Published:Updated:

குழப்பிய விசுவாசி... உதவிய பா.ஜ.க... சிக்கவைத்த சிக்னல் - காருக்குள் கண்ணீர்விட்ட பாலாஜி!

ராஜேந்திர பாலாஜி
பிரீமியம் ஸ்டோரி
News
ராஜேந்திர பாலாஜி

தன்மீது 3 கோடி ரூபாய் மோசடிப் புகார் பதிவு செய்யப்பட்டபோதுகூட அசராமல்தான் இருந்திருக்கிறார் பாலாஜி.

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியைக் கைதுசெய்ய, எட்டு தனிப்படைகள் 19 நாள்கள் நடத்திய ‘சேஸிங்’ ஒருவழியாக முடிவுக்கு வந்திருக்கிறது. ஜனவரி 5 அன்று காலை 10:30 மணியளவில், கர்நாடகாவின் ஹாசன் நகரில் காரில் பயணித்துக்கொண்டிருந்த பாலாஜியை நடுரோட்டில் சுற்றிவளைத்து கைதுசெய்திருக்கிறது தமிழக காவல்துறை. ‘‘பேசாம அவர் சரண்டர் ஆகியிருக்கலாம். ஒருத்தன் குழப்பிவிட்டதைக்கூட புரிஞ்சுக்காம, தேவையில்லாமல் தலைமறைவாகி பெயரைக் கெடுத்துக்கிட்டாரே...’’ என்று ஆதங்கப்படுகிறார்கள் அ.தி.மு.க நிர்வாகிகள். கேரளா, ஏற்காடு, பெங்களூரு என்று பாலாஜி பதுங்கித் திரிந்த கதையெல்லாம் விசாரணையில் ஈடுபட்ட காக்கிகளையே மலைக்கவைத்திருக்கிறது. அடுத்தடுத்து அவர்மீது வழக்குகள் பாயத் தயாராகும் நிலையில், ‘இத்தனை நாள்கள் எங்கே இருந்தார் பாலாஜி... அவரை எப்படி வளைத்தது காவல்துறை?’ என்றெல்லாம் கேள்விகள் எழுந்திருக்கின்றன. இதற்கு விடை தேடிச் சென்றால், த்ரில்லர் சினிமா காட்சிகளை விஞ்சுகிறது பாலாஜியின் பரபர ‘சேஸிங்’ விவகாரம்!

“சிக்குனா செதைச்சுருவாய்ங்க... ஓடிருண்ணே”

தன்மீது 3 கோடி ரூபாய் மோசடிப் புகார் பதிவு செய்யப்பட்டபோதுகூட அசராமல்தான் இருந்திருக்கிறார் பாலாஜி. தன் ஆதரவாளர்களிடம், “எப்படியும் முன்ஜாமீன் வாங்கிடலாம்ப்பா. நீங்க ஆர்ப்பாட்டத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க” என்று டிசம்பர் 17-ம் தேதி ஆர்ப்பாட்டத்துக்கான ஏற்பாடுகளையும் செய்யச் சொல்லியிருக்கிறார். ஆனால், அன்றைய தினம் அவரது முன்ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது. ஆர்ப்பாட்ட மேடையிலிருந்தவரிடம் இந்தத் தகவல் சொல்லப்படவும், பாலாஜியின் முகத்தில் கலவர ரேகைகள் படர்ந்திருக்கின்றன. இந்தத் தருணத்தில்தான், பாலாஜிக்கு நெருக்கமான முன்னாள் எம்.எல்.ஏ ஒருவர் ஏகத்துக்கும் அவரைக் குழப்பிவிட்டதாகச் சொல்கிறது விருதுநகர் அ.தி.மு.க வட்டாரம்.

குழப்பிய விசுவாசி... உதவிய பா.ஜ.க... சிக்கவைத்த சிக்னல் - காருக்குள் கண்ணீர்விட்ட பாலாஜி!

“19 நாள்கள் எங்கேயிருந்தார் பாலாஜி?” என்று அவருக்கு நெருக்கமான விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க சீனியர்கள் சிலரிடம் பேசினோம்... “முன்ஜாமீன் மனு ரத்துசெய்யப்பட்டவுடன் சரண்டராகத்தான் நினைத்தார் பாலாஜி. ஆனால், அவருக்கு நெருக்கமான முன்னாள் எம்.எல்.ஏ ஒருவர், ‘ஸ்டாலினைப் பத்தி நீ கேவலமா பேசுனதால, தி.மு.க-காரனெல்லாம் கொள்ள கோவத்துல இருக்காய்ங்க. சிக்குனா செதைச்சுருவாய்ங்க... நீ ஓடிருண்ணே... சுப்ரீம் கோர்ட்டுல முன்ஜாமீன் வாங்கிடலாம். அதுவரைக்கும் போலீஸ் கண்ணுல சிக்கிராத. எல்லாத்தையும் தம்பி பார்த்துக்குறேன்’ என்று குழப்பிவிட்டார். இதையடுத்து பயந்துபோனவருக்கு தனக்கிருக்கும் சுகர், பி.பி பிரச்னைகளெல்லாம் நினைவுக்கு வரவே... ஜெயில் வாசம் தன்னை உருக்குலைத்துவிடும் என்று பதற்றமாகிவிட்டார். யோசிக்காமல் காரை எடுக்கச் சொன்னவர், தனக்கு நெருக்கமான தி.மு.க அமைச்சர் ஒருவரிடம் போனில் பேசியிருக்கிறார். அதற்குப் பிறகுதான் பிரச்னையே ஆரம்பித்தது.

செல்போன்களை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டு கரூர், கோவை வழியாக கேரளாவுக்குள் சென்ற பாலாஜி, கொங்கு மண்டல அ.தி.மு.க புள்ளி ஒருவரின் ஏற்பாட்டில் பாலக்காட்டில் இரண்டு நாள்கள் தங்கியிருக்கிறார். அதற்குள் எட்டு தனிப்படைகள் எட்டு திசைகளிலும் பாலாஜியைத் தேடிப் புறப்படவே... ஒரே இடத்தில் இருப்பது உகந்ததல்ல என்ற உணர்ந்த பாலாஜி, தனக்கு நெருக்கமான கன்னியாகுமரி மாவட்ட அ.தி.மு.க புள்ளியிடம் பேசியிருக்கிறார். ‘போலீஸ் தேடுதுண்ணே... ஏதாச்சும் பண்ணுங்க’ என்று பாலாஜி பதறவும், திருவனந்தபுரம் அருகே பூவார் என்ற தீவில் தனக்குச் சொந்தமான ஹோட்டலில் பாலாஜியைத் தங்கச் சொல்லியிருக்கிறார் அந்தப் புள்ளி. அங்கு சில நாள்கள் தங்கியிருந்த பாலாஜி, தனக்கு நெருக்கமான ‘திருத்தங்கல்’ அடைமொழி பிரமுகருடன் வெவ்வேறு எண்களிலிருந்து அடிக்கடி பேசியிருக்கிறார். இதற்கிடையே பாலாஜி யாரையெல்லாம் தொடர்புகொள்ள வாய்ப்பு இருக்கிறதோ, அவர்களின் செல்போன்களைக் கண்காணிக்கத் தொடங்கியிருந்தது போலீஸ். இது தெரியாமல், ‘திருத்தங்கல்’ பிரமுகருடன் பாலாஜி அடிக்கடி பேசவும், பூவாரில் அவர் பதுங்கியிருப்பதைக் கண்டுபிடித்தது தனிப்படை. போலீஸ் தன்னை நெருங்குவதை உணர்ந்த பாலாஜி, அங்கேயிருந்தும் தப்பித்து மீண்டும் தமிழகம் வந்திருக்கிறார்.

குழப்பிய விசுவாசி... உதவிய பா.ஜ.க... சிக்கவைத்த சிக்னல் - காருக்குள் கண்ணீர்விட்ட பாலாஜி!

அடைக்கலம் கொடுத்த சிப்ஸ் கடை ஓனர்!

கேரளாவிலிருந்தபோது, கோவையைச் சேர்ந்த பா.ஜ.க பிரமுகர் ஒருவரைத் தொடர்புகொண்டு அவரின் ஏற்பாட்டில், ஏற்காடு அருகேயுள்ள கிராமத்தில் சிப்ஸ் கடைக்காரர் ஒருவரின் வீட்டில் பாலாஜி அடைக்கலமாகியிருக்கிறார். தான் செல்லும் இடமெல்லாம் தன்னைச் சந்திப்பவர்களிடமிருந்து ஒரு செல்போன், ஒரு சிம்கார்டைப் பெறுவது பாலாஜிக்கு வழக்கமாகியிருக்கிறது. இதனால்தான், வெவ்வேறு நம்பர்களிலிருந்து அவரால் பேச முடிந்திருக்கிறது. ஏற்காடு கிராமத்தில் அவர் பதுங்கியிருப்பதைக் கண்டுபிடித்த மதுரை மண்டல காவல்துறை, உடனடியாக சேலம் மாவட்ட காவல்துறையை ‘அலர்ட்’ செய்திருக்கிறது. அதற்குள் அங்கிருந்தும் கிளம்பிய பாலாஜி, கோவைக்கு வந்துவிட்டார். அவரைத் தேடிச் சென்ற சேலம் போலீஸார் வெறும் கையுடன் திரும்பியிருக்கிறார்கள். பாலாஜிக்கு அடைக்கலம் கொடுத்த சிப்ஸ் கடை ஓனரும் ‘எஸ்கேப்.’

போக்கிடம் தெரியாமல் கலங்கிய பாலாஜி, கிருஷ்ணகிரி அ.தி.மு.க பிரமுகரைத் தொடர்புகொண்டு, ‘அண்ணே, எப்படியாச்சும் காப்பாத்திவிடுண்ணே’ என்று கேட்டிருக்கிறார். அதற்கு அந்தப் பிரமுகர், ‘உன்னை யாருய்யா ஓடச் சொன்னது... கண்டவன் பேச்சைக் கேட்டுக்கிட்டு இப்படி பயந்து ஓடாத. பேசாம பக்கத்துல இருக்குற கோர்ட்டுல சரண்டராயிடு. வழக்கை நாம பார்த்துக்கலாம்’ என்று கடுகடுத்திருக்கிறார். ஆனால், இதையெல்லாம் யோசிக்கும் மனநிலையிலேயே இல்லை அவர். அந்த அளவுக்குப் பதற்றம் அவரை ஆட்கொண்டிருந்தது.

“வி ஆர் வித் யூ...” உதவிய பா.ஜ.க

சொந்தக் கட்சிக்காரர்கள் கைவிட்ட நிலையில், தமிழக பா.ஜ.க-வின் துணைத் தலைவர் ஒருவருக்கு போன் செய்திருக்கிறார் பாலாஜி. அவர் மூலமாக, கர்நாடகாவைப் பூர்வீகமாகக்கொண்ட பா.ஜ.க தலைவர் ஒருவரின் தொடர்பு கிடைத்திருக்கிறது. பாலாஜியிடம் பேசிய அந்தத் தலைவர், ‘வி ஆர் வித் யூ பாலாஜி... டோன்ட் வொர்ரி. பேசாம கர்நாடகா போயிடுங்க... உங்களுக்குப் பாதுகாப்பான இடம் அதுதான். பெயில் கிடைச்ச பிறகு நீங்க வெளியே வரலாம்’ என்று ஆறுதலாகச் சொல்லியிருக்கிறார். கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பா.ஜ.க தலைவர் ராமகிருஷ்ணன் மூலமாக ஏற்பாடுகள் பரபரத்திருக்கின்றன. அதற்குள் கோவையிலிருந்து கிளம்பிய பாலாஜி, பதற்றத்தில் திசை தெரியாமல் சுற்றி ஜோலார்பேட்டையை வந்தடைந்திருக்கிறார். பின்னர், கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து ஹுண்டாய் காரில் வந்த சிலர் ஓசூருக்கு அவரை அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அங்கேயிருந்து தன் மைத்துனரான நாகேஷ் மூலமாக, ஸ்கோடா காரில் கர்நாடகாவுக்குப் பாதுகாப்பாக அனுப்பி வைத்திருக்கிறார் ராமகிருஷ்ணன்.

கர்நாடகாவில் பெங்களூரு, மைசூரு ஏரியாக்களில் மாறி மாறித் தங்கிய பாலாஜி, கடைசியாக ஹாசன் மாவட்டத்துக்குப் பயணமாகியிருக்கிறார். அங்கேயிருந்து மங்களூரு செல்வதுதான் பாலாஜியின் திட்டம். ஜனவரி 6-ம் தேதி அவரது முன்ஜாமீன் மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்தது. இதற்கு முந்தைய நாள்தான் காவல்துறை அவரைக் கைது செய்துவிட்டது. கைது செய்யப்படுவதற்கு சில மணி நேரத்துக்கு முன்பாகக்கூட நாகேஷின் மனைவியின் செல்போனிலிருந்து, தன் வழக்கறிஞர்களிடம் பேசியிருக்கிறார் பாலாஜி. ‘சார்... கண்டிப்பா முன்ஜாமீன் கிடைச்சுடும். கவலையேபடாதீங்க’ என்று அவர்கள் தைரியம் கொடுத்தவுடன்தான், ‘பா.ஜ.க ஆட்சி செய்கிற மாநிலத்தில் நம்மை யார், என்ன செய்துவிட முடியும்?’ என்று அலட்சியமாக இருந்திருக்கிறார். சுற்றியிருந்தவர்கள் ஆளாளுக்குக் குழப்பியதைப் புரிந்துகொள்ளாமல், அவர்கள் சொன்னதற்கெல்லாம் தலையாட்டியதால்தான், அவர் கைதுசெய்யப்பட்டபோது கட்சியிலிருந்து ஒரு கண்டன அறிக்கைகூட வெளிவராத நிலை ஏற்பட்டது’’ என்றார்கள்.

சிக்கவைத்த ‘சிக்னல்’ - காருக்குள் கண்ணீர்விட்ட பாலாஜி!

பாலாஜியைக் கைதுசெய்த தனிப்படை போலீஸார் சிலரிடம் பேசினோம். ‘‘பாலாஜிக்கு நெருக்கமான சுமார் 600 பேரின் செல்போன் நம்பர்களைக் கண்காணித்தோம். இதில், பா.ஜ.க பிரமுகர் ராமகிருஷ்ணனிடம், பாலாஜி தஞ்சமடைந்திருப்பது தெரியவந்தது. கடைசியாக ஓசூரிலிருந்து பாலாஜி பேசியிருப்பது செல்போன் ‘சிக்னல்’ மூலம் கண்டறியப்பட்டது. இதையே நூலாகப் பிடித்து ராமகிருஷ்ணனின் உறவினர் நாகேஷ் ஓட்டிய ஸ்கோடா கார் எண் மற்றும் அதன் ஃபாஸ்ட்டேக் எண்ணைக் கண்டறிந்தோம். ஜனவரி 4-ம் தேதி மாலை ஹாசன் அருகேயுள்ள சாந்தி கிராம டோல்கேட்டை அந்த கார் கடந்து சென்றிருப்பதை ‘ஃபாஸ்ட்டேக்’ காட்டிக்கொடுத்துவிட்டது. உடனே ஹாசன் நகருக்குள்தான் அவர் சென்றிருக்க வேண்டும் என்று யூகித்து, கர்நாடகா போலீஸ் உதவியுடன் சிசிடிவி கேமராக்கள் மூலம் கார் சென்ற வழிகளைக் கண்டறிந்தோம். அன்று இரவே அவரது இருப்பிடம் தெரிந்துவிட்டது. ஆனாலும், அவரைச் சுற்றிலும் ஆட்கள் இருந்ததால், நள்ளிரவில் கைதுசெய்ய வேண்டாம் என்று முடிவெடுத்தோம். அடுத்தநாள் காலை ஹாசனிலுள்ள கோயிலில் வழிபாடு செய்துவிட்டு, நாகேஷுடன் அவர் மருத்துவனைக்குச் சென்றபோதுதான், காரைச் சுற்றிவளைத்து கைதுசெய்தோம்.

குழப்பிய விசுவாசி... உதவிய பா.ஜ.க... சிக்கவைத்த சிக்னல் - காருக்குள் கண்ணீர்விட்ட பாலாஜி!

‘நாங்க தமிழ்நாடு போலீஸ். உங்களைக் கைதுசெய்ய வந்திருக்கிறோம்’ என்று சொன்னவுடன், சற்று பதற்றமானாலும் அமைதியாக எங்களுக்கு ஒத்துழைத்தார் பாலாஜி. தொடர்ந்து ஹாசன் நீதிமன்றத்தில் ‘டிரான்சிட் வாரன்ட்’ பெற்றுக்கொண்டு பாலாஜியுடன் காரில் தமிழகம் நோக்கிப் புறப்பட்டோம். அப்போது கையெடுத்து சாமி கும்பிட ஆரம்பித்தவர், தமிழக எல்லைக்குள் நுழையும் வரை கும்பிட்ட கரங்களை இறக்கவே இல்லை. தமிழக எல்லைக்குள் வந்தவுடன், அவரை காரிலிருந்து போலீஸ் வேனில் ஏறச் சொன்னபோது, அவர் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடியது. ‘எப்படி இருந்தவன் சார் நான்... எல்லாம் என் நேரம்’ என்று முணுமுணுத்தபடியே வேனில் ஏறினார் பாலாஜி. அவர் பயணித்த ஸ்கோடா கார் டிக்கியிலிருந்து 500, 2,000 ரூபாய் கட்டுகள் கைப்பற்றப்பட்டதுடன், அவர் தலைமறைவாக இருப்பதற்கு உதவிய பா.ஜ.க பிரமுகர்கள் ராமகிருஷ்ணன், நாகேஷ் ஆகியோரும் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள்’’ என்றார்கள்.

ஜனவரி 5-ம் தேதி நள்ளிரவு விருதுநகருக்கு அழைத்துவரப்பட்ட ராஜேந்திர பாலாஜியிடம் மதுரை சரக டி.ஐ.ஜி காமினி, விருதுநகர் மாவட்ட எஸ்.பி மனோகரன் ஆகியோர் மூன்று மணி நேரம் விசாரணை நடத்தினார்கள். ‘‘அப்பவே ஆஜராயிருக்கலாமே சார்?’’ என்று போலீஸார் கேட்டதற்கு, ‘‘எல்லாம் கூட இருக்குறவய்ங்க பேச்சைக் கேட்டதால வந்த வினை’’ என்று விரக்தியாகப் பதில் சொன்னாராம் பாலாஜி. தொடர்ந்து மருத்துவப் பரிசோதனை முடிந்து, ஸ்ரீவில்லிபுத்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பரம்வீர் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது, ‘‘உள்ளூரிலேயே தங்கியிருந்து போலீஸ் விசாரணைக்கு பாலாஜி ஒத்துழைப்பு அளிப்பார். அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்” என்று பாலாஜியின் வழக்கறிஞர் வாதாடியிருக்கிறார். அதற்கு நீதிபதி, “பிறகு ஏன் ஓடி ஒளிந்தீர்கள்?” என்று கேட்கவும், பாலாஜி தரப்பால் எந்த பதிலும் சொல்ல முடியவில்லை. திருச்சி மத்திய சிறையில் ஜனவரி 20-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ள பாலாஜி மீது, ஆவின் நிர்வாகத்தில் நடந்துள்ள பல்வேறு முறைகேடுகள் தொடர்பாக வழக்குகளை பாய்ச்சத் தயாராகிறது தி.மு.க அரசு. இந்த வழக்குகளை எதிர்கொள்வதிலேயே இனி அவருக்கு நேரம் சரியாக இருக்கும் என்கிறார்கள் விவரமறிந்த காக்கிகள்.

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் பலர்மீது ரெய்டுகள் ஏவப்பட்டாலும்... சரோஜா, நிலோபர் கபில் மீது மோசடி குற்றச்சாட்டுகள் பதியப்பட்டாலும்... முதன்முறையாக ராஜேந்திர பாலாஜியைக் கைதுசெய்து அ.தி.மு.க கூடாரத்துக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்திருக்கிறது தி.மு.க. ஜனவரி 5-ம் தேதி சட்டமன்றத்தைப் புறக்கணித்துவிட்டு வெளியே வந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது” என்றார். அடுத்த சில மணி நேரத்திலேயே, ‘ராஜேந்திர பாலாஜி கைது’ என்கிற தகவல் வெளியானது. ‘எளிதாக முடிந்திருக்கவேண்டிய ஒரு விவகாரத்தை, பாலாஜி இடியாப்பச் சிக்கலாக்கி, இறுதியில் கட்சிக்கும் அவப்பெயரை ஏற்படுத்திவிட்டார்’ என்பதே அ.தி.மு.க நிர்வாகிகள் பலரது முணுமுணுப்பாக இருக்கிறது!