Published:Updated:

ஒன் பை டூ

பாபு முருகவேல், இராஜீவ் காந்தி
பிரீமியம் ஸ்டோரி
பாபு முருகவேல், இராஜீவ் காந்தி

“தி.மு.க தமிழ்நாட்டை கற்காலத்துக்கே அழைத்துச் சென்றுள்ளது” என்ற ஜெயக்குமாரின் குற்றச்சாட்டு?

ஒன் பை டூ

“தி.மு.க தமிழ்நாட்டை கற்காலத்துக்கே அழைத்துச் சென்றுள்ளது” என்ற ஜெயக்குமாரின் குற்றச்சாட்டு?

Published:Updated:
பாபு முருகவேல், இராஜீவ் காந்தி
பிரீமியம் ஸ்டோரி
பாபு முருகவேல், இராஜீவ் காந்தி

பாபு முருகவேல், வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர், அ.தி.மு.க

“நூற்றுக்கு நூறு மிகச் சரியாகத்தான் கூறியிருக்கிறார். மின்மிகை மாநிலமாக இருந்த தமிழ்நாடு, தற்போது கடுமையான மின் தட்டுப்பாட்டைச் சந்தித்துவருகிறது. தாலிக்குத் தங்கம், குழந்தை பெற்ற தாய்மார்களுக்குப் பரிசுப் பெட்டகம், பணிபுரியும் பெண்களுக்கு இரு சக்கர வாகனம் என்று அ.தி.மு.க ஆட்சியில் கொடுக்கப்பட்ட அனைத்து நலத் திட்டங்களையும் தி.மு.க அரசு திட்டமிட்டு நிறுத்தியிருக்கிறது. அ.தி.மு.க ஆட்சியில் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கினோம். அதையும் நிறுத்திவிட்டனர். மக்கள் நலனுக்காகக் கொண்டுவரப்பட்ட நலத்திட்டங்களை நிறுத்திவிட்டு, வரி முதல் கட்டணம் வரை அனைத்தையும் உயர்த்தி மக்களைப் பெரும் சுமையில் தள்ளியிருக்கிறது இந்த அரசு. அ.தி.மு.க ஆட்சியில் அனைத்து நலத்திட்டங்களையும் தங்குதடையில்லாமல் செய்துவந்தோம். ஆனால் இப்போது, நிர்வாகத்திறமை என்றால் என்னவென்றே தெரியாதவர்கள் ஆட்சி நடத்திவருகிறார்கள். இந்தியாவில் தமிழ்நாட்டில்தான் உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகம். அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் 57 சதவிகிதமாக இருந்த உயர்கல்வி கற்பவர்களின் விகிதம், தி.மு.க ஆட்சியில் 56 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. குரங்கு கையில் கிடைத்த பூமாலைதான் தி.மு.க-வின் ஆட்சி!”

பாபு முருகவேல்
பாபு முருகவேல்
இராஜீவ் காந்தி
இராஜீவ் காந்தி

இராஜீவ் காந்தி, செய்தித் தொடர்பு இணைச் செயலாளர், தி.மு.க

“சட்டமன்றத்துக்கு வரும் வாய்ப்பில்லாததால், உண்மை தெரியாமல் உளறுகிறார் அண்ணன் ஜெயக்குமார். ஆனால், அதிலும் ஓர் உண்மை இருக்கிறது. தமிழர் பண்பாடு, கலாசாரம், திராவிட இனத்தின் மேன்மை கற்காலத்துக்குத் தொடர்புடையது என்கிற பெருமையை உறுதிப்படுத்தும் ஆட்சியைத்தான் நடத்துகிறோம். மத்திய அரசு பல்வேறு நெருக்கடிகள் கொடுத்தபோதும், அ.தி.மு.க அரசுபோல வேடிக்கை பார்க்காமல், தடைகள் பல தாண்டி கீழடி அகழ்வாராய்ச்சி மூலம் தமிழர்களின் வரலாறு 3,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று உலகத்துக்கு நிரூபித்திருக்கிறோம். சிலர் ஏற்கெனவே ஆட்சி அதிகாரத்திலிருந்த அகந்தையில் சட்டத்தைக் கையிலெடுக்கிறார்கள். ஒருவரின் சட்டையைக் கிழித்து அவரை அடிக்கிறார்கள். அப்படிச் சட்டத்தை மீறுபவர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்தால், ‘சட்டம்- ஒழுங்கு கெட்டுப்போய்விட்டது’ என்று கூச்சல் போடுகிறார்கள். ஊழல் செய்வதற்கென்றே அ.தி.மு.க போட்ட திட்டங்கள் மட்டுமே இப்போது நிறுத்தப்பட்டுள்ளன. மக்களுக்காகப் போடப்பட்ட அனைத்துத் திட்டங்களும் தொடர்ந்து செயல்படுத்தப்படுகின்றன. அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் அவர்களின் படங்களுடன் தயாரிக்கப்பட்ட புத்தகப்பையைக்கூட அப்படியேதான் வழங்கினோம் என்பது ஜெயக்குமாருக்குத் தெரியாதா?”