Published:Updated:

``யானைப் பசிக்கு சோளப்பொரிபோல பொங்கல் பரிசு அறிவிப்பு!" - திமுக அரசைச் சாடிய ஆர்.பி.உதயகுமார்

கோயிலில் குடும்பத்துடன் வழிபாடு நடத்திய ஆர்.பி.உதயகுமார்

``தி.மு.க அரசு அறிவித்திருக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பு மக்களுக்கு எந்தவிதத்திலும் பலன் தராது. தமிழக அரசை நம்பி, கரும்பை விளைவித்து விவசாயிகள் கண்ணீர் வடித்துவருகின்றனர்." - ஆர்.பி.உதயகுமார்

``யானைப் பசிக்கு சோளப்பொரிபோல பொங்கல் பரிசு அறிவிப்பு!" - திமுக அரசைச் சாடிய ஆர்.பி.உதயகுமார்

``தி.மு.க அரசு அறிவித்திருக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பு மக்களுக்கு எந்தவிதத்திலும் பலன் தராது. தமிழக அரசை நம்பி, கரும்பை விளைவித்து விவசாயிகள் கண்ணீர் வடித்துவருகின்றனர்." - ஆர்.பி.உதயகுமார்

Published:Updated:
கோயிலில் குடும்பத்துடன் வழிபாடு நடத்திய ஆர்.பி.உதயகுமார்

ராமநாதபுரம் மாவட்டம், திருஉத்திரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயிலில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தன்னுடைய மகளின் திருமணப் பத்திரிகையை வைத்து குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். கோயில் சிவாச்சார்யார்கள் ஆர்.பி.உதயகுமாரை வரவேற்றனர். பின்னர் சுவாமி, அம்பாள், வராகி சந்நிதிகளில் திருமணப் பத்திரிகை வைத்து குடும்பத்துடன் வழிபட்டார்.

அதைத் தொடர்ந்து ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், "பொங்கல் பரிசுத்தொகுப்பு ஆயிரம் ரூபாய் என்பது `யானைப் பசிக்கு சோளப்பொரி' கொடுப்பதுபோல் இருக்கிறது. இந்தச் சூழலில் ஆயிரம் ரூபாய் என்பது மக்களுக்கு எந்தவிதப் பலனையும் தராது. பொங்கல் திருநாள் என்பது தமிழர் திருநாள். இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என அனைவரும் ஒற்றுமையுடன் `பொங்கலோ பொங்கல்’ என்று குலவையிட்டு தித்திப்புடன் பொங்கல் திருநாளைக் கொண்டாடி மகிழ்வார்கள். அ.தி.மு.க ஆட்சியில் கரும்பு, சர்க்கரை உள்ளிட்ட 21 வகையான பொருள்கள் அடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பை நெசவாளர்கள் மற்றும் கரும்பு விவசாயிகளுக்கான‌ வாழ்வாதாரத் திட்டமாக அறிவித்து வழங்கப்பட்டது. ஆனால் தி.மு.க அரசு அறிவித்திருக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பில் கரும்பு இடம்பெறவில்லை.

செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த உதயகுமார்
செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த உதயகுமார்

பொங்கல் பரிசுத்தொகுப்பில் கரும்பு அறிவிக்கப்படும் என நம்பி கரும்புச் சாகுபடி செய்த விவசாயிகளை தமிழக அரசு ஏமாற்றியிருக்கிறது. தற்போது சாகுபடி செய்திருக்கும் கரும்புகளை எப்படி விற்பனை செய்வது எனத் தெரியாமல் கரும்பு விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர். எனவே, தமிழக அரசு கரும்பு விவசாயிகளிடமிருந்து கரும்பைக் கொள்முதல் செய்து அவர்கள் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும்.

கடந்த ஆண்டு தி.மு.க அரசு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கியதில் பல்வேறு குளறுபடிகள் நடந்தது தொடர்பாக சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பினோம். தற்போது இந்த ஆண்டு சேலையும் வேட்டியும் தரம் மேம்படுத்தப்பட்டு வழங்கவிருப்பதாக விளம்பரப்படுத்திவருகிறார்கள். அது எந்த அளவுக்கு இருக்கப்போகிறது என்று தெரியவில்லை. பொங்கல் திருநாளை மகிழ்ச்சியாகக் கொண்டாட எந்த வகையிலும் மக்களுக்குத் தமிழக அரசு ஆதரவளிக்கவில்லை என்பது இந்தத் திட்ட அறிக்கையில் தெரிகிறது.

பொங்கல் பரிசு!
பொங்கல் பரிசு!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் நியமனம் செயயப்பட்ட நிர்வாகிகள் அனைவரும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து, அவரை இடைக்காலப் பொதுச்செயலாளராக தேர்வுசெய்திருக்கிறோம். அவர் ஜனநாயகரீதியில் அ.தி.மு.க-வை வழிநடத்திவருகிறார். தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் ஜி20 மாநாட்டுக்கு எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டு அவர் கலந்துகொண்டார். இதை ஏற்றுக்கொள்ள முடியாமல் கடிதம் எழுதுவது, நாகரிகமற்ற பேச்சுகள் இதெல்லாம்... விரக்தி மற்றும் ஏமாற்றத்தின் வெளிப்பாடுகள்" எனக் கூறினார்.