Published:Updated:

`நாங்க யாருன்னு காட்டுவோம்!’ -எம்.எல்.ஏ-வை எதிர்த்து சுயேச்சையாகக் களமிறங்கும் 12 அ.தி.மு.க-வினர்

வெறும் 4 சீட்டு தான் கேட்டோம். அதையே தர முடியாதுன்னு சொல்லிட்டாரு. இப்ப அவர் நிறுத்தப்போற வேட்பாளருக்கு எதிராக 12 பேர் சுயேச்சையாகப் போட்டியிடுகிறோம்.

வேட்பு மனுத்தாக்கலின் போது
வேட்பு மனுத்தாக்கலின் போது

ஈரோடு மாவட்டம், பெருந்துறை தொகுதியின் எம்.எல்.ஏ-வாக இருப்பவர் தோப்பு வெங்கடாசலம். கடந்த அ.தி.மு.க ஆட்சியில் சுற்றுச்சூழல் துறை அமைச்சராகவும் ஈரோடு புறநகர் மாவட்டச் செயலாளராகவும் இருந்தவருக்கு, இம்முறை எந்தப் பொறுப்பும் கொடுக்கப்படவில்லை. `அமைச்சர் பதவி கிடைக்காததால், மாவட்டத்திலுள்ள அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் என யாரையும் தன்னுடைய தொகுதிக்குள் நுழையவிடாமல், தனி ஆவர்த்தனம் செய்து வருகிறார் தோப்பு' என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

இதன் உச்சமாக, நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் பெருந்துறை ஒன்றியத்தில் எம்.எல்.ஏ-வுக்கு எதிராக 12 அ.தி.மு.க தொண்டர்கள் சுயேச்சையாகக் களமிறங்கியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாசலம்
எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாசலம்

பெருந்துறை ஒன்றியத்துக்கு உட்பட்ட 12 ஊராட்சி ஒன்றியக்குழு வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாசலத்தை எதிர்த்து இவர்கள் களமிறங்கியிருக்கின்றனர். `எம்.எல்.ஏ-வின் சொந்தத் தொகுதியிலேயே, அவரை எதிர்த்து களமிறங்கி நிச்சயமாக வெற்றுபெறுவோம்' எனத் தீவிரமாகக் களப்பணியாற்றி வருகின்றனர். இவர்களை ஒடுக்க, எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாசலமும் பல்வேறு வழிகளில் முயற்சி செய்து வருகிறார்.

இதுகுறித்து, ஈரோடு புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணியின் முன்னாள் இணைச்செயலாளர் ஜெயக்குமாரிடம் பேசினோம். ``பெருந்துறை ஒன்றியத்துல 4 ஊராட்சி ஒன்றியக்குழு வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு சீட் கேட்டு எம்.எல்.ஏ-வை நேரில் சந்திச்சுப் பேசுனோம். `நீங்க எல்லாம் என்னோட எதிரணி. உங்களுக்கு சீட் கொடுக்க மாட்டேன். நான் யாரை நிப்பாட்டுறேனோ, அவங்களுக்கு ஒழுங்கா வேலையைப் பாருங்க’ன்னு சொல்லி திருப்பி அனுப்பிட்டாரு. எம்.எல்.ஏ-வோட அந்தப் பேச்சு எங்களுக்குக் கோபத்தை உண்டாக்கிடுச்சி.

வேட்புமனுத் தாக்கல்
வேட்புமனுத் தாக்கல்

அதனாலதான் பெருந்துறை ஒன்றியத்துல இருக்கிற 12 வார்டுலயும், எம்.எல்.ஏ-வுக்கு எதிராக சுயேச்சையாகக் களமிறங்கியிருக்கிறோம். நாங்க 12 பேரும் அ.தி.மு.க-வைச் சேர்ந்தவங்கதான். அ.தி.மு.க அரசின் கொள்கைகளையும் செயல்பாடுகளையும் சொல்லியே மக்களிடம் ஓட்டு கேட்கப் போகிறோம். கண்டிப்பாக 12 பேரும் வெற்றி பெறுவோம்” என்றவர்,

`திட்டமிட்டு வழக்கை ஏவினார்!’- தோப்பு வெங்கடாசலத்துக்கு எதிராக கொதிக்கும் ஈரோடு அ.தி.மு.க வினர்

தொடர்ந்து பேசுகையில், ``இவர் எம்.எல்.ஏ-வாக ஆனதிலிருந்து பெருந்துறைத் தொகுதியில் அ.தி.மு.க-வோட வாக்கு சதவிகிதம் சரிஞ்சுகிட்டே வருது. மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்கள் என யாரையும் தொகுதிக்குள்ள விடுறதில்லை. தான் வச்சதுதான் சட்டம்னு செயல்படறார்.

உள்ளாட்சித் தேர்தலுக்குக்கூட யார்கிட்டயும் கலந்துக்காம, அவரோட கூட்டாளிகளுக்குத் தெரிஞ்ச பிசினஸ் பார்ட்னர்களுக்கு சீட் கொடுத்துருக்கார். அதுல பாதிப் பேர் கட்சியில உறுப்பினரே கிடையாது. இப்படி இருந்தா எப்படிங்க கட்சி வளரும். எம்.எல்.ஏ-வுக்கு எதிராக நாங்க 12 பேரும் ஜெயிச்சு, எம்.எல்.ஏ-வோட பலம் இவ்ளோதான்னு தலைமைக்குக் காட்டுவோம்” என்றார் கொதிப்புடன்.

எம்.எல்.ஏவுக்கு எதிராகக் களமிறங்கும் அ.தி.மு.க-வினர்
எம்.எல்.ஏவுக்கு எதிராகக் களமிறங்கும் அ.தி.மு.க-வினர்

கட்சி நிர்வாகிகளே எம்.எல்.ஏ தரப்பை எதிர்த்துப் போட்டியிடுவது குறித்து தோப்பு வெங்கடாசலத்திடம் விளக்கம் கேட்கத் தொடர்பு கொண்டோம். அவர் நமது அழைப்பை ஏற்கவில்லை. இதையடுத்து, அவரின் உதவியாளரைத் தொடர்புகொண்டபோது, `நான் எம்.எல்.ஏ-கூட இல்லைங்க. அவர் நம்பருக்கே கூப்பிடுங்க, போனை எடுப்பார்' என்றார்.

இதனைத் தொடர்ந்து, எம்.எல்.ஏ-வின் ஆதரவாளரும் பெருந்துறை அ.தி.மு.க ஒன்றியச் செயலாளருமான விஜயன் (எ) ராமசாமியைத் தொடர்பு கொண்டோம். `நான் அமைச்சர்கூட (தோப்பு வெங்கடாசலத்தைத்தான் சொல்கிறார்) பிரசாரத்துல இருக்கேங்க. இப்ப எதுவும் பேச முடியாது, திட்டுவாருங்க' என்றுகூறி போனை கட் செய்து விட்டார்.