சமூகம்
அலசல்
Published:Updated:

ஞானியின் காலில் விழுவது போன்றதுதான் எடப்பாடியார் காலில் விழுவதும்! - ‘சிலிர்க்கும்’ செல்லூர் ராஜூ

செல்லூர் ராஜூ
பிரீமியம் ஸ்டோரி
News
செல்லூர் ராஜூ

பொதுச்செயலாளரின் தலைமையை ஏற்று, யார் வந்தாலும் ஏற்றுக்கொள்வோம். ஆனால், அதைப் பொதுச்செயலாளர்தான் முடிவுசெய்ய வேண்டும்

அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அதேசமயம் ‘கட்சி சீனியர்கள் சிலருக்கும், எடப்பாடிக்கும் இடையே ஈகோ உரசல்கள் இருக்கின்றன’ என்கிற கருத்தும் அரசியல் அரங்கில் அலையடிக்கிறது. இந்த நிலையில், முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க அமைப்புச் செயலாளருமான செல்லூர் கே.ராஜூவிடம் சில கேள்விகளை முன்வைத்தேன்...

“எடப்பாடியார் பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்றதும் எம்.ஜி.ஆர்-போல தொப்பி, கண்ணாடி அணிந்துகொண்டதை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“எடப்பாடியாரை, புரட்சித்தலைவர் வழி வந்தவராகத் தொண்டர்கள் பார்க்கிறார்கள். அந்த உற்சாக மிகுதியில்தான் அப்படிச் செய்திருக்கிறார்கள். அது ஆத்மார்த்தமாகப் பொருந்திவிட்டது.”

“தன் காலில் விழுகிறவர்களைத் தடுக்காமல் ரசிக்கிறாரே எடப்பாடி?”

“துரைமுருகன், நேரு போன்ற சீனியர்களே பதவிக்காக உதயநிதியின் காலில் மட்டுமல்ல, அவருடைய மகனின் காலில் விழவும் தயாராக இருக்கிறார்கள். அதையெல்லாம் கேட்க மாட்டீர்கள்... முதல்வராக இருந்தவர், மக்கள் சக்தியால் ஏற்றுக்கொள்ளப்பட்டவரிடம் அ.தி.மு.க-வினர் ஆசீர்வாதம் வாங்குவதில் என்ன தவறு இருக்கிறது?”

“சுயமரியாதை பேசுகிற கட்சியில் இருந்துகொண்டு, தலைவர்களின் காலில் விழுவது சரி என்கிறீர்களா?”

“அன்பு மிகுதியில் செய்வதைத் தவறு என்றோ அடிமை முறை என்றோ சொல்ல முடியாது. `காலில் விழுந்தால்தான் உனக்கு எதுவும் செய்வேன்’ எனச் சொன்னால், அது தவறு என்பேன். தொண்டர்கள் தங்கள் அன்பை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியாமல் காலில் விழுகிறார்கள். அதில் தப்பு இல்லையே... ஞானியின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவதைப் போன்றதுதான் எடப்பாடியார் காலில் விழுவதும். அதைக் கொச்சைப்படுத்தக் கூடாது.”

“ஆனால் தொண்டர்கள் ஏற்றுக்கொண்டதுபோல கட்சியின் சீனியர்கள் எடப்பாடியை முழுமையாக ஏற்றுக்கொண்டதாகத் தெரியவில்லையே?”

“எல்லோரும் ஏற்றுக்கொண்டு, அன்பை வெளிப்படுத்தித்தானே ஆக வேண்டும்... ‘நான் தலைவர் காலத்திலிருந்து கட்சியில் இருக்கும் சீனியர்’ என உழைக்காமல் சும்மா இருந்தால், எப்படி மரியாதை கிடைக்கும்... உழைத்தால், கட்சிக்கு விசுவாசமாக இருந்தால் யாராலும் ஒருவரைப் புறக்கணிக்க முடியாது.”

செல்லூர் கே.ராஜூ
செல்லூர் கே.ராஜூ

“எடப்பாடி தலைவரானதை நீங்கள், `உழைப்பு’ என்கிறீர்கள். ஆனால், எதிரணியினர், `துரோகம்’ என்கிறார்களே?”

“குறை சொல்பவர்கள் ஆயிரம் சொல்லத்தான் செய்வார்கள். காந்தியைக் குறை சொல்லவில்லையா... ஏன் ஆண்டவனையே குறை சொல்கிறார்களே... துரோகிகளிடமிருந்து கட்சியையும் மக்களையும் காப்பாற்றியிருக்கிறார் எடப்பாடி.”

“ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் வந்தால், அ.தி.மு.க-வில் இணைத்துக்கொள்வீர்களா?”

“பொதுச்செயலாளரின் தலைமையை ஏற்று, யார் வந்தாலும் ஏற்றுக்கொள்வோம். ஆனால், அதைப் பொதுச்செயலாளர்தான் முடிவுசெய்ய வேண்டும். அவரைச் சேர்த்துக்கொள்ளலாமா, வேண்டாமா என்பது பொதுச்செயலாளர் கையில்தான் இருக்கிறது.”

“சட்டமன்றத்தில், அமைச்சர் தங்கம் தென்னரசு உங்களைப் பற்றிய ஒரு புலிக்கதை சொன்னாரே..?”

“(சிரிக்கிறார்). தாய்லாந்துக்குச் சென்றபோது எடுத்த புகைப்படம் அது. டூர் போன இடத்தில் புலியின் வாலைப் பிடித்தவாறு எடுத்த போட்டோவை சோஷியல் மீடியாவில் பதிவிட்டிருந்தேன். ஆனால், அதை எல்லோரும் கேலி செய்கிறார்கள். அரசியல் என்றாலே ஏச்சும் பேச்சும் இருக்கத்தானே செய்யும்?”

“தமிழ்நாடு பா.ஜ.க-வுக்கும், அ.தி.மு.க-வுக்கும் இடையிலான மோதல் இன்னும் தீர்ந்தபாடில்லையே?”

“பா.ஜ.க-விலிருந்து அகில இந்தியத் தலைமை அழைத்துப் பேசிவிட்டார்கள். எங்கள் பொதுச்செயலாளரும் ‘கூட்டணி தொடரும்’ என்று சொல்லிவிட்டார். எனவே, அந்தப் பிரச்னை முடிந்துவிட்டது.”

“இப்போதும், வி.சி.க-வுக்கு நீங்கள் விடுத்த கூட்டணி அழைப்பு அப்படியே இருக்கிறதா?”

“ஏழை, எளிய, பாட்டாளி, பட்டியலின மக்களுக்காக எங்களைப்போலவே திருமாவளவன் தன்னை அர்ப்பணித்திருக்கிறார். கடந்தகாலத்தில் அவருடைய இயக்கமும், நாங்களும் கூட்டணி அமைத்திருக்கிறோம். அதைவைத்துத்தான் சொன்னேன். ஆனால், கூட்டணி குறித்து இப்போது உறுதியாக எதையும் சொல்ல முடியாது. ஒவ்வொரு கட்சிக்கும் வெற்றிதான் முக்கியம். எனவே, அதற்காக யாருடன் கூட்டணி அமைத்தால் நல்லது எனத் தேர்தல் நேரத்தில் தோன்றுகிறதோ, அப்போது அது குறித்து முடிவுசெய்வோம்.”

“கூட்டுறவுத்துறையின் முன்னாள் அமைச்சரான நீங்கள், இப்போது அந்தத் துறையின் செயல்பாட்டை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“கூட்டுறவுத்துறையின் பொற்காலம் என்றால் அது அ.தி.மு.க ஆட்சிக்காலம்தான். இதை நான் சொல்லவில்லை. தி.மு.க தொண்டர்கள், அதிகாரிகள் என எல்லோருமே சொல்கிறார்கள். ஆனால், தற்போது அந்தத் துறைக்கான உரிய நிதியை ஒதுக்காமல் சிதைத்துவைத்திருக்கிறார்கள்.”

“ஆனால், இது குறித்து எங்குமே நீங்கள் பேசியதாகத் தெரியவில்லையே?”

“மானியக் கோரிக்கையின்போது பேசினேனே... ஆனால், அது வெளியே தெரியாமல் ஆளுங்கட்சியினர் தடுத்துவிடுகிறார்கள். நாம் ஒரு குறை சொன்னால், அதற்கு 20 அமைச்சர்கள் பதில் சொல்கிறார்கள்.”

“சட்டமன்றத்தில் நேரம் தரவில்லையென்றால், பொதுக்கூட்டங்களில் பேசலாம்தானே?”

“எங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ, அங்கெல்லாம் பேசத்தான் செய்கிறோம். பிறகென்ன... தி.மு.க அரசாங்கத்துக்கு பயந்துகொண்டா இருக்கிறோம்?!”