Published:Updated:

`ரவீந்திரநாத் பேசியது அவரது சொந்தக் கருத்து’ - நாடாளுமன்றத்தில் வெடித்த இரட்டை நிலைப்பாடு!

கலிலுல்லா.ச

மக்களவையில் முத்தலாக் தடைச்சட்டத்தை ஆதரித்தும் மாநிலங்களவையில் எதிர்த்தும் இரண்டு நிலைபாடு எடுத்துள்ளது அ.தி.மு.க.

அ.தி.மு.க தலைமை அலுவலகம்
அ.தி.மு.க தலைமை அலுவலகம்

ஆகஸ்ட் மாதம் 7-ம் தேதி வரை நாடாளுமன்ற கூட்டத்தொடர் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி பல்வேறு மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றபட்டு வருகிறது. அந்தவகையில் முத்தலாக் தடை சட்ட மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு முனைப்புக் காட்டியது. கடந்த முறை இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டபோது, அ.தி.மு.க எம்.பி அன்வர் ராஜா எதிர்ப்பு தெரிவித்தார். `இந்த மசோதாவை அ.தி.மு.க ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது’ என்று கூறி விவாதித்தார். இது தொடர்பாக அவர் நாடாளுமன்றத்தில் பேசிய உரை புத்தகமாக வெளியிடப்பட்டது.

ரவீந்திரநாத்
ரவீந்திரநாத்

இதையடுத்து கடந்த 27-ம் தேதி மீண்டும் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. `முத்தலாக் தடைச் சட்டத்துக்கு எதிர்ப்பு’ என்று கூறிவந்த அ.தி.மு.க மாற்று நிலைபாட்டை எடுத்தது. தேனியிலிருந்து மக்களவை உறுப்பினராக தேர்வான ஓ.பி.ரவீந்திரநாத்குமார் இந்த மசோதாவை ஆதரிப்பதாகக் கூறி பேசினார். ``இந்த மசோதா மூலம் பெண்களுக்கு சமூகத்தில் சம உரிமைகளையும், நல் வாய்ப்புகளையும் ஈட்டித்தரும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் கூறியுள்ள பாலின சமத்துவத்துக்கு, இந்த முத்தலாக் சட்ட திருத்த மசோதா மேலும் வலு சேர்க்கிறது. சமூகச் சடங்குகளை பெண்கள் மீது திணிக்காமல், சம உரிமைகளை வழங்கிடும் முத்தலாக் சட்ட திருத்த மசோதாவுக்கு ஆதரவளிக்கிறோம்” என்றார்.

வேலூர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ரவீந்திரநாத்தின் இத்தகைய செயல்பாடு கட்சித்தலைமையை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. `கட்சித்தலைமையிடம் ஆலோசிக்கவில்லை’ என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. இது தொடர்பான விவாதங்கள் நீண்டுகொண்டிருக்க... இன்று மீண்டும் மாநிலங்களவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அப்போது பேசிய அ.தி.மு.க எம்.பி நவநீதகிருஷ்ணன் மசோதாவை எதிர்த்துப் பேசினார். ``மத்திய அரசு கொண்டுவரவிருக்கும் முத்தலாக் தடைச்சட்ட மசோதாவில் உள்ள சில பிரிவுகள் ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் உள்ளது. தவறான விளைவுகளை முத்தலாக் மசோதா ஏற்படுத்திவிடக் கூடாது.

நவநீதகிருஷ்ணன்
நவநீதகிருஷ்ணன்

நாடாளுமன்ற சிறப்புக்குழுவுக்கு இதை அனுப்பவேண்டும்” என்று கூறினார். இதே கோரிக்கையை எஸ்.ஆர்.பாலசுப்ரமணியனும் முன்வைத்தார். முத்தலாக் தடைச்சட்டத்தில் மக்களவையில் ஒரு நிலைப்பாட்டையும், மாநிலங்களவையில் ஒரு நிலைபாட்டையும் அ.தி.மு.க கடைப்பிடிப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாகப் பேசிய அன்வர் ராஜா, ``ரவீந்திரநாத்குமாருக்கு டங் சிலிப் ஆகிவிட்டது. இப்போது கேட்டுப்பாருங்கள் சரியாக பதில் சொல்வார்” என்று பேசினார்.

Vikatan

உண்மையில் அ.தி.மு.கவின் நிலைபாடு என்ன என்பதை அறிய அமைச்சர் ஜெயக்குமாரை தொடர்பு கொண்டு பேசினோம். ``இந்த சட்டத்தில் உள்ள தண்டனை மற்றும் ஜீவனாம்சம் வழங்குவது தொடர்பான விஷயங்களை ஆராய்ந்து சரத்துகளை மாற்றவேண்டும் என்று டிசம்பர் 2017-ம் ஆண்டு மத்திய அரசுக்குக் கடிதம் எழுதினோம்.

ஜெயக்குமார்
ஜெயக்குமார்

அதே நிலைபாடுதான் எங்களுக்கு எப்போதும். நாடாளுமன்ற மேலவையில் ஆய்வுக்குழுவுக்கு சட்டத்தை அனுப்பவேண்டும் என்று கூறியாகிவிட்டது. மக்களவையில் ரவீந்திரநாத் அவருடைய கருத்தாகத்தான் அதைக் கூறியுள்ளார். நாடாளுமன்ற மேலவையில் கட்சியின் கருத்து எதிரொலிக்கும் என்று நான் ஏற்கெனவே கூறியிருந்தேன். அதேபோல தற்போது எங்கள் `எதிர்ப்பு’ நிலைபாடு எதிரொலித்துள்ளது. ரவீந்திரநாத் கூறியிருப்பது அவருடைய கருத்து தான்” என்று முடித்தார்.