Published:Updated:

அம்மாவால் அடையாளம் காணப்பட்டவன் நான்... இதைவிட என்ன தகுதி வேண்டும்?!

- ஓ.பன்னீர்செல்வம்
பிரீமியம் ஸ்டோரி
- ஓ.பன்னீர்செல்வம்

- ஓ.பன்னீர்செல்வம் பளிச்!

அம்மாவால் அடையாளம் காணப்பட்டவன் நான்... இதைவிட என்ன தகுதி வேண்டும்?!

- ஓ.பன்னீர்செல்வம் பளிச்!

Published:Updated:
- ஓ.பன்னீர்செல்வம்
பிரீமியம் ஸ்டோரி
- ஓ.பன்னீர்செல்வம்

`அ.தி.மு.க-வில் ஒற்றைத் தலைமை வேண்டும்’ என்ற அணுகுண்டை எடப்பாடி பழனிசாமி தரப்பு வீச, “பொதுக்குழு நடக்கவிருக்கும் சூழலில் ஒற்றைத் தலைமை விவாதம் தேவையில்லை” என்று தண்ணீரைப் பீய்ச்சியடித்து, திரியை அணைக்க முயல்கிறார் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம். பரபரப்பான இந்தச் சூழலில், சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள தனது வீட்டில் ஆதரவு நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டிருந்த ஓ.பன்னீர்செல்வத்தைச் சந்தித்து, பல்வேறு கேள்விகளை முன்வைத்தேன்...

“ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அ.தி.மு.க-வில் ஒற்றைத் தலைமை கோஷம் வலுத்திருக்கிறதே?”

“இந்தப் பிரச்னை தற்போது அவசியமில்லை என்பதே எனது கருத்து. இயக்கத்தின் அனைத்து வகையான அமைப்புத் தேர்தலும் தற்போதுதான் சுமுகமாக, மகிழ்ச்சியாக முடிந்திருக்கிறது. இந்த நிலையில், ஒற்றைத் தலைமை கோஷம் எழுப்புவது, தொண்டர் களை சஞ்சலப்படுத்தும். ‘ஒற்றைத் தலைமை வேண்டாம்’ என்றுதான் தொடர்ந்து கூறிவருகிறேன். பொதுக்குழுவை மகிழ்ச்சிகரமாக நடத்தி முடிக்க வேண்டும். அதுதான் எனது விருப்பம்.”

“ஒற்றைத் தலைமை வேண்டாம் என்கிறீர்கள். ஆனால், வெளியில் நீங்கள் தலைமை ஏற்க வேண்டும் என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன. இது முரணாக இருக்கிறதே..?”

“அது தொண்டர்களின் விருப்பம். என்னைப் பொறுத்தவரை இப்போதைக்கு ஒற்றைத் தலைமை வேண்டாம். பொதுக்குழு முடிந்த பின்னர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., அம்மா ஆகியோருடன் இருந்த, கழக மூத்த முன்னோடிகள் 16 பேர்கொண்ட உயர்மட்டக்குழு அமைத்து, ஒற்றைத் தலைமை தேவைதானா என்பது குறித்து விரிவாக ஆலோசனை செய்ய வேண்டும். ஒருவேளை ஒற்றைத் தலைமையே அவசியம் என்றால், அந்தத் தலைமை எவ்வாறு செயல்பட வேண்டும் என்று சட்டதிட்ட வரையறைகளை உருவாக்க வேண்டும். இதற்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும். நானும் கட்டுப்படுவேன். அதுதான் ஜனநாயகம்.”

அம்மாவால் அடையாளம் காணப்பட்டவன் நான்... இதைவிட என்ன தகுதி வேண்டும்?!

“தொடர் தோல்வியால் ஒற்றைத் தலைமை வேண்டுமென்று தொண்டர்கள் கருதுவதில் நியாயம் இருக்கிறதுதானே..?”

“இருக்கலாம். ஆனால், பொதுச் செயலாளர் என்ற பதவி அம்மாவுக்கு மட்டுமே உரித்தானது என்று பொதுக்குழுவில் முடிவு செய்யப்பட்டுவிட்டது. அந்த மரியாதை, அந்தஸ்து எல்லாம் அம்மாவுக்கு மட்டுமே. இந்த நேரத்தில் ஒற்றைத் தலைமை பிரச்னையை எப்படி எடுத்துக் கொள்வதென்றே தெரியவில்லை. இது எதை நோக்கிப் போகுமென்றும் தெரியவில்லை. இது குறித்துப் பல தரப்பு கருத்துப் பரிமாற்றங்களைச் செய்யவேண்டிய நிலை இருக்கிறது. அதையெல்லாம், அவசர கோலத்தில் செய்து முடிக்க முடியாது. அது மிகப்பெரிய பிரச்னையை ஏற்படுத்தும்.”

“இரண்டாம் கட்டத் தலைவராக இருக்கவே உங்களுக்கு ஆசையா?”

“கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் நான்தானே..?”

“ஆனால், நீங்கள் தொடர்ந்து ஏமாற்றப்பட்டதாகவும், அப்போதும் அமைதி காத்ததாகவும் செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டீர்களே..?”

“கட்சி மற்றும் ஆட்சி நலனுக்காக தர்மயுத்தத்தை முடித்துக்கொண்டேன். ஒருங்கிணைப்பாளராகத் தலைமை பீடத்தில் இருக்க வேண்டும் என்று என்னை அழைத்தார்கள். அதன் பிறகு கட்சியில் ‘இணை ஒருங்கிணைப்பாளர்’ என்ற பதவி தேவை என்றார்கள். அப்புறம் இரண்டு பேரும் இணைந்துதான் கையெழுத்து போடவேண்டும் என்று சொல்லி, தலைமையின் ‘பவரை’ இரண்டாகப் பிரித்துவிட்டனர்.”

“அழைத்தார்கள்... என்றார்கள்... பிரித்துவிட்டனர்... இதெல்லாம் யார்... பெயரைச் சொல்லலாமே?”

(இந்தக் கேள்விக்கு சில நொடிகள் மௌனம் காத்தவர்...) “நான் எதையும் வெளிக்காட்டிக் கொண்டதில்லை. கடந்த ஆறாண்டுக் காலமாக முழு ஒத்துழைப்பையும் கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறேன்.”

“ஒற்றைத் தலைமை குறித்து நீங்கள் எப்போதாவது பேசியிருக்கிறீர்களா?”

“ஒற்றைத் தலைமை குறித்து இதுவரை நான் சிந்தித்ததுகூட கிடையாது. சமீபத்தில் நடந்த மாவட்டச் செயலாளர் கூட்டத்தில்தான் முதன் முறையாக ஒற்றைத் தலைமை பற்றிப் பேசப்பட்டது. இன்று அந்தப் பிரச்னை பூதாகரமாக வெடித்திருக் கிறது. இதற்குத் தீர்வுகாண உயர்மட்டக்குழு அவசியம். அதுதான் நல்ல மரபும்கூட. அதுதான் எம்.ஜி.ஆரின் வழியாக இருக்கும்.”

“பேச்சுவார்த்தை மூலம் இப்போதைக்குப் பிரச்னை தீர்ந்தாலும், இந்த ஒற்றைத் தலைமை அனல் அணைந்துவிடும் என்று நம்புகிறீர்களா?”

“ஒருசில விஷயங்களைப் பேசித்தீர்த்தால் பிரச்னை தீர்ந்துவிடும். அதுதான் வரலாறு. பொதுக்குழுவைச் சுமுகமாக நடத்த, தலைமைக் கழக நிர்வாகிகள் ஒன்றாகப் பேசி முடித்தால் பிரச்னை தீர்ந்துவிடும். ஒற்றைத் தலைமை அனல் நிரந்தரமாக இருக்காது; கானல் நீராகக் கரைந்து... மறைந்துவிடும்!”

அம்மாவால் அடையாளம் காணப்பட்டவன் நான்... இதைவிட என்ன தகுதி வேண்டும்?!

“அ.தி.மு.க நிர்வாகிகள் எடப்பாடி பக்கம் இருப்பதாகக் கூறுகிறார்களே?”

“கீழ்மட்டத் தொண்டர்கள் அப்படியில்லை. பொதுக்குழு கூடவிருக்கும் இந்த நேரத்தில், ஒற்றைத் தலைமை கோஷத்தை எழுப்பி தொண்டர்களின் உணர்வுகளைத் தூண்டிவிடுவதை யார் செய்தாலும் தவறுதான். எதிர்க்கட்சியாக இருக்கும் நிலையில், அ.தி.மு.க-வுக்கு இக்கட்டான இந்த நிலை ஏற்பட்டிருக்கக் கூடாது. அதனால்தான் தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும் என்று சொன்னேன். எனது பேச்சைக் கேட்டு தொண்டர்களும் அமைதியாக இருக்கிறார்கள்.”

“தொண்டர்கள் உங்கள் பக்கம் இருப்பதாகக் கூறுகிறீர்கள். அப்படியென்றால், பொதுக்குழுவில் தொண்டர்கள் ஆதரவோடு நீங்களே பொதுச் செயலாளர் ஆகிவிடலாமே?”

(அவரது டிரேட் மார்க் புன்னகையோடு) “தொண்டர்கள் எனக்கு எந்தப் பதவியைக் கொடுத்தாலும் நான் ஏற்றுக்கொள்வேன். அதுதான் நியாயமாக இருக்கும்.”

“உங்களுக்கு அந்தப் பதவிமீது ஆசை இல்லையா?”

“தொண்டர்களாகப் பதவி கொடுத்தால் அதை ஏற்று, சிறப்பாகவும் விசுவாசமாகவும் செயல்படுவேன்.”

“அரசியலுக்கு தடாலடிதானே முக்கியம்... தி.மு.க அரசை, உங்களைவிட எடப்பாடி கடுமையாக விமர்சிப்பதால் பெரும்பாலான அ.தி.மு.க-வினர் அவர் பக்கம்தான் என்று கூறப்படுகிறதே?”

“அப்படியெல்லாம் இல்லை. எனது அனுபவத்தில் அரசின் பல தவறுகளைச் சுட்டிக்காட்டியிருக்கிறேன். பிரச்னையின் முக்கியத்துவத்தைக் கருதி, ஆர்ப்பாட்டமாக, அறப் போராட்டமாகக் களத்தில் இறங்கிச் செய்திருக்கிறோம். அதன் மொத்தப் பலன்கள் எல்லாம் இறுதியில் அ.தி.மு.க என்ற கட்சிக்குத்தான் செல்லுமே தவிர, அதை எந்தத் தனிநபரும் உரிமை கொண்டாட முடியாது.”

“ஒருவேளை எடப்பாடி பழனிசாமி, தொண்டர்கள் ஆதரவோடு வெற்றிபெற்றால், அதை ஏற்றுக்கொள்வீர்களா?”

“இதில் வெற்றி தோல்வி என்பதே இல்லை. அ.தி.மு.க என்னும் மாபெரும் இயக்கத்தின் அனைத்துத் தொண்டர்களும் ஒன்றிணைந்து, இந்தப் பிரச்னையில் தீர்வுகாண வேண்டுமென்பதே எனது விருப்பம். ஒற்றைத் தலைமை என்ற விவகாரத்தில் நீயா, நானா போட்டியெல்லாம் ஒன்றும் இல்லை. அது அவசியமுமில்லை.”

“ஆனால், எடப்பாடி தரப்பினர் போட்டியாகத்தானே இதைப் பார்க்கிறார்கள்?”

(சத்தமாகச் சிரிக்கிறார்.) “மற்றவர்களின் நிலைக்கு நான் எப்படிப் பொறுப்பேற்று.... பதில் சொல்ல முடியும்?”

“உயர்மட்டக்குழுவை எதிர்த்தரப்பு ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், தர்மயுத்தம் 2.0 நடக்குமா?”

“உயர்மட்டக்குழு தேவை என்ற எனது கருத்தை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும் என்று தொண்டர்கள் எண்ணுகிறார்கள். தர்மயுத்தம் 2.0 தற்போது தேவையில்லாதது.”

“முன்பு இருந்ததைவிட தற்போது உங்கள் பக்கம் நிர்வாகிகள் குறைவாக இருக்கிறார்களே?”

“யாருக்கு ஆதரவு இருக்கிறது, இல்லை என்ற நிலையைக் கட்சிக்குள் பார்க்கக் கூடாது. அந்த எண்ணமே தவறு. யாரால் இந்த இயக்கம் வலுவாக, திடகாத்திரமாக இருந்தது என்ற வரலாற்றைத்தான் பார்க்க வேண்டும். அ.தி.மு.க-வில் எனது வரலாறு பெரியது. அதை யாரும் மறுக்க முடியாது.”

“சரி... வெளிப்படையாகவே கேட்கிறேன்... அ.தி.மு.க பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்க ஓ.பன்னீர்செல்வத்துக்குத் தகுதி இருக்கிறதா?”

(சில நொடிகள் மௌனம் காத்தவர்...) “எந்தப் பதவி கொடுத்தாலும், அதைச் சரியாகச் செய்து முடிப்பேன் என்று என்மீது புரட்சித்தலைவி அம்மாவுக்கு நம்பிக்கை இருந்திருக்கிறது. அதனால்தான், 2001-ல் முதல்வராக்கினார். அதன் பின்னர், ‘பன்னீர்செல்வம் போன்ற ஒரு தொண்டனை நான் அடைந்திருப்பது நான் செய்த பாக்கியம்’ என்று அம்மா வெளிப்படை யாகவே சொல்லியிருக்கிறார். அம்மாவோடு பயணித்த காலகட்டத்தில், என்னைக் கண்காணித்து அவர் எடை போட்டிருக்கிறார். அதனால்தான் 13 ஆண்டுகள் கழித்தும் பெங்களூரில் அம்மாவுக்கு ஏற்பட்ட சோதனைக் காலத்தில், என்னை மீண்டும் முதல்வராக்கிச் சென்றார். அம்மா மறைவுக்குப் பின்னரும் நான் தான் முதல்வரானேன். அம்மாவே அடையாளம் கண்டு என்னை அரியணை ஏற்றியிருக்கிறார்கள்... இதைவிட வேறு ஏதும் தகுதி வேண்டுமா என்ன..?”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism