Published:Updated:

``சசிகலாவுக்கு போஸ்டர் ஒட்டியதால் பயிர்க்கடன் வழங்க மறுக்கிறார்கள்!'' - குமுறும் அதிமுக நிர்வாகி

சசிகலா தரப்புக்கு ஆதரவாக செயல்பட்டேன் என்பதற்காக எனக்கு விவசாயம் செய்வதற்கான பயிர் கடன் கொடுக்க விடாமல் செய்து விட்டனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள செங்கமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத் சுரேஷ். அதிமுக நிர்வாகியான இவர் அதே பகுதியில் விவசாயம் செய்து வருகிறார். வினோத் சுரேஷ், சசிகலா சிறையிலிருந்து விடுதலையான போது அவரை வரவேற்று போஸ்டர் ஒட்டினார். மேலும் சில மாதங்களுக்கு முன்பு, சசிகலா போனில் பேசியவர்களில் வினோத் சுரேஷும் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கத்துடன்
அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கத்துடன்

இந்த நிலையில், கூட்டுறவுத்துறையின் கீழ் இயங்கும் அம்மையாண்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் தலைவர் மற்றும் இதர பொறுப்புகளில் இருக்கும் அ.தி.மு.க நிர்வாகிகள் சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டியதை மனதில் வைத்துக் கொண்டு, அந்த காழ்ப்புணர்ச்சியின் காரணமாக இரண்டு வருடங்களாகப் பயிர்க் கடன் தராமல் தன்னை பழிவாங்குவதாகவும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பணிபுரியும் அலுவலர்களும் இதற்குத் துணையாகச் செயல்படுவதாகவும் குற்றச்சாட்டுக் கூறி வருகிறார். வினோத் சுரேஷ் இது தொடர்பாக முதலமைச்சர் தனிப்பிரிவுக்கும் புகார் மனு அனுப்பியிருக்கிறார்.

இது குறித்து வினோத் சுரேஷிடம் பேசினோம், ``விவசாயம் செய்து வரும் நான் அ.தி.மு.க-வில் பேராவூரணி தெற்கு ஒன்றியத்தின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் துணைத் தலைவராக இருந்து வருகிறேன். சசிகலா விடுதலையாகி சென்னை வந்த போது அவரை வரவேற்று போஸ்டர் ஒட்டினேன். இதனைத் தொடர்ந்து எனது ஊருக்கு உட்பட்ட அம்மையாண்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினரான நான் கடந்த ஆண்டு தென்னை விவசாயம் செய்வதற்காகச் சிட்டா அடங்கல் கொடுத்துப் பயிர்க் கடனுக்கு விண்ணப்பம் செய்தேன்.

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம்
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம்

அதைத் தொடர்ந்து, இந்த ஆண்டு நெல் நடவு செய்வதற்கான பயிர்க் கடனை பெற என் தம்பி பெயரில் விண்ணப்பம் செய்திருந்தேன். அதைப் பல காரணங்கள் கூறி அதிகாரிகள் நிராகரித்து விட்டனர். சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டினேன், அதைத் தொடர்ந்து சசிகலா என்னிடம் போனில் பேசினார். மற்ற மாவட்டங்களில் சசிகலாவுக்கு ஆதரவாகச் செயல்பட்டவர்கள் நீக்கப்பட்ட நிலையிலும், நான் கட்சியிலிருந்து நீக்கப்படவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த நிலையில், குறிப்பிட்ட வேளாண்மை கடன் சங்கத்தில் பேராவூரணி தெற்கு ஒன்றியத்தின் இலக்கிய அணி செயலாளரான சேகர் தலைவராகவும் மற்றும் இதர பொறுப்புகளிலும் அ.தி.மு.க நிர்வாகிகளே இருந்து வருகின்றனர். அதனால், சசிகலா தரப்புக்கு ஆதரவாகச் செயல்பட்டேன் என்பதற்காக எனக்கு விவசாயம் செய்வதற்கான பயிர்க் கடன் கொடுக்க விடாமல் செய்து விட்டனர்.

சசிகலா போஸ்டர்
சசிகலா போஸ்டர்

இதற்குத் துணையாகக் கடன் சங்கத்தின் செயலாளரான ராமச்சந்திரன், அலுவலரான பாமா ஆகியோரும் செயல்படுகின்றனர். அம்மையாண்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருகிறது. செல்வந்தர்களாக இருப்பவர்களுக்குத் தொடர்ச்சியாகப் பயிர்க் கடன் வழங்கப்பட்டு வருகிறது. சிறு விவசாயிகளுக்குக் கண் துடைப்பிற்காக வெகு சிலருக்கு மட்டுமே பயிர்க் கடன் கொடுக்கப்படுகிறது.

`உற்சாக சசிகலா; சந்திக்கத்  துடித்த முன்னாள் அமைச்சர்கள்?!' - தஞ்சை விசிட் ஹைலைட்ஸ்

இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின், மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மற்றும் கூட்டுறவுச் சங்கத்தின் துணை, இணை பதிவாளர்கள் ஆகியோருக்கு புகார் மனு அனுப்பியிருக்கிறேன். அதிகாரிகள் முறையாக நடவடிக்கை எடுத்திருந்தால் எனக்குப் பயிர்க் கடன் கிடைத்திருக்கும். ஆனால், அவர்கள் அதனைச் செய்யத் தவறிவிட்டனர். முதலமைச்சருக்குப் புகார் மனு அனுப்பிய பிறகு, ராமச்சந்திரன் உள்ளிட்டவர்கள் `புகார் மனுவை வாபஸ் வாங்குங்கள் பயிர்க் கடன் கொடுக்கிறோம்' என்றனர்.

அதற்கு ஒத்துக்கொள்ளாததால், நான் முறைகேடான ஆவணங்களைக் கொடுத்துப் பயிர்க் கடன் கேட்டதாகப் பொய்யான காரணங்களைக் கூறி என் மீது குற்றம் சுமத்தப் பார்க்கிறார்கள். அ.தி.மு.க நிர்வாகிகள் பொறுப்பில் தொடர்வதால் ஆட்சி மாறினாலும் அவர்களுக்குத் துணையாகச் செயல்படும் அதிகாரிகளால் நியாயமான என் கோரிக்கை நிறைவேறவில்லை முதலமைச்சரும், மாவட்ட ஆட்சியரும் இதில் தலையிட்டு எனக்கு நீதி கிடைப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

வினோத் சுரேஷ்
வினோத் சுரேஷ்

இது குறித்து அம்மையாண்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் செயலாளரான ராமச்சந்திரனிடம் கேட்டோம். ``கடந்த முறை கடைசி நேரத்தில் பயிர்க்கடன் கொடுக்க முடியாமல் போய்விட்டது. தற்போது வினோத் சுரேஷ் அவர் தம்பி பெயரில் பயிர்க் கடன் கேட்டிருந்தார். அதற்காகக் கொடுக்கப்பட்ட சிட்டா அடங்கல், கூட்டுப் பட்டா என்பதால் அவருடைய உறவினரே பயிர்க்கடன் கொடுக்கக் கூடாது எனக் கூறியதால் நிறுத்தப்பட்டிருக்கிறது. அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாகக் கடன் தரவில்லை எனக் கூறுவது தவறு" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு