Published:Updated:

`அதிருப்தியில் கோகுல இந்திரா?; சமரச அ.தி.மு.க!'- தி.மு.க-வுக்கு இழுக்கும் முக்கியப் புள்ளி

கோகுல இந்திரா
கோகுல இந்திரா

`சிவகங்கையில் அதிகார மையமாக வலம் வந்த முக்கிய நபர் தற்போது தி.மு.க-வில் ஐக்கியமாகி இருக்கிறார். அவர், கோகுல இந்திராவையும் தி.மு.க-வில் சேர்க்கும் பணியைத் தொடங்கியிருக்கிறார்’ எனக் கூறப்படுகிறது.

அ.தி.மு.க-வில் ராஜ்ய சபா சீட் கிடைக்காததால் கோகுல இந்திரா விரக்தியில் இருப்பதாகச் செய்திகள் கசியத் தொடங்கியிருக்கிறது. அவரை முக்கியக் கட்சிகளின் நிர்வாகிகள் சந்தித்துக் கொண்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதைக் கவனித்த அ.தி.மு.க தலைமை அவரை சமரசம் செய்யும் முடிவில் இருப்பதாக அ.தி.மு.க நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் காலியாக இருந்த 6 ராஜ்ய சபா எம்.பி-க்களுக்கான தேர்தலில், தி.மு.க 3 இடங்களிலும் அ.தி.மு.க 3 இடங்களிலும் போட்டியிட்டன. தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களாக திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர்.இளங்கோ ஆகியோரது பெயர்கள் முன்பே அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால், அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பை வெளியிடுவதில் தொடர்ந்து இழுபறி நீடித்தது.

அ.தி.மு.க கூட்டணியில் உள்ள த.மா.கா, தே.மு.தி.க, புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட கட்சிகள் தங்களுக்கு ஒரு எம்.பி சீட் கொடுக்க வேண்டும் என வலியுறுத்திவந்தன. இந்த நிலையில், அ.தி.மு.க-வில் உள்ள என்.ஆர்.சிவபதி, கோகுல இந்திரா, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட கட்சி சீனியர்கள், தங்களுக்கு இந்தத் தடவை எம்.பி சீட் வழங்க வேண்டும் எனத் தலைமைக்கு நெருக்கடி கொடுத்ததாகச் சொல்கிறார்கள். கடைசி நேரத்தில் தம்பிதுரை, கே.பி.முனுசாமி, கூட்டணிக் கட்சியின் ஜி.கே.வாசனுக்கு டிக் அடித்து சீனியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து அ.தி.மு.க தலைமை.

கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், தம்பிதுரை, கோகுல இந்திரா
கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், தம்பிதுரை, கோகுல இந்திரா

தனக்கு சீட் கிடைக்கும் என்று நம்பியிருந்த நேரத்தில் இப்படி நடந்துவிட்டதே என்ற மனவருத்தத்தில் இருக்கிறாராம் கோகுல இந்திரா. இதுகுறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க நிர்வாகிகள், ``1988 காலகட்டத்தில் சிவகங்கை மாவட்டத்தில் அ.தி.மு.க-வின் அதிகாரமையமாகத் திகழ்ந்தவர் ராஜகண்ணப்பன். அவர் மூலமாக அரசியலுக்கு நுழைந்தார் கோகுல இந்திரா.

ஒரு காலகட்டத்தில் மன்னார்குடி குடும்பத்தினரின் நேரடி அறிமுகம் கிடைத்த பின்னர், 2001-ல் ராஜ்யசபா சீட் கொடுக்கப்பட்டது. ஜெயலலிதாவால் மாநிலங்களவைக்கு அனுப்பப்பட்டார். அதன்பிறகு 2011 முதல் 2016 வரை உள்ள காலகட்டத்தில் கைத்தறித் துறை அமைச்சராக இருந்தவர், ஜெயலலிதாவின் ஆசியால் 2016 தேர்தலில் மீண்டும் அண்ணாநகர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு அ.தி.மு.க இரு அணிகளாகப் பிரிந்திருந்தபோது எடப்பாடிக்கு முதல் ஆளாக ஆதரவு கொடுத்தார். இதனால் எடப்பாடியின் குட் புக்கிலும் இடம்பெற்றிருந்தார். இதனால் முதல்வர் எப்படியும் தனக்கு சீட் கொடுத்துவிடுவார் என்ற நம்பிக்கையிலிருந்தார்.

 கோகுல இந்திரா
கோகுல இந்திரா

ராஜ்யசபா சீட் எதிர்பார்த்து அதற்காக காய் நகர்த்தி வந்தார். ஆனால், அவருக்குக் கொடுக்காமல் கூட்டணிக் கட்சியான ஜி.கே.வாசனுக்குக் கொடுத்ததால் வருத்தத்தில் இருக்கிறார்’’ என்கிறார்கள்.

இந்தநிலையில் சிவகங்கையில் முக்கிய நபராக வலம் வந்த ஒருவர், தற்போது தி.மு.க-வில் ஐக்கியமாகி இருக்கிறார். அவர் கோகுல இந்திராவையும் தி.மு.க-வில் சேர்க்கும் படலத்தைத் தொடங்கியிருக்கிறார் என்று சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள்.

``இதனைத் தெரிந்துகொண்ட அ.தி.மு.க தலைமை அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கியிருக்கிறது. `ராஜ்யசபா சீட்டைத்தான் கொடுக்கவில்லை. வருகிற சட்டமன்றத் தேர்தலிலாவது சீட் கொடுங்கள்’ என்று கோகுல இந்திரா கேட்பார்போல் தெரிகிறது’’ என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில்.

அடுத்த கட்டுரைக்கு