அரசியல்
அலசல்
Published:Updated:

“கூட்டணி தர்மத்தைக் கடைப்பிடிப்பது பா.ம.க-வுக்கு நல்லது!”

ஜெயக்குமார்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜெயக்குமார்

- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அட்வைஸ்...

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கடந்த அ.தி.மு.க ஆட்சியில் கட்சி, ஆட்சி என எதுவென்றாலும் ஆல் இன் ஆலாக பதில் சொல்லிவந்தவர் அன்றைய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்தது தொடங்கி சசிகலா ஆடியோ வரை இப்போதும் சூடாகவே இருக்கிறது அ.தி.மு.க முகாம். அதற்கெல்லாம் என்ன பதில் சொல்கிறார் ஜெயகுமார்?

“கட்சியின் இரட்டைத் தலைமையிடம் ஒற்றுமை இல்லாததே, சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குக் காரணம் என்கிறார்களே?’’

“இரட்டைத் தலைமையைவிடவும் ‘இரட்டை இலை’தான் எங்களுக்கு முக்கியம். அந்தவகையில் இரட்டை இலைச் சின்னமே எங்களிடம்தான் இருக்கிறது. இந்தச் சின்னம் இருக்கும் வரை எங்கள் கட்சிக்கு அழிவே கிடையாது. அ.தி.மு.க-வின் பத்தாண்டுக்காலத் தொடர்ச்சியான ஆட்சியில் எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளோம். எனவே, மக்களிடம் அ.தி.மு.க ஆட்சிமீது எந்தவிதமான அதிருப்தியும் இல்லை. வெற்றிபெற்ற தி.மு.க-வுக்கும், தோல்வி அடைந்த அ.தி.மு.க-வுக்கும் இடையிலான வாக்கு வித்தியாசமும் குறைவுதான். இது எங்களுக்கு வெற்றிகரமான தோல்வியே!’’

“முதல்வர் வேட்பாளர், எதிர்க்கட்சித் தலைவர் தேர்வுகளின்போது எடப்பாடி - பன்னீர் இடையிலான பனிப்போர் வெளிப்படையாகத் தெரிந்ததுதானே?’’

“இவையெல்லாம் எங்களுக்கு எதிரானவர்கள் பரப்பிவிடும் பொய்கள். உண்மையில், இருவருக்கும் இடையில் பனிப்போரும் கிடையாது; வெயில் போரும் கிடையாது. கட்சி சார்ந்த ஒவ்வொரு முடிவுமே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருவரின் கையெழுத்துடன்தானே வெளிவருகிறது! எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருந்தபோது அவர்கள் எடுப்பதுதான் முடிவு; கட்சி ராணுவக் கட்டுக்கோப்புடன் இருந்தது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, ‘அ.தி.மு.க என்ற கட்சி இனி இருக்குமா... இரட்டை இலைச் சின்னத்தைத் தக்கவைப்பார்களா... ஐந்தாண்டுகள் முழுமையாக ஆட்சி செய்வார்களா?’ என்றெல்லாம் நிறைய சந்தேகங்களை எழுப்பினார்கள். ஆனால், எந்தப் பிரச்னையும் இல்லாமல் ஐந்தாண்டுகள் வெற்றிகரமாக ஆட்சியை நடத்திக் காட்டினோமா இல்லையா?’’

“ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைக்கக் கோரிய பன்னீர்செல்வமே, ‘ஜெயலலிதா மரணத்தில் சசிகலா மீது எனக்குச் சந்தேகம் இல்லை’ என்று சொல்லிவிட்டாரே?’

“ஜெயலலிதா மரணம் குறித்த சந்தேகம் மக்கள் மனதில் இருக்கிறது. அதைத் தெளிவுபடுத்தும்விதமாகத்தான் விசாரணை கமிஷனே அமைக்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளரும் ஒரு கருத்து சொல்லியிருக்கிறார். இன்றைய சூழலில், விசாரணை கமிஷனுக்கு உச்ச நீதிமன்றத் தடை இருக்கிறது. இந்தத் தடை விலகி, மறுபடியும் நாளை விசாரணை நடக்கும்போது, ஜெயலலிதா மரணப் பின்னணி குறித்த உண்மையையும் கண்டுபிடித்து நாட்டுக்குச் சொல்லிவிடுவார்கள்.’’

“ `சசிகலாவை அ.தி.மு.க-வில் இணைக்க நூறு சதவிகிதம் வாய்ப்பே இல்லை’ என்கிறார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், பன்னீர்செல்வமோ ‘இது குறித்து பரிசீலிக்கலாம்’ என்கிறாரே..?’’

“கட்சிக்கு அப்பாற்பட்டு தனிப்பட்ட விதத்தில் பன்னீர்செல்வம் ஏதேனும் கருத்து தெரிவித்திருக்கலாம்... அது பற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை.’’

 “கூட்டணி தர்மத்தைக் கடைப்பிடிப்பது பா.ம.க-வுக்கு நல்லது!”

“அ.தி.மு.க கூட்டணியில், ‘பா.ம.க இல்லையென்றால், ஒன்றுமே இல்லை’ என்கிறாரே அன்புமணி ராமதாஸ்?’’

“பொதுவாக, கூட்டணி தர்மம் என ஒன்று உண்டு. அந்த தர்மத்தைச் சரியாகக் கடைப்பிடித்துவருகிறோம். இதேபோல் அனைவருமே கூட்டணி தர்மத்தைக் கடைப்பிடிப்பதுதான் நல்லது. ஒரு கருத்தைச் சொல்வதால், கூட்டணி தர்மத்துக்கு பாதிப்பு ஏற்பட்டால், அந்த இடத்தில் கருத்தே சொல்லாமல் இருப்பதுதான் நல்லது. பா.ம.க-வும் மற்றக் கட்சிகளும்கூட இதையே கடைப்பிடித்தால் நல்லது!”

“அன்புமணி ராமதாஸின் கருத்துக்குப் பதிலடி கொடுத்த அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் புகழேந்தியைக் கட்சியைவிட்டு நீக்கியிருப்பது குறித்து...’’

“எதிர்க்கட்சித் தலைவர், துணைத் தலைவர், கொறடா உள்ளிட்ட பொறுப்புகளுக்கு யாரைத் தேர்ந்தெடுக்கலாம் என்பதை அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள்தான் சேர்ந்து முடிவெடுத்துச் சொல்ல வேண்டும். ஆனால், இவராகவே (புகழேந்தி) ‘எதிர்க்கட்சித் தலைவராக ஏ-தான் பெஸ்ட்; பி பெஸ்ட் இல்லை’ என்று மீடியாவில் வெளிப்படையாகச் சொல்லலாமா? புகழேந்தியின் ஒட்டுமொத்த நடவடிக்கைகளை வைத்துப் பார்க்கும்போது அவர் கட்சிக்கு விரோதமாகச் செயல்பட்டிருக்கிறார் என்றுதானே எடுத்துக்கொள்ள முடியும்! அதனால்தான் கட்சித் தலைமை அவரை நீக்கியிருக்கிறது.”

“பா.ம.க-வுக்கு எதிராகக் கருத்து வெளியிட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் அ.தி.மு.க-விலிருந்து நீக்கப்படுவாரா என்று புகழேந்தி கேட்கிறாரே?’’

“எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு, ஜெயலலிதாவால் வளர்த்தெடுக்கப்பட்ட அ.தி.மு.க என்ற கட்சியின்மீது நான் வைத்திருக்கும் விசுவாசம் என் ரத்தத்திலேயே ஊறிப்போனது. சொந்தக் கட்சியைப் பற்றியோ, அதன் தலைவர்களைப் பற்றியோ நான் விமர்சனம் செய்வது கிடையாது. எந்த முடிவு என்றாலும் கட்சித் தலைமையைக் கலந்தாலோசித்து, அங்கே எடுக்கப்படும் முடிவுகளைத்தான் வெளியே சொல்வேன். கட்சி என்ன கொள்கை முடிவு எடுக்கிறதோ... அதைத்தான் நான் இதுவரை சொல்லிவருகிறேன். இதுதான் நமக்கான வேலை என்கிறபோது, நமக்கெதற்கு அதிக பிரசங்கித்தனம்? எனவே, என்னோடு புகழேந்தியை ஒப்பிடவே கூடாது!’’