Published:Updated:

ஊர்த் திருவிழா கிடாவெட்டும், அ.தி.மு.க வேட்பாளர் நேர்காணலும் - ஒரு ஸ்பாட் விசிட்!

அ.தி.மு.க வேட்பாளர் நேர்காணல்

ஒட்டுமொத்தமாக 8,240 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 'ஒரே நாளில் நேர்காணல் நடத்தப்படும்' என அதிர்ச்சி கொடுத்தது அ.தி.மு.க தலைமை.

ஊர்த் திருவிழா கிடாவெட்டும், அ.தி.மு.க வேட்பாளர் நேர்காணலும் - ஒரு ஸ்பாட் விசிட்!

ஒட்டுமொத்தமாக 8,240 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 'ஒரே நாளில் நேர்காணல் நடத்தப்படும்' என அதிர்ச்சி கொடுத்தது அ.தி.மு.க தலைமை.

Published:Updated:
அ.தி.மு.க வேட்பாளர் நேர்காணல்
கிராமங்களில் ஊர்த் திருவிழா நடத்தப்படுவதற்கு முன்பாக, உப விழாவாக ஏதாவதொரு முனீஸ்வரன் (அ) கறுப்பு கோயிலில் கிடாவெட்டு நடக்கும். அங்கே ஊர்ப்பெரிய மனிதர்கள் கூடி, ``திருவிழா முடியுறவரைக்கும் பங்காளிங்க எல்லாம் பழைய சண்டை சச்சரவுகள மறந்து ஒற்றுமையா அம்மனோட திருவிழாவைக் கொண்டாடணும்ப்பா'' எனச் சமாதானம் பேசுவார்கள். (இந்த இடத்தில் `அவன் இவன்’ படத்தில் காவல்துறையினர் சமாதனம் பேசும் காட்சிகளும் நினைவுக்கு வந்தால் கம்பெனி பொறுப்பல்ல) அதற்கு இணையான ஒரு நிகழ்வு சென்னை ராயப்பேட்டை, அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் 'வேட்பாளர்கள் நேர்காணல்' என்கிற பெயரில் இன்று அரங்கேறியது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் அடுத்த மாதம் 6-ம் தேதி நடைபெறவிருக்கிறது. இதையொட்டி ஆளும்கட்சியான அ.தி.மு.க சார்பில் கடந்த மாதம் 24-ந்தேதி முதல் வேட்பாளர் விருப்ப மனு விநியோகிகம் தொடங்கப்பட்டு மார்ச் 3-ம் தேதியுடன் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இறுதிநாளான நேற்று அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு பெறுவதற்காக கட்சியினர் அதிக அளவில் குவிந்தனர். அமைச்சர்கள் ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார், ஓ.எஸ்.மணியன், நிலோபர் கபில் உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள் நேற்றுதான் விருப்ப மனுவை அளித்தனர்.

அ.தி.மு.க வேட்பாளர்  நேர்காணல்
அ.தி.மு.க வேட்பாளர் நேர்காணல்

ஒட்டுமொத்தமாக 8,240 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 'ஒரே நாளில் நேர்காணல் நடத்தப்படும்' என அதிர்ச்சி கொடுத்தது அ.தி.மு.க தலைமை. ஒரு நாளில் மொத்தமே 1,440 நிமிடங்கள்தான். அப்படிப் பார்த்தால் விண்ணபித்திருந்த ஒவ்வொருவரிடமும் 17 செகண்ட்தான் பேச முடியும். நேர்காணல் நடக்கும் ஹாலுக்குச் சென்று அமருவதற்கே அந்த நேரம் சரியாகப் போகும். எப்படி நடத்தப்போகிறார்கள் என மிகுந்த திகிலோடுதான் அ.தி.மு.க தலைமைக் கழக அலுவலகத்துக்குச் சென்றோம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ராயப்பேட்டை எம்.ஜி.ஆர் சிலையிலிருந்தே கூட்டம் களைகட்டியது. விருப்ப மனு அளித்ததற்கான ரசீது வைத்திருந்தவர்கள், ஊடகத்தினருக்கு மட்டுமே கட்சி அலுவலகத்துக்கு உள்ளே செல்ல அனுமதி வழங்கப்பட்டது. தமிழகம் புதுச்சேரி, கேரளா எனக் கழக மாவட்டங்களின் அடிப்படையில் ஒட்டுமொத்தமாக 15 பேட்ச்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. முதல் பேட்சாக, கன்னியாகுமரி கிழக்கு, மேற்கு, தூத்துக்குடி வடக்கு, தெற்கு, திருநெல்வேலி மாவட்ட நிர்வாகிகளுக்கு நேர்காணல் நடத்தப்பட்டது. கட்சி அலுவலகத்தின் பால்கனியில் ஷாமியானா பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. வெளியிலிருந்து வருபவர்கள் முதலில் அங்கு அமரவைக்கப்பட்டனர். தொடர்ந்து, அலுவலகத்தின் வலதுபுறம் உள்ள இருக்கைகளிலும், அதைத் தொடர்ந்து அலுவலகத்தின் பின்புறம் போடப்பட்டிருந்த இருக்கைகளிலும் அமரவைக்கப்பட்டு இறுதியாகத்தான் நேர்காணல் நடக்கும் முதல் தளத்துக்கு அனுப்பப்பட்டனர்.

அ.தி.மு.க வேட்பாளர்  நேர்காணல்
அ.தி.மு.க வேட்பாளர் நேர்காணல்

பரீட்சைக்கு வந்த மாணவர்கள்போல, ரத்தத்தின் ரத்தங்கள் கையில் ஃபைலுடன் பவ்வியமாக அமர்ந்திருந்தனர். அலுவலகத்தின் முதல் தளத்தில் நேர்காணலுக்கான ஏற்பாடுகள் தயார் செய்யப்பட்டிருந்தன. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, முன்னாள் அமைச்சர் வளர்மதி, வைத்திலிங்கம் உள்ளிட்ட ஒன்பது ஆட்சி மன்றக்குழு உறுப்பினர்கள் நேர்காணல் நடக்கும் ஹாலில் இருந்தனர்.

ஒரு பேட்சுக்கு ஆறு மாவட்டத்தினர் என்பதால் ஒட்டுமொத்தமாக 100-120 பேர் ஒரே நேரத்தில் உள்ளே சென்றனர். ஹாலின் உள்ளே முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பி.எஸ் தவிர வேறு யாரும் பேசவில்லையாம். முதல்வர் பேசும்போது,

'``நம்ம ஆட்சியில, நாம கொண்டு வந்த நல்ல திட்டங்களை எல்லாம் மக்கள்கிட்ட எடுத்துச் சொல்லுங்க. ஒரு தொகுதியில ஒருத்தருக்குத்தான் சீட் கொடுக்க முடியும். ஆனால், எல்லோருக்கும் ஏதோவொரு பதவி நிச்சயமாகக் கிடைக்கும். அதனால, சீட்டு கிடைக்கலைன்னு யாரும் வேலை செய்யாம இருந்துடாதீங்கப்பா'' எனப் பேசி முடிக்க, அடுத்து எழுந்த ஓ.பி.எஸ், ``நமக்கு நல்ல அதரவு இருக்கு. ஒற்றுமையோட அத ஓட்டா மாத்தணும். அது உங்க கையிலதான் இருக்கு'' எனப் பேசியதாக வெளியில் வந்த நிர்வாகிகள் தெரிவித்தனர். ஒரு பேட்ச் உள்ளே சென்று வெளியில் வர கிட்டத்தட்ட அரை மணி நேரத்துக்கும் மேலானது. அதில் மூன்று கட்டங்களாக அமர்ந்து எழுந்து சென்றதிலேயே இருபது நிமிடங்கள் ஆகியிருக்கும்.

ஓ.பி.எஸ்
ஓ.பி.எஸ்

நேர்காணலில் கடைசியில் அமர்ந்தவர்களின் முகங்களைக்கூட ஆட்சி மன்றக்குழு உறுப்பினர்கள் பார்த்திருப்பார்களா என்பது சந்தேகம்தானாம். `நீ எங்கே இருந்தே... உன்னைப் பார்க்கவே இல்லையே...' என பல ர.ர-க்கள் வெளியில் வந்து கிசுகிசுத்தனர். காத்திருந்த ர.ர-க்களுக்கு 11 மணியளவில் ஒரு சிறிய பாட்டில் மோர், தண்ணீர் பாட்டில் வழங்கப்பட்டன. கூட்டத்தில் ஏதாவது சலசலப்பு எழுந்தால், `புரட்சித்தலைவி அம்மா கட்டிக் காத்த கண்ணியத்தை' என ஒருவர் பேச, ஒட்டுமொத்தக் கூட்டமும் கப்சிப் ஆகிவிடுகிறது. அவ்வப்போது, 'புரட்சித்தலைவி அம்மா வாழ்க, டாக்டர் எடப்பாடி வாழ்க' என கோஷங்கள் விண்ணைப் பிளந்தன. ஒரேயொருமுறை மட்டும், டாக்டர் விஜயபாஸ்கர் வாழ்க எனும் கோஷம் எழ, 'அவர் ஊர்காரய்ங்கப்பா' எனச் சில கரைவேட்டிகள் சமாதானம் சொல்லிக்கொண்டனர். நேர்காணலில் முன்னாள், இந்நாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர். எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகள் சுதாவின் மகன் ராமச்சந்திரனும், ஆண்டிபட்டி மற்றும் பல்லாவரம் தொகுதிகளுக்காக நடந்த வேட்பாளர் நேர்காணலில் கலந்துகொண்டார்.

காலை 9:00 மணிக்கு ஆரம்பித்த நேர்காணல் முதற்கட்டமாக மதியம் 2:00 மணி வரை நடைபெற்றது. அதில், 139 தொகுதிகளுக்கான வேட்பாளர் நேர்காணல் நடத்தப்பட்டது. மீண்டும், மதியம் 3:00 மணிக்குத் தொடங்கி மீதமுள்ள 95 தொகுதிகளுக்கான வேட்பாளர் நேர்காணல் நடைபெற்றது.

அ.தி.மு.க வேட்பாளர்  நேர்காணல்
அ.தி.மு.க வேட்பாளர் நேர்காணல்

பள்ளி, கல்லூரி தேர்வுகளைப்போல, விண்ணப்பித்திருந்த அனைவரும் போட்டியிட வாய்ப்பிருந்தால், அனைவரையும் ஆல் பாஸ் ஆக்கியிருப்பார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அதற்கான வாய்ப்புகள் இல்லாமல் போகவே, இந்த ஒருநாள் கூத்தை அரங்கேற்ற வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். தற்போது பெட்ரோல் விற்கும் விலையில், தமிழ்நாடு முழுவதிலுமிருந்து பல வாகனங்களில் கட்சியினர் அலுவலகத்துக்கு வந்து, அந்தச் சாலையை அடைத்து மக்களுக்கு சங்கடத்தையும், காவல்துறையினருக்கு தேவையற்ற பணிச்சுமையையும் தந்ததைத் தவிர இந்த நேர்காணலில் ஒரு முக்கியத்துவமும் இல்லை.

இதே பாணியில், நாளை தி.மு.க மாவட்டச் செயலாளர் கூட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதுவும், தங்களுக்கு, தாங்கள் பரிந்துரைத்த ஆதரவாளர்களுக்கு சீட் கிடைக்கவில்லை என்றால் கோபித்துக்கொள்ளக் கூடாது என முன்சமாதானம் செய்யும் கூட்டமாகத்தான் இருக்கும் என்கிறது அறிவாலய வட்டாரம்.

கட்டுரை, படங்கள், தொகுதி பிரச்னை குறித்த வீடியோக்களை அனுப்ப க்ளிக் செய்க.... https://bit.ly/39BnZAJ

ஊர்த் திருவிழா கிடாவெட்டும், அ.தி.மு.க வேட்பாளர் நேர்காணலும் - ஒரு ஸ்பாட் விசிட்!

தமிழகத் தேர்தல் களம் அனல் தகிக்கத் தொடங்கிவிட்டது. தமிழகமெங்கும் சுழன்று செய்திகளை வழங்கிக்கொண்டிருக்கிறது விகடனின் நிருபர் படை. இந்தப் பணியில் நீங்களும் இணையத் தயாரா?

நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்;

தேர்தல் தொடர்பான உங்கள் ஏரியா சுவாரஸ்யங்களோ, கள நிலவரங்களோ... அரசியல் கட்சி மீதான விமர்சனங்களோ அல்லது பார்வைகளோ... தொகுதிப் பிரச்னை, தலைவர்கள் பற்றிய நினைவுகள், தேர்தல் குறித்த நாஸ்டால்ஜியா நினைவுகள் ஆகியவையோ... எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். கட்டுரை, படங்கள், வீடியோ என எதிலும் கலக்கலாம். அனுப்ப வேண்டிய லிங்க்: https://bit.ly/39BnZAJ

உங்கள் பங்களிப்புகளுக்கு இங்கே களம் அமைத்துத் தருகிறது விகடன்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://ugc.vikatan.com/election/createarticle