Published:Updated:

60 பேர் போட்டி;ரெட்டியார்பட்டி நாராயணனுக்கு ஜாக்பாட்!-நாங்குநேரி அ.தி.மு.க வேட்பாளர் தேர்வான பின்னணி

ADMK candidate Narayanan
ADMK candidate Narayanan

நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளராக பெ.நாராயணபெருமாள் என்பவரை அ.தி.மு.க வேட்பாளராக அறிவித்துள்ளது. சாதாரணத் தொண்டருக்கு இந்த வாய்ப்புக் கொடுக்கப்பட்டிருப்பதாகக் கட்சியினர் பெருமிதத்துடன் பேசிக்கொள்கிறார்கள்.

நெல்லை மாவட்டம், நாங்குநேரி சட்டமன்றத் தொகுதியில் வெற்றிபெற்று எம்.எல்.ஏ-வாக இருந்த காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவரான ஹெச்.வசந்தகுமார், கன்னியாகுமரி நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று எம்.பி-யாகிவிட்டதால் இடைத்தேர்தல் நடக்கிறது. தி.மு.க கூட்டணி சார்பாக இந்தத் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுவிட்டதால், அக்கட்சி சார்பாக வேட்பாளர் தேர்வு நடைபெற்று வருகிறது.

Nanguneri taluk office
Nanguneri taluk office

அ.தி.மு.க சார்பாக இந்தத் தொகுதியில் போட்டியிட மாவட்ட நிர்வாகிகள் பலரும் ஆர்வம் காட்டினார்கள். சீட் பெறுவதற்காகக் கட்சியினர் பலரும் சென்னையிலேயே முகாமிட்டு லாபி செய்து வந்தார்கள். கட்சி சார்பாக 60 பேர் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்திருந்த நிலையில், புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளரான ரெட்டியார்பட்டி நாராயணனுக்கு வாய்ப்புக் கொடுக்கப்பட்டுள்ளது.

`2,56,414 வாக்காளர்கள்; 36 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை!' - நாங்குநேரி இடைத்தேர்தல் அப்டேட்

பெரும்பான்மையாக நாடார் மக்கள் வசிக்கும் இந்தத் தொகுதியில் அந்தச் சமூகத்தைச் சேர்ந்தவரான நாராயணனுக்கு வாய்ப்புக் கொடுக்கப்பட்டிருக்கிறது. 54 வயதான நாராயணனின் மனைவி பவளச் செல்வி. அவர் சப்-இன்ஸ்பெக்டராகப் பணியாற்றி வருகிறார். இரு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர்.

ADMK candidate Narayanan
ADMK candidate Narayanan

1986 முதல் கட்சியின் உறுப்பினராக இருக்கும் நாராயணன், 1991 முதல் 1996-ம் ஆண்டு வரை ரெட்டியார்பட்டி கிளைக்கழகச் செயலாளராக பணியாற்றினார். பின்னர் இரண்டு முறை பஞ்சாயத்துத் துணைத்தலைவராகவும் ஒருமுறை யூனியன் கவுன்சிலராகவும் பணியாற்றினார். 2004-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தேர்தல் பணிக்குழு உறுப்பினராகப் பணியாற்றினார்.

நெல்லை புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர், புறநகர் தெற்கு மாவட்ட துணைச்செயலாளர் ஆகிய பொறுப்புகளை வகித்தார். தற்போது புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளராக பணியாற்றி வருகிறார். கட்சியின் அடிமட்ட நிலையிலிருந்து வந்த அவருக்கு தற்போது வேட்பாளருக்கான வாய்ப்பை கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வழங்கியிருக்கிறார்கள்.

அ.தி.மு.க-வில் மட்டுமே எந்தப் பின்புலமும் இல்லாத தொண்டர்களாலும் உயர்ந்த நிலையை அடையமுடியும்
அ.தி.மு.க தொண்டர்கள்
`ஆட்சி மாற்றத்தின் அறிகுறி இதுதான்'- இடைத்தேர்தல் குறித்து கே.எஸ்.அழகிரி!

இது தொடர்பாகக் கட்சியினர் கூறுகையில், ``அ.தி.மு.க மீது தீவிர ஈடுபாடு கொண்டவரான நாராயணனுக்கு வாய்ப்புக் கொடுத்ததன் மூலம், எந்தப் பின்புலமும் இல்லாத தொண்டர்களாலும் கட்சியின் உயர்ந்த நிலையை அடையமுடியும் என்கிற நிலை ஜெயலலிதாவுக்குப் பின்னரும் கட்சியில் தொடர்கிறது என்று தெரிகிறது.

கட்சி நிகழ்ச்சிகளில் ஆர்வத்தோடு கலந்துகொள்ளும் நாராயணன், தொண்டர்களிடமும் நன்றாகப் பழகக்கூடியவர். அதனால் கட்சியினர் அவருடைய வெற்றிக்குப் பாடுபடுவார்கள்’’ என்று தெரிவித்தனர். இவருக்கு அமைச்சர் ராஜலட்சுமி மற்றும் நெல்லை மாநகர மாவட்டச் செயலாளர் தச்சை.கணேசராஜா ஆகியோர் பரிந்துரை செய்ததால் சீட் கிடைத்துள்ளது எனக் கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

Narayanan, O.Panneerselvam
Narayanan, O.Panneerselvam

கட்சியில் பிரிவினை ஏற்பட்டபோதும் அ.தி.மு.க மீது விசுவாசத்துடன் இருந்தவர். ஓ.பன்னீர்செல்வத்துடன் நெருக்கம் அதிகம் என்பதால் அவருக்கு வாய்ப்புக் கொடுக்கப்பட்டிருப்பதாகக் கட்சியினர் கூறுகிறார்கள். நாங்குநேரி தொகுதிக்கு நாராயணனைத் தேர்வு செய்ததன் மூலம் தென் மாவட்ட அ.தி.மு.க-வை இப்போதும் ஓ.பன்னீர்செல்வம் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது நிரூபணமாகியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு