Published:Updated:

`லீக்கான ஆடியோ; கட்சியிலிருந்து நீக்கம்!’-எடப்பாடிக்கு நோட்டீஸ் அனுப்பிய அதிமுக முன்னாள் நிர்வாகி

எடப்பாடியாருடன் சுரேஷ்
எடப்பாடியாருடன் சுரேஷ்

``கட்சியிலிருந்து என்னை நீக்கியதற்கு உடனடியாக மறுப்பு தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால் சட்டரீதியாக வழக்கு தொடுப்பேன்” என்கிறார் அதிமுக முன்னாள் நிர்வாகி

அ.தி.மு.க-விலிருந்து தி.மு.க-வுக்குத் தாவும் நிர்வாகிகள், சசிகலாவுடன் போனில் பேசும் நிர்வாகிகள் போன்றோரைக் கணக்கெடுத்து, அவர்களைக் கட்சியிலிருந்து நீக்கிவருகின்றனர் எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும். இப்படி கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்ட நிர்வாகிகள் எவரும் அ.தி.மு.க தலைமைக்கு எதிராகப் பெரிதாகக் குரல் எழுப்புவதில்லை. ஆனால், எடப்பாடி பழனிசாமியின் சொந்தத் தொகுதியான எடப்பாடியிலிருந்து நீக்கப்பட்ட நிர்வாகி ஒருவர், `என்னை நீக்க உங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. உடனடியாக என்னை நீக்கியதற்கு மறுப்பு தெரிவிக்காவிட்டால் சட்டரீதியாக வழக்கு தொடுப்பேன்’ என நோட்டீஸ் கொடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சசிகலாவுடன் சுரேஷ்
சசிகலாவுடன் சுரேஷ்

சேலம் மாவட்டம், எடப்பாடியைச் சேர்ந்தவர் சுரேஷ். சேலம் மாவட்ட மீனவரணிச் செயலாளராக இருந்தவர். கடந்த சில நாள்களுக்கு முன்பு இவர் சசிகலாவுடன் பேசிய ஆடியோ ஒன்று வெளியாகி, சேலம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. அதையடுத்து கட்சியின் கொள்கைகளுக்கு விரோதமாகச் செயல்பட்டதாகக் கூறி, கடந்த ஜூலை 5-ம் தேதி சுரேஷைக் கட்சியிலிருந்து நீக்கி ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் அறிவிப்பு வெளியிட்டனர். இப்படியான நிலையில்தான், ``என்னை கட்சியிலிருந்து நீங்க உங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. உடனே அறிவிப்பை திரும்பப் பெறுங்கள்’' என சுரேஷ் நோட்டீஸ் கொடுத்து அதிரடி கிளப்பியிருக்கிறார்.

கட்சி விதிகளின் 35-வது உட்பிரிவு 12-ன்படி பொதுச்செயலாளருக்கு மட்டுமே ஒரு தொண்டரைக் கட்சியிலிருந்து நீக்க அதிகாரம் உள்ளது.

இது குறித்து விளக்கமறிய சுரேஷிடம் பேசினோம். ``1991-ல இருந்து அ.தி.மு.க-வுல நான் அடிப்படை உறுப்பினராகவும், வார்டு பிரதிநிதியாகவும், மாவட்ட மீனவரணிச் செயலாளராகவும் இருந்திருக்கேன். அ.தி.மு.க என்னும் பேரியக்கம் இன்னிக்குக் கண்ணுக்கு முன்னாடியே உருக்குலைஞ்சு கிடக்குறதை என்னால சகிச்சிக்க முடியலை. எடப்பாடி முதலமைச்சர் ஆன பிறகு கட்சிக்குப் புதிதாக வந்தவர்கள், அவருடைய சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே பதவிகளை வாரி வழங்கினார். இன்னும் சொல்லப்போனால் சேலம் மத்தியக் கூட்டுறவு வங்கி, சேலம் அச்சகக் கூட்டுறவு வங்கி, பொன்னி என சுமார் 14 மாவட்ட கூட்டுறவு வங்கிகள் சேலத்தில் இருக்கின்றன. அவற்றில் 10 பேர் எடப்பாடியாருடைய சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்தான். இப்படி கட்சி, ஆட்சி, தேர்தல் எனப் பலவற்றிலும் நடந்த குழப்படிகளால்தான் அ.தி.மு.க-வின் நிலை இன்றைக்கு இவ்வளவு மோசமானதாக ஆகியிருக்கிறது. இதுசம்பந்தமான என்னுடைய மனக்குமுறலைத்தான் சின்னம்மாவுக்கும் கடிதமாக அனுப்பி, போனில் பேசினேன். சின்னம்மாவுடன் நான் பேசிய அந்த ஆடியோ வெளியே லீக் ஆகி 20 நாள்களுக்குப் பிறகு, என்னை கட்சியிலிருந்து நீக்கி அறிவிப்பு கொடுத்தனர்.

ஆட்டத்தை ஆரம்பித்த சசிகலா! -  எழுச்சிக்குப் பின்னால் இருப்பது யார் யார்?

அம்மா காலமான பிறகு தொண்டர்கள் அனைவரும் சின்னம்மா சசிகலாவை ஒருமனதாக பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுத்தோம். இன்றுவரை சின்னம்மா சசிகலாதான் அ.தி.மு.க.-வினுடைய பொதுச்செயலாளார். அது சம்பந்தமான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. அப்படியிருக்க கட்சி விதிகளிலேயே இல்லாத ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகளை இவர்களாகவே உருவாக்கிக்கொண்டு, இவர்களாகவே நிர்வாகிகளை நீக்குவது என நடவடிக்கை எடுத்துவருகின்றனர். கட்சி விதிகளின் 35-வது உட்பிரிவு 12-ன்படி பொதுச் யலாளருக்கு மட்டுமே ஒரு தொண்டரை கட்சியிலிருந்து நீக்க அதிகாரம் உள்ளது. எனவே, என்னைக் கட்சியிலிருந்து நீக்கியது செல்லாது.

எடப்பாடியாருடன் சுரேஷ்
எடப்பாடியாருடன் சுரேஷ்

எனவே 15 நாள்களுக்குள்ளாக என்னை நீக்கி வெளியிட்ட அறிவிப்பைத் திரும்பப் பெற வேண்டும். இல்லாவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பேன். பாலியல் புகாரில் கைதுசெய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மணிகண்டனை ஏன் இன்னும் கட்சியிலிருந்து நீக்கவில்லை? கூட்டணிக் கட்சியின் மாண்புக்கு எதிராகச் செயல்பட்டதால் பெங்களூரு புகழேந்தியை கட்சியிலிருந்து நீக்கினார்கள். அதே கூட்டணி மாண்புக்கு எதிராகத்தானே சி.வி.சண்முகமும் பேசினார்... அவரை ஏன் இன்னும் கட்சியிலிருந்து நீக்கவில்லை? இப்படிப் பாகுபாட்டோடுதான் எடப்பாடியார் எல்லாவற்றையும் செய்துவருகிறார். இனியும் எடப்பாடியார் தலைமையில் இது நடக்குமேயானால், `அ.தி.மு.க என்ற ஒரு கட்சி இருந்தது’ என்று சொல்லப்படுகிற நிலை உருவாகிவிடும்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு