Published:Updated:

``பாஜக-வின் சவுண்டுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டுமென்ற அவசியமில்லை" - செல்லூர் ராஜூ தடாலடி

செல்லூர் ராஜூ

ஒற்றைத் தலைமை விவகாரத்துப் பின்னர், சமீபகாலமாக திமுக அரசு மீதும், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ-விடம் சில கேள்விகளை முன்வைத்தேன்...

``பாஜக-வின் சவுண்டுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டுமென்ற அவசியமில்லை" - செல்லூர் ராஜூ தடாலடி

ஒற்றைத் தலைமை விவகாரத்துப் பின்னர், சமீபகாலமாக திமுக அரசு மீதும், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ-விடம் சில கேள்விகளை முன்வைத்தேன்...

Published:Updated:
செல்லூர் ராஜூ

``நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மதுரை மாநகராட்சி டெண்டரில் தலையிடுவதாகக் கூறுகிறீர்கள். ஆதாரம் இருந்தால் வெளியிடலாமே?"

செல்லூர் ராஜூ
செல்லூர் ராஜூ

``எனக்கு என்ன தெரியும்... அமைச்சராக இருக்கும்போதே நான் டெண்டர் பக்கம் போனது இல்லை. தற்போது டெண்டரில் தலையிடுவதாக மாநகராட்சியின் திமுக கவுன்சிலர்கள் சொல்லித்தான் எனக்குத் தெரியும். மாநகராட்சியின் எல்லாப் பணிகளிலும் தலையிட்டு கமிஷன் கேட்பதாக திமுக-வினர்தான் சொல்கிறார்கள்."

``அதிமுக மூத்த நிர்வாகியாகியான நீங்கள் திமுக-வினர் சொல்வதை அப்படியே நம்புவது சரியா?"

செல்லூர் ராஜூ
செல்லூர் ராஜூ

``தவறு நடப்பதை யார் சொன்னால் என்ன... கவுன்சிலர்கள் நான் சொன்னால்தான் 'வேல்யூ' இருக்குமென்று என்னை அணுகினார்கள். அமைச்சர் தலையீடு எந்த அளவுக்கு இருந்தால் திமுக-வினரே இதை வெளியே சொல்வார்கள் என்று பார்த்துக்கொள்ளுங்கள்... மேயருக்கு சூப்பர்வைசர் போட்டிருக்கிறார் அமைச்சர். இதுபோல எங்காவது நடக்குமா... மதுரையை ஆட்டிப்படைக்கிறார் பி.டி.ஆர். சரி இருந்துட்டுப்போகட்டும்... அப்படியாவது மதுரைக்கு ஏதாவது செய்யுங்களேன்."

``அமைச்சர்மீதுள்ள காழ்ப்புணர்ச்சியால்தான் இப்படி நீங்கள் பேசுவதாகக் கூறுகிறார்களே?"

செல்லூர் ராஜூ
செல்லூர் ராஜூ

``எனக்கு யார்மீதும் காழ்ப்புணர்ச்சி கிடையாது. அமைச்சரின் தந்தை மதுரைக்குப் பாலம் கட்டிக் கொடுத்தார். அதை நாங்கள் இப்போதும் பி.டி.ஆர் பாலமென்றுதான் அழைக்கிறோம். ஆனால், நிதியமைச்சராக இருந்தும், மதுரைக்கு அஞ்சு பைசாவுக்குக்கூட திட்டங்களைச் செய்யவில்லை என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடுதான் இது."

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``ஆனால், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மதுரை அமைச்சர்கள்தான் முறைகேடு செய்திருப்பதாகக் கூறுகிறார்களே?"

செல்லூர் ராஜூ
செல்லூர் ராஜூ

``இது முற்றிலும் தவறு. பெரியார் பேருந்து நிலையம், அதையொட்டிய வணிக வளாகம், கீழ்த்தள வாகன நிறுத்தம் உள்ளிட்ட குறைவான பகுதிகளில்தான் மதுரை ஸ்மார்ட் திட்டத்தின்கீழ் வேலை நடந்தது. இந்தப் பணிகள் வெளிப்படையாக நடைபெற்றன. இதில் லோக்கல் அமைச்சர்கள் நினைத்தாலும், தலையிட முடியாது. மதுரைக்கு நல்லது நடந்தால் போதும் என்ற எண்ணத்தில்தான் நாங்கள் இருந்தோம். நாங்கள் தவறு செய்திருந்தால், நடவடிக்கை எடுக்கவேண்டியதுதானே... ஏன் தயங்குகிறார்கள்?"

``பத்து ஆண்டுக்காலம் ஆட்சியிலிருந்த நீங்கள், தற்போது மதுரையில் மழைநீர் தேங்குவதற்கு திமுக அரசைக் கைகாட்டுவது நியாயமா?"

செல்லூர் ராஜூ
செல்லூர் ராஜூ

"ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் நாங்கள் பணி மேற்கொண்ட இடத்தில் மழைநீர் தேங்கவில்லை. எங்கள் ஆட்சி நிறைவடைந்து 15 மாதங்கள் ஆகிவிட்டன. நாங்கள் தொடங்கிய திட்டங்களை அப்படியே அந்தரத்தில் போட்டுவைத்திருக்கிறது திமுக அரசு. அதனால்தான் நகரம் முழுவதும் மழைநீர் தேங்குகிறது."

"பல திட்டங்களைச் செயல்படுத்தியதாகக் குறிப்பிடும் நீங்கள்தானே, மதுரைக்குப் பொழுதுபோக்குத் திட்டங்கள் கொண்டுவர வேண்டும் என்று சட்டமன்றத்தில் பேசினீர்கள்?"

செல்லூர் ராஜூ
செல்லூர் ராஜூ

``பொழுதுபோக்கு அம்சங்களை இப்போதுதான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அதற்காக மாரியம்மன் தெப்பக்குளத்தைத் தயார் செய்தோம். சமணர் குகை உள்ளிட்ட ஏராளமான திட்டங்களை ஆட்சி நீடித்திருந்தால் முழுமையடையச் செய்திருப்போம். அதைத்தான் சட்டமன்றத்தில் கேட்டேன். அதற்கு சிரித்தே மழுப்பிவிட்டார்கள்."

``நீங்கள் சரியாக ஆட்சி நடத்தாததால்தான் கடன் ஏறிவிட்டதாக திமுக கூறுகிறதே?"

செல்லூர் ராஜூ
செல்லூர் ராஜூ

" சும்மா ஏதாவது சொல்வார்கள்... நிதிச் சுமை இருந்தபோதும் நாங்கள் சிறப்பாகப் பல திட்டங்களைச் செய்தோமே... தற்போதுகூட மத்திய அரசு சொல்லித்தான், மின் கட்டணத்தை உயர்த்தியதாகக் கூறுகிறார்கள். எங்களிடமும் மத்திய அரசு சொன்னார்கள். நாங்கள் கட்டணத்தை உயர்த்தவில்லையே... அவர்களால் (தி.மு.க) முடியவில்லை என்று ஒத்துக்கொண்டுவிட்டார்கள். தி.மு.க-வுக்கு ஆட்சி நடத்தத் தெரியவில்லை ஆட்சியை முறையாக நடத்தாமல், தங்களின் பிரதான பணியான விஞ்ஞான ஊழல் திறமையை, ஆவினில் அரை லிட்டர் பாலுக்கு 70 மில்லி உறிஞ்சிக் காட்டுகிறார்கள்."

``ஆனால், அதிமுக-வைவிட பாஜக-தான் திமுக அரசின் நடவடிக்கையை தைரியமாக எதிர்ப்பதாகக் கூறுகிறார்களே?"

செல்லூர் ராஜூ
செல்லூர் ராஜூ

``மத்தியில் ஆட்சியில் இருக்கும் அவர்கள் நாடாளுமன்றத் தேர்தலுக்காகக் கொஞ்சம் துள்ளித்தான் பேசுவார்கள். அதிமுக சாதி, மதம் பார்க்காத கட்சி. எங்களை எப்போதும், எதிலும் பா.ஜ.க-வோடு ஓப்பிடாதீர்கள். தற்போது தமிழ்நாட்டுக்குத் தேவையான கட்சி அ.தி.மு.க. எல்லா தேர்தல்க்ளிலும் எங்கள் தலைமையில்தான் கூட்டணி அமையும். பாஜக-வின் சவுண்டுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டுமென்ற அவசியமில்லை."

" உங்கள் தலைமையிலான அணியை, டெண்டர் அணி என்று ஓபிஎஸ் தரப்பினர் கூறுகிறார்களே?"

செல்லூர் ராஜூ
செல்லூர் ராஜூ

" பிரிந்தவர்கள் கோபத்தில் இருப்பவர்கள் கூடக்குறைய ஏதாவது சொல்லுவார்கள். ஒன்றாக ஆகிவிட்டால் எல்லாம் சரியாகிவிடும். அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.’’

``ஆனால், ஒன்றாக வாய்ப்பு இல்லை என்று இரு தரப்பும் நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கின்றனவே?"

செல்லூர் ராஜூ
செல்லூர் ராஜூ

"எல்லாமே சரியாகிவிடும்... அ.தி.மு.க-வில் தலைவர்கள்தான் மாறுவார்கள். தொண்டர்கள் அப்படியேதான் இருப்பார்கள். இப்போது ஒரு குரூப் விலகி நிற்கிறது. அண்ணன் ஓ.பி.எஸ் உள்ளிட்ட யாராக இருந்தாலும், செய்த தவற்றுக்கு மனம் திருந்தி வந்தால், கழக இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடியார் நினைத்தால் இணைத்துக்கொள்வார்."

"தற்போது சமூகரீதியாக அ.தி.மு.க பிளவுபட்டிருப்பதாகக் கூறப்படுகிறதே?"

செல்லூர் ராஜூ
செல்லூர் ராஜூ

" அ.தி.மு.க-வில்தான் எங்கள் சமூகத்தில் பெரும்பாலோர் இருக்கிறோம். அ.தி.மு.க எப்போதுமே முக்குலத்தோர் கட்சிதான் என்று மக்கள் சொல்கிறார்கள். இருந்தாலும், தேர்தல் காலத்தில் சமூகப் பிளவெல்லாம் அடிப்பட்டுப்போகும். அனைத்துச் சமூகத்தினரும் ஒன்றிணைந்து அ.தி.மு.க-வாக நிற்போம்."

“இவர்களுக்கு உங்கள் அட்வைஸ் என்ன?” என்று கேட்டபோது...

முதல்வர் ஸ்டாலின்: ``ஆட்சி அதிகாரத்தில் தன்னுடைய குடும்பத்தினர் தலையிடாமல் தடுக்க வேண்டும். தனது பார்வையிலேயே ஆட்சி நடத்தினால் மக்களிடம் செல்வாக்கு பெறலாம்.”

உதயநிதி: ``தம்பி இன்னும் உழைத்துவரவும். சினிமாதுறையையே ஒரு பயத்தில் வைத்திருக்கிறார். அதில் தலையிடாமல், சுதந்திரமாகச் செயல்படவிட வேண்டும்.”

சீமான்: ``பேச்சு மட்டும் போதாது, செயலும் வேண்டும்.”

அண்ணாமலை: ``அவர் சிறப்பாகச் செயல்படுகிறார். போதும்.”

ஓ.பி.எஸ்: ``அவர் பெரியவர். மூத்தவர். அவருக்கு அட்வைஸ் செய்யுமளவுக்கு நான் பெரியவன் இல்லை.”

சசிகலா: ``நாம் நினைப்பதற்கெல்லாம் அப்பாற்பட்டவர் அவர்.”

எடப்பாடி பழனிசாமி: ``தென் மாவட்டங்களில் அதிக சுற்றுப்பயணங்கள் மேற்கொள்ளுங்கள்.”