Published:Updated:

சசிகலாவுக்கு எதிராக அதிமுக மாவட்டச் செயலாளர்கள் தீர்மானம்! - கடுகடுத்த ஓ.பி.எஸ்... பின்னணி என்ன?

சசிகலா - ஓ.பி.எஸ் - இ.பி.எஸ்
சசிகலா - ஓ.பி.எஸ் - இ.பி.எஸ்

தற்போது, அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் சசிகலாவுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றி, தலைமைக் கழகத்துக்கு அனுப்பிவருகின்றனர்.

சசிகலாவுக்கு எதிராக தமிழகம் முழுவதும் அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் தீர்மானங்களை நிறைவேற்றிவருவது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இந்தத் தீர்மான விவகாரம் குறித்து அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எந்தவிதத் தகவலும் தெரிவிக்கபடாததால், அவர் கடும் அதிருப்தியில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேர்தல் நேரத்தில் அரசியலிலிருந்து ஒதுங்கிக்கொள்ளப்போவதாக அறிவித்த சசிகலா, கடந்த சில நாள்களாக ஆடியோக்கள் மூலம் அ.தி.மு.க-வை அசைத்துப் பார்த்துவந்தார். இந்தநிலையில், கடந்த 14-ம் தேதி சென்னை ராயப்பேட்டையிலுள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில், சசிகலாவுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், சசிகலாவுடன் தொலைபேசியில் உரையாடியதாகக் கட்சியிலிருந்து 15 பேரை அதிரடியாக நீக்கம் செய்தனர். அதைத் தொடர்ந்து தற்போது, அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் சசிகலாவுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றி தலைமைக் கழகத்துக்கு அனுப்பிவருகின்றனர்.

ஓ.பி.எஸ் - இ.பி.எஸ்
ஓ.பி.எஸ் - இ.பி.எஸ்

சேலம் மாவட்டத்தில் நடந்த அ.தி.மு.க மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமிக்கு முன்பாக சசிகலாவுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேபோல, விழுப்புரம் மாவட்டத்தில் முன்னாள் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் நடந்த கூட்டத்தில், ''சசிகலாவுக்கு அ.தி.மு.க-வின் அடிப்படை உறுப்பினர் ஆகும் தகுதிகூட இல்லை'' என மிகக் கடுமையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேபோல, மதுரை புறநகர் மேற்கு மாவட்டத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் சசிகலாவுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுவரை இருபதுக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், ஃபேக்ஸ் வாயிலாக மாநிலத் தலைமை அலுவலகத்துக்கு வந்து சேர்ந்திருக்கின்றன. இந்தத் தீர்மானங்களுக்குப் பின்னாலுள்ள விவகாரங்கள் குறித்து அ.தி.மு.க முன்னணி நிர்வாகி நம்மிடம் பேசியபோது,

அதிமுக: சட்டமன்றத் துணைத் தலைவர் ஓ.பி.எஸ்., கொறடா வேலுமணி!-எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் நடந்தது என்ன?

''ஒவ்வொரு மாவட்டச் செயலாளரும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று எடப்பாடியிடமிருந்ததுதான் உத்தரவு வந்தது. அவர் சார்பாக, அவருக்கு நெருக்கமான முன்னாள் அமைச்சர்கள் பேசினார்கள். தீர்மானத்தில் என்னென்ன விஷயங்கள் இடம்பெற வேண்டும் என்பது குறித்தும் தகவல்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. அதில், 'ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் ஆகிய இருவரும் கழகத்தை மிகச் சிறப்பாக வழிநடத்திவருகிறார்கள். அவர்கள் இருவரின் தலைமையே தொடர வேண்டும். அவர்கள் இருவரின் மீதும் எங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. நாங்கள் ஒற்றுமையாகச் செயல்பட்டுவருகிறோம். அதனால்தான், கடந்த தேர்தலில், 1.54 கோடி வாக்குகளை மக்கள் நமக்கு அளித்தார்கள். பத்தாண்டுகள் ஆட்சியில் இருந்த கட்சி, மூன்றாவது முறையாக இவ்வளவு வாக்குகளையும், இவ்வளவு தொகுதிகளில் வெற்றியும் பெற்றது கிடையாது. சசிகலா என்கிற பெண்மணி அதிமுக-வைக் கைப்பற்றத் துடிக்கிறார். அவர் மக்கள் வரிப்பணத்தைக் கொள்ளையடித்த குற்ற வழக்கில் சிறைக்குச் சென்றவர். அம்மாவுக்குத் துரோகம் செய்தவர். அவரை நாங்கள் ஒருநாளும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

ஓ.பி.எஸ்
ஓ.பி.எஸ்

சசிகலாவுக்கு அதிமுக என்கிற பெயரைச் சொல்வதற்கோ. அதிமுக-வின் அடிப்படை உறுப்பினர் ஆவதற்கோ எந்தத் தகுதியும் கிடையாது' என்பதே சசிகலா குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள். கடைசியாக, ஒப்புக்காகக் கடந்த வாரம் தேர்வு செய்யப்பட்ட சட்டமன்ற நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் தீர்மானமும் இடம்பெற்றிருக்கிறது. ஆனால், இந்தத் தீர்மான விஷயங்கள் குறித்து, கட்சியின் ஒருங்கிணைப்பாளர், ஓபிஎஸ்-ஸுக்கு எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

நேற்று காலையில்தான் அவருக்கு விஷயம் தெரியவந்தது. உடனடியாக எடப்பாடி பழனிசாமிக்கு தொலைபேசியில் அழைத்து வெடித்துவிட்டார். `சசிகலாவுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றுவது குறித்து ஏன் என்னிடம் கலந்தாலோசிக்கவில்லை. நான் கட்சிக்கு ஒருங்கிணைப்பாளர் என்பதையே மறந்துவிட்டீர்களா? இதனால் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் அது கட்சியைத்தானே பாதிக்கும்’ எனப் பொரிந்து தள்ளிவிட்டார். தொடர்ந்து ஏதாவது பேசினால் எங்கே சசிகலாவை ஆதரித்துப் பேசுவதுபோல் ஆகிவிடும் என்பதால் தற்போது அமைதியாக விட்டுவிட்டார்'' என்கிறார் அவர்.

அடுத்த கட்டுரைக்கு