Published:Updated:

''அ.தி.மு.க-வில் இரட்டைத் தலைமை வேலைக்காகவில்லை!''- போட்டுடைக்கிறார் 'அஸ்பயர்' சுவாமிநாதன்

'அஸ்பயர்' சுவாமிநாதன்
'அஸ்பயர்' சுவாமிநாதன்

``ஒவ்வொரு முடிவும் எடுக்கப்படும் முன், இரு தலைவர்களிடையே ஏற்படக்கூடிய பிரச்னைகள் கட்சியின் அடிமட்டத் தொண்டர்களின் மனநிலையில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகின்ரன. முடிவில், தலைவர்கள் ஒன்று சேர்ந்துவிடுகிறார்கள். தொண்டர்களால் ஒன்று சேர முடிவதில்லை'' என்கிறார் அஸ்பயர் சுவாமிநாதன்.

சமூக ஊடகத் தாக்கம் குறித்து இந்திய அரசியல் கட்சிகள் அதிகம் அறிந்திடாத காலகட்டத்திலேயே 'தகவல் தொழில்நுட்ப அணி' என புதிதாக ஓர் அணியை உருவாக்கி, அதன் செயலாளர் பொறுப்பில் `அஸ்பயர்’ சுவாமிநாதனை நியமித்தார் ஜெயலலிதா! ஆனால், 'அ.தி.மு.க-வில் திறமைக்கோ, விசுவாசத்துக்கோ மரியாதை இல்லை' எனக் குற்றம்சாட்டிவிட்டு கட்சியைவிட்டு அண்மையில் வெளியேறியிருக்கும் `அஸ்பயர்’ சுவாமிநாதனிடம் பேசினேன்...

``சட்டமன்றத் தேர்தலில், அ.தி.மு.க தோற்றுப்போனதற்கு பொறுப்பேற்றுக்கொள்ளாமல், கட்சியைவிட்டு வெளியேறியிருக்கிறீர்களே ஏன்?''

ஓ.பி.எஸ் - இ.பி.எஸ்
ஓ.பி.எஸ் - இ.பி.எஸ்

``கட்சித் தோல்விக்கு நாங்களும் ஒரு காரணம் என நினைத்தால், கட்டாயமாக எங்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்தான். ஆனால், சட்டமன்றத் தேர்தலில் ஏன் தோற்றோம் என்பது குறித்து ஆலோசித்து நடவடிக்கை எடுப்பதற்கான எந்தவித அறிவிப்பையும் கட்சி இதுவரை வெளியிடவில்லையே! அதற்கு முன்னதாக ஒரு விஷயம் சொல்கிறேன். சென்னை மண்டலத்துக்கான ஐடி விங் பிரிவு நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்காக, நுழைவுத்தேர்வு நடத்தி, தேர்வானவர்கள் பட்டியலையும் தலைமைக்கு அனுப்பியிருந்தேன். ஆனால், கட்சித் தலைமையோ, அதில் பாதி இடங்களுக்கு ஆட்களையே நியமிக்கவில்லை. மீதி இடங்களுக்கும்கூட ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் என்றால் என்னவென்றே தெரியாத நபர்களை நியமித்துவிட்டார்கள். எனவே, 'என்ன நடந்தது, ஏன் இந்தத் தோல்வி, இனி என்ன செய்ய வேண்டும்...' என்று தெளிவாகக் கடிதம் எழுதி, நானே தலைமைக்கு அனுப்பிவிட்டேன்!''

``அ.தி.மு.க ஐடி விங் மாநிலச் செயலாளராக இருந்த உங்களை `சென்னை மண்டலச் செயலாளராக' சுருக்கிவிட்டதால்தான் ராஜினாமா செய்துவிட்டீர்களா?''

``ஐடி விங் செயலாளர் என்பது மாநில அளவிலான பதவி அல்ல. அது உலகம் முழுவதுக்குமான ஒரே பதவி! தகவல் தொடர்பு என்பதே உலகளாவியதுதான். எனவே, இதில் மாநிலம், மாவட்டம் என்றெல்லாம் எதுவும் இல்லை. அரசியலில் நாம் என்னவாக இருக்கிறோம் என்பதைவிடவும், என்ன செய்கிறோம் என்பதுதான் மிக முக்கியம். எனவே, எல்லோரும் வியக்கிற அளவுக்கு சென்னை மண்டலப் பிரசாரங்களை பிரமாதமாகச் செய்தோம். உதாரணமாக, `மனசெல்லாம் இ.பி.எஸ்., மக்களுக்காக இ.பி.எஸ்' என்று நாங்கள் செய்த பிரசாரம் அவ்வளவு பெரிய ஹிட்!''

ஓ.பி.எஸ் - இ.பி.எஸ்
ஓ.பி.எஸ் - இ.பி.எஸ்

``நீங்கள் ஓ.பி.எஸ் ஆதரவாளராக இருந்ததால், கட்சியில் புறக்கணிக்கப்பட்டதாக உணர்கிறீர்களா?''

``அப்படி நான் நினைக்கவில்லை. 2017-ல் ஓ.பன்னீர்செல்வம் தர்ம யுத்தம் நடத்தியபோது, முதல் ஆளாகப் போய் நின்று நான் அவருக்கு ஆதரவு கொடுத்தேன். அவருக்கான ஊடகத் தொடர்புகளையும் அப்போது நான்தான் பார்த்துக்கொண்டேன். எனவே, கட்சியில் இரு அணிகளும் இணைந்த பிறகு, எல்லோரும் என்னை ஓ.பி.எஸ் ஆதரவாளராகத்தான் பார்த்தார்கள். ஆனால், அது படிப்படியாக மாறிவிட்டது. `மனசெல்லாம் இ.பிஎஸ்., மக்களுக்காக ஈ.பி.எஸ்' பிரசாரத்தின்போதுகூட எடப்பாடி பழனிசாமி என்னைத் தனிப்பட்ட முறையில் பாராட்டினார். எனவே, மற்றவர்கள் வேண்டுமானால் என்னை ஓ.பி.எஸ் ஆதரவாளராகப் பார்த்திருக்கலாம். ஆனால், தலைமை என்னை அப்படி பிரித்துப் பார்க்கவில்லை!''

வேலூர்: மாணவியிடம் அத்துமீறல்; வலைவீசிய போலீஸ்! - நீதிமன்றத்தில் சரணடைந்த முன்னாள் ஆசிரியர்

``கட்சியில் இ.பி.எஸ் ஆதிக்கம் அதிகரித்துவருகிறது என்கிறார்களே..?''

``நான் அப்படிச் சொன்னால், அது டெக்னிக்கலாகத் தவறாகிவிடும். ஏனெனில், கட்சி சார்ந்த எந்தவோர் அறிவிப்புமே ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர் என இருவரது கையெழுத்திட்டுத்தான் வெளிவருகிறது. அதேசமயம், கட்சியில் முடிவு எடுக்கப்படுவதற்கு முன்பாக, இந்த இருவர் இடையே மிகப்பெரிய பனிப்போர் நடந்துவருவது எல்லோருக்குமே தெரிகிறது. இவர்களின் ஆதரவாளர்களும் முட்டிமோதிக்கொள்கிறார்கள். கடைசியில், கட்சி முடிவு என்று ஒன்றை இரு தலைவர்களும் ஒன்று சேர்ந்து அறிவித்து ஒன்றாகிவிடுகிறார்கள். ஆனால், தொண்டர்களால் ஒன்று சேர முடியவில்லை. இரு அணிகளாகப் பிரிந்தே நிற்கிறார்கள்.''

ஓ.பி.எஸ் - இ.பி.எஸ்
ஓ.பி.எஸ் - இ.பி.எஸ்

``முதல்வர் வேட்பாளர், எதிர்க்கட்சித் தலைவர் என தொடர்ச்சியாக இ.பி.எஸ் ஆதிக்கம் செலுத்துகிறார்; ஓ.பி.எஸ் அடிபணிந்துவிடுகிறார் என்கிறீர்களா?''

``அடிபணிந்தாரா, அடிபணியவில்லையா என்றெல்லாம் எனக்குத் தெரியாது. ஏனெனில், அந்தச் சமயங்களிலெல்லாம் நான் அங்கு இல்லை. கட்சியின் எந்தவோர் அறிவிப்பு என்றாலும், அது இருவரின் கையெழுத்துகளோடுதான் வெளியிடப்படுகிறது. இந்தச் சூழலில், யாருடைய ஆதிக்கம் என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை. ஆனால், ஒவ்வொரு முடிவும் எடுக்கப்படும் முன், இரு தலைவர்களிடையே ஏற்படக்கூடிய பிரச்னைகள் கட்சியின் அடிமட்டத் தொண்டர்களின் மனநிலையில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகின்றன. முடிவில், தலைவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்துவிடுகிறார்கள். என்றாலும் தொண்டர்களால் அவ்வாறு எளிதில் ஒன்று சேர முடிவதில்லை. எனவே, அ.தி.மு.க-வில் இரட்டைத் தலைமை சரிவர வேலைக்காகவில்லை என்பது இந்த நான்கரை வருடங்களில் தெள்ளத் தெளிவாகத் தெரிந்துவிட்டது!''

`சீக்கிரமா வேலைக்குப் போய் 3 தம்பிகளைக் காப்பாத்தணும்!' - பெற்றோரை இழந்த 4 சிறுவர்களின் துயர நிலை

``தற்போது அ.தி.மு.க-வில் என்னென்ன பிரச்னைகள், குறைகள் இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்கள்?''

``கட்சியில் ஒவ்வொரு மாவட்டமும் இரண்டு, மூன்று தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டபோதும்கூட ஒருசிலர் பொறுப்பு வகித்துவரும் மாவட்டங்கள் மட்டும் பிரிக்கப்படாமலேயே தொடர்கின்றன... ஏன் இந்த பாரபட்சம்? `எல்லோருக்கும் வாய்ப்பு' என்ற அ.தி.மு.க-வின் அடிப்படையையே சிதைந்துவிட்டார்கள்! அடுத்து தேர்தல் கூட்டணியைப் பொறுத்தவரையில், அ.தி.மு.க கூட்டணியில் அ.ம.மு.க-வைச் சேர்த்திருந்தால், இன்னும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க முடியும். கூடுதலாக 10 தொகுதிகளில் வெற்றிபெற்றிருக்கவும் முடியும். ஆனால், அப்படி எதையும் செய்யாததால், 'அ.தி.மு.க ஒரு குறிப்பிட்ட சாதியினருக்கான கட்சியாகச் சுருக்கப்படுகிறதோ...' என்ற சந்தேகம் தொண்டர்களுக்கு வந்துவிட்டது.''

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

``அ.தி.மு.க தேர்தலில் தோல்வியடைந்துவிட்டதாலும், தி.மு.க-விலிருந்து அழைப்பு வந்ததாலுமே நீங்கள் ராஜினாமா செய்துவிட்டதாகச் சொல்கிறார்களே..?''

(சிரிக்கிறார்) ``இரண்டுமே தவறு.... கடந்த 10 ஆண்டுக்காலம் அ.தி.மு.க ஆட்சிப்பொறுப்பில்தான் இருந்துவந்தது. அப்போதெல்லாம் `இந்த வேலையை வாங்கித் தாருங்கள், இடமாற்றம் செய்து தாருங்கள்' என்றெல்லாம் முதல்வர் உட்பட யாரிடமும் நான் போய் நின்றது கிடையாது. அடுத்து, அ.தி.மு.க ஆளுங்கட்சியாக இருந்தபோதும், பதவியே இல்லாமல் நான் கட்சிக்காகச் செய்த வேலைகள் இன்னும் நிறைய. எனவே, அ.தி.மு.க-வின் வெற்றி தோல்வியெல்லாம் எனக்கு ஒரு பொருட்டல்ல!''

அடுத்த கட்டுரைக்கு