Published:Updated:

ரஜினியின் புதிய கட்சி: `அரசியலில் எதுவும் நிகழலாம்; வாய்ப்பிருந்தால் கூட்டணி!’ - ஓ.பி.எஸ்

ஓ.பன்னீர்செல்வம்
ஓ.பன்னீர்செல்வம்

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை வரவேற்பதாக அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் கூறியிருக்கிறார்.

இன்று போயஸ்கார்டனிலுள்ள தனது இல்லத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த்,``ஓர் அரசியல் மாற்றம் ரொம்பக் கட்டாயம். அது காலத்தின் தேவை. அது இப்போ இல்லைன்னா... எப்பவும் கிடையாது. எல்லாத்தையும் மாத்தணும். நான் சொன்ன சொல் எப்போதும் தவறியதில்லை. நான் வெற்றி பெற்றாலும், அது மக்களின் வெற்றிதான். தோல்வியடைந்தாலும் அதுவும் மக்களின் தோல்விதான். இந்த மாற்றத்துக்கு நீங்க எல்லாரும் துணையா நிக்கணும்” என்று அரசியல் கட்சி தொடங்குவது குறித்துப் பேசினார்.

ரஜினி - பத்திரிகையாளர் சந்திப்பு
ரஜினி - பத்திரிகையாளர் சந்திப்பு

இது ரஜினி மக்கள் மன்றத்தினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழகம் முழுக்க இருக்கும் ரஜினி மக்கள் மன்றத்தினர், சாலைகளில் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கவிருப்பது குறித்து, தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கருத்து கூறிவருகின்றனர். அந்த வகையில், அ.தி.மு.க-வின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று தேனி மாவட்டத்தில் கால்நடை மருத்துவக் கல்லூரி அமையவிருக்கும் தப்புக்குண்டு பகுதியில் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.

ரஜினி
ரஜினி

அப்போது பத்திரிகையாளர்களிடம் பேசிய ஓ.பி.எஸ்.,``சிறந்த நடிகர் திரு.ரஜினிகாந்த் அவர்கள் அரசியலுக்கு வருவதை, நாங்கள் பெரிதும் வரவேற்கிறோம். அவரது வரவு நல்வரவாகட்டும்” என்றார். வரும் சட்டமன்றத் தேர்தலில், ரஜினியின் அரசியல் கட்சியுடன் அ.தி.மு.க கூட்டணி வைக்குமா என எழுப்பப்பட்ட கேள்விக்கு, ``எதிர்வரும் காலங்களில் அரசியலில் எதுவும் நிகழலாம். வாய்ப்பிருந்தால் கூட்டணி அமையும்” என்றார்.

நடிகர் ரஜினி, கட்சி தொடங்குவது குறித்துத் தொடர்ச்சியாக கருத்து தெரிவித்துவரும் அரசியல் கட்சித் தலைவர்களில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் கருத்து மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு