அரசியல்
அலசல்
Published:Updated:

போட்டி அ.தி.மு.க... எதிர்ப்பரசியல்... வரிந்துகட்டும் கழகங்கள்!

ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி

எடப்பாடியின் பதற்றம் ஒருபுறமிருக்க, முதல்வரின் பொருளாதார ஆலோசகர்கள் சமீபத்தில் ஓர் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியிருக்கிறார்கள்

கடந்த ஒரு வாரமாக தமிழகத்தை தகிக்கவைக்கும் விவகாரங்கள் ஏராளம். கொரோனா இறப்பு குறைத்துக் காட்டப்படுவது, மேக்கேதாட்டு அணைப் பிரச்னை என ஒவ்வொரு நாளும் புதுப்புது அஸ்திரங்கள் தி.மு.க-வுக்கு எதிராக எய்யப்படுகின்றன. இவற்றில் பிரதானமான பிரம்மாஸ்திரம் ‘கொங்கு நாடு’ என்கிற அஸ்திரம்தான். இது தி.மு.க-வை மட்டுமல்ல, கொங்கு மண்டலத்தில் தனக்கென தனிச் செல்வாக்கைக் கட்டமைத்துக் கொண்டிருக்கும் அ.தி.மு.க-வின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் நெருக்கடியை உருவாக்கியுள்ளது. கொங்கு அரசியலைக் கையிலெடுத்து, அ.தி.மு.க-வின் அடிமடியிலேயே கையை வைத்திருக்கிறது பா.ஜ.க. ‘தி.மு.க எதிர்ப்பரசியலைத் தக்கவைத்துக்கொள்ள வில்லையென்றால், காலச்சுழலில் காணாமல் போய்விடுவோம்’ என்கிற பதைபதைப்பில் இருக்கிறார் எடப்பாடி.

எடப்பாடியின் பதற்றம் ஒருபுறமிருக்க, முதல்வரின் பொருளாதார ஆலோசகர்கள் சமீபத்தில் ஓர் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியிருக்கிறார்கள். அதில், ‘திராவிட மாடல் வளர்ச்சி’ குறித்து தீவிரமாக விவாதிக்கப் பட்டிருக்கிறது. தமிழகத்தில் தி.மு.க ஆட்சியைப் பிடித்த பிறகு, மாநில சுயாட்சி குறித்தான கருத்துகள் அகில இந்திய அளவில் பேசுபொருளாகியிருப்பதால், திராவிட பாணி அரசியல் தங்களுக்கு எதிர்காலத்தில் சிக்கலை ஏற்படுத்தும் என்று பா.ஜ.க-விடம் அச்சம் நிலவுகிறதாம். தவிர, ‘அ.தி.மு.க-வை ஓரங்கட்டிவிட்டு தி.மு.க-வுக்கு நேர் எதிரியாக தான் நிலைபெறாதவரை, மாநிலத்தில் கட்சிக்கு வளர்ச்சியில்லை’ என்பதிலும் தெளிவாக இருக்கிறதாம் பா.ஜ.க. இதையெல்லாம் கணக்கிட்டுத்தான், தி.மு.க எதிர்ப்பரசியலை அ.தி.மு.க-வும் பா.ஜ.க-வும் போட்டி போட்டுக்கொண்டு கையில் எடுப்பதாகச் சொல்கிறது விவரமறிந்த வட்டாரம். இந்தக் கணக்கை முறியடிக்கும்விதமாக, ‘ஆபரேஷன் 25’-ஐ முன்னிறுத்துகிறது தி.மு.க. ‘உண்மையில் யாருக்கு யார் எதிரி?’ என்கிற கேள்வியோடு களமிறங்கியிருக்கின்றன கழகங்கள் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

போட்டி அ.தி.மு.க... எதிர்ப்பரசியல்... வரிந்துகட்டும் கழகங்கள்!

உண்ட வீட்டுக்கு துரோகம்!

கடந்த ஐம்பதாண்டுகளாக, தமிழக அரசியல் களம் தி.மு.க - அ.தி.மு.க என்கிற இரண்டு துருவங்களை மையமாக வைத்தே சுற்றிவருகிறது. இதைக் கலைத்து, தானே மையமாக மாற காய்நகர்த்துகிறது பா.ஜ.க. இந்த ஆபரேஷனுக்கு மையப்புள்ளியே ‘கொங்கு நாடு.’ இந்த மூவ், தி.மு.க பலவீனமாக இருக்கும் அந்தப் பகுதியில் அந்தக் கட்சியை மேலும் பலவீனப்படுத்துவதோடு, அ.தி.மு.க-வின் வாக்குவங்கியையும் வெகுவாக பதம்பார்க்கும் என்பதால், ஸ்டாலினைவிடக் கூடுதல் ஆத்திரத்தில் இருக்கிறார் எடப்பாடி.

“உண்ட வீட்டுக்கே உலை வைக்கும் வேலையில் பா.ஜ.க இறங்கியிருப்பதை எடப்பாடி ரசிக்கவில்லை” என்று கோபத்துடன் நம்மிடம் பேசினார் அ.தி.மு.க தலைமை நிர்வாகி ஒருவர். “தி.மு.க எதிர்ப்பு என்பது, அ.தி.மு.க தொண்டர்களின் ரத்தத்தில் ஊறிப்போன விஷயம். தி.மு.க-விலிருந்து பிரிந்து அ.தி.மு.க என்கிற இயக்கத்தை எம்.ஜி.ஆர் உருவாக்கிய நிமிடத்திலிருந்து இந்த உணர்வுடன்தான் ஒவ்வோர் அ.தி.மு.க தொண்டனும் வளர்ந்தான். தி.மு.க-வை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தனிப்பட்ட முறையில் தாக்கி, இந்த தி.மு.க எதிர்ப்பு உணர்வு அணையாமல் பார்த்துக்கொண்டார் ஜெயலலிதா. இதுதான் அ.தி.மு.க-வின் அடிநாதம். ‘தி.மு.க எதிர்ப்பு வாக்குவங்கி’யை அ.தி.மு.க உருவாக்கி வைத்திருக்கிறது. அதிலேயே பா.ஜ.க கைவைக்கப் பார்ப்பது எடப்பாடியைக் கொந்தளிக்க வைத்திருக்கிறது” என்றார்.

போட்டி அ.தி.மு.க... எதிர்ப்பரசியல்... வரிந்துகட்டும் கழகங்கள்!

``எதிர்ப்பரசியலைக் கையில் எடுங்க!’’ - உருமிய எடப்பாடி

ஜெயலலிதா எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோதெல்லாம், ஒவ்வொரு வாரமும் தி.மு.க-வுக்கு எதிராக ஏதாவது ஒரு போராட்டத்தை அறிவித்துக் கொண்டேயிருப்பார். அதே யுக்தியை இனி எதிர்காலத்தில் அ.தி.மு.க தலைமை கையிலெடுக்கவிருக்கிறது. ஜூலை 9-ம் தேதி நடைபெற்ற அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திலும், ‘தி.மு.க எதிர்ப்பு அரசியலைக் கையில் எடுக்கவில்லையென்றால், காணாமல் போய்விடுவோம்’ என்று எச்சரித்திருந்தார் எடப்பாடி. இதையொட்டித்தான், ‘குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் தருவதாக வாக்குறுதியளித்த 1,000 ரூபாய் நிதியுதவியை தி.மு.க அளிக்காவிட்டால் மாபெரும் போராட்டம் நடத்தப்படும்’ என்கிற தீர்மானம் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் பேசப்பட்டவற்றை துணை ஒருங்கிணைப்பாளர் ஒருவர் நம்மிடம் விவரித்தார். ‘‘கூட்டத்தில் அன்வர் ராஜா பா.ஜ.க-வுக்கு எதிராகப் பேசினார். ‘தேர்தலுக்கு முன்பாகவே நான் பா.ஜ.க-வுடன் கூட்டணி வேண்டாம் என்று சொன்னேன், யாரும் கேட்கவில்லை. அதனால்தான் சிறுபான்மையினர் வாக்குகள், பட்டியலின வாக்குகள் நம்மைவிட்டுப் போய்விட்டன’ என்றார். அதன் பிறகு வேறு யாரும் பா.ஜ.க-வுக்கு எதிராகப் பேசக் கூடாது என்று சொல்லிவிட்டார்கள்.

ஆனால், தனி ஆலோசனைக் கூட்டத்தில் பா.ஜ.க பற்றியே பேச்சு இருந்தது. ‘புதுச்சேரியில் கடந்த முறை நமக்கு நான்கு எம்.எல்.ஏ-க்கள் இருந்தார்கள். பா.ஜ.க நியமன எம்.எல்.ஏ-க்களை அனுப்பியே சட்டமன்றத்துக்குள் நுழைய முடிந்தது. இந்தத் தேர்தலில் நமக்கு நான்கு இடங்களை மட்டுமே ஒதுக்கினார்கள். நான்கிலும் தோற்றோம். இப்போது பா.ஜ.க அங்கே ஆறு எம்.எல்.ஏ-க்களுடன் கூட்டணி ஆட்சியில் இடம்பிடித்துவிட்டது. நியமன எம்.எல்.ஏ-க்களிலும் நமக்கு எதுவும் தரவில்லை. சட்டமன்றத்தில் அ.தி.மு.க இல்லாமலேயே போய்விட்டது.

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி கோகுலகிருஷ்ணன் நம் கட்சிதான். இந்த அக்டோபரில் அவர் பதவிக்காலம் முடிந்ததும், அந்தப் பதவியை பா.ஜ.க எடுத்துக்கொள்ளும். நாம் மொத்தமாக புதுச்சேரியில் அடையாளமே இல்லாமல் போய்விடுவோம். அங்கே நம்மைத் துடைத்துப் போட்டதுபோல தமிழகத்திலும் செய்வதற்கு பா.ஜ.க நினைக்கிறது. எல்.முருகனை அமைச்சர் ஆக்கியது, கொங்கு நாடு சர்ச்சை எல்லாமே இதன் ஓர் அங்கம்தான். இதற்கு நாம் அனுமதிக்கக் கூடாது’ எனத் துணை ஒருங்கிணைப்பாளர் ஒருவர் ஆவேசமாக எடப்பாடியிடம் சொன்னார். ‘தி.மு.க எதிர்ப்பரசியலைத் தீவிரமாக எடுத்து மட்டுமே பா.ஜ.க-வை முறியடிக்க முடியும். அதைச் செய்வோம்’ என்ற எடப்பாடி, முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணியிடம், ‘தி.மு.க-வைப் பார்த்து ஏன் இவ்வளவு பயப்படுறீங்க... வழக்கு போட்டுடுவாங்கன்னு பயமா? தைரியமா இறங்கி அவங்களை எதிர்த்து பேசினாத்தான் மக்கள் நம்மை மதிப்பாங்க’ என்றார்” என்று முடித்தார் அந்தத் துணை ஒருங்கிணைப்பாளர்.

கொங்கு நாடு விஷமத்தனமானது!

``இதையொட்டியே ஜூலை 12-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கே.பி.முனுசாமி, ‘கொங்கு நாடு என்ற சிந்தனை விஷமத்தனமானது. சென்னை முதல் கன்னியாகுமரி வரை தமிழர்கள் என்ற உணர்வுடன் அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்துவருகின்றனர். அதனால், கொங்கு நாடு என்ற பிரிவினை விதையை விதைக்க வேண்டாம்’ என்றிருக்கிறார். இதே கருத்து இனி அ.தி.மு.க-வினர் எங்கேயெல்லாம் பேசுகிறார்களோ, அங்கேயெல்லாம் ஒலிக்க வேண்டும் என்பதுதான் எடப்பாடியின் உத்தரவு. எங்களை ஒழித்துவிட்டு, தி.மு.க எதிர்ப்பரசியலை பா.ஜ.க கையில் எடுக்கப்பார்க்கிறது. எங்கள் வாக்குவங்கி பலமாக இருக்கும் 61 தொகுதிகள்கொண்ட கொங்குப் பகுதிக்குள் கலகம் மூட்டப் பார்க்கிறார்கள். இதையெல்லாம் சகித்துக்கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. நாசுக்காக, பா.ஜ.க-வைக் கழற்றிவிடவும் எங்களுக்குத் தெரியும்” என்றார் அமைப்புச் செயலாளர் ஒருவர்.

அ.தி.மு.க-வின் எதிர்ப்பரசியல் வியூகம் ஒருபக்கம் இருக்க, ‘முதலில் அ.தி.மு.க-வின் வேகத்துக்குத் தடைபோட்டுவிட்டால், பா.ஜ.க-வின் வளர்ச்சியைப் பிறகு பார்த்துக்கொள்ளலாம்’ என்கிற திட்டத்தில் தி.மு.க இருக்கிறது என்கிறார்கள். வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் கொங்கு மண்டலத்துக்குச் சில அறிவிப்புகளை வெளியிடவிருக்கிறார்களாம். குறிப்பாக கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டம் அறிவிப்போடு, வேறு சில அறிவிப்புகளும் வெளிவரவிருப்பதாக அதிகாரிகள் வட்டத்தில் பேசப்படுகிறது. மாநிலங்களவையில் கொங்கு மண்டலத்துக்கு ஒரு இடம் தரவும் அறிவாலயம் தயாராகிறதாம். உதயநிதியைக் கொங்குமண்டலப் பொறுப்பாளராக நியமித்தால், அமைச்சர்கள் கவனம் அந்தப் பகுதியில் அதிகமாக இருக்கும் என ஸ்டாலின் திட்டமிடுவதாகக் கூறப்படுகிறது. இந்தத் திட்டமிடல்களுக்கு நடுவே, தி.மு.க-வின் ‘ஆபரேஷன் 25’ குறித்தும் பரபரக்கிறார்கள் உடன்பிறப்புகள்.

‘ஆபரேஷன் 25’ போட்டி அ.தி.மு.க!

2011 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட தே.மு.தி.க., 29 எம்.எல்.ஏ-க்களுடன் பிரதான எதிர்க்கட்சியாக சட்டமன்றத்தில் அமர்ந்தது. அதிகாரம் கிடைத்தவுடன் இரு கட்சிகளுக்குமான உறவு கசக்க ஆரம்பித்தது. இருதரப்பும் வார்த்தைகளால் மோதிக்கொண்டன. ஒருகட்டத்தில், சட்டமன்றத்திலேயே முதல்வர் ஜெயலலிதா முன்னால் நாக்கை மடக்கி ஆக்ரோஷத்தை வெளிக்காட்டினார் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த். அதன் விளைவாக, 29 எம்.எல்.ஏ-க்களில் மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்ட 10 பேரைத் தனியாகத் தூக்கி போட்டி தே.மு.தி.க-வை உருவாக்கினார் ஜெயலலிதா. ஐந்தாண்டுகள் கழித்து அவர்கள் அ.தி.மு.க-வில் தங்களை இணைத்துக்கொண்டனர். அதே ஃபார்முலாவைத்தான் அ.தி.மு.க மீது தி.மு.க அப்ளை செய்யப்போவதாகச் சொல்கிறார்கள் கட்சியின் மூத்த நிர்வாகிகள்.

நம்மிடம் பேசிய தி.மு.க தென்மாவட்ட அமைச்சர் ஒருவர், “தி.மு.க-வை மூர்க்கத்தனமாக எதிர்ப்பதன் மூலம், தன் வழக்கமான தி.மு.க எதிர்ப்பு அரசியலுக்கு உயிரூட்ட பார்க்கிறது அ.தி.மு.க. சட்டமன்றத்தில் 66 எம்.எல்.ஏ-க்கள் இருப்பதால், தி.மு.க-வின் திட்டங்களுக்கு எதிராகக் கோஷமிடவும், வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று குடைச்சல் கொடுக்கவும் திட்டமிட்டிருக்கிறார்கள். அ.தி.மு.க-வின் அட்டாக்கை அடக்க வேண்டுமென்றால் ஒன்று, முன்னாள் அமைச்சர்கள் மீதுள்ள ஊழல் புகார்களைத் தீவிரமாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான வேலைகள் துரிதமாகியிருக்கின்றன. மற்றொன்று, அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும். அந்தக் கட்சியின் எம்.எல்.ஏ-க்கள் 25 பேரை வளைப்பதற்கான வேலைகள் ஆரம்பித்துவிட்டன. அமைச்சர் செந்தில் பாலாஜியிடம்தான் இந்த ஆபரேஷன் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. மூன்றில் ஒரு பங்கு எம்.எல்.ஏ-க்கள் சட்டமன்றத்தில் பிரிந்து செயல்பட்டால், கட்சித் தாவல் தடைச் சட்டம் பாயாது. அதற்காகத்தான் 25 பேருக்குக் குறிவைக்கப்பட்டிருக்கிறது.

போட்டி அ.தி.மு.க... எதிர்ப்பரசியல்... வரிந்துகட்டும் கழகங்கள்!

லிஸ்ட்டில் யார் யார்?

பா.ம.க தலைவர் ஒருவரின் ஊரைச் சேர்ந்தவர், தென்மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், பிரியாணிக்குப் பெயர்பெற்ற ஊரைச் சேர்ந்தவர், பால்கோவாவுக்குப் புகழ்பெற்ற நகரத்தைச் சேர்ந்தவர், முன்னாள் முதல்வரின் மாவட்டத்தைச் சேர்ந்த சிலர், வறட்சியான மாவட்டத்தைச் சேர்ந்த பெருமாள் பெயர் கொண்டவரும் குமாரரானவரும், கொங்கு மண்டலத்தில் கம்யூனிஸ்ட்டுகளுடன் போட்டியிட்டு வென்றவர், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த இருவர், அ.ம.மு.க பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்திய தொகுதிக்குச் சொந்தக்காரர் எனப் பல எம்.எல்.ஏ-க்களிடமும் செந்தில் பாலாஜி பேசிவருகிறார். அந்த எம்.எல்.ஏ-க்களிடமிருந்து பாசிட்டிவான சிக்னலே கிடைத்திருக்கின்றன. எங்களுக்குக் குடைச்சல் கொடுக்கத் திட்டமிடும் அ.தி.மு.க தூக்கமில்லா இரவுகளைச் சந்திக்கப் போகிறது” என்றார் வெடித்த சிரிப்புடன்.

அ.தி.மு.க-வில் தற்போது எம்.எல்.ஏ-க்களாக ஆகியிருக்கும் சிலருக்கு, மீண்டும் சீட் கிடைக்குமா என்பது சந்தேகம். ஒருபக்கம் இரட்டைத் தலைமை, அவர்களுக்குள் மோதல், இன்னொரு பக்கம் சசிகலா, மற்றொரு பக்கம் பா.ஜ.க எனப் பிரச்னைகள் சுற்றிச் சுழல்வதால், ‘கட்சியின் எதிர்காலம் என்னவாகும்?’ என்கிற குழப்பத்தில் இருக்கிறதாம் அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் முகாம். தவிர, வரக்கூடிய உள்ளாட்சித் தேர்தல் செலவுகளை அந்தந்தத் தொகுதி எம்.எல்.ஏ-க்களும், மாவட்டச் செயலாளர்களும் தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என அ.தி.மு.க தலைமை அறிவுறுத்தியிருக்கிறதாம். ‘சம்பாதித்தது சில அமைச்சர்கள்தானே... அவர்களின் பர்ஸைத் திறக்கச் சொல்லுங்கள்’ என்று சில மாவட்டச் செயலாளர்கள் சொல்லிப் பார்த்தும் தலைமை கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. கட்சிக்குள் நிலவும் இந்தக் குழப்பத்தில்தான் தி.மு.க மீன்பிடிக்கப் பார்க்கிறது. தி.மு.க-வுக்கு ஆதரவாக போட்டி அ.தி.மு.க-வில் இடம்பெற்றுவிட்டால், ஐந்தாண்டுகளுக்கு டெண்டர், அரசின் உதவி, சிபாரிசுகளை நிறைவேற்றிக்கொள்ளலாம் என்று வலைவிரிக்கப்பட்டிருக்கிறதாம். கட்சியின் சீனியர்களுக்கு இந்த ஆபரேஷனில் உடன்பாடு இல்லையென்றாலும், உதயநிதி, சபரீசன் இருவரும் கிரீன் சிக்னல் காட்டியிருப்பதால், செந்தில் பாலாஜி தீவிரமாகக் களமிறங்கிவிட்டார் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

ஒருபக்கம், ‘கொங்கு நாடு’ கோஷத்தை எழுப்பி, தி.மு.க-வுக்கு எதிரான அரசியலைக் கையில் எடுக்கிறது பா.ஜ.க.

தன்னிடமுள்ள அந்த லகான் பா.ஜ.க பக்கம் சென்றுவிடாதபடி தடுக்க, ‘வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றால் போராட்டம்’ என்கிற தன் பாணி எதிர்ப்பரசியலுக்கு அடித்தளம் போடுகிறது அ.தி.மு.க.

அ.தி.மு.க-வுக்கு செக் வைத்துக்கொண்டே, பா.ஜ.க-வையும் எதிர்கொள்ளத் தயாராகிறது தி.மு.க. இந்த முக்கோண யுத்தத்தில் யார் வெற்றிபெறப் போகிறார்கள் என்பது வரும் காலங்களில் தெரிந்துவிடும்!