Published:Updated:

இரட்டையர் தலைமையில் நீண்டதூரம் பயணித்துவிட்டோம்!

உதயகுமார்...
பிரீமியம் ஸ்டோரி
உதயகுமார்...

- சசி விவகாரத்தில் நழுவும் உதயகுமார்...

இரட்டையர் தலைமையில் நீண்டதூரம் பயணித்துவிட்டோம்!

- சசி விவகாரத்தில் நழுவும் உதயகுமார்...

Published:Updated:
உதயகுமார்...
பிரீமியம் ஸ்டோரி
உதயகுமார்...

அ.தி.மு.க பொதுச்செயலாளர் பதவியிலிருந்து சசிகலாவை நீக்கியது செல்லும்’ என்று நீதிமன்றம் தீர்ப்பு அளித்ததை இனிப்பு வழங்கிக் கொண்டாடியிருக்கிறது அ.தி.மு.க கூடாரம். ஆனாலும், உட்கட்சி கோஷ்டிப்பூசல்கள் தீர்ந்ததாகத் தெரியவில்லை. இந்த நிலையில்தான், ‘சசிகலா முதல்வராக வேண்டும்’ என்று முதன்முதலில் ஜெயலலிதா சமாதியில் சூளுரைத்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்...

“சசிகலா தொடர்ந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டதே?”

“மக்கள் எங்களுக்கு அங்கீகாரம் கொடுத்திருக்கிறார்கள். தேர்தல் ஆணையமும் ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் வசம்தான் இரட்டை இலை சின்னத்தைக் கொடுத்து அங்கீகரித்திருக்கிறது. இருவர் தலைமையில் நாங்கள் செல்லும் பாதை சரியானது என்பதைத்தான் நீதிமன்றமும் இப்போது உறுதிப்படுத்தியிருக்கிறது.”

“ `நிர்வாகிகள்தான் சசிகலாவை புறக்கணிக்கிறார்கள், தொண்டர்கள் ஆதரிக்கிறார்கள்’ என்று ஒரு பேச்சு இருக்கிறதே?”

“பொதுக்குழுவில் தீர்மானம் போட்டு, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வாகிவிட்டனர். அம்மாதான் நிரந்தரப் பொதுச்செயலாளர் என்பதால் அந்தப் பொறுப்பையே எடுத்துவிட்டு, ஒட்டுமொத்தமாகக் கட்சி விதிகளை மாற்றிவிட்டோம். இதைத் தேர்தல் ஆணையமும் அங்கீகரித்துள்ளது. தொண்டர்களும் ஏற்றுக்கொண்டனர். எனவே, இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை!”

“எடப்பாடி, பன்னீர் இடையே நடக்கும் பனிப்போர் எப்போது முடிவுக்கு வரும்?”

“அப்படியெல்லாம் ஒன்றுமில்லை.. முடிவுகளை இருவரும் சேர்ந்தே எடுக்கிறார்கள், இருவரையும் வேறுபடுத்திப் பார்க்க முடியாது. 40 வருடங்களில் கிடைக்கும் ஃபேஸ் வேல்யூ, அண்ணன் எடப்பாடிக்கு நான்கே வருடங்களில் கிடைத்துவிட்டது. அதேபோல், அண்ணன் ஓ.பி.எஸ்-போல எளிமையான மனிதரைக் காணவே முடியாது. ஒருசில விஷயங்களை இருவரும் தனித்தனியாக முன்னெடுத்தாலும், முடிவு என்பது ஒன்றாகத்தான் இருக்கும்.”

“ஆனால் நீங்களே பன்னீர், எடப்பாடி என அணி மாறிக்கொண்டேயிருப்பதாக விமர்சனம் இருக்கிறதே?”

“இரண்டு பேரும் எனக்குத் தலைவர்கள்தான். இருவர் சொல்வதையும் கேட்டு நடப்பவன் நான். இரண்டு பேருக்குமே வேண்டப்பட்டவன் நான். இதில் அணி எங்கே வந்தது... சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல் சிலர் எனக்கு கலர் கொடுக்கிறார்கள். பன்னீரும் எடப்பாடியும் எனது இரு கண்கள்!”

“சசிகலா ஒரு தொண்டராகவாவது கட்சிக்குள் வர வாய்ப்பு இருக்கிறதா?”

“இரட்டைத் தலைமையில் நீண்ட தூரம் பயணித்துவிட்டோம். நீங்கள் கேட்கும் விஷயத்தில் தலைமைதான் முடிவெடுக்க வேண்டும்.”

“அ.தி.மு.க பிரதான எதிர்க்கட்சியாக இருந்தாலும், பா.ஜ.க-தான் உண்மையான எதிர்க்கட்சி என்று அந்தக் கட்சியினர் பேசுகிறார்களே?”

“பா.ஜ.க-வுக்குள்ளேயே தமிழிசை செளந்தரராஜன், எல்.முருகன் ஆகியோரின் அணுகுமுறைகளுக்கும், அண்ணாமலையின் அணுகுமுறைக்கும் வேறுபாடுகள் இருக்கின்றன. அப்படியிருக்கும்போது இரு கட்சிகளுக்கான அணுகுமுறை மட்டும் ஒரே மாதிரி எப்படி இருக்கும்... சில விவகாரங்களுக்காகப் போராட்டம் நடத்துவோம், சிலவற்றில் அறிக்கை மட்டுமே கொடுப்போம். சிலவற்றுக்கு, சட்டமன்றத்தில் வெளிநடப்பு செய்கிறோம். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று பேசுவது எங்கள் வழக்கமல்ல.”

“ஆளுநரின் தேநீர் விருந்தை தி.மு.க புறக்கணித்திருக்கிறது. இந்த மோதலை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தை நாங்கள் ஜனாதிபதி வரை கொண்டுசென்றோம். ஆனால், இவர்களால் கவர்னரையே தாண்ட முடியவில்லை. மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க தாமதித்த நிலையில், முதல்வராக இருந்த எடப்பாடியே தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அமல்படுத்தினார். ‘கவர்னர் தேவையில்லை’ என்று விமர்சனம் செய்வதெல்லாம் வீண். ஐம்பது ஆண்டுகளாக ‘ஆட்டுக்குத் தாடியும் நாட்டுக்கு கவர்னரும் எதற்கு?’ என்று கேட்டுக்கொண்டுதான் இருக்கிறோம். அதற்கு ஒருபோதும் விடை கிடைக்காது.”

இரட்டையர் தலைமையில் நீண்டதூரம் பயணித்துவிட்டோம்!

‘திராவிடக் கட்சிகள் மட்டும்தான் தமிழகத்தை ஆள முடியும்’ என்கிறார் செங்கோட்டையன். ‘அ.தி.மு.க ஆட்சிதான் ராமராஜ்ஜியம்’ என்கிறார் செல்லூர் ராஜூ. எது உண்மை?

“அ.தி.மு.க எப்போதுமே திராவிட இயக்கம்தான். எங்கள் கொள்கை அண்ணாயிசம். அந்த அண்ணாயிசத்தில் கேப்பிடலிசம், கம்யூனிசம், சோஷலிசம் எல்லாமே அடங்கியிருக்கின்றன. 69 சதவிகித இட ஒதுக்கீட்டைச் சட்டமாக இயற்றி, அதை அரசியலமைப்புச் சட்டம் 9-வது அட்டவணையில் இடம்பெறவைத்து, சட்டப் பாதுகாப்பும் பெற்றுக்கொடுத்து இந்தியாவுக்கே உதாரணமாகத் திகழ்ந்தார் ஜெயலலிதா. இதைப் பின்பற்றித்தான் 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டை எடப்பாடி அமல்படுத்தினார். உள்ளாட்சிகளில் 50 சதவிகிதம் பெண்களுக்கு ஒதுக்கியதும் ஜெயலலிதாதான். எனவே, அ.தி.மு.க மட்டுமே உண்மையான திராவிட இயக்கம்.”

“ `இந்தியாவின் இணைப்பு மொழியாக இந்தி இருக்க வேண்டும்’ என்ற அமித் ஷாவின் கருத்து பற்றி..?”

“அ.தி.மு.க-வைப் பொறுத்தவரை எப்போதுமே இரு மொழிக் கொள்கையைத்தான் கடைப்பிடிக்கிறோம். தமிழ் தாய்மொழி, ஆங்கிலம் தொடர்பு மொழி. இந்தியை விரும்பிப் படிப்பவர்களுக்கு எந்தத் தடையும் இல்லை. அதேசமயம் இந்தியைத் திணித்தால் எதிர்ப்போம்.”

“லஞ்ச ஒழிப்புத்துறையினர் உங்கள் இடங்களிலும் ரெய்டு நடத்துவார்கள் என்று தகவல்கள் வருகின்றனவே?”

“பொது வாழ்வில் இருப்பவர்கள் விமர்சனங்கள், பழிவாங்கும் நடவடிக்கைகள் என எல்லாவற்றையும் எதிர்கொண்டுதான் ஆக வேண்டும். அதைக் கடந்து செல்ல மனவலிமை முக்கியம். அம்மாவுக்கு ஏற்படாத துன்பமா எங்களுக்கு ஏற்பட்டுவிடப்போகிறது!”

“தி.மு.க ஆட்சியமைத்து ஓராண்டு நெருங்கவிருக்கிறது. இந்த ஆட்சியை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் திணறுகிறார்கள். கடன் சுமை அதிகரிக்கிறது. சொத்து வரியை 150 சதவிகிதமும், காலிமனைக்கு 100 சதவிகிதமும் வரியை உயர்த்தி மக்கள்மீது பொருளாதாரப் போரைத் தொடர்ந்திருக்கிறார்கள். தாலிக்குத் தங்கம், மகளிருக்கான மானிய விலை வாகனத் திட்டங்கள் நிறுத்தப்பட்டுவிட்டன. விலையில்லா ஆடு, மாடு, மடிக்கணினி, சைக்கிள், வேட்டி, சேலை ஆகிய திட்டங்களெல்லாம் என்னவாகின என்றே தெரியவில்லை. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், வார்த்தையில் மட்டுமே சொர்க்கத்தைக் காட்டுகிறது தி.மு.க அரசு!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism