Published:Updated:

திருச்சி: `கே.என்.நேருவுடன் ரகசிய டீல்?!’ - வெல்லமண்டி நடராஜனுக்கு எதிராகக் கொதிக்கும் அதிமுக-வினர்

கே.என்.நேரு
கே.என்.நேரு

``பத்மநாபனிடம் பண பலம் இல்லை. மக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளிடமும் செல்வாக்கு இல்லை. பிறகு ஏன் இவரை நிறுத்தினார்கள்... கே.என் நேரு வெற்றிபெற வெல்லமண்டி ஏன் சிவப்புக் கம்பளம் விரிக்க வேண்டும்” எனக் கேள்வி எழுப்பினார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

திருச்சி மேற்குத் தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளர் பத்மநாபனை 80,927 வாக்கு வித்தியாசத்தில் எளிதாகச் சாய்த்து வெற்றிபெற்றிருக்கிறார் கே.என்.நேரு. திருச்சி மாவட்டத்திலேயே அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருக்கிறார் நேரு.

கே.என்.நேரு வெற்றிபெற்று சான்றிதழ் பெற்றபோது...
கே.என்.நேரு வெற்றிபெற்று சான்றிதழ் பெற்றபோது...

திருச்சி மேற்குத் தொகுதியில் தி.மு.க-வின் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அ.தி.மு.க-வில் புதுமுக வேட்பாளரான பத்மநாபன், நாம் தமிழர் கட்சியில் வினோத், மக்கள் நீதி மய்யம் சார்பில் அபுபக்கர் சித்திக் உள்ளிட்ட பலர் களம்கண்டனர். இந்தநிலையில் தி.மு.க வேட்பாளர் கே.என்.நேரு 1,12,515 வாக்குகள், அ.தி.மு.க வேட்பாளர் 31,588 வாக்குகள் பெற்றனர். கே.என்.நேரு 80,588 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருக்கிறார். நாம் தமிழர் கட்சியில் போட்டியிட்ட வினோத் 15,195 வாக்குகள் பெற்று மூன்றாம் இடம் பிடித்துள்ளார்.

இந்தத் தொகுதியில், அ.தி.மு.க வேட்பாளர் தோல்வி என்பது எதிர்பார்த்ததுதான். அதுவும் நேரு வெற்றிபெறுவதற்குச் சிவப்புக் கம்பளம் விரித்தவர் வெல்லமண்டி என்று வெளிப்படையாகப் பேச ஆரம்பித்துள்ளனர் அ.தி.மு.க-வினர்.

மேற்குத் தொகுதி வேட்பாளர் பத்மநாபன்
மேற்குத் தொகுதி வேட்பாளர் பத்மநாபன்

என்ன நடந்தது என்று கட்சியின் உள்விவகாரம் அறிந்த சிலரிடம் பேசினோம். ``நேருவை எதிர்க்கப் புதுமுக வேட்பாளரா? சட்டமன்றத் தேர்தலில் முன் அனுபவம் இல்லாத பத்மநாபனை எப்படித் தேர்வு செய்தீர்கள்? இவரை மாற்ற வேண்டும் என்று வேட்பாளர்கள் தேர்வு செய்தபோதே தொகுதியில் கட்சிக்காரர்கள் போர்க்கொடி தூக்கியதோடு, இவர் நின்றால் கே.என்.நேரு அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறுவார் என்று அ.தி.மு.க-வினரே வெளிப்படையாகப் பத்திரிக்கையாளர்களிடம் பேசினார்கள். அவர்கள் சொன்னதுபோலவே இன்று நடந்துள்ளது. ‘‘திருச்சியில் தன்னைத் தாண்டி யாரும் வளர்ந்துவிடக் கூடாது என்பதற்காக நேருவுடன் டீல் போட்டுக்கொண்ட அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், டம்மியான வேட்பாளர் பத்மநாபனை நிறுத்தியிருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதோடு கட்சித் தலைமையிடமும் பத்மநாபனுக்குத் தேவையான தொகுதிச் செலவுகளையும் தானே ஏற்பதாக வாக்குறுதி அளித்தார் வெல்லமண்டி. ஆனால், அவர் சொன்னபடி நடந்துகொள்ளவில்லை. இவரது செயலால் கட்சி நிர்வாகிகள் உஷ்ணத்திலிருந்தனர். பத்மநாபன் கட்சியின் மூத்த நிர்வாகிகளின் ஒத்துழைப்பு இல்லாமல் தனியாளாகப் பிரசார வேலைகளை மேற்கொண்டுவந்தார். பணம் இல்லாமல் மிகுந்த சிரமப்பட்டுவந்த பத்மநாபனுக்கு வெல்லமண்டி கடைசி வரையிலும் பணத்தைக் கொடுக்காமல் அவருக்கு அல்வா மட்டுமே கொடுத்தார்.

கூட்டத்தில் பேசிய கே.என்.நேரு
கூட்டத்தில் பேசிய கே.என்.நேரு

இவரது நிலையைப் பார்த்து அ.தி.மு.க தலைமை அமைப்புச் செயலாளரான ரத்தினவேல் மட்டும்தான் கடைசி வரையிலும் களத்தில் நின்று வேலை பார்த்தார். ஆனால் எந்தப் புண்ணியமும் இல்லாமல் போய்விட்டது. இறுதிக்கட்ட பிரசாரம் முடிந்த பிறகு, வாக்காளர்களில் சிலர் பணத்தை எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர்.

ரத்தினவேல்
ரத்தினவேல்

ஆனால் கடைசி வரையிலும் பணம் கொடுக்கவே இல்லை. கிளை, ஒன்றியச் செயலாளர்கள் பணம் கேட்டு நச்சரிக்க, `பணம் இருந்தால் கொடுக்க மாட்டோமா? தலைமையும் தரவில்லை, கொடுப்பதாகச் சொன்ன அமைச்சரும் தரவில்லை. நான் என்ன செய்ய முடியும்...' என்று கட்சி நிர்வாகிகளிடம் புறங்கையைக் காட்டியிருக்கிறார் பத்மநாபன். கடைசி வரையிலும் தொகுதியில் ஒத்த ரூபாய்கூட கொடுக்கவில்லை.

இந்தநிலையில், கே.என்.நேரு எப்படியும் வெற்றிபெறுவோம் என்று தெரிந்ததும், பெரிதாக தொகுதிப் பக்கம் வாக்கு கேட்டுச் செல்லவில்லை. திருச்சியிலுள்ள மற்ற தொகுதிகளில் கவனம் செலுத்தத் தொடங்கினார். அவரது மகன் அருண்தான் தொகுதி முழுவதும் தனது அப்பாவுக்காக வாக்கு கேட்டு பம்பரமாகச் சுழன்றுவந்தார்.

அ.தி.மு.க அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்
அ.தி.மு.க அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்

இப்போது தனது இமேஜை நிலைநிறுத்திக்கொண்டு வெற்றி வாகை சூடியிருக்கிறார். பத்மநாபனிடம் பண பலம் இல்லை. மக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளிடமும் செல்வாக்கு இல்லை. பிறகு ஏன் இவரை நிறுத்தினார்கள்... கே.என்.நேரு வெற்றி பெற வெல்லமண்டி ஏன் சிவப்புக் கம்பளம் விரிக்க வேண்டும்... அவர் நேருவிடம் விலை போனதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை" என்று தொகுதி முழுவதும் கட்சிக்காரர்கள் வெளிப்படையாகப் பேச ஆரம்பித்துள்ளனர்.

நேரு - பத்மநாபன்
நேரு - பத்மநாபன்

இது குறித்து வெல்லமண்டி நடராஜனின் ஆதரவாளர்கள் தரப்பில் பேசினோம். ``அதிமுக இங்கு மட்டும் தோல்வியைச் சந்திக்கவில்லை. தமிழகம் முழுவதும் அது நடந்துள்ளது. என்னமோ அவர் தோல்விக்கு அண்ணன்தான் காரணம் என்று சொல்கிறார்கள்... அவருக்கு சீட் வாங்கிக் கொடுத்தது முதல் பண உதவிகள் வரை செய்தது வெல்லமண்டியார்தான். சீட் கிடைக்காதவர்கள் எது வேண்டுமானாலும் பேசுவார்கள். அதற்கெல்லாம் நாங்கள் பதிலளிக்க வேண்டியதில்லை. பத்மநாபனுக்குத் தெரியும் அண்ணனைப் பற்றி’’ என்று காட்டமாகப் பேசினார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு