Published:Updated:

`அ.தி.மு.க தொண்டர்கள் மத்தியில் வைகோவுக்கு தனி மதிப்பு உண்டு!' - அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

இரா.கோசிமின்
ஆர்.எம்.முத்துராஜ்

அ.தி.மு.க தொண்டர்கள் மத்தியில் எப்போதும் எப்போதும் வைகோவுக்குத் தனி மதிப்பு உண்டு என அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார்.

ராஜேந்திரபாலாஜி
ராஜேந்திரபாலாஜி

விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் மற்றும் இராஜபாளையம் பகுதியில் கட்டப்பட்டுள்ள அரசு கால்நடை மருந்தக கட்டிடத்தை தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.இராஜேந்திரபாலாஜி திறந்து வைத்தார்.

ராஜேந்திரபாலாஜி
ராஜேந்திரபாலாஜி

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,``தி.மு.கவின் ஆணவம் மற்றும் திமிர் போன்ற காரணங்களால்தான் வேலூர் மக்களவைத் தேர்தலில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் அக்கட்சி வெற்றி பெற்றுள்ளது. இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்தவர்களின் நலனுக்காக எந்த நலனும் செய்யாத கட்சி தி.மு.க. அ.தி.மு.க அவர்களுக்கு உதவி செய்வதால் சிறுபான்மையினரின் வாக்குகள் அ.தி.மு.கவுக்கு கிடைக்கத் தொடங்கியுள்ளன.

தி.மு.க அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அ.தி.மு.க வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதை வேலூர் தேர்தல் முடிவு பிரதிபலிக்கிறது. விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும். அதில், அனைத்து இடங்களிலும் அ.தி.மு.க வெற்றிபெறும். வைகோவை யாராலும் பின்னால் இருந்து இயக்க முடியாது. ஈழத்தமிழர் விவகாரத்தில் காங்கிரஸ் செய்த துரோகத்தை பொறுத்துக் கொள்ள முடியாமல், சில நேரங்களில் அவர் தன்னை மறந்து உண்மையைப் பேசி விடுகிறார். அ.தி.மு.க தொண்டர்கள் மத்தியில் எப்போதும் எப்போதும் வைகோவுக்குத் தனி மதிப்பு உண்டு. இலங்கை தமிழர்களுக்காக முதன்முறையாக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தவர் வைகோ.

ராஜேந்திரபாலாஜி
ராஜேந்திரபாலாஜி

தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளும் தனித்து நின்றால் அ.தி.மு.கதான் தொடர்ந்து வெற்றிபெறும். தேர்தலில் பணம்தான் வெற்றியைத் தீர்மானிக்கும் என்றால், மோடி பிரதமராக இருக்க முடியாது. அம்பானி, அதானி, டாடா, பிர்லா போன்ற இந்தியாவின் பெரும் பணக்காரர்கள்தான் அந்தப் பதவிக்கு வரமுடியும். தி.மு.கவில் வாரிசுகளுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைக்கும். ஆனால், அ.தி.மு.கவில் மட்டுமே அடிப்படைத் தொண்டனுக்கும் வாய்ப்பு கிடைக்கும்'' என்றார்.