அரசியல்
அலசல்
Published:Updated:

“பா.ஜ.க-வின் ‘சவுண்டு’க்கெல்லாம் பதில் சொல்லவேண்டிய அவசியமில்லை! - செல்லூர் ராஜூ ஓப்பன் டாக்

செல்லூர் ராஜூ
பிரீமியம் ஸ்டோரி
News
செல்லூர் ராஜூ

மத்தியில் ஆட்சியில் இருக்கும் அவர்கள் நாடாளுமன்றத் தேர்தலுக்காகக் கொஞ்சம் துள்ளித்தான் பேசுவார்கள். அ.தி.மு.க., சாதி-மதம் பார்க்காத கட்சி

அ.தி.மு.க-வின் பேட்டி நாயகன் வடக்கே ஜெயக்குமார் என்றால், தெற்கே செல்லூர் கே.ராஜூ.

ஒற்றைத் தலைமை விவகாரத்தையொட்டி கொஞ்சம் அடக்கி வாசித்தவர், இப்போது மறுபடியும் ஆரம்பித்துவிட்டார். தி.மு.க அரசின் மீதும், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மீதும் கடுமையான விமர்சனங்களை வைத்துக்கொண்டிருக்கும் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ-விடம் சில கேள்விகள்...

“நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மதுரை மாநகராட்சி டெண்டரில் தலையிடுவதாகக் கூறுகிறீர்கள். ஆதாரம் இருந்தால் வெளியிடலாமே?”

“எனக்கென்ன தெரியும்... அமைச்சராக இருக்கும்போதே நான் டெண்டர் பக்கம் போனது இல்லை. தற்போது டெண்டரில் தலையிடுவதாக மாநகராட்சியின் தி.மு.க கவுன்சிலர்கள் சொல்லித்தான் எனக்குத் தெரியும். மாநகராட்சியின் எல்லாப் பணிகளிலும் தலையிட்டு கமிஷன் கேட்பதாக தி.மு.க-வினர்தான் சொல்கிறார்கள்.”

“அ.தி.மு.க மூத்த நிர்வாகியான நீங்கள், தி.மு.க-வினர் சொல்வதை அப்படியே நம்புவது சரியா?”

“தவறு நடப்பதை யார் சொன்னால் என்ன... நான் சொன்னால்தான் ‘வேல்யூ’ இருக்குமென்று என்னை கவுன்சிலர்கள் அணுகினார்கள். அமைச்சரின் தலையீடு எந்த அளவுக்கு இருந்தால் தி.மு.க-வினரே இதை என்னிடம் வந்து சொல்வார்கள் என்று பார்த்துக்கொள்ளுங்கள். மேயரைக் கண்காணிக்கவே ‘சூப்பர்வைசர்’ போட்டிருக்கிறார் அமைச்சர். இதுபோல எங்கா வது நடக்குமா... மதுரையை ஆட்டிப்படைக்கிறார் பி.டி.ஆர். சரி... இருந்துவிட்டுப் போகட்டும்... அப்படியாவது மதுரைக்கு ஏதாவது செய்யுங்களேன்.”

“அமைச்சர்மீது காழ்ப்புணர்ச்சியினால்தான் நீங்கள் இப்படிப் பேசுவதாகக் கூறுகிறார்களே?”

“எனக்கு யார்மீதும் காழ்ப்புணர்ச்சி கிடையாது. அமைச்சரின் தந்தை மதுரைக்குப் பாலம் கட்டிக் கொடுத்தார். அதை நாங்கள் இப்போதும் `பி.டி.ஆர்.பாலம்’ என்றுதான் அழைக்கிறோம். ஆனால், நிதியமைச்சராக இருந்தும் மதுரைக்கு அஞ்சு பைசாவுக்குக்கூடத் திட்டங்களைச் செய்ய வில்லை என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடுதான் இது.”

“பா.ஜ.க-வின் ‘சவுண்டு’க்கெல்லாம் பதில் சொல்லவேண்டிய அவசியமில்லை! - செல்லூர் ராஜூ ஓப்பன் டாக்

“பத்தாண்டுக்காலம் ஆட்சியிலிருந்த நீங்கள், தற்போது மதுரையில் மழைநீர் தேங்குவதற்கு தி.மு.க அரசைக் கைகாட்டுவது நியாயமா?”

“ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் நாங்கள் பணி மேற்கொண்ட இடத்தில் மழைநீர் தேங்கவில்லை. எங்கள் ஆட்சி நிறைவடைந்து, 15 மாதங்கள் ஆகிவிட்டன. நாங்கள் தொடங்கிய திட்டங்களை அப்படியே அந்தரத்தில் போட்டுவைத்திருக்கிறது தி.மு.க அரசு. அதனால்தான் நகரம் முழுவதும் மழைநீர் தேங்குகிறது. தி.மு.க-வுக்கு ஆட்சி நடத்தத் தெரியவில்லை.”

“ஆனால், நீங்கள் சரியாக ஆட்சி நடத்தாததால்தான் மாநிலத்தின் கடன் சுமை ஏறிவிட்டதாக தி.மு.க கூறுகிறதே?”

“சும்மா ஏதாவது சொல்வார்கள்... நிதிச்சுமை இருந்தபோதும் நாங்கள் சிறப்பாகப் பல திட்டங் களைச் செய்தோமே... தற்போதுகூட மத்திய அரசு சொல்லித்தான் மின் கட்டணத்தை உயர்த்தியதாகக் கூறுகிறார்கள். எங்களிடமும்தான் மத்திய அரசு சொன்னது. நாங்கள் கட்டணத்தை உயர்த்த வில்லையே... ஆட்சியை முறையாக நடத்தாமல், தங்களின் விஞ்ஞான ஊழல் திறமையை, ஆவினில் அரை லிட்டர் பாலுக்கு 70 மில்லி உறிஞ்சி வெளிக் காட்டுகிறார்கள்.”

“அ.தி.மு.க-வைவிட தாங்கள்தான் தி.மு.க அரசின் நடவடிக்கையை தைரியமாக எதிர்ப்பதாக பா.ஜ.க-வினர் கூறுகிறார்களே?”

“மத்தியில் ஆட்சியில் இருக்கும் அவர்கள் நாடாளுமன்றத் தேர்தலுக்காகக் கொஞ்சம் துள்ளித்தான் பேசுவார்கள். அ.தி.மு.க., சாதி-மதம் பார்க்காத கட்சி. எங்களை எப்போதும், எதிலும் பா.ஜ.க-வோடு ஒப்பிடாதீர்கள். தற்போது தமிழ் நாட்டுக்குத் தேவையான கட்சி அ.தி.மு.க-தான். எல்லாத் தேர்தல்களிலும் எங்கள் தலைமையில்தான் கூட்டணி அமையும். பா.ஜ.க-வின் ‘சவுண்டு’க் கெல்லாம் பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை.”

“எடப்பாடி பழனிசாமி தலைமையிலான உங்கள் அணியை, ‘டெண்டர் அணி’ என்று ஓ.பி.எஸ் தரப்பினர் கூறுகிறார்களே?”

“பிரிந்தவர்கள்... கோபத்தில் இருப்பவர்கள்... கூடக்குறைய ஏதாவது சொல்வார்கள். ஒன்றாகி விட்டால் எல்லாம் சரியாகிவிடும். இப்போது ஒரு குரூப் விலகி நிற்கிறது. அண்ணன் ஓ.பி.எஸ் உள்ளிட்ட யாராக இருந்தாலும், செய்த தவற்றுக்கு மனம் திருந்திவந்தால், கழக இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடியார் நினைத்தால் இணைத்துக்கொள்வார்.”

“சமூகரீதியாக அ.தி.மு.க பிளவுபட்டிருப்பதாகச் சொல்கிறார்களே...”

“அ.தி.மு.க-வில்தான் எங்கள் சமூகத்தினர் பெரும்பாலோர் இருக்கிறோம். அ.தி.மு.க எப்போதுமே முக்குலத்தோர் கட்சிதான் என்று மக்கள் சொல்கிறார்கள். இருந்தாலும், தேர்தல் காலத்தில் சமூகப் பிளவெல்லாம் அடிபட்டுப் போகும். அனைத்துச் சமூகத்தினரும் ஒன்றிணைந்து ஒரே அ.தி.மு.க-வாக நிற்போம்.”

“பா.ஜ.க-வின் ‘சவுண்டு’க்கெல்லாம் பதில் சொல்லவேண்டிய அவசியமில்லை! - செல்லூர் ராஜூ ஓப்பன் டாக்

“இவர்களுக்கு உங்கள் அட்வைஸ் என்ன?” என்று கேட்டபோது...

முதல்வர் ஸ்டாலின்: ஆட்சி அதிகாரத்தில் தன்னுடைய குடும்பத்தினர் தலையிடாமல் தடுக்க வேண்டும். தனது பார்வையிலேயே ஆட்சி நடத்தினால் மக்களிடம் செல்வாக்கு பெறலாம்.

உதயநிதி: தம்பி இன்னும் உழைத்துவரவும். சினிமாதுறையையே ஒரு பயத்தில் வைத்திருக்கிறார். அதில் தலையிடாமல், சுதந்திரமாகச் செயல்படவிட வேண்டும்.

சீமான்: பேச்சு மட்டும் போதாது, செயலும் வேண்டும்.

அண்ணாமலை: அவர் சிறப்பாகச் செயல்படுகிறார். போதும்.

ஓ.பி.எஸ்: அவர் பெரியவர். மூத்தவர். அவருக்கு அட்வைஸ் செய்யுமளவுக்கு நான் பெரியவன் இல்லை.

சசிகலா: நாம் நினைப்பதற்கெல்லாம் அப்பாற்பட்டவர் அவர்.

எடப்பாடி பழனிசாமி: தென் மாவட்டங்களில் அதிக சுற்றுப்பயணங்கள் மேற்கொள்ளுங்கள்.