கரூர் மாவட்டம், குளித்தலை பேருந்து நிலையத்தில் குளித்தலை சட்டமன்றத் தொகுதி அ.தி.மு.க சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம், குளித்தலை நகர கழகச் செயலாளர் மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது. இந்தப் பொதுக்கூட்டத்தில், கரூர் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் நல்லுசாமி, தலைமைக் கழகப் பேச்சாளர்கள் செல்வம், பழனிக்குமார் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
அப்போது பேசிய எம்.ஆர்.விஜயபாஸ்கர், ``தி.மு.க ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளாகியும், பெண்களுக்கு உரிமைத் தொகை ரூ.1,000 இன்னும் வழங்கப்படவில்லை. முதியோர் உதவித்தொகை ரூ.1,000-த்திலிருந்து ரூ.1,500-ஆக உயர்த்தப்படும் என்று சொன்னார்கள். ஆனால், இன்னும் அதுவும் கொடுக்கவில்லை. அதேபோல், சிலிண்டருக்கு ரூ.100 மானியம் தரப்படும் என்று சொன்னதையும் இதுவரை வழங்கவில்லை. பொய் சொல்லி ஆட்சிக்கு வந்ததுதான் இந்த விடியா தி.மு.க அரசு. தி.மு.க., கூட்டணி பலத்தால் சந்தடி சாக்கில் ஆட்சிக்கு வந்த கட்சி. தொடர்ந்து, இரண்டாவது முறையாக தி.மு.க ஆட்சிக்கு வந்த வரலாறே கிடையாது. 32 ஆண்டுகளுக்குப் பிறகு ஆளுகிற கட்சி, மறுபடியும் ஆட்சியைப் பிடித்த வரலாற்றைப் படைத்த கட்சியாக, ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க விளங்கியது.

குளித்தலை அரசு மருத்துவமனை அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையாக அறிவிக்கப்பட்டு, அங்கு கட்டடங்கள் கட்டப்பட்டன. ஆனால், தற்போது தி.மு.க அரசு கரூர் மாவட்ட அரசு மருத்துவமனையை மீண்டும் அரசுத் தலைமை மருத்துவமனையாக அறிவித்து, `குளித்தலை அரசு மருத்துவமனை அதற்கு இணையாகத் தரம் உயர்த்தப்படும்' என்று கூறியிருக்கிறது. இது, குளித்தலை மக்களை மாவட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி ஏமாற்றும் செயல். மக்கள் நலனைக் கருத்தில் கொள்ளாமல், தனது சுயநலத்துக்காக மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையை மாற்றியிருக்கிறார் செந்தில் பாலாஜி. மீண்டும் அ.தி.மு.க ஆட்சிக்கு வரும்போது, குளித்தலை அரசு மருத்துவமனை மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனையாக அறிவிக்கப்படும்.
அதேபோல், அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில், ரூ.450 கோடி மதிப்பில் மருதூர் கதவணை அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால், ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், 'ரூ.750 கோடி மதிப்பில் மருதூரில் தடுப்பணை அறிவிக்கப்படும்' என தி.மு.க அரசு அறிவித்து இரண்டு ஆண்டுகள் முடிவடையும் நிலையில், தற்போதுவரை அதற்கு நிதி ஒதுக்கி எந்தவிதப் பணியையும் மேற்கொள்ளவில்லை.

அதேபோல், பஞ்சப்பட்டி ஏரிக்கு காவிரி ஆற்றிலிருந்து உபரிநீர் கொண்டுவருவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அ.தி.மு.க ஆட்சியில் ஆய்வுசெய்யப்பட்டது. ஆனால், அதையும் தி.மு.க அரசு கிடப்பில் போட்டிருக்கிறது. தோகைமலைப் பகுதிக்கு காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தில் முறையாக தண்ணீர் வழங்கப்படவில்லை. இவை அனைத்தும் அ.தி.மு.க ஆட்சி அமைந்தவுடன், குளித்தலைப் பகுதி மக்களுக்கு நிறைவேற்றித் தரப்படும்" என்றார்.