Published:Updated:

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி அதிமுக பந்த்! - அடித்து நொறுக்கப்பட்ட திமுக எம்எல்ஏ-வின் உணவகம்

பந்த் போராட்டத்தால் மூடப்பட்டிருக்கும் கடைகள்

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தை வலியுறுத்தி அதிமுக இன்று முழு அடைப்புப் போராட்டம் நடத்திவரும் நிலையில், வெறிச்சோடிக் காணப்படுகிறது நகரம்.

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி அதிமுக பந்த்! - அடித்து நொறுக்கப்பட்ட திமுக எம்எல்ஏ-வின் உணவகம்

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தை வலியுறுத்தி அதிமுக இன்று முழு அடைப்புப் போராட்டம் நடத்திவரும் நிலையில், வெறிச்சோடிக் காணப்படுகிறது நகரம்.

Published:Updated:
பந்த் போராட்டத்தால் மூடப்பட்டிருக்கும் கடைகள்

புதுச்சேரியில் மாநில அந்தஸ்து பிரச்னை தலைதூக்கியிருக்கும் நிலையில், அதற்காக இன்று முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தார் அ.தி.மு.க-வின் (எடப்பாடி அணி) புதுச்சேரி மாநிலச் செயலாளர் அன்பழகன். ஆனால், புத்தாண்டு கொண்டாட்ட காலத்தில் பந்த் போராட்டம் நடத்தினால் வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள் என்று காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. அதேபோல அரசியல்வாதிகள் எடுக்கும் தான்தோன்றித்தனமான முடிவால் வியாபாரமும், வியாபாரிகளும் கடுமையாக பாதிக்கப்படுவதாக குற்றம்சுமத்திய வணிகர் சங்கங்கள், பந்த் போராட்டத்துக்கு ஆதரவு தர முடியாது என்று எதிர்ப்பு தெரிவித்தன.

அதிமுகவினர் போராட்டம்
அதிமுகவினர் போராட்டம்

ஆனால், வணிகர் சங்கங்களின் கோரிக்கையை ஏற்க மறுத்த அ.தி.மு.க., ஒருநாள் கடையடைப்பால் எந்த பாதிப்பும் ஏற்பட்டுவிடாது என்றும் மாநில அந்தஸ்துக்காக அதைப் பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும் என்றது. அதேபோல, ”பொதுமக்கள், வியாபாரிகள், சுற்றுலாப்பயணிகளை பாதிக்கும் வகையில் ‘பந்த்’ போராட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அதன் மூலம் புதுச்சேரியில் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட நினைக்கும் அரசியல் கட்சியினரை இரும்புக்கரம் கொண்டு அடக்குவதுடன், பொதுமக்களுக்குத் தகுந்த பாதுகாப்பு அளித்திட வேண்டும்” என்று டி.ஜி.பி மனோஜ்குமார் லால், ஐ.ஜி சந்திரனிடம் மனு அளித்தார் தி.மு.க-வின் மாநில அமைப்பாளர் எம்.எல்.ஏ சிவா. அதன் தொடர்ச்சியாக இன்று அதிகாலை 5 மணிக்கு அ.தி.மு.க-வின் கிழக்கு மாநிலச் செயலாளர் அன்பழகன் உள்ளிட்ட 60 நிர்வாகிகளை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைதுசெய்தது காவல்துறை.

உடைக்கப்பட்ட தி.மு.க எம்.எல்.ஏ-வின் உணவகம்
உடைக்கப்பட்ட தி.மு.க எம்.எல்.ஏ-வின் உணவகம்

ஆனாலும் 6:30 மணிக்கு பந்த் போராட்டம் தொடங்கியது. அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நிறுத்தப்பட்டன. அதன் பிறகு போலீஸார் பாதுகாப்புடன் அரசுப் பேருந்துகள் மட்டும் இயக்கப்பட்டன. வெளியூரிலிருந்து வரும் பேருந்துகள் புதுச்சேரியின் எல்லைப் பகுதிகளிலேயே திரும்பிச் செல்கின்றன. புதுச்சேரியின் பிரதான வர்த்தக வீதிகளான நேரு, காந்தி வீதிகளில் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டு வெறிச்சோடிக் காணப்படுகின்றன.

பழைய பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருந்த இரண்டு ஷேர் ஆட்டோக்களின் முன்பக்கக் கண்ணாடிகள் மர்ம நபர்களால் கல்வீசி உடைக்ப்பட்டன. அதேபோல கடலூர் நோக்கிச் சென்றுகொண்டிருந்த தமிழக அரசுப் பேருந்து ஒன்றின் மீது மர்ம நபர்கள் கல் வீசியதால் அதன் கண்ணாடியும் நொறுங்கி விழுந்தது. ரங்கப்பிள்ளை வீதி மற்றும் செஞ்சி சாலை சந்திப்பில் இயங்கிய உணவகமும் கல்வீசி தாக்கப்பட்டது. அதில் அந்த உணவகத்தின் கண்ணாடி உடைந்தது.

அரசுப் பேருந்துகள்
அரசுப் பேருந்துகள்

ஆனாலும், புதுச்சேரியின் தி.மு.க அமைப்பாளர் எம்.எல்.ஏ சிவாவுக்குச் சொந்தமான அந்த உணவகம், போலீஸார் பாதுகாப்புடன் இயங்கிவருகிறது. திறக்கப்படும் கடைகளுக்குப் பாதுகாப்பு வழங்குவோம் என்று காவல்துறை கூறிய நிலையிலும், வணிகர்கள் கடைகளைத் திறக்கவில்லை. விழுப்புரத்திலிருந்து இயக்கப்படும் பேருந்துகள் மதகடிப்பட்டுடனும், கடலூரிலிருந்து இயக்கப்படும் பேருந்துகள் கன்னியக்கோயிலுடனும் திரும்பிச் செல்வதால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸாரால் கைதுசெய்யப்பட்டிருக்கும் அ.தி.மு.க-வின் கிழக்கு மாநிலச் செயலாளர் அன்பழகன், ”பா.ஜ.க கூட்டணியில் அ.தி.மு.க அங்கம் வகிக்கிறது. அப்படி இருக்கும்போது தி.மு.க அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸ் என்னைக் கைதுசெய்தது தவறு” என்று தெரிவித்தார். அதன் தொடர்ச்சியாக அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று அ.தி.மு.க-வினர் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைதுசெய்தனர். இது ஒருபுறமிருக்க, அ.தி.மு.க ஓ.பி.எஸ் அணியின் புதுச்சேரி மாநிலச் செயலாளரான ஓம்சக்தி சேகர், “மாநில அந்தஸ்து என்பது புதுச்சேரி மக்களின் கோரிக்கை.

ஆனால், அதற்காக கிறிஸ்துமஸ், புத்தாண்டு போன்ற கொண்டாட்ட காலங்களில் மக்களையும் வியாபாரிகளையும் பாதிக்கும் வகையில் போராட்டம் நடத்துவது ஜெயலலிதாவின் கொள்கைக்கு எதிரானது. மக்களுக்காகத்தான் அ.தி.மு.க-வை எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் கட்டிக்காத்து வந்தனர். அவர்கள் வழியில் தற்போது கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பி.எஸ் கட்டிக்காத்துவருகிறார். மாநில அந்தஸ்து தொடர்பாக என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க கூட்டணி அரசு பூர்வாங்கப் பணிகளைச் செய்துவரும் நிலையில், இது போன்ற சுய விளம்பரப் போராட்டங்கள் கூட்டணிக்கு மிகப்பெரிய பாதிப்பாக இருக்கும்” என்று தெரிவித்திருக்கிறார்.