Published:Updated:

“எல்லோரும் ஜெயலலிதா ஆகிவிட முடியாது!” - யாரைச் சொல்கிறார் கோகுல இந்திரா?

கோகுல இந்திரா
பிரீமியம் ஸ்டோரி
கோகுல இந்திரா

கட்சியிலுள்ள சில தொண்டர்கள் அவர்களது தனிப்பட்ட கருத்தைத் தெரிவித்திருக்கிறார்கள். மற்றபடி, நாங்கள் எங்கள் கட்சித் தலைமையை நம்பியே பயணித்துவருகிறோம்.

“எல்லோரும் ஜெயலலிதா ஆகிவிட முடியாது!” - யாரைச் சொல்கிறார் கோகுல இந்திரா?

கட்சியிலுள்ள சில தொண்டர்கள் அவர்களது தனிப்பட்ட கருத்தைத் தெரிவித்திருக்கிறார்கள். மற்றபடி, நாங்கள் எங்கள் கட்சித் தலைமையை நம்பியே பயணித்துவருகிறோம்.

Published:Updated:
கோகுல இந்திரா
பிரீமியம் ஸ்டோரி
கோகுல இந்திரா

50-வது ஆண்டு பொன்விழாவைக் கொண்டாடிவரும் நேரத்தில், அ.தி.மு.க சந்தித்துவரும் தொடர் தோல்விகளை நடிகர் கருணாஸ் தொடங்கி அமைச்சர் ஐ.பெரியசாமி வரை அனைவரும் அலசி ஆராய்ந்து அறிக்கை வெளியிட்டுவருகிறார்கள்! நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கான காரணத்தைக் கூட்டம் போட்டு ஆராயவிருக்கிறது அ.தி.மு.க. இந்தச் சூழலில்தான் அ.தி.மு.க முன்னாள் அமைச்சரும், கழக அமைப்புச் செயலாளருமான கோகுல இந்திராவைச் சந்தித்துப் பேசினோம்...

“2019 நாடாளுமன்றத் தேர்தலிலிருந்தே அ.தி.மு.க தொடர் தோல்விகளைச் சந்தித்துவருகிறது... என்ன காரணம்?’’

“2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது கூட்டணி குறித்து நிறைய சர்ச்சைகள் எழுந்தன. எனவே, அந்தத் தேர்தல் தோல்வியை நாங்கள் மனமுவந்து ஏற்றுக்கொண்டோம். அதேசமயம், அப்போது நடந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க பெரும்பான்மையாக வெற்றிபெற்றது. கடந்த சட்டமன்றத் தேர்தலிலும்கூட, 65 இடங்களில் வெற்றிபெற்றதோடு, 40 தொகுதிகளில் நூலிழையில் மட்டுமே வெற்றி வாய்ப்பைப் பறிகொடுத்தோம். இதைவைத்தே கடந்த அ.தி.மு.க ஆட்சிமீது மக்களுக்கு அதிருப்தி இல்லை என்பதைப் புரிந்துகொள்ளலாம். நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அராஜகங்கள், கள்ள ஓட்டுகளால் ஆளுங்கட்சியினர் வெற்றிபெற்றிருப்பதை ஆதாரபூர்வமாகவே என்னால் சொல்ல முடியும்.’’

“எல்லோரும் ஜெயலலிதா ஆகிவிட முடியாது!” - யாரைச் சொல்கிறார் கோகுல இந்திரா?
“எல்லோரும் ஜெயலலிதா ஆகிவிட முடியாது!” - யாரைச் சொல்கிறார் கோகுல இந்திரா?
“எல்லோரும் ஜெயலலிதா ஆகிவிட முடியாது!” - யாரைச் சொல்கிறார் கோகுல இந்திரா?

“ஆதாரங்கள் இருந்தால், நீதிமன்றத்தில் ஏன் வழக்கு தொடரவில்லை?’’

“நிச்சயம் வழக்கு தொடர்வோம். இப்போதுதானே தேர்தல் முடிந்திருக்கிறது... ஆதாரங்களையெல்லாம் உரிய முறையில் திரட்டி, ஒவ்வொருவராக வழக்கு தொடர்வோம்.’’

“சசிகலா, ‘50 ஆண்டுக்கால வரலாற்றில் அ.தி.மு.க இது போன்ற தொடர் தோல்விகளை எந்நாளும் கண்டதில்லை’ என்று கூறியிருக்கிறாரே?’’

“1991 சட்டமன்றத் தேர்தலில், அ.தி.மு.க இமாலய வெற்றிபெற்று ஆளுங்கட்சியாக அமர்ந்தது. ஆனால், 1996 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க படுதோல்வியைச் சந்தித்தது என்பது வரலாறு. 1996-ல் அ.தி.மு.க படுதோல்வி அடையும் அளவுக்கு என்ன நடந்தது, அதற்கு யார் காரணம் என்பதையெல்லாம் நாடே அறியும். அதேசமயம், தனிப்பட்ட முறையில் யாரையும் விமர்சிப்பதற்காக நான் இந்த உதாரணத்தைச் சொல்லவில்லை!’’

“எல்லோரும் ஜெயலலிதா ஆகிவிட முடியாது!” - யாரைச் சொல்கிறார் கோகுல இந்திரா?
“எல்லோரும் ஜெயலலிதா ஆகிவிட முடியாது!” - யாரைச் சொல்கிறார் கோகுல இந்திரா?

“அ.தி.மு.க-வில் செல்வாக்குமிக்க தலைவர் யாருமில்லை என்பதுதான் இந்தத் தொடர் தோல்விகளுக்குக் காரணமா?’’

“எல்லோரும் ஜெயலலிதா ஆகிவிட முடியாது என்றாலும்கூட, ஜெயலலிதா விட்டுச் சென்ற பணிகளைக் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் திறம்படச் செய்துவருகின்றனர். அதனால்தான் உள்ளாட்சித் தேர்தலில் வாக்கு கேட்டு மக்களைச் சந்தித்தபோது, அ.தி.மு.க-வுக்கு எதிராக விமர்சனங்களோ, எதிர்மறையான பார்வைகளோ இல்லை. மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவர்களான எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இப்போது இல்லைதான்... அதேசமயம், எதிர்க்கட்சித் தலைவராக ஜெயலலிதா இருந்தபோதும்கூட இல்லாத அளவுக்கு இப்போது எங்களிடம் 65 எம்.எல்.ஏ-க்கள் இருக்கிறார்கள். பிறகு எப்படி எங்கள் கட்சித் தலைவர்களைச் செல்வாக்கு இல்லாதவர்கள் என்று சொல்கிறீர்கள்? விரைவிலேயே அ.தி.மு.க வீறுகொண்டெழுந்து எழுச்சி பெறும்!’’

“ஆனால், ‘அ.தி.மு.க விரைவில் என் கைக்கு வரும்’ என்றல்லவா சசிகலா சொல்கிறார்?’’

“இது போன்ற கருத்துகளுக்கு இந்த நேரத்தில், நான் பதில் சொல்ல விரும்பவில்லை!’’

“ ‘தோல்வியிலிருந்து மீட்க தலைமையேற்க வாருங்கள் தாயே’ என்று சசிகலாவை வரவேற்று மதுரையில் போஸ்டர் ஒட்டியுள்ளனரே அ.தி.மு.க தொண்டர்கள்?’’

“கட்சியிலுள்ள சில தொண்டர்கள் அவர்களது தனிப்பட்ட கருத்தைத் தெரிவித்திருக்கிறார்கள். மற்றபடி, நாங்கள் எங்கள் கட்சித் தலைமையை நம்பியே பயணித்துவருகிறோம். அவர்கள் வழியே எங்கள் வழி... அது எந்த வழியாக இருந்தாலும் சரி!’’

“சிறையில் இருக்கும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை, எடப்பாடி பழனிசாமி சந்தித்துவிட்டார். ஆனால், ஓ.பன்னீர்செல்வம் சந்திக்கவில்லையே ஏன்?’’

“சிறையில் இருக்கும் ஜெயக்குமாரை, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பதற்காக நேரம் கேட்டபோது, முதலில் கொரோனா விதிமுறைகளைச் சுட்டிக்காட்டி அனுமதி மறுத்தது தமிழக அரசு. கடந்த ஆட்சிக்காலத்தில், இந்த விதிமுறைகளை உருவாக்கிய அ.தி.மு.க அரசே, முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் தளர்வும் கொடுத்திருக்கிறது. எனவே, ‘அனுமதி கொடுக்கவில்லை என்ற விஷயத்தைப் பொதுவெளியில் எடுத்துச் சொல்வோம்’ என்று நாங்கள் சொன்ன பிறகுதான், ஜெயக்குமாரைச் சந்திக்க அனுமதி கொடுத்தார்கள். இந்தச் சூழ்நிலையில்தான், ‘பெருந்தன்மை இல்லாத இந்தத் தி.மு.க அரசுக்கு எதிராக மல்லுக்கட்டிக்கொண்டிருக்க வேண்டாம்; அடுத்த வாரம் சந்திக்கலாம்’ என்று ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் காத்திருக்கிறார். அவர்கள் விரைவில் சந்திப்பார்கள்.”

“அப்படியென்றால், இந்தப் பின்னணி விவரங்களையெல்லாம் அ.தி.மு.க ஏன் வெளிப்படையாக அறிவிக்கவில்லை?’’

“நீங்கள் கேட்டதால், இந்த விஷயங்களை எல்லாம் சொன்னேன். மற்றபடி ஜெயக்குமார் கைதைக் கண்டித்து, இருவருமே கண்டன அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள். பிப்ரவரி 28-ம் தேதி கண்டனப் போராட்டத்தையும் நடத்தியிருக்கிறார்கள். எனவே, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அப்படியெல்லாம் யாரையும் விட்டுக்கொடுக்க மாட்டார் என்பது எங்கள் கட்சித் தொண்டர்களுக்கு நன்றாகவே தெரியும்!’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism