Published:Updated:

``எடப்பாடியார் சிங்கம்... நீங்கள்தான் அடிமைகள்!" - கொதிக்கும் எஸ்.பி.வேலுமணி

எஸ்.பி.வேலுமணி

``கருணாநிதி இருக்கும்போதுகூட இந்த அளவுக்கு மோசமான ஆட்சி இருந்ததில்லை. ஸ்டாலின் செய்த ஒரே சாதனை உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்கியதுதான்." - எஸ்.பி.வேலுமணி

``எடப்பாடியார் சிங்கம்... நீங்கள்தான் அடிமைகள்!" - கொதிக்கும் எஸ்.பி.வேலுமணி

``கருணாநிதி இருக்கும்போதுகூட இந்த அளவுக்கு மோசமான ஆட்சி இருந்ததில்லை. ஸ்டாலின் செய்த ஒரே சாதனை உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்கியதுதான்." - எஸ்.பி.வேலுமணி

Published:Updated:
எஸ்.பி.வேலுமணி

கோவை, தொண்டாமுத்தூர் பகுதியில் தி.மு.க அரசைக் கண்டித்து, அ.தி.மு.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ``தமிழ்நாட்டில் எதுவும் செய்யாத வெற்று ஆட்சி நடக்கிறது. முதலமைச்சர் ஸ்டாலின் சொல்வது எதையும் செய்யவில்லை. முதல்வர் ஸ்டாலின் தினமும் காலை போட்டோ ஷூட் செய்கிறார்.

அதிமுக ஆர்ப்பாட்டம்
அதிமுக ஆர்ப்பாட்டம்

ஒன்றும் தெரியாத, கையாலாகாத முதலமைச்சர் ஸ்டாலின், அ.தி.மு.க ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களைத்தான் ஸ்டிக்கர் ஒட்டி திறந்துவைக்கிறார். தி.மு.க அரசு கோவை மாவட்டத்தை, குறிப்பாக தொண்டாமுத்தூர் தொகுதியைப் புறக்கணிக்கிறது.

தேர்தல் வாக்குறுதியில், `பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும்’ என தி.மு.க கூறியிருந்தது. அப்படிப் பார்த்தால் இந்நேரம் ரூ.18,000 வழங்கியிருக்க வேண்டும். சொத்து வரி, மின்கட்டண உயர்வு மக்களை வாட்டி வதைக்கிறது. முதியோர், விதவை உதவித்தொகையை நிறுத்திய பாவம் சும்மா விடாது. தி.மு.க கூட்டத்திலேயே பெண் போலீஸ் ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டிருக்கிறது.

வேலுமணி
வேலுமணி

தி.மு.க ஆட்சியில் போலீஸாருக்கே பாதுகாப்பு இல்லை. நாடாளுமன்றத் தேர்தலில் எடப்பாடியார் தலைமையில் அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். தி.மு.க-வினர் காவல்துறையினருடன் இணைந்து கஞ்சா விற்கிறார்கள்.

கருணாநிதி இருக்கும்போதுகூட இந்த அளவுக்கு மோசமான ஆட்சி இருந்ததில்லை. ஸ்டாலின் செய்த ஒரே சாதனை உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்கியதுதான். தி.மு.க ஆட்சி போய்விடும். தி.மு.க-வினரே இந்த ஆட்சி வேண்டாம் எனச் சொல்லும் அளவுக்கு மோசமான ஆட்சி நடக்கிறது.

 ஸ்டாலின்
ஸ்டாலின்

ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, பெட்டியோடு வந்து மனுக்களைப் பெற்றார். அந்தப் பெட்டி எங்கே‌ இருக்கிறது... ஸ்டாலின் குடும்பம் ரூ.50,000 கோடி கொள்ளையடித்திருக்கிறது. அ.தி.மு.க-வினர் மீது வழக்கு போட்டு, ஸ்டாலின் குடும்பம் கொள்ளையடிக்கிறது.

தி.மு.க கூட்டணியிலிருக்கும் கட்சிகளெல்லாம், எங்கள் ஆட்சியில் தொட்டதற்கெல்லாம் ஆர்ப்பாட்டம் நடத்தின. எங்களைப் பார்த்து அடிமைகள் என்கிறார்கள். நாங்கள் எந்தக் காலத்திலும் யாருக்கும் அடிமைகள் கிடையாது. எடப்பாடி பழனிசாமி யாருக்கும் அடிமை இல்லை. சிங்கம்போல இருப்பார். கம்யூனிஸ்ட்டுகள், காங்கிரஸ், ம.தி.மு.க-வினர்தான் தி.மு.க-வுக்கு அடிமையாக இருக்கிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

தி.மு.க சொல்வதற்கெல்லாம் குட்டிக்கரணம் போடுகின்றனர். சொத்து வரி, மின்கட்டண உயர்வைக் கண்டித்தார்களா... உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்கியதைக் கண்டித்தார்களா... நீங்கள்தான் அடிமைகள். தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வராது. சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றிபெற்று எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராக வருவார்" என்றார்.