Published:Updated:

`இதே கூட்டணி நீடித்தால் நமக்குத்தான் சிக்கல்!' -பா.ஜ.க நட்பால் கடுகடுக்கும் அ.தி.மு.க சீனியர்கள்

`நாம் இன்னும் ஏன் பா.ஜ.க-வோடு உறவாட வேண்டும். அவர்களைத் திருப்திப்படுத்த மக்களின் எதிர்ப்பை சம்பாதித்துக்கொள்கிறோம்' எனப் பேசியுள்ளனர் அ.தி.மு.க சீனியர்கள் சிலர்.

அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம்
அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம்

தமிழக அமைச்சர்கள் சிலரின் பேச்சுகள் பா.ஜ.க வட்டாரத்தோடு உரசலை ஏற்படுத்தியிருக்கிறது என்கின்றனர் கோட்டை வட்டாரத்தில்.

`நாம் இன்னும் ஏன் பா.ஜ.க-வோடு உறவாட வேண்டும். அவர்களைத் திருப்திப்படுத்த மக்களின் எதிர்ப்பை சம்பாதித்துக் கொள்கிறோம். உடனே பா.ஜ.க கூட்டணியிருந்து வெளியேற வேண்டும்'' என்ற கருத்தை அமைச்சரவையில் உள்ள சிலர் முன்வைக்கத் தொடங்கியுள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி - அமித் ஷா
எடப்பாடி பழனிசாமி - அமித் ஷா

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின், பா.ஜ.க-வோடு நெருக்கத்தைக் கடைப்பிடித்து வருகிறது தமிழக அரசு. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க இணைந்தது. ஆனால், ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. உள்ளாட்சித் தேர்தலிலும் இதே கூட்டணி தொடர்ந்தது.

கூட்டணி தொடர்ந்தாலும், மத்திய பா.ஜ.க அரசு எடுக்கும் சில நடவடிக்கைகள், அ.தி.மு.க-வுக்குப் பெரும் சிக்கலை ஏற்படுத்துவதாக அன்வர் ராஜா உள்ளிட்ட அ.தி.மு.க சீனியர்கள் பலரும் வெளிப்படையாகப் பேசத் தொடங்கியுள்ளனர்.

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, முத்தலாக் தடைச் சட்டம், குடியுரிமைச் சட்டம் ஆகியவற்றை அ.தி.மு.க ஆதரித்தது. இதற்கு, சிறுபான்மையின மக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

அமித்ஷா - மோடி
அமித்ஷா - மோடி

இதன் காரணமாக, `கூட்டணியில், பா.ஜ.க இருந்தாலும், இடைத்தேர்தல் பிரசாரத்துக்குக்கூட அ.தி.மு.க-வினர் பா.ஜ.க-வினரை அழைக்கவில்லை' எனத் தகவல் வெளியானது.

இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தலிலும், இரு கட்சிகளின் தொண்டர்களும் தனித்தனியே பிரசாரம் செய்தனர். சமீபத்தில், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில், பிரசாரம் செய்தபோது, `பா.ஜ.க கூட்டணியில் நாங்கள் இல்லை' எனச் சொல்லும் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. இது, பா.ஜ.க-வினரிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. `கூட்டணியில் இருப்பதையே கூறுவதற்குக் கூச்சப்படுவோருடன், நாம் ஏன் கூட்டணி வைக்க வேண்டும்' என்ற கேள்வியை பா.ஜ.க தரப்பில் எழுப்பியுள்ளனர். இது குறித்து தேசியத் தலைமைக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் டெல்லி சென்ற தமிழக முதல்வர், அமித் ஷாவை சந்தித்துப் பேசினார். இதில் தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்து இருவரும் ஆலோசித்துள்ளனர்.

இதேநிலை நீடித்தால் வருகிற சட்டமன்றத் தேர்தலில் சொல்லிக்கொள்ளும் அளவில் இடங்களைக் கைப்பற்ற முடியாது.
அ.தி.மு.க சீனியர்கள்

இருப்பினும், அ.தி.மு.க சீனியர்கள் சிலர் வெளிப்படையாக மத்திய அரசுக்கு எதிராகப் பேசுவதை உற்று கவனித்து வருகின்றனர் பா.ஜ.க நிர்வாகிகள் சிலர், ` நமது கூட்டணியில் பா.ஜ.க அங்கம் வகிப்பதால் செல்லும் இடமெல்லாம் எதிர்ப்புகள் கிளம்பிக்கொண்டிருக்கின்றன. இதை உள்ளாட்சித் தேர்தலில் கண்கூடாகப் பார்த்தோம். இதேநிலை நீடித்தால் வருகிற சட்டமன்றத் தேர்தலில் சொல்லிக்கொள்ளும் அளவில் இடங்களைக் கைப்பற்றமுடியாது' என அ.தி.மு.க வட்டாரத்தில் சிலர் கொதிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

இதற்குப் பதில் கொடுத்த முக்கியப் பிரமுகர் ஒருவர், ` உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளிவரட்டும். அதன்பிறகு நாம் யார் என்பதைப் படிப்படியாகக் காட்டுவோம்' எனக் கூறியிருக்கிறார்.