Published:Updated:

`எதற்காக விஜயபாஸ்கரைத் தட்டிக்கொடுத்தார் மோடி?' - அ.தி.மு.க-வில் நடக்கும் விவாதம்

மோடியின் கரங்களைப் பிடித்துக்கொண்டு, ஐக்கிய நாடுகள் சபையில் தமிழ்மொழியின் பெருமையைப் பற்றி பேசியதற்கு, தம்பிதுரை நன்றி தெரிவிக்க... மோடியின் முகத்தில் புன்னகை பூத்தது.

பிரதமர் மோடி, அமைச்சர் விஜயபாஸ்கர்.
பிரதமர் மோடி, அமைச்சர் விஜயபாஸ்கர்.

சென்னை ஐ.ஐ.டி-யில் நடைபெறும் விழாவில் கலந்துகொள்ள, பிரதமர் மோடி இன்று தமிழகம் வந்தார். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் ஜெயித்த பிறகு, முதல்முறையாக மோடி தமிழகம் வருவதால், ஜெயலலிதாவுக்கு அளிக்கும் வரவேற்பைப்போன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி உட்பட மொத்த தமிழக அமைச்சரவையும் சென்னை விமான நிலையத்தில் வரிசையில் நின்று பிரதமரை வரவேற்றது.

மோடியை வரவேற்கும் ஓ.பி.எஸ்.
மோடியை வரவேற்கும் ஓ.பி.எஸ்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமியைத் தொடர்ந்து, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் நலம் விசாரித்தார் பிரதமர். அப்போது, அவரின் கரங்களைப் பிடித்துக்கொண்டு, ஐக்கிய நாடுகள் சபையில் தமிழ்மொழியின் பெருமையைப் பற்றி பேசியதற்கு தம்பிதுரை நன்றி தெரிவிக்க, மோடியின் முகத்தில் புன்னகை பூத்தது. வரிசையில் இருந்த அமைச்சர்கள், திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார், ஓ.எஸ்.மணியன் உட்பட பலரும் மோடியின் உரைக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், புத்தகத்தோடு ரோஜாப்பூ அளித்து வாழ்த்து தெரிவிக்க, தன் இடதுகையால் அவர் தோளைத் தட்டிக்கொடுத்துவிட்டு நகர்ந்தார் பிரதமர். இந்தச் செயல்தான் அ.தி.மு.க வட்டாரத்தில் பீதியைக் கிளப்பியுள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு மரியாதை செலுத்த வந்திருந்த மோடி, சசிகலாவின் தலையில் தன் இடதுகையை வைத்து ஆறுதல் சொன்னார். அதன்பிறகு, சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சிறைத்தண்டனை உறுதி செய்யப்பட்டு, சிறைக்கு அனுப்பப்பட்டது எல்லாம் வரலாறு.

தட்டிக் கொடுக்கும் மோடி
தட்டிக் கொடுக்கும் மோடி
சசிகலா தலையில் கை வைத்த மோடி
சசிகலா தலையில் கை வைத்த மோடி

இதுகுறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க பிரமுகர்கள் சிலர், “ மோடி இடதுகையால் தட்டிக்கொடுத்தால் ஆபத்து வரப்போகிறது என்பது அர்த்தம். அமைச்சர் விஜயபாஸ்கர் மீது ஏற்கெனவே குட்கா வழக்கு நிலுவையில் இருக்கிறது. இவ்வழக்கில் பூர்வாங்க விசாரணைகள் முடிவுற்று, அமைச்சருக்கு எதிரான அறிக்கையை சி.பி.ஐ மத்திய அரசுக்கு அனுப்பியிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இடதுகையால் தட்டிக்கொடுத்ததன் பின்னணியில் ஆபத்து வரப்போகிறதா எனவும் தெரியவில்லை” என்றனர், அ.தி.மு.க வட்டாரத்தில்.

விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் கூறுகையில், “கடந்த ஆண்டு அம்மா ஸ்கூட்டர் திட்டத்தைத் தொடங்கிவைப்பதற்காக சென்னை வந்திருந்த மோடி, அமைச்சர் விஜயபாஸ்கரை தட்டிக் கொடுத்து சிரித்துப் பேசினார். அப்போதும், விஜயபாஸ்கர் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்கப்போவதாகச் செய்தி பரவியது. இப்போதும் வீண் வதந்தியைப் பரப்புகிறார்கள்.

விஜயபாஸ்கர்
விஜயபாஸ்கர்

தனக்கு அறிமுகமானவர்களிடம் சகஜமாக உரையாடுவது பிரதமரின் வழக்கம். விஜயபாஸ்கரிடமும் அப்படித்தான் உரையாடினார். மடியில் கனமில்லாதபோது எதற்காகப் பயப்பட வேண்டும்?” என்கின்றனர்.