Published:Updated:

`கட்சித் தலைமையை மிரட்டினாரா?’- சர்ச்சையில் தி.நகர் எம்.எல்.ஏ சத்யா

கலிலுல்லா.ச

எங்களை நீக்க வேண்டும் என்றாலும், கட்சித்தலைமைதான் முடிவெடுக்கணும். ஆனால், இவர் தலைமையையே மிரட்டி, நிர்வாகிகள் நீக்குவதற்கான கையெழுத்தை வாங்கியுள்ளார்.

அ.தி.மு.கவினர்
அ.தி.மு.கவினர்

தி.நகர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சத்யா, தென்சென்னை வடக்கு மாவட்டச் செயலாளராகவும் உள்ளார். தென்சென்னை வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த 53 கட்சி நிர்வாகிகளை மாற்றிவிட்டு புதிய நிர்வாகிகளை நியமித்தார். இதனால் மாற்றம் செய்யப்பட்ட நிர்வாகிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். நேற்று வடபழநியில் உள்ள சத்யா எம்.எல்.ஏ. வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக தகவல் வெளியானது. இதையடுத்து, அவர் வீட்டு முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதையடுத்து, சத்யாவின் நிர்வாகிகள் மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் 17-வது வார்டு வட்டச் செயலாளராக உள்ள சின்னையன் உள்ளிட்ட வட்டச் செயலாளர்கள் தங்கள் ஆதரவாளர்களுடன் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கட்சி அலுவலகம்
கட்சி அலுவலகம்

சத்யாவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். என்ன நடந்தது என்பது தொடர்பாக வட்டச்செயலாளர் சின்னயனிடம் பேசினோம். ``எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்திலிருந்து நாங்கள் அ.தி.மு.க-வில் இருக்கிறோம். நான் பகுதி பேரவைச்செயலாளர், மாமன்ற உறுப்பினராக இருந்தேன். எல்லோரும் இதுபோல பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர்கள்தான். தி.நகர் சத்யாவும் கூட கவுன்சிலராக இருந்துவந்தவர்தான். பலவருஷம் அவர், பதவி இல்லாமல் இருந்தவர்தான். கலைராஜன் வந்த பிறகு அவருக்கு பதவி கொடுக்கப்பட்டது. சத்யாவுக்கு தொடக்கத்திலிருந்தே எங்களைப் பிடிக்காது.

ஏதாவது நிகழ்ச்சிக்கு அழைத்தால் என் பெயரைப்போட்டால் மட்டுமே வருவேன். வளர்மதி, கோகுல இந்திரா, மைத்ரேயன் பெயரை போடக் கூடாது. என் பெயர் மட்டுமே போட்டால் மட்டுமே வருவேன் என்கிறார். அதுபோல நாங்கள் மற்ற பெயருடன் சேர்த்து அவர் பெயரை பேனரில் போட்டு ஜெயலலிதா நினைவுநாள் அன்னதானம் நிகழ்ச்சிக்கு கூப்பிட்டபோது வரவில்லை. இது அ.தி.மு.க. இங்கு அனைவரின் பெயர் போடவும் உரிமை இருக்கிறது.

நிர்வாகிகள்
நிர்வாகிகள்

அப்படியே போய்கொண்டிருந்தது. ஒருநாள் தி.நகரில் ஜெயலலிதா சிலை திறப்புக்கு அழைத்தோம். இத்தனைக்கும் அவர் பெயரை கல்வெட்டில் பதிவு செய்து, பத்திரிகையில் பதிவு செய்து கூப்பிட்டோம். ஆனால் வரவில்லை. இவ்வளவு செய்தும், ஜெயலலிதாவின் சிலை திறப்புக்குகூட மாவட்டச் செயலாளர் வரவில்லை. எங்களுக்கு கஷ்டமாக இருந்தது. மாவட்டச் செயலாளராக நியமனமான பின், இதுவரை ஆலோசனைக் கூட்டமோ, நிர்வாகிகள் கூட்டமோ அவர் போடவேயில்லை.

தொடர்ந்து தேர்தல் வந்தது. ஆயிரம் விளக்கில் உள்ள 7 வார்டிலும், வாக்குகள் குறைவாகப் பதிவானது. இதுவரை அப்படி குறைந்ததேயில்லை. மாவட்டச் செயலாளரான இவர் தொகுதியிலே 7,000 ஓட்டுகள் குறைந்தன. எங்கள் 53 வட்டச் செயலாளரை தூக்குவதற்கு அவர் சொன்ன காரணம், `வாக்குகள் குறைந்துவிட்டது. அதனால் தான் வட்டச் செயலாளர்களை தூக்கினேன்’ என்கிறார். அப்படிப் பார்த்தால் அவர் தொகுதிகளிலே 7,000 வாக்குகள் குறைந்துள்ளது. அவரையும்தானே பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும்.

அதிமுக
அதிமுக

அப்படி நீக்க வேண்டும் என்றாலும், கட்சித்தலைமைதான் முடிவெடுக்கணும். ஒருங்கிணைப்புக்குழு அதற்காகத்தான் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இவர் தலைமையையே மிரட்டி, நிர்வாகிகள் நீக்குவதற்கான கையொப்பத்தை வாங்கியுள்ளார். தன்னிச்சையாக செயல்படுகிறார். அவருக்குச் சாதகமான ஆள்களை மட்டுமே நியமித்துள்ளார். `இது அம்மா காலம் இல்லை; இப்போதெல்லாம் கடுமையாக உழைக்க வேண்டும்’ என்கிறார் சத்யா அப்படி கடுமையாக உழைத்திருந்தால் உங்கள் தொகுதியில் ஏன் வாக்குகள் குறைகிறது.

இது தொடர்பாக விளக்கம் கேட்க, தி.நகர் சத்யாவை பலமுறைத் தொடர்புகொண்டும் பதிலளிக்கவில்லை. அவர் தரப்பு விளக்கத்தைக் கொடுக்கும் பட்சத்தில், உரிய பரிசீலனைக்குப் பின்னர் பிரசுரிக்கத் தயாராக உள்ளோம்.