Published:Updated:

ஓ.பி.எஸ் தனிக்கட்சி ஆரம்பித்து கொள்ளலாம்! - கோகுல இந்திரா அட்வைஸ்!

கோகுல இந்திரா
பிரீமியம் ஸ்டோரி
கோகுல இந்திரா

சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவர் எப்படி இப்படியான கருத்துகளைத் தெரிவித்து வருகிறார் என்று தெரியவில்லை.

ஓ.பி.எஸ் தனிக்கட்சி ஆரம்பித்து கொள்ளலாம்! - கோகுல இந்திரா அட்வைஸ்!

சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவர் எப்படி இப்படியான கருத்துகளைத் தெரிவித்து வருகிறார் என்று தெரியவில்லை.

Published:Updated:
கோகுல இந்திரா
பிரீமியம் ஸ்டோரி
கோகுல இந்திரா

``அண்ணன் ஓ.பி.எஸ்., தர்மயுத்த காலத்தில் தன்னுடன் இருந்தவர்களுக்கே முக்கியத்துவம் கொடுத்தார். கட்சியின் வெற்றிக்காகப் பாடுபடாமல், கடைசிவரை தனது ஆதரவாளர்களுக்குப் பதவி வாங்கிக் கொடுப்பதிலேயே கவனத்தைச் செலுத்தினார்’’ எனத் தொடர்ச்சியாகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துவருகிறார், அ.தி.மு.க-வின் அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கோகுல இந்திரா. அவரிடம் அ.தி.மு.க-வில் நிலவிவரும் தற்போதைய சூழல் குறித்துப் பேசினேன்...

``டெல்லிக்குச் சென்ற எடப்பாடி பழனிசாமிக்கு, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரம் கொடுக்க மறுத்துவிட்டதாகச் சொல்லப்படுகிறதே?’’

``ஹேஸ்யமாக இது போன்ற பல தகவல்கள் பரவிக்கொண்டேதான் இருக்கின்றன. ஆனால், அது உண்மையல்ல. அசோகா ஹோட்டலில் நடந்த முன்னாள் குடியரசுத் தலைவரின் பிரிவு உபசார விழாவுக்கு, கூட்டணிக் கட்சித் தலைவர் என்கிற வகையில் கழகத்தின் பொதுச்செயலாளர் அண்ணன் இ.பி.எஸ்-ஸுக்கு அழைப்பு வந்தது. அவர் சென்று கலந்துகொண்டு விழா முடிந்ததும் திரும்பி வந்துவிட்டார். அவ்வளவுதான்.’’

ஓ.பி.எஸ் தனிக்கட்சி ஆரம்பித்து கொள்ளலாம்! - கோகுல இந்திரா அட்வைஸ்!

`` ‘சசிகலா இன்னும் அ.தி.மு.க-வின் அடிப்படை உறுப்பினராகத்தான் நீடித்துவருகிறார்’ என்கிறாரே ஓ.பி.எஸ்-ஸின் ஆதரவாளரான கோவை செல்வராஜ்?’’

``சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவர் எப்படி இப்படியான கருத்துகளைத் தெரிவித்து வருகிறார் என்று தெரியவில்லை. உரிமையியல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைப் பற்றி அவருக்குத் தெரியவில்லையா, சசிகலா அப்பீலுக்குப் போயிருக்கிறாரே அது குறித்துக்கூட அவருக்குத் தெரியவில்லையா... தொண்டர்கள் மத்தியில் தற்காலிகமாக ஒரு குழப்பத்தை ஏற்படுத்திப் பார்க்கலாம் என்பதற்காகத்தான் இப்படிப் பேசிவருகிறார்கள்.’’

`` ‘ரவீந்திரநாத்தை அ.தி.மு.க எம்.பி-யாகக் கருதக் கூடாது’ என எடப்பாடி, சபாநாயகருக்கு எழுதிய கடிதம் ஏற்கப்படவில்லை. அதனால், ஓ.பி.எஸ் தலைமையிலான அணிதான் உண்மையான அ.தி.மு.க என அவரின் ஆதரவாளர்கள் சொல்கிறார்களே?’’

``கட்சி தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றன. பொதுக்குழுத் தீர்மானங்கள் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பப்பட்டிருக்கின்றன. வழக்குகள் தீர்ந்து, தேர்தல் ஆணையத்தில் அங்கீகாரம் கிடைத்தவுடன் படிப்படியாக இந்தக் கடிதத்துக்கான முடிவுகள் தெரியத்தான் போகின்றன. நாம் அதைப் பார்க்கத்தான் போகிறோம்.’’

``தேர்தல் ஆணையத்தில் பொதுக்குழுத் தீர்மானங்கள் ஏற்றுக்கொள்ளப்படாமல் தாமதமாவது ஏன்?’’

``நாங்கள் பொதுக்குழுத் தீர்மானங்களைத் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பிய பிறகு, இன்று எதிர் முகாமாகச் செயல்படக்கூடிய அண்ணன் ஓ.பி.எஸ் தரப்பிலிருந்தும் கடிதங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. நீதிமன்றமாக இருந்தாலும், தேர்தல் ஆணையமாக இருந்தாலும் இரு பக்கமும் விசாரித்த பிறகுதான் ஒரு முடிவுக்கு வருவார்கள். சட்டரீதியான தாமதமே தவிர, தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ளவில்லை என்று இதைச் சொல்ல முடியாது.’’

``தென்மாவட்டத்தில் வெற்றிபெறவைக்கவில்லை, தேனி மாவட்டத்தில் வெற்றிபெறவைக்கவில்லை என ஓ.பி.எஸ் மீது தொடர்ச்சியாக விமர்சனங்களை முன்வைத்துவருகிறீர்கள். கட்சியின் ஒருங்கிணைப்பாளரை ஒரு மாவட்டத்துக்குள், குறிப்பிட்ட எல்லைக்குள் நிறுத்தி அப்படிக் குற்றம்சாட்டுவது சரிதானா?’’

``அப்படிச் சொல்வதற்குக் காரணம் இருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர் தேர்வு உட்பட, பல விஷயங்களில் அண்ணன் ஓ.பி.எஸ் நடந்துகொண்ட விதத்தால், பொதுமக்கள் மத்தியில் அ.தி.மு.க-வில் பதவிச் சண்டை அதிகரித்துவிட்டது என்கிற தோற்றம் உருவானது. ஆனால், அண்ணன் ஓ.பி.எஸ்-ஸின் தொடர்ச்சியான எதிர்பார்ப்புகள் நியாயமில்லாதவையாக இருந்தன. அதனால்தான், இது போன்ற கேள்விகளை எழுப்ப வேண்டியிருக்கிறது.’’

``தென்மாவட்டங்களில் அ.தி.மு.க வெற்றிபெறாமல் போனதற்கு எடப்பாடி தன்னிச்சையாக முடிவெடுத்து வன்னியர் உள் இட ஒதுக்கீடு கொடுத்ததுதான் காரணம் என்று அவர் தரப்பில் சொல்கிறார்களே?’’

``இட ஒதுக்கீடு சம்பந்தமாக என்ன நடந்தது என்பது எனக்கு நன்றாகத் தெரியும். ஒருநாள் அண்ணன் இ.பி.எஸ் அவர்கள் அதை வெளியில் சொல்வார்கள். ஆனால், தோல்விக்குக் காரணம் அது கிடையாது. அண்ணன் ஓ.பி.எஸ் தென்பகுதியில் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் வேலைகளைக் கவனித்திருந்தால், ஆயிரம், ஐந்நூறு என குறைவான வாக்குகளில் பல தொகுதிகளில் வெற்றி பறிபோயிருக்காது.’’

`` ‘தர்மயுத்தத்தில் அவருடன் இருந்தவர்களுக்கே அவர் பதவிகளைக் கொடுத்தார்’ என நீங்கள் சொல்லிவருகிறீர்கள். ஆனால், ‘அவர் அப்படிக் கொடுக்காததால்தான் இன்று அவருக்கு அதிக ஆதரவாளர்கள் இல்லை’ என்று அவர் தரப்பில் சொல்லப்படுகிறதே?’’

``அதை நான் முற்றிலுமாக மறுக்கிறேன். அவருடன் இருந்த அனைவருக்குமே அவர் பதவிகளை வாங்கிக் கொடுக்கத்தான் செய்தார். அவர் அடிக்கடி தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டே இருந்ததால், பலர் அவரைவிட்டு விலகி வந்தார்களே தவிர, கடைசியாக ராஜ்ய சபா சீட்டைக்கூட அவரின் தர்மயுத்த ஆதரவாளர் தர்மருக்குத்தான் வாங்கிக் கொடுத்தார்.’’

``நீங்கள் உட்பட, பலரை ஓ.பி.எஸ் கட்சியைவிட்டு நீக்கியும் புதிய பொறுப்புகளை அறிவித்தும் வருகிறார். அதை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

``அவர் புதுக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார். அதற்குத்தான் பொறுப்பாளர்களை நியமித்துவருகிறார். கட்சிக்குப் பெயர் மட்டும்தான் வைக்கவில்லை.’’

``அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் என்கிற பெயரில்தானே செய்துவருகிறார்?’’

``நீதிமன்ற உத்தரவுப்படி தலைமைக் கழகம் யாரிடம் ஒப்படைக்கப்பட்டது என்பது அவருக்குத் தெரியும். தேர்தல் ஆணையத்தில் பெரும்பான்மை ஆதரவு யாருக்கு இருக்கிறது என்பது அவருக்குத் தெரியும். எனக்கு இத்தனை பேர் ஆதரவாக இருக்கிறார்கள் என்று லீகலாகக் காட்டிக்கொள் வதற்காகவே அவர் இப்படிச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால், அவர் நினைக்கிற இலக்கை அடைய முடியாது. வேண்டுமானால், அவர் தனிக்கட்சி ஆரம்பித்துக்கொள்ளலாம்.’’

``ஆளுங்கட்சிக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில்கூட, ஓ.பி.எஸ்-ஸைக் கடுமையாக உங்கள் தரப்பினர் விமர்சிப்பது ஏன்?’’

``அவர்கள் தரப்பில் மிக மோசமாகப் பேசிவருகிறார்கள். பல விமர்சனங்களை முன்வைத்துவருகிறார்கள். தர்மயுத்த காலத்தில் செய்ததைப்போலவே இப்போதும் புதிய புதிய மொபைல் எண்களிலிருந்து கால் செய்து மோசமாகப் பேசுகிறார்கள். அதற்கு பதிலடி கொடுக்கவேண்டியிருக்கிறது!’’