Published:Updated:

`திட்டமிட்டு வழக்கை ஏவினார்!’- தோப்பு வெங்கடாசலத்துக்கு எதிராக கொதிக்கும் ஈரோடு அ.தி.மு.க வினர்

முதலமைச்சரை வரவேற்க காத்திருக்கும் அ.தி.மு.க-வினர்
முதலமைச்சரை வரவேற்க காத்திருக்கும் அ.தி.மு.க-வினர்

எங்கள் மீது பரப்பப்பட்ட வழக்கை, உண்மையறிந்து நீதிபதி தள்ளுபடி செய்துவிட்டார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கடந்த வருடம் 16.12.2018 அன்று சேலத்திலிருந்து கோவைக்குச் சென்றார். அவரை வரவேற்க பெருந்துறை அருகேயுள்ள விஜயமங்கலம் டோல்கேட்டில், எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாசலம் தரப்பினரும் அ.தி.மு.க-வின் இன்னொரு தரப்பினரும் காத்திருந்தனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டதாகவும், எம்.எல்.ஏ தரப்பைச் சேர்ந்த சங்கர் என்பவரை, எதிர் தரப்பினர் சாதிப் பெயரைச் சொல்லி, தாக்கியதாகச் சொல்லப்படுகிறது.

இதில், ஈரோடு புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி இணைச் செயலாளர் ஜெயக்குமார் உட்பட 5 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டது. `எம்.எல்.ஏ-வின் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே பொய்வழக்கு போடப்பட்டிருக்கிறது’ என கடந்த ஒரு வருடமாக கோர்ட்டில் வழக்கைச் சந்தித்து வந்தவர்களை சமீபத்தில் கோர்ட் விடுதலை செய்திருக்கிறது.

முதலமைச்சரை வரவேற்க காத்திருந்த அ,தி.மு.கவினர்
முதலமைச்சரை வரவேற்க காத்திருந்த அ,தி.மு.கவினர்

இதுகுறித்து வழக்கிலிருந்து விடுதலையான முன்னாள் பெருந்துறை தொகுதிச் செயலாளர் திங்களூர் கந்தசாமியிடம் பேசினோம். ``சம்பவம் நடந்த அன்றைக்கு எங்கள் தரப்பில் முதலமைச்சரைச் சந்திக்க 1,000 பேர் திரண்டிருந்தோம். எம்.எல்.ஏ தரப்பில் 100-க்கும் குறைவானவர்களே வந்திருந்ததால், அன்றைக்கு முதலமைச்சரை வரவேற்க எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாலம் வரவில்லை. அவரை மீறி நாங்கள் முதலமைச்சரை சந்தித்துவிடக் கூடாது என திட்டமிட்டு, தேவையில்லாத பிரச்னையைக் கிளப்பி எங்கள் மீது வன்கொடுமை வழக்கை எம்.எல்.ஏ ஏவினார்.

சங்கர் என்பவரை சாதிப் பெயரைச் சொல்லி, கையை முறுக்கி கீழே தள்ளிவிட்டதாக எங்கள் மீது வழக்கு பதிவுசெய்தனர். டோல்கேட்டில் இருந்த கேமராவில் அப்படியான காட்சிகள் எதுவும் பதிவாகவில்லை. எங்களைப் பழிவாங்க, இப்படி நடந்துகொள்வது, ஒரு எம்.எல்.ஏவே சாதியின் பெயரை வைத்து திட்டமிட்டே அவதூறு பரப்புகிறார். அதற்கு போலீஸாரும் துணை போனார்கள்.

ஆனால், எங்கள் மீது பரப்பப்பட்ட வழக்கை, உண்மையறிந்து நீதிபதி தள்ளுபடி செய்துவிட்டார். ஆரம்ப காலத்துல இருந்து, தனக்குப் பிடிக்காதவங்க மேல போலீஸை வச்சி கேஸ் போடுறதே எம்.எல்.ஏ-வுக்கு வேலையாப் போச்சு. ஒரு சர்வாதிகாரி மாதிரி மாவட்டத்திலுள்ள இரண்டு அமைச்சர்களையும் தொகுதிக்குள் நுழைய விடாமல், பெருந்துறையை தனித்தீவாக்கி ஆட்சி நடத்தி வருகிறார். இந்த ஆட்டம் நீண்ட நாள்களுக்கு நீடிக்காது” என்றார்.

வழக்கிலிருந்து விடுதலையான ஐவர்
வழக்கிலிருந்து விடுதலையான ஐவர்

வழக்கிலிருந்து விடுதலையான முன்னாள் ஈரோடு புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி இணைச் செயலாளர் ஜெயக்குமார், ``16.12.2018 அன்று பதியப்பட்ட பொய் வழக்கிற்கு சரியாக ஒரு வருடம் கழித்து 16.12.2019-ல் நீதி கிடைத்திருக்கிறது. போலீஸ் எஸ்.ஐ, டி.எஸ்.பி என 16 பேரை விசாரித்த பின்னர் நீதிபதி எங்களை விடுதலை செய்திருக்கிறார். ஆகாதவங்களை பொய் வழக்கு போட்டு மிரட்டுவதையே பாணியாக வைத்திருக்கிறார் எம்.எல்.ஏ.

எம்.எல்.ஏ-வின் இந்த சர்வாதிகாரப் போக்கு முடிவுக்கு வரும் காலம் வெகுதூரம் இல்லை. எவ்வளவு சூதுகள் நடந்தாலும், கடைசியில் தருமம்தான் வெல்லும் என்பது மறுபடியும் நிரூபணமாகியிருக்கிறது. விடுதலைக்குப் பின்னர், பெருந்துறையிலுள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கச் சென்றோம். `பட்டாசு வெடித்து, எம்.எல்.ஏ-வுக்கு எதிராக கோஷம் போட்டார்கள்’ என ஒன்றியச் செயலாளர் மூலமாக மறுபடியும் விடுதலையான 5 பேர் மீது எம்.எல்.ஏ வழக்கு போட வைத்திருக்கிறார். தலைமைக்குக் கட்டுப்பட்டு நாங்கள் அமைதியாக இருக்கிறோம்” என்றார்.

இதுகுறித்து விளக்கமறிய எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாசலத்தை போனில் தொடர்புகொண்டோம். பல கட்ட முயற்சிகளுக்குப் பிறகு போனை எடுத்த எம்.எல்.ஏ உதவியாளர், `அண்ணன் மீட்டிங்ல இருக்காரு. அவர் வந்ததும் கூப்புடுறேங்க' என போனை வைத்துவிட்டார். அதைத் தொடர்ந்து பலமுறை முயன்றும் எம்.எல்.ஏ போனை எடுக்கவில்லை. தோப்பு வெங்கடாசலம் தரப்பில் இருந்து விளக்கம் கொடுத்தால் உரிய பரிசீலனைக்குப் பின்னர் பிரசுரிக்கப்படும்.

அடுத்த கட்டுரைக்கு