அரசியல்
அலசல்
Published:Updated:

உதயநிதி ஒற்றை செங்கல்லை தூக்கினார்... கட்டுமான பொருள்கள் விலை விர்ர்! - செல்லூர் கே.ராஜூ லகலக

செல்லூர் கே.ராஜூ
பிரீமியம் ஸ்டோரி
News
செல்லூர் கே.ராஜூ

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, அண்ணல் அம்பேத்கர் ஆகியோரின் உழைப்பில் உருவான திராவிட சித்தாந்தம் தமிழ்நாட்டில் ஆழமாக வேரூன்றியிருக்கிறது

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் எப்போதும் தன்னை டிரெண்டிங்கில் வைத்துக்கொண்டவர் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ. தற்போது, ‘தி.மு.க அமைச்சர்களுக்கு வாய்க்கொழுப்பு’ என்று விமர்சித்திருப்பதன் மூலம் மீண்டும் வைரலாகியிருக்கிறார். அவரிடம், சில கேள்விகளை முன்வைத்தேன்...

“தி.மு.க-வினரைத் திட்டி மீண்டும் பேசுபொருளாகியிருக்கிறீர்கள்... ஆனால், அது ரசிக்கும்படி இல்லை என்கிறார்களே உங்கள் ரசிகர்கள்?”

“பாண்டியராஜன் நடித்த ‘வாய்க்கொழுப்பு’ படத்தில் வாய்க்குவந்தது எல்லாவற்றையும் துடுக்காகப் பேசிவிடுவார். அந்த மாதிரி தி.மு.க அமைச்சர்கள், தலைவர்கள் துடுக்காகப் பேசுவதும், அது அந்தக் கட்சிக்கே பாதிப்பை ஏற்படுத்துவதும் வருத்தமாக இருந்தது. அதனால்தான் அப்படிச் சொன்னேன்.”

“தி.மு.க-வுக்கு பாதிப்பு ஏற்பட்டால் உங்களுக்கு என்ன நஷ்டம்?”

“சாதியைவைத்து, ‘நாங்கள் போட்ட பிச்சை’ என்று தரக்குறைவாக பேசுவது... எல்லா ஓசியையும் அனுபவித்துவிட்டு மக்களை ‘ஓசி’ என்று சொல்வது, இந்து மதத்தைக் கொச்சையாக விமர்சிப்பதெல்லாம் ஒரு பேச்சா... அந்த அடிப்படையிலேயே, மக்கள் விரோதச் சொற்களை உபயோகித்துவரும் தி.மு.க-வினரை ‘வாய்க் கொழுப்பு’ என்று உரிமையோடு சொன்னேன். ஏனென்றால், அவர்கள் எங்களுக்குப் பங்காளிகள் இல்லையா... அவர்களுக்கடுத்து நாங்கள்தானே ஆட்சிக்கு வரப்போகிறோம்?”

உதயநிதி ஒற்றை செங்கல்லை தூக்கினார்... கட்டுமான பொருள்கள் விலை விர்ர்! - செல்லூர் கே.ராஜூ லகலக


“ `அடுத்து திராவிடக் கட்சியான நாங்கள்தான் ஆட்சிக்கு வரப்போகிறோம்’ என்கிறீர்கள்... ஆனால், ஆர்.எஸ்.எஸ் விவகாரத்தில் அமைதி காக்கிறதே அ.தி.மு.க?”

“தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, அண்ணல் அம்பேத்கர் ஆகியோரின் உழைப்பில் உருவான திராவிட சித்தாந்தம் தமிழ்நாட்டில் ஆழமாக வேரூன்றியிருக்கிறது. எனவே, தமிழ்நாடு எப்போதும் திராவிட பூமிதான். தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் எப்போதும் நடக்கக்கூடிய ஒன்றுதான். தி.மு.க அரசு வேண்டுமென்றே தடைவிதித்தது. அது நீதிமன்றம் போகும்போது, ‘ஆர்.எஸ்.எஸ் தாக்கம், தமிழ்நாடு இந்து பூமியாக மாறுகிறது...’ என்பது போன்ற வாதங்கள் பூதாகரமாகத் தெரிகின்றன. இது என்னமோ தி.மு.க மறைமுகமாக ஆர்.எஸ்.எஸ் வளர்ச்சிக்கு உதவியதுபோலத்தான் இருக்கிறது.”

“ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் என அனைவரும் ஒன்றாகச் சந்திக்கும் நேரம் மிக விரைவில் வரும்’ என்று சசிகலா சொல்லியிருக்கிறாரே?”

“இது குறித்துப் பேசுவதற்கு அ.தி.மு.க-வில் உயர்மட்டக்குழு போட்டிருக்கிறார்கள். இடைக்காலப் பொதுச்செயலாளரிடம் எல்லா விஷயங்களையும் ஒப்படைத்துவிட்டோம். அவராகப் பார்த்து எந்த முடிவும் எடுக்கலாம். இதில் நான் கருத்து சொல்ல ஒன்றுமில்லை.”

“ஆனால், பொதுக்குழு முடியும் வரை பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தக் கூடாது என்று நீதிமன்றம் தடை விதித்திருக்கிறதே..?”

“நீதிமன்றம் சொல்லி ஒரு கட்சியை வழிநடத்த முடியாது. ஜனநாயக முறையில் பெரும்பான்மைத் தொண்டர்கள், நிர்வாகிகள் யார் பக்கம் இருக்கிறார்களோ அவர்கள்தான் கட்சியை வழிநடத்த முடியும். எங்கு பெரும்பான்மை இருக்கிறதோ, அங்குதான் வலிமை இருக்கும். எங்கள் அணி வலுவாகவே இருக்கிறது.”

“தாமதமாகும் மதுரை எய்ம்ஸ்... மண்ணின் மைந்தனாக உங்கள் நிலைப்பாடு?”

“தம்பி உதயநிதி என்றைக்கு எய்ம்ஸ் செங்கலைத் தூக்கினாரோ அன்று முதல் செங்கல், மணல், ஜல்லி, இரும்பு போன்ற கட்டுமானப் பொருள்களின் விலை விர்ரென எகிறிவிட்டது. அதனால் இந்த ஆட்சியில் கட்டடத் தொழிலாளர்கள் ரொம்பவே பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். முதலமைச்சரும், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சரும் தக்க கவனம் செலுத்தி, சீக்கிரம் எய்ம்ஸைக் கொண்டுவர மதுரையின் பிரதிநிதியாகக் கேட்டுக்கொள்கிறேன்.”

“வரும் நாடாளுமன்ற தேர்தலில், ‘ஒரு கோடி வாக்குகள்’ என்ற இலக்குடன் சீமான் களமிறங்கியிருக்கிறார். இதனால் அ.தி.மு.க-வுக்கு ஏதும் பின்னடைவாகுமா?”

“ஜனநாயக தேசத்தில் அவரவர் கட்சியை வளர்க்க என்ன வேண்டுமானாலும் பேசலாம். அந்த அடிப்படையில் அவர் தொண்டர்களை உற்சாகப்படுத்தவும், ஆர்வப்படுத்தவும் அப்படிச் சொல்லியிருப்பார். அவர் எண்ணம் ஈடேறுமா என்பதை எல்லோரும் பார்க்கத்தானே போகிறோம்... அதற்கு தம்பிக்கு ஒரு வாழ்த்துகள்.”

“நீங்கள் கவனித்துவந்த கூட்டுறவுத்துறையின் செயல்பாடு இப்போது எப்படியிருக்கிறது?”

“செயல்பாடு எப்படியிருக்கிறது என்று நான் சொல்வதைவிட துறை அதிகாரிகள், பணியாளர்களிடம் கேட்டால்தான் சரியாக இருக்கும். இப்போது இருக்கும் அமைச்சர் நமக்கு சொந்தக்காரர் வேறு. அதனால் நான் சொன்னால் சரியாக இருக்காது.”

“மதுரையில் அமைச்சர் பி.டி.ஆரை எதிர்க்கும் அளவுக்கு, அமைச்சர் மூர்த்தி மீது நீங்கள் விமர்சனங்கள் வைப்பதில்லையே... அவரும் சொந்தக்காரரா?”

“அமைச்சர் மூர்த்தி முரண்பாடாக ஏதும் செய்வதில்லை. அதேபோல, நம்ம பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனையும் குறைத்து மதிப்பிடவில்லை. என்ன ஒன்று, அவர் தேவையில்லாமல் பேசுகிறார். அதனால் அவருக்கு பதில் சொல்லவேண்டியிருக்கிறது. ‘கூட்டுறவுத் துறையில் ரூ.15,000 கோடி ஊழல் செய்ததாக ஆதாரம் இருக்கிறது’ என்கிறார். ஒரு நிதியமைச்சரே இப்படிச் சொல்லும்போது, ‘ஓ... செல்லூர் ராஜூ அடிச்்சுட்டாண்டா’ என்றுதானே மக்களும் நினைப்பார்கள்... நிதியமைச்சராக இருப்பவர் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசக் கூடாது. அவருக்கு இதெல்லாம் தெரியாமல் இல்லை. தெரிந்தும் அரைவேக்காடாக நடந்து கொண்டிருக்கிறாரா... எனத் தெரியவில்லை. ஆட்சிக்கு வந்து பதினைந்து மாதங்களுக்கு மேல் ஆகின்றன. சொந்தத் தொகுதிக்கு ஏதும் செய்யாமல் அதை மறைக்க வீண் பழி சுமத்துவதை எப்படி ஏற்க முடியும்?’’