Published:Updated:

திரைக்கதை, தயாரிப்பு, இயக்கம்: தி.மு.க... - நடிப்பு: ஓ.பி.எஸ்! - ‘கடுகடுக்கும்’ டி.ஜெ

ஜெயக்குமார்
பிரீமியம் ஸ்டோரி
ஜெயக்குமார்

யாராக இருந்தாலும் கட்சிக்குக் கட்டுப்படணும். கட்சியில் தவறு செய்வது, கட்சி விவகாரங்களை நீதிமன்றத்துக்கு எடுத்துச்செல்வதெல்லாம் சரியில்லாதது

திரைக்கதை, தயாரிப்பு, இயக்கம்: தி.மு.க... - நடிப்பு: ஓ.பி.எஸ்! - ‘கடுகடுக்கும்’ டி.ஜெ

யாராக இருந்தாலும் கட்சிக்குக் கட்டுப்படணும். கட்சியில் தவறு செய்வது, கட்சி விவகாரங்களை நீதிமன்றத்துக்கு எடுத்துச்செல்வதெல்லாம் சரியில்லாதது

Published:Updated:
ஜெயக்குமார்
பிரீமியம் ஸ்டோரி
ஜெயக்குமார்

அ.தி.மு.க-வில் உட்கட்சி அடிதடிப் பஞ்சாயத்து உச்சத்தை எட்டியிருக்கும் இந்நேரத்தில், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரைச் சந்திக்க அவரது இல்லத்துக்குச் சென்றேன். ‘டி.ஜெ சார் உள்ளதான் இருக்கார்’ என்றார் வெளியே இருந்த ஒரு தொண்டர். நம்மை வரவேற்ற ஜெயக்குமாரிடம் “அதென்ன சார் புதுசா எல்லாரும் `டி.ஜெ... டி.ஜெ...’ன்னு கூப்பிடுறாங்களே?” என்று கேட்டேன். “தொண்டர்களா ஆசைப்பட்டு அப்படிக் கூப்பிடுறாங்க” என்று தனது டிரேட் மார்க் புன்னகையை வீசியவரிடம், கேள்விகளைத் தொடுத்தேன்...

“ஜெயலலிதா இருந்தபோது நடந்த பொதுக்குழுவுக்கும், இப்போது நடந்த பொதுக்குழுவுக்கும் என்னென்ன வேறுபாடுகளை நீங்கள் பார்க்கிறீர்கள்?”

“புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி இருவரும் யாருடனும் ஒப்பிட முடியாத மாபெரும் தலைவர்கள். புரட்சித்தலைவர் மறைவுக்குப் பிறகு ஜெ - ஜா என இரு அணிகளாகப் பிரிந்தது அ.தி.மு.க. ஆனால், தொண்டர்களின் அங்கீகாரம் பெற்று இரட்டை இலையையும் கைப்பற்றி அம்மா 1991-ல் ஆட்சியமைத்தார். அப்போது அந்த அமைச்சரவையிலும் நான் இடம்பெற்றேன். அன்றிலிருந்து பொதுக்குழுவில் கலந்துகொண்டிருப்பவன் என்ற முறையில் சொல்கிறேன். அப்போதும் இப்போதும் சட்டத்துக்கு உட்பட்டுத்தான் பொதுக்குழு நடக்கிறது. இதில், 2,000-க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் அண்ணன் எடப்பாடியாரை ஆதரித்திருக்கிறார்கள். அதனடிப்படையில்தான் இடைக்காலப் பொதுச்செயலாளராகத் தேர்வுசெய்யப்பட்டிருக்கிறார். எல்லோராலும் விரும்பி நடத்தப்பட்ட பொதுக்குழு இது.”

திரைக்கதை, தயாரிப்பு, இயக்கம்: தி.மு.க... - நடிப்பு: ஓ.பி.எஸ்! - ‘கடுகடுக்கும்’ டி.ஜெ

“ராணுவக் கட்டுப்பாடுகொண்ட பொதுக்குழுவில்தான் தண்ணீர் பாட்டில்கள் வீச்சு, சண்டை சச்சரவுகளெல்லாம் நடக்குமா?”

“யாராக இருந்தாலும் கட்சிக்குக் கட்டுப்படணும். கட்சியில் தவறு செய்வது, கட்சி விவகாரங்களை நீதிமன்றத்துக்கு எடுத்துச்செல்வதெல்லாம் சரியில்லாதது. ‘உட்கட்சி விவகாரங்களுக்கு நீதிமன்றத்தைப் பயன்படுத்துவது சரியா?’ எனக் கேட்டு ஓ.பி.எஸ்-ஸுக்கு உயர் நீதிமன்றம் குட்டு வைத்திருக்கிறது. ஓ.பி.எஸ்-ஸுக்கு இது தேவையா... கட்சியில் பெரும்பான்மையானவர்கள் ‘ஒற்றைத் தலைவராக எடப்பாடியார் இருக்க வேண்டும்’ என்று சொன்ன பிறகு அதை ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும். கட்சியில் ஐந்து சதவிகிதம்கூட ஆதரவு இல்லாத ஓ.பி.எஸ்-தான் குண்டர்களை ஏவிவிட்டார். அவர்தான் அந்தப் பிரச்னைகளுக்கெல்லாம் முழுக் காரணம்.”

“சில மாதங்களுக்கு முன்பு வரை இருவரையும் சே குவேரா, ஃபிடல் காஸ்ட்ரோ எனச் சொல்லிக்கொண்டிருந்தீர்கள். எந்தப் புள்ளியில் இருவருக்கும் கருத்து வேறுபாடு வந்தது?”

“சசிகலா இடைக்காலப் பொதுச்செயலாளராகத் தேர்வுசெய்யப்பட்டபோதே, எங்களையெல்லாம் அழைத்து ‘ஓ.பி.எஸ் நடவடிக்கை சரியில்லை. தி.மு.க-வுடன் அண்டர்ஸ்டேண்டிங்கில் இருக்கிறார். சட்டமன்றத்தில் தி.மு.க-வை எதிர்த்து வாய் திறப்பதில்லை’ என்றார். அப்போதும் தி.மு.க-வுக்கு நெருக்கம் காட்டினார். இப்போதும் காட்டுகிறார். இதுதான் பிரச்னையின் ஆரம்பம்.”

“தி.மு.க-வில் நெருக்கமாக இருந்தவருக்கு ஏன் துணை முதல்வர் பதவி கொடுத்து அழகு பார்த்தீர்கள்?”

“அது எங்களின் பரந்த மனப்பான்மை. அப்போது கட்சி பிளவுபட்டிருந்தது. சிறு துரும்பும் தேவைப்பட்ட காலமது. கடந்தகாலத்தை நினைக்காமல் இணைத்துக்கொண்டு பதவி கொடுத்தோம்.”

“இப்போதும் அதே பரந்த மனப்பான்மையோடு எடப்பாடியார் & கோ இருக்கலாமே?”

“இப்போது அதன் உச்சகட்டத்தை ஓ.பி.எஸ் எட்டிவிட்டார். தி.மு.க எதிர்ப்புதான் கட்சியின் கொள்கை. ஆனால், சட்டமன்றத்தில் கருணாநிதியைப் புகழ்கிறார், துரைமுருகனைப் புகழ்கிறார். எந்தக் குடும்பத்துக்கு எதிராகத் தர்மயுத்தம் நடத்தினாரோ அதே டி.டி.வி. தினகரனைப் பார்த்தார். சசிகலாவுக்கு `நல்லவங்க’ என சர்டிஃபிகேட் கொடுத்தார். `அம்மா மரணத்தில் சந்தேகமில்லை’ என்றார். இப்படி வரிசைப்படுத்திக்கொண்டே போகலாம். இதையெல்லாம் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?”

“சரி, கட்சி அலுவலகத்துக்கு முன்னால் நடந்த அடிதடிகளுக்கு இருவரும்தானே காரணம்?”

“பொதுக்குழுவில் ஓ.பி.எஸ்-ஸுக்கும், வைத்திலிங்கத்துக்கும் சீட் போடப்பட்டிருந்தது. அங்கு அவர்கள் வரவேண்டியதுதானே... அங்கு வந்து தன் பலத்தைக் காட்டியிருக்க வேண்டியதுதானே... கட்சி நிர்வாகிகள் எல்லோரும் அங்கே இருக்கும்போது, கட்சி அலுவலகத்தில் அவர்களுக்கென்ன வேலை... வேனில் குண்டர்களை அழைத்து வந்து அடிதடி செய்தது ஓ.பி.எஸ். தலைவர் எம்.ஜி.ஆரும் அம்மாவும் உருவாக்கிய கோயிலின் கதவை இடித்து உடைத்து, உள்ளே இருந்த ஆவணங்களை எப்படி எடுத்துக்கொண்டு போகலாம்... ஓ.பி.எஸ் அப்பன் வீட்டுச் சொத்தல்ல கட்சி அலுவலகம். அது தொண்டர்களின் சொத்து. அவர் நினைத்துக் கொண்டிருப்பதுபோல இரட்டை இலையையும் முடக்க முடியாது. கட்சி அலுவலகத்தையும் முடக்க முடியாது!”

“பொதுக்குழுவில் சிறப்புத் தீர்மானம் கொண்டுவந்துதான் அவரை நீக்குகிறீர்கள். அதுவரை அவர் கட்சியின் பொருளாளர்தான். அவர் கட்சி அலுவலகத்துக்குப் போவதில் என்ன தவறு?”

“பொருளாளர் என்ற அடிப்படையில்தான் மேடையில் இடம் போட்டிருந்தோம். அங்கு வராமல், ஏன் கட்சி அலுவலகத்துக்குப் போகணும்... அதுவும் அடியாட்களோடு. ஆளுங்கட்சியின் துணையோடு அடிதடி நடத்தியிருக்கிறார். முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஆலோசனை செய்துதான் ஓ.பி.எஸ் இந்தத் தரம் தாழ்ந்த செயலைச் செய்திருக்கிறார். `நீங்க வந்து கதவை உடைங்க. உள்ளே போங்க. அவங்க ஆட்கள் உள்ளே வராமல் போலீஸ் தடுத்துடுவாங்க. வேணுங்கற டாக்குமென்ட்ஸை எடுத்துக்கோங்க. அப்புறம் நாங்க சீல் வெச்சுக்கறோம்’ என்று பக்காவாக பிளான் பண்ணி நாடகத்தை நடத்தியிருக்காங்க. இதற்குத் திரைக்கதை, தயாரிப்பு, இயக்கம் தி.மு.க., அதில் நடித்த நடிகர் ஓ.பி.எஸ். இதற்காக ஆஸ்கர் விருதே ஓ.பி.எஸ்-ஸுக்குக் கொடுக்கலாம். ஓ.பி.எஸ்., ஸ்டாலின், சசிகலா, தினகரன் எல்லோருமே ஒரே அணி. நால்வர் அணி. இந்த நால்வர் அணி நாசமாப் போகிற கூட்டணி. ஏற்கெனவே ஒரு நால்வர் கூட்டணி நாசமானதெல்லாம் ஓ.பி.எஸ்-ஸுக்கே தெரியும்.”

“ஓ.பி.எஸ்., வைத்திலிங்கத்தை நீக்கியவர்கள் ஏன் ஓ.பி.எஸ்-ஸின் மகனை நீக்கவில்லை?”

“அடுத்து வரும் நாள்களில் அவர்மீதும் நடவடிக்கை இருக்கும்.”

“ஆனால், ஓ.பி.எஸ் எம்.எல்.ஏ-வாக இருக்கிறாரே..?”

(குறுக்கிடுகிறார்) “ஆமாம். இனி ஓ.பி.எஸ் சுயேச்சை எம்.எல்.ஏ.”

“கட்சியின் எதிர்காலம் இனி எப்படியிருக்கும்?”

“சட்டத்தின்படி, நியாயத்தின்படி, தர்மத்தின்படிதான் நாங்கள் நடக்கிறோம். எங்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும், 2026 சட்டமன்றத் தேர்தலிலும் அமோக வெற்றிபெறுவோம்!”