
அண்ணாமலை இன்றும் என்னிடம் நன்றாகத்தான் பேசிக்கொண்டிருக்கிறார். அரசியலுக்கு அப்பாற்பட்டு எல்லாரும் நண்பர்கள்தான்
தி.மு.க., ம.தி.மு.க., மீண்டும் தி.மு.க., பா.ஜ.க என்று பல கட்சி தாவிய டாக்டர் சரவணன், இப்போது அ.தி.மு.க-வில் ஒதுங்கியிருக்கிறார். ‘வேட்டி’கூட மாற்றாமல், பழனிசாமி வீட்டுக்கே போய் கட்சியில் சேர்ந்தவரை பேட்டிக்காகச் சந்தித்தேன். மதுரை திரும்புவதற்காக காரில் விமான நிலையத்துக்குக் கிளம்பியவர், நம்மையும் காரில் ஏற்றிக்கொண்டு நமது கேள்விகளுக்கு பதிலளித்தார்.
“பா.ஜ.க-விலிருந்து விலகியதும், ‘தி.மு.க எனது தாய் வீடு... திரும்பிப் போக எனக்கென்ன தயக்கம்?’ என்று சொன்னீர்கள். திடீரென அ.தி.மு.க-வில் இணைந்துவிட்டீர்களே?”
“திராவிட இயக்கத்தில் பயணிக்க வேண்டும் என்ற அர்த்தத்தில்தான் அப்படிச் சொன்னேன். தி.மு.க-விலிருந்து வெளியேறியவன் என்பதால், தி.மு.க-வைக் குறிப்பிடுகிறேன் என்று எல்லோரும் நினைத்துக்கொண்டார்கள். அண்ணன் எடப்பாடியார் மிகவும் யதார்த்தமான தலைவர் என்பதால், மக்களின் ஆதரவு பெற்ற அ.தி.மு.க-வில் இணைந்திருக்கிறேன்.”
“அ.தி.மு.க-விலிருந்து அழைப்பு வந்ததா... இல்லை வான்டடாக வண்டியில் ஏறிவிட்டீர்களா?”
“மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார மக்களிடம் நன்கு அறிமுகமான டாக்டர், அரசியல்வாதி நான். பா.ஜ.க-விலிருந்து விலகியதும், பல்வேறு கட்சிகளிலிருந்தும் அழைப்பு வந்தது. அந்த வகையில், எனது கொள்கை மற்றும் மனசுக்கு ஒத்துப்போகும் இயக்கமான அ.தி.மு.க-வில் இணைந்திருக்கிறேன்.”
“பா.ஜ.க-வின் கொள்கை பிடிக்காமல் விலகியதாகச் சொன்னீர்களே... இப்போது ‘கூட்டணிக்காக பா.ஜ.க-வுடன் இணைந்து பயணிக்க வேண்டுமே...’ அதை நினைத்து தர்மசங்கடமாக இல்லையா?”
“அண்ணாமலை இன்றும் என்னிடம் நன்றாகத்தான் பேசிக்கொண்டிருக்கிறார். அரசியலுக்கு அப்பாற்பட்டு எல்லாரும் நண்பர்கள்தான். இதில் சங்கடம் என்ன இருக்கிறது... பை தி பை, பாலிடிக்ஸ் இஸ் தி நம்பர் கேம். இன்றைய அரசியலில் கொள்கை சார்ந்த கூட்டணி இல்லை. தலைமை என்ன முடிவெடுக்கிறதோ, அதைச் செய்யப் போகிறேன்.”
“இருந்தாலும் ‘அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா’ என்பதுபோல அடிக்கடி கரைவேட்டியை மாற்றிக்கொண்டே இருக்கிறீர்களே?”
(சிரிக்கிறார்). ``எனது சுயமரியாதைக்காகத்தான் கட்சி மாறுகிறேன். அதைத் தாண்டி, சுயநலமாகவோ, பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்திலோ கட்சி மாறுவது இல்லை. மக்களுக்கு நல்லது செய்ய பெட்டரான இடத்துக்கு மாறுகிறேன். இதில் எந்தத் தவறுமில்லை.”
“தி.மு.க-வில் நீங்கள் கேட்ட பதவி கிடைத்திருந்தால், அ.தி.மு.க-வுக்கு வந்திருப்பீர்களா?”
“எனக்குப் பதவி முக்கியமில்லை. பா.ஜ.க-வில் சேரும்போதே எனக்கு மாநிலப் பொறுப்பு கொடுக்கப் பேச்சுவார்த்தை நடந்தது. பின்னர், மதுரை மாவட்டத்தில் கட்சி வளர்க்க மாவட்டத் தலைவர் பதவி கொடுத்தார்கள். பி.டி.ஆரைச் சந்தித்துப் பேசும்போதுகூட, எனக்குப் பொறுப்பு வேண்டுமென்று நான் கேட்கவும் இல்லை. அவரும் இதை வாங்கித் தருகிறேன் என்று சொல்லவும் இல்லை.”
“மதுரையில் தி.மு.க அமைச்சர்கள், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்களைத் தாண்டி, நீங்கள் ஜொலிக்க முடியும் என்று நம்புகிறீர்களா?”
“யாருக்கு என்ன எழுதியிருக்கிறதோ அது நிச்சயம் கிடைக்கும். தனிப்பட்ட நபர்களுக்காக இங்கு யாரும் வாக்களிப்பதில்லை. சின்னம்தான் பிரதானம். தமிழகத்தைப் பொறுத்தவரை தி.மு.க., அ.தி.மு.க-தான் மாறி மாறி ஆட்சியில் இருக்கும்; அதை யாராலும் மாற்ற முடியாது. தி.மு.க-வின் இந்த 18 மாதகால ஆட்சிமீது, மக்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். நாடாளுமன்றத்தோடு சட்டமன்றத் தேர்தல் வந்தால், 2024-லேயே எடப்பாடியார் முதல்வராகிவிடுவார்.”
“ஓஹோ... அதனால்தான் அ.தி.மு.க-வுக்கு வந்தீர்களா?”
“அப்படியெல்லாம் இல்லை. தி.மு.க-விலிருந்து பிடிக்காமல்தான் வெளியே வந்தேன். மீண்டும் அங்கு சென்றால், அந்நியப்பட்டு நிற்பதுபோல ஒரு நெருடல் ஏற்படும். அதனால்தான், மற்றொரு திராவிட இயக்கமான அ.தி.மு.க-வுக்கு வந்தேன்.”
“திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலின்போது, ‘சின்னத்துக்காக ஜெயலலிதாவின் கட்டைவிரல் ரேகை எடுக்கப்பட்டது’ என்று அ.தி.மு.க-வுக்கு எதிராக வழக்கு தொடுத்துவிட்டு, இப்போது அதே கட்சியில் இணைந்திருப்பது நெருடலாக இல்லையா?”
“அப்போதைய தி.மு.க தலைமை சொன்னதைத்தான் நான் செய்தேன். அது அம்மாவுக்கு எதிரான வழக்கு இல்லை. அம்மாவுக்கான வழக்குதான். அவருக்கு உண்மையிலேயே என்ன நடந்தது, நடக்கிறது என்பதைத் தெரிந்துகொள்வதற்கு, நான் தொடுத்த வழக்கு உறுதுணையாக இருப்பதாக அ.தி.மு.க தொண்டர்களே எனக்கு நன்றி கூறினார்கள்.”
“சமீபத்தில் உங்கள் மகன் திருமணத்துக்கு ஓ.பி.எஸ் வந்திருந்தாரே... மீண்டும் அவரைச் சந்திக்க வாய்ப்பு இருக்கிறதா?”
“அ.தி.மு.க என்பது ஒரு பேரியக்கம். கட்சிக்குள் இருக்கும் சகோதரச் சண்டையை பெரிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது. அ.தி.மு.க-வின் வலிமையான தலைவராக எடப்பாடியார் இருக்கிறார். அவரது தலைமையில் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். எல்லாக் கட்சிகளிலும் பிரச்னை இருக்கிறது. மதுரை தி.மு.க-வில் இல்லாத கோஷ்டிச் சண்டையா?”
“அந்த கோஷ்டிப் பிரச்னையால் நீங்களும் பாதிக்கப் பட்டிருப்பீர்கள்போலத் தெரிகிறதே?”
(பலமாகச் சிரித்தபடி...) ``ஆம்!”
“மதுரையில் உங்களுக்காகப் பிரசாரம் செய்தவர் காயத்ரி ரகுராம். பா.ஜ.க-விலிருந்து விலகிய அவரை அ.தி.மு.க-வுக்கு அழைப்பீர்களா?”
“அரசியலைத் தாண்டி காயத்ரி எனக்கு நல்ல நண்பர். அ.தி.மு.க-வில் சேருவது அவரது தனிப்பட்ட விருப்பம்.”