Published:Updated:

`திரியைக் கொளுத்திப்போட்ட ரஜினி!' - கொந்தளிக்கும் அ.தி.மு.க, தி.மு.க

`ஜெயலலிதா, கலைஞர் இல்லாத வெற்றிடத்தை நிரப்பு இதுதான் நேரம். 50 ஆண்டுக்கால ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். இந்தத் தமிழ் மண் புரட்சிகளுக்குப் பெயர் பெற்றது'.

ரஜினி பேசும் கருத்துகள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி வருகின்றன. `அதிசயம், அற்புதம்’, `அதிருப்தி’ என அவர் பேசிய பல்வேறு விஷயங்கள் விவாதத்தை ஏற்படுத்தின. இந்தநிலையில், `இன்று ரஜினி கட்சி ஆரம்பிக்கப்போகும் தேதியை அறிவிக்கப்போகிறார்’ என அரசியல்வாதிகள் முதல் ரசிகர்கள் வரை பெரிதும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த நிலையில் இரண்டு ஜாம்பவான்களை எதிர்த்து அரசியலுக்கு வரப்போகிறோம். ஸ்டாலின், தான் அரசியல் வாரிசு என்பதை நிரூபிக்கக் காத்திருக்கிறார் என்றும் மறுபுறம் அ.தி.மு.க-வினர் குபேர கஜானாவை நிரப்பிக்கொண்டிருக்கிறார்கள் என்றும் தி.மு.க, அ.தி.மு.க என இரண்டு கட்சிகளையும் வெளிப்படையாக விமர்சனம் செய்து அரசியலில் திரியைக் கொளுத்திப்போட்டிருக்கிறார்.

ரஜினி காந்த்
ரஜினி காந்த்

இது அரசியலில் பெரும் சர்ச்சையாக வெடித்துக் கொண்டிருக்கிறது. `ஆமாம், அவர் மனைவி வாடகை கொடுக்க முடியாதவர்; இவர் வட்டிக்குப் பணம் கொடுப்பவர். எந்நேரமும் கஜானாவைப் பற்றி நினைப்பில் உள்ளவர். அதைப் பற்றிப் பேசுவதில் என்ன தப்பிருக்கிறது?’ என்று கொதிக்கிறார்கள் அ.தி.மு.க-வினர்.

மேடை
மேடை

`செய்தியாளர்களைச் சந்திக்க இருக்கிறார் ரஜினி’ என்ற அறிவிப்பு நேற்று மாலை வெளியானது முதலே, தமிழக அரசியலில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. இதில், தனது அரசியல் நிலைப்பாட்டை ரஜினி அறிவிப்பார் என்றும் கட்சி குறித்த அறிவிப்பு இருக்கும் என்றும் பேசப்பட்டது. இந்தநிலையில், இன்று போயஸ் கார்டன் வீட்டில் வந்திருந்த ரசிகர்களுக்கு வணக்கம் சொல்லிவிட்டு, `இங்கு காத்திருங்கள். நான் செய்தியாளர்களைச் சந்தித்துவிட்டு உங்களைச் சந்திக்கிறேன்’ எனத் தனது காரில் செய்தியாளர் சந்திப்பு நடைபெறும் லீலா பேலஸ் ஹோட்டலுக்குப் புறப்பட்டார். வழியில், ரசிகர்கள் அவருக்கு மலர் தூவி வரவேற்பு அளித்தனர். `தமிழகத்தின் வருங்காலமே’ என கோஷங்கள் விண்ணைப் பிளந்தன. சிரித்த முகத்தோடு மேடையேறினார் ரஜினி.

``இரண்டு பெரிய ஜாம்பவான்களின் கட்சியை எதிர்த்து அரசியலுக்கு வரப்போகிறோம். தி.மு.க, அ.தி.மு.க இரண்டுமே அசுர பலத்துடன் உள்ளன. ஒரு பக்கம் 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத ஸ்டாலின், தான் அரசியல் வாரிசு என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். ஆட்சியில் இருந்துகொண்டு குபேரகஜானாவை நிரப்பிக்கொண்டிருப்பவர்கள் இன்னொரு பக்கம். இரண்டு பேரும் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். இவர்களை எதிர்த்து ரசிகர்களையும் திரைத்துறையில் சம்பாதித்த புகழையும் கொண்டு நிற்போம்.

ரஜினி பிரஸ் மீட்
ரஜினி பிரஸ் மீட்
இவருடைய எத்தனையோ படங்கள் நஷ்டம் அடைந்திருக்கின்றன. நஷ்டம் அடைந்தாலும் எனக்குக் கொடுக்க வேண்டிய பணத்தைக் கொடு என்று கறாராக வாங்கிக்கொள்பவர்தான் ரஜினி.
ஆவடி குமார்.

ஜெயலலிதா, கலைஞர் இல்லாத வெற்றிடத்தை நிரப்புவது இதுதான் நேரம். 50 ஆண்டுக்கால ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். இந்தத் தமிழ் மண் புரட்சிகளுக்குப் பெயர் பெற்றது. நாடு முழுவதும் காங்கிரஸ் ஆட்சியிலிருந்தபோது, மாநிலக் கட்சி ஆட்சியைப் பிடித்த மண். இந்த மக்கள் எழுச்சி புரட்சிக்கு முன் பணபலம் ஆள்பலம் தூள்தூளாகும். எனக்கு இப்போது 70 வயதாகிவிட்டது. இப்போது விட்டால் அடுத்த முறை பிடிக்க முடியும் என்ற நம்பிக்கையில் நான் இல்லை" என்று ரஜினி ஆவேசமாகப் பேசினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`கமல் முதல்வர் வேட்பாளரா?' கேள்விக்கு ரஜினி ரியாக்‌ஷன்!  - லீலா பேலஸ் சந்திப்பில் என்ன நடந்தது?

இது பெரும் சர்ச்சையாக வெடித்திருக்கும் நிலையில் தி.மு.க, அ.தி.மு.க-வினர் மனநிலை என்ன என்பதை அறிய அ.தி.மு.க மூத்த நிர்வாகி ஆவடி குமாரிடம் பேசினோம். ``ரஜினிகாந்த் பாவம்ங்க; மனம்போன போக்குல பேசிக்கொண்டிருக்கிறார். திரைத்துறையில் வேணும்னா அவர் சூப்பர் ஸ்டாரா இருக்கலாம். ஆனால், அரசியலில் வெறும் கத்துக்குட்டிதாங்க" என்றவரிடம், `அ.தி.மு.க-வினர் குபேர கஜானாவை நிரப்பிக் கொண்டிருக்கிறார்கள்’ என்று சொல்லியிருக்கிறாரே?’ என்று கேட்க, "ஆமாங்க அவுங்க மனைவி வாடகை கொடுக்க முடியாதவுங்க; இவரு வட்டிக்கு பணம் கொடுப்பவர்தானே. அதனால, இவர்களுக்கு குபேர கஜானாவைப்பற்றி நன்கு தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது. அதனால வேணும்னா அப்படி பேசியிருக்கலாம்.

ஆவடி குமார்
ஆவடி குமார்

தற்போது சினிமா துறையே அழிந்துகொண்டிருக்கிறது. அதைத் தடுத்து நிறுத்த முடியாத இவர், தமிழ்நாட்டை நிலைநிறுத்தப் போகிறாரா?" என்று சிரித்தார். தொடர்ந்த அவர், ``இவருடைய எத்தனையயோ படங்கள் நஷ்டம் அடைந்திருக்கின்றன. நஷ்டம் அடைந்தாலும் எனக்குக் கொடுக்க வேண்டிய பணத்தைக் கொடு என்று கறாராக வாங்கிக்கொள்பவர்தான் ரஜினி. முழுக்க முழுக்க சுயநலம் சார்ந்து வாழ்ந்துகொண்டிருக்கிறார். இந்தநிலையில் எம்.ஜி.ஆர் முதல்வர் ஆனார் என்ற காரணத்தால் இவரும் முதல்வர் ஆகும் கனவில் இருக்கிறாற்போல. ஆயிரம் ரஜினி சேர்ந்தாலும் ஒரு எம்.ஜி.ஆர் ஆக முடியாது. மக்கள், தொண்டர்களுக்காக எம்.ஜி.ஆர் வாரி வழங்கினார். ஆனால், இவரைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. அரசியலில் வெற்றிடம் என்பதே கிடையாது. அவர் எதுவும் தெரியாமல் பேசுகிறார். இவரை அரசியலில் முன்னிலைப்படுத்திக் கொள்வதற்காக ஏதாவது பேச வேண்டும் என்பதற்காகப் பேசியிருக்கிறார்" என்று காட்டத்தோடு முடித்தார்.

தி.மு.க தரப்பில் எம்.எல்.ஏ ஜெ.அன்பழகனிடம் பேசினோம். ``முதலில் அரசியல் கட்சியைத் தொடங்கட்டும். அதன்பிறகு அவர்கள் கொள்கை, கோட்பாடுகளைத் தெரிந்துகொண்டு பேசுகிறோம்" என்றார். `ஸ்டாலினை விமர்சித்திருக்கிறாரே?’ என்று கேட்டோம். ``தளபதியைப் பற்றிப் பேச அவருக்கு எந்தத் தகுதியும் இல்லை. தி.மு.க என்பது ஜனநாயகமான அமைப்பு. இது ஒன்றும் சங்கர மடம் அல்ல; என்பதை கலைஞர் தொடர்ந்து சொல்லிவந்தார். `எனக்குப் பின்னால் யார் வருவது என்பதை செயற்குழுவும் பொதுக்குழுவும்தான் முடிவு செய்ய வேண்டும்’ என்று சொன்னார் கலைஞர்.

ஜெ.அன்பழகன்
ஜெ.அன்பழகன்

அதன்படிதான் ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் வந்த பின்பு, தமிழர்கள் பிரச்னைகளை முன்னெடுத்துச் சென்றார் என்பதை, தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். மத்திய, மாநில அரசின் மக்கள் விரோதச் செயல்பாடுகளைத் துணிந்து எதிர்த்துப் பேசுவதோடு போராடிப் பல விஷயங்களில் வெற்றியும் கண்டிருக்கிருக்கிறார். அத்தோடு மத்திய அரசை எதிர்த்துப் பேசவே பயப்படுகிறார்கள். ஆனால், மக்களின் பிரச்னைகளுக்காக ஸ்டாலின் தொடர்ந்து மத்திய அரசை விமர்சித்துக்கொண்டிருக்கிறார். அப்படியென்றால் யார் மக்களின் தலைவன் என்பதை நீங்களே முடிவெடுத்துக் கொள்ளுங்கள்" என முடித்துக்கொண்டார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு