள், நிர்வாகப் பொறியாளரிடம் முறையிட்டனர். மேலும், அ.தி.மு.க தரப்பு ஒப்பந்தக்காரர்கள் 25 பேர், டெண்டரை புறக்கணிப்பதாக நிர்வாகப் பொறியாளருக்குக் கடிதம் எழுதிக் கொடுத்தனர்.

நிர்வாகப் பொறியாளர் அலுவலகம்
நிர்வாகப் பொறியாளர் அலுவலகம்

அதற்குள் இந்த விவகாரம் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் காதிற்குச் செல்ல, டெண்டரை தற்காலிகமாக நிறுத்திவைக்க சொன்னதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக நிர்வாகப் பொறியாளர் முருகேசனிடம் கேட்டபோது, ``டெண்டர் யார் வேண்டுமானாலும் கேட்கலாம். அவர்களுக்கு 3 வருட முன் அனுபவம் இருக்கிறதா எனப் பார்க்க வேண்டும். இப்போதைக்கு டெண்டர் நிறுத்தப்பட்டிருக்கிறது. பின்னர் டெண்டர் தொடர்பான அறிவிப்பு வரும்” என்றார்.

தேனி மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் இரண்டு தொகுதிகள் தி.மு.க வசம் உள்ளது. எனவே, அந்தத் தொகுதிகளில் தி.மு.க தரப்பினர் டெண்டர் எடுத்து வேலை செய்யத் திட்டமிட்டதாகவும், அதற்கு ஓ.பன்னீர்செல்வம் முட்டுக்கட்டை போடுவதாகவும் கூறப்படுகிறது.