Published:Updated:

``அண்ணாமலையைக் கைதுசெய்ய தைரியமிருக்கிறதா?!" - திமுக-வுக்குச் சவால்விட்ட சி.வி.சண்முகம்

சி.வி.சண்முகம்
News
சி.வி.சண்முகம் ( தே.சிலம்பரசன் )

``மாரிதாஸைக் கைதுசெய்த இந்தக் காவல்துறையால், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைமீது கைவைத்து, கைது செய்துவிட முடியுமா... முடிஞ்சா கைதுசெஞ்சு பாரு!" - சி.வி.சண்முகம்.

தி.மு.க அரசைக் கண்டித்து விழுப்புரம் மாவட்டத்தில் சி.வி.சண்முகம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய சி.வி.சண்முகம், ``தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு 50,000 ரூபாய்கூடத் தர முடியாத இந்த 'விடியா மூஞ்சி திமுக அரசு', நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோது 1 கோடி ரூபாய் கொடுங்கள் என்றது. இப்போது கொடுக்கவேண்டியதுதானே... கேட்காமலேயே வாரி வழங்கிய அரசு அ.தி.மு.க அரசு. இன்று கேட்டாலும் எட்டி உதைக்கும் அரசு தி.மு.க அரசு. இந்த ஆட்சியில், அரசு அதிகாரிகள் மிரட்டப்படுகிறார்கள், தற்கொலைக்குத் தூண்டப்படுகிறார்கள்.

கண்டன ஆர்ப்பாட்ட கூட்டத்தில் சி.வி.சண்முகம்.
கண்டன ஆர்ப்பாட்ட கூட்டத்தில் சி.வி.சண்முகம்.

முன்னாள் உயரதிகாரி வெங்கடாசலம் அண்மையில் தற்கொலை செய்துகொண்டார். எங்களுக்குக் கிடைத்த தகவலின்படி, வெங்கடாசலம் தற்கொலைக்கு முன்பு வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் 10 கோடி ரூபாய் கேட்டு அவரிடம் பேசியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதை இந்த தி.மு.க அரசு மூடி மறைத்துக்கொண்டிருக்கிறது. நீங்கள் வெளியில் சொல்ல வேண்டும், இல்லையென்றால் நாங்கள் சொல்லவைப்போம். யார் அந்த அமைச்சர் என நாங்கள் வெளியில் சொல்லுவோம். அந்த அமைச்சர் பேசிய பின்னர்தான், அவர் தற்கொலை முடிவுக்கே சென்றிருக்கிறார். இதைக் காவல்துறை விசாரித்ததா?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அதேபோல, திருநெல்வேலியில் நேர்மையாகப் பணியாற்றிவந்த முக்கியப் பொறியாளர் ஒருவர் தனக்கு வந்த மிரட்டலால் தற்கொலை செய்துகொள்கிறார். அதற்குப் பொறுப்பானவர்கள் இதுவரை கைது செய்யப்பட்டிருக்கிறார்களா? எங்கள் ஆட்சியில், இதேபோல ஒஓர் அதிகாரி மிரட்டலால் தற்கொலை செய்துகொண்டதாகப் புகார் எழுந்தவுடனே சம்பந்தப்பட்ட அமைச்சரை அம்மா அவர்கள் பதவி நீக்கம் செய்தார்கள். அந்த அமைச்சர் நிரபராதி எனத் தீர்ப்பு வந்த பின்னர்தான் இணைத்தோம். உங்களுக்கு ஏன் தைரியமில்லை? எல்லாம் வெற்றுப் பேச்சுதான், செயலில் ஏதுமில்லை.

இந்த திமுக அரசு ஒரு பூஜ்ஜிய அரசு. இங்கு 'யார் அந்த மோடி?' என்று பேசுவார்கள்... அங்கு, 'ஐயா மோடி' என்பார்கள். டெல்லியிலே தி.மு.க எம்.பி-க்கள் பிச்சை எடுக்கிறார்கள். ஒவ்வொரு மத்திய அமைச்சர் வீட்டிலும் திருவோடு வைத்துக்கொண்டு திரிகிறார்கள். ஆனால், இங்கு வந்து வீராவேசம் பேசுறாங்க. உங்களுக்கு தைரியம் இருந்தால் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையைக் கைது செய்து பாரு.
அதிமுக கண்டன ஆர்பாட்ட கூட்டம் - விழுப்புரம்
அதிமுக கண்டன ஆர்பாட்ட கூட்டம் - விழுப்புரம்

நாங்கள் கேட்கிறோம்... மாரிதாஸ், அரசின்மீது அவதூறு பரப்புகிறார் என்று சொல்லி அவரைக் கைது செய்வதில் உங்களுக்கு இருக்கும் தைரியம், இன்றைக்கு தமிழக பா.ஜ.க தலைவராக இருக்கும் அண்ணாமலை, டி.ஜி.பி சைலேந்திரபாபுவைப் பார்த்து, `உனக்கு கொடுக்கப்பட்டிருக்கிற பணி என்ன? கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்றவற்றை தடுப்பது, சட்ட ஒழுங்கைக் காப்பாற்றுவது. இதைச் செய்வதற்குதான் இந்தப் பணி உனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. 120 கி.மீ சைக்கிள் ஓட்டுவதற்கு இல்லை" என்று நாக்கைப் பிடுங்குவதுபோல் கேட்கிறார்.

உனக்கு தைரியம் இருந்தால்... அண்ணாமலை மீது கைவெச்சு பாரு. முடியுமா... முடியுமா..?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஏனெனில், அவரும் ஒரு முன்னாள் காவல் அதிகாரி. காவலருக்கான பணி என்னவென்று அவருக்கு நன்றாகத் தெரியும். சைக்கிள் ஓட்டுவதுதான் வேலையா? இந்த ஆட்சியிலே சட்டம், ஒழுங்கு சரியில்லாமல் இருக்கிறது. இந்த ஆட்சியிலே, புடவை மட்டும்தான் கண்ணுக்குத் தெரியும், வயசெல்லாம் தெரியாது. வீட்டில் பெண்களை, குழந்தைகளைப் பாதுகாப்பின்றி தனியாக விட்டு விட்டுச் செல்லாதீர்கள். உங்கள் அனைவரையும் பாதம் தொட்டுக் கேட்டுக்கொள்கிறேன். இந்த தி.மு.க அரசில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. இந்த ஆட்சியில் ஒண்ணும் நடக்கவில்லை.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

விழுப்புரத்தில் ஒரு அமைச்சர் வீட்டிலேயே இருக்கிறார், ஒரு அமைச்சர் அடிக்கடி டீ, பரோட்டா போடுகிறார். டீ, பரோட்டா போடவா மந்திரி ஆக்கினார்கள்... இதே நிலைமைதான் தமிழ்நாட்டில். அமைச்சர்கள் செயல்பட யாருக்கும் அனுமதி இல்லை. பேருக்கு மட்டுமே அமைச்சர்கள் உள்ளனர். ஒரேயோர் அமைச்சருக்கு மட்டும் வேலை உண்டு. அது யாரென்றால் எ.வ.வேலு. திமுக அரசின் வசூல்ராஜா அவர்தான். ஒருகாலத்தில் கண்டக்டராக இருந்து வசூல் செய்தவர், இப்போது தமிழ்நாட்டின் கண்டக்டராக இருந்து வசூல் செய்கிறார்" என்றார் காட்டமாக.

இந்த நிலையில், அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாகக் கூறி அ.தி.மு.க-வினர் 1,800 பேர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள் விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீஸார் .