“வாக்களித்த மக்களையே கடனாளியாக்கிவிட்டது தி.மு.க!” - அட்டாக் செய்யும் ஜெயக்குமார்...

பெரும் பண முதலைகள் ஆயிரம், ரெண்டாயிரம் கோடிகளைக் கடனாக வாங்கி, வங்கியையே திவாலாக்கிவிட்டுப் போய்விடுகின்றனர்.
ஒருவழியாக பதவிச் சண்டை, பஞ்சாயத்துகளையெல்லாம் முடித்துவிட்டு கண்டன ஆர்ப்பாட்டம், கவர்னர் சந்திப்பு என்று களமிறங்கியிருக்கிறது அ.தி.மு.க. இந்த நிலையில்தான், அ.தி.மு.க அரசின் நகைக்கடன் தள்ளுபடியில் எழுந்துள்ள மோசடி விவகாரங்கள், ‘தலைமறைவு’ ராஜேந்திர பாலாஜியின் விறுவிறு சேஸிங்... உள்ளிட்ட கேள்விகளுடன் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை நேரில் சந்தித்தோம்...
“நகைக்கடன் தள்ளுபடியில் நடந்துள்ள மோசடிகளை தி.மு.க அரசு பட்டியலிட்ட பிறகும்கூட, ‘35 லட்சம் பேரைக் கடனாளியாக்கிவிட்டது தி.மு.க அரசு’ என்று பன்னீர் சொல்லியிருக்கிறாரே?’’
“தி.மு.க., ‘அனைவருக்கும் நகைக்கடன் தள்ளுபடி’ என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்துவிட்டு, இப்போது ‘பகுப்பாய்வு செய்கிறோம்’ என்று ஏமாற்றுகிறது. துணிச்சல் இருந்தால், ‘எந்த வகையிலாவது பிற அரசுக் கடன்களைப் பெற்றிருந்தால், அவர்களுக்குத் தள்ளுபடி கிடையாது’ என்று வாக்குறுதி கொடுத்திருக்கவேண்டியதுதானே... எப்படியாவது வாக்குகளை வாங்கினால் போதும் என்ற நோக்கத்தில், ‘அனைவருக்கும் தள்ளுபடி’ எனப் பொய்யான வாக்குறுதியைக் கொடுத்துவிட்டு, இன்றைக்கு 35 லட்சம் பேரை தள்ளுபடியிலிருந்து நிராகரித்துவிட்டது தி.மு.க அரசு. ஜமக்காளத்தில் கடைந்தெடுத்த மோசமான அரசியல் இது!’’


“ஒரே நபர் முறைகேடாக 672 நகைக்கடன்களைப் பெற்றிருக்கிறார், கவரிங் நகையைவைத்து நகைக்கடன் பெறப்பட்டுள்ளது... இவர்களுக்கும்கூட அரசு, கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்கிறீர்களா?’’
“இந்தப் பிரச்னைகளுக்குள் நான் செல்ல விரும்பவில்லை. பெரும் பண முதலைகள் ஆயிரம், ரெண்டாயிரம் கோடிகளைக் கடனாக வாங்கி, வங்கியையே திவாலாக்கிவிட்டுப் போய்விடுகின்றனர். கோடீஸ்வரர்கள் யாரும் ஐந்து பவுன் நகையை அடகுவைப்பதில்லை. அன்றாடங்காய்ச்சிகளும் நடுத்தர வர்க்கத்தினரும் தங்கள் வாழ்வாதாரத்துக்காக ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிகளில் கடன் பெற்றிருக்கலாம்தான். ‘தி.மு.க ஆட்சி வந்தால், நம் கடன்களைத் தள்ளுபடி செய்துவிடுவார்கள்’ என்று நம்பித்தானே அவர்கள் உங்களுக்கு வாக்களித்தார்கள்? இன்றைக்கு இப்படியெல்லாம் கணக்கெடுக்கிறவர்கள், இதைத் தேர்தல் வாக்குறுதியிலேயே தெளிவுபடுத்தியிருந்தால், மக்கள் ஓட்டே போட்டிருக்க மாட்டார்கள். தங்களுக்கு வாக்களித்த மக்களையே கடனாளியாக்கிவிட்டது தி.மு.க.’’
“அப்படியென்றால் அ.தி.மு.க ஆட்சியில் மோசடியே நடக்கவில்லை என்று சொல்கிறீர்களா?”
“ஆளே இல்லாமல், கடன் வழங்கப்பட்டிருந்தால்தான் அது மோசடி. அப்படி வழங்கப்பட்டிருந்தால், சம்பந்தப்பட்டவர்கள்மீது இந்த அரசு தாராளமாக நடவடிக்கை எடுக்கட்டும். நாங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லையே!’’


“எடப்பாடி பழனிசாமி, ‘பொங்கல் பரிசு 2,500 ரூபாய் வழங்காததால் தி.மு.க அரசுமீது மக்கள் கோபமாக இருக்கிறார்கள்’ என்று சொல்லியிருக்கிறார்... இது மக்களைத் தூண்டிவிடுவதுபோல் இல்லையா?”
“நாங்கள் யாரையும் தூண்டிவிடவில்லை. ஓர் எதிர்க்கட்சியாக எங்கள் கடமையைத்தான் செய்கிறோம். ஆனால், இந்த அரசுக்குக் காது என்று ஒன்று இருக்கிறதா என்றே தெரியவில்லை... எதைச் சொன்னாலும் கேட்பதில்லை. இப்படியெல்லாம் சொல்வதன் மூலம், அரசுக்குத் தூண்டுகோலாக இருக்கிறோமே தவிர, யாரையும் நாங்கள் தூண்டிவிடவில்லை. நாங்கள் ஆட்சியில் இருந்தபோதும் அரசுக்குக் கடன் சுமை இருந்ததுதான்... ஆனாலும்கூட, மக்களுக்காக 2,500 ரூபாயைக் கொடுத்தோம். அதனாலேயே `நீங்கள் மட்டும் மக்களை ஏன் ஏமாற்றுகிறீர்கள்?’ என்றுதான் கேட்கிறோம்.’’
“நீங்கள், ‘ராஜேந்திர பாலாஜி என்ன தேசத்துரோகியா?’ என்று கேட்கிறீர்கள்... அவர் பக்கம் அவ்வளவு நியாயம் இருந்தால், வழக்கை எதிர்கொள்ளாமல் ஏன் ஓடி ஒளிகிறார்?”
“இன்றைய நீதி அமைப்பில், மாவட்ட அளவில் ஆரம்பித்து உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் எனப் பல்வேறு அமைப்புகள் இருக்கும்போது அவற்றை ஒருவர் பயன்படுத்திக்கொள்வதில் என்ன தவறு இருக்கிறது... ஆனால், அதற்கெல்லாம் இடம் கொடுக்காமல் ‘கைதுசெய்தே ஆக வேண்டும்’ என்று இத்தனை தனிப்படைகளை அமைத்துக் கெடுபிடி காட்டுகிற இந்த அரசு, இதே வேகத்தை ஏன் குற்றவாளிகளிடம் காட்டுவதில்லை? நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்குள் அ.தி.மு.க-வுக்கு அவப்பெயரை ஏற்படுத்திவிட வேண்டும் என்ற நோக்கத்தில்தான், தி.மு.க அரசு இப்படியெல்லாம் செயல்படுகிறது.’’


“சமீபத்தில் அன்புமணி ராமதாஸ், ‘2019-ல் அ.தி.மு.க கூட்டணிக்குள் பா.ம.க வந்ததால்தான், எடப்பாடி முதல்வராகவே நீடிக்க முடிந்தது; ஆட்சியைக் காப்பாற்ற முடிந்தது’ என்றெல்லாம் பேசியிருக்கிறாரே?’’
“முதல்வர் யார் என்பதை மக்களும், சட்டமன்ற உறுப்பினர்களும்தான் தீர்மானிக்கின்றனர். இது பா.ம.க தீர்மானிக்கின்ற விஷயம் கிடையாது. எல்லாவற்றுக்கும் மேலாக 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போதுதான் பா.ம.க எங்களோடு கூட்டணிக்கே வந்தது. அதற்கு முன்பே நாங்கள் ஆட்சிக்கு வந்துவிட்டோம்... ஆகவே, அவரது பேச்சில் லாஜிக்கே இல்லை. அவரது கருத்தை நான் முற்றிலுமாக மறுக்கிறேன்.

#JvReaderConnect
”A.P.Perumal @pachaiperumal23
“முதல்வராகப் பணியாற்றியபோது பன்னீர், எடப்பாடி இருவருக்கும் நீங்கள் வழங்கும் மதிப்பெண்கள் என்ன?”
(சிரிக்கிறார்.) “சிண்டு முடிகிற கேள்வி இது. எப்போதுமே ‘ரிஷிமூலம் பெரிதா, நதிமூலம் பெரிதா’ என்றெல்லாம் ஆராயக் கூடாது.’’
தாமரை நிலவன்.@thamara03906573
“தி.மு.க ஆட்சியை இந்தச் செயலுக்காகப் பாராட்டலாம் என்று நினைத்தால் நீங்கள் சொல்லும் பதில் என்ன?”
“தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை; சட்டம், ஒழுங்கு கெட்டுப்போய்விட்டது. பள்ளிக் குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லை. ஆளுங்கட்சியினரின் அத்துமீறல்கள் எல்லை கடந்து போய்க் கொண்டிருக்கின்றன. கொலை, கொள்ளை, கட்டப்பஞ்சாயத்து, சீட்டாட்டம், போதை எனத் தமிழ்நாடே சீரழிந்துகொண்டிருக்கிறது. ஆக, பாராட்டும் அளவுக்கு இந்த ஆட்சியில் எந்த விஷயமும் நடக்கவில்லை.’’