Published:Updated:

`அர்ஜுனன் அடிக்கவந்தார்; தடுத்து நிறுத்தினேன்!’- சேலம் டோல்கேட்டில் என்ன நடந்தது?

முன்னாள் எம்.பி அர்ஜுனன்
முன்னாள் எம்.பி அர்ஜுனன்

முன்னாள் எம்.பி அர்ஜுனனுக்கும் காவல்துறைக்கும் கைகலப்பு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழகக் காவல்துறைக்குத் தீராத அவமானத்தை ஏற்படுத்தியிருக்கிறது சாத்தான்குளம் பிரச்னை. இந்தப் பிரச்னை தணிவதற்குள் நேற்று இரவு சேலம் கருப்பூர் டோல்கேட் பகுதியில் முன்னாள் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜூனனுக்கும், காவல்துறைக்கும் கைகலப்பு ஏற்பட்டது. இந்தச் சம்பவம் சமூக வலைதளத்தில் வைரலாகியிருக்கிறது.

காவலர் ரமேஷ்
காவலர் ரமேஷ்

இதுபற்றி அ.தி.மு.க முன்னாள் சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜூனனிடம் கேட்டதற்கு, ``நான் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஒரு முறை பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்திருக்கிறேன். தற்போது வரை அ.தி.மு.க கட்சியில் இருக்கிறேன். நான் சேலத்தில் குடும்பத்தினரோடு வசித்து வருகிறேன். என்னுடைய தோட்டம் சேலத்தை அடுத்த ஓமலூரில் இருக்கிறது. இரண்டு தினமாக தோட்டத்தில் இருந்தேன்.

நேற்று சற்று உடல் நிலை சரியில்லாததால் இரவு சுமார் 8:00 மணிக்கு வீட்டிற்கு வந்துகொண்டிருந்தேன். அப்போது ஓமலூரில் உள்ள டோல்கேட்டில் மப்டியில் இருந்த இரண்டு காவலர்கள் என் வண்டியை நிறுத்தினார்கள். அவர்களிடம், `நான் முன்னாள் எம்.எல்.ஏவாகவும், எம்.பியாவும் இருந்திருக்கிறேன். தற்போது லோக்கலில்தான் இருக்கிறேன். என் தோட்டத்திலிருந்து வீட்டுக்கு போயிக்கொண்டிருக்கிறேன்' என்றேன்.

'லோக்கல்ன்னா...பெரிய ஆளா?, எம்.எல்.ஏவாக இருந்ததற்கான ஆதாரத்தைக் காட்டு' என்றார்கள். 'ஆதாரத்தை நெற்றியில் மாட்டிக்கொண்டிருக்கவா முடியும்? வீட்டில் இருக்குன்னு' சொன்னேன். `முதலில் வண்டியை விட்டு கீழே இறங்கிக் காவல் நிலையத்திற்கு வா...’ என்று ஒருமையில் திட்டி கீழே தள்ளிவிட்டார்கள். உடனே எஸ்.எஸ்.ஐ ஒருவர் வந்து ஆதாரத்தைக் காட்டச் சொல்லித் திட்டினார்.

அர்ஜுனன்
அர்ஜுனன்

அதன் பிறகே, `உங்களுக்கெல்லாம் யார் இந்த அதிகாரத்தைக் கொடுத்தது. உங்களுடைய அராஜகத்தால் ரெண்டு உயிர்களைக் கொன்று விட்டீர்களே?’ என்று திட்டினேன். அதை மட்டும் வீடியோ எடுத்துப் பரப்பி இருக்கிறார்கள். எனக்கு தற்போது வயது 77 ஆகிறது. கொஞ்ச நேரத்தில் வயது முதிர்ச்சியின் காரணமாக நாக்கு வறண்டுவிட்டது. படபடப்பு ஏற்பட்டதால் வந்து விட்டேன். காவல்துறையின் அராஜகம் எல்லை மீறிப் போகிறது'' என்றார்.

இதுபற்றி இரும்பாலை காவல் நிலையத்தின் எஸ்.எஸ்.ஐ ரமேஷிடம் கேட்டதற்கு,``யாராக இருந்தாலும் அவர்களிடம் அடையாள அட்டையைக் காட்டிய பிறகே அனுமதிக்கச் சொல்லி எங்கள் உயர் அதிகாரிகள் அறிவுறுத்தி இருக்கிறார்கள். முன்னாள் எம்.எல்.ஏவின் காரை நிறுத்தி விசாரித்து இருக்கிறார்கள். அவர், முன்னாள் எம்.எல்.ஏ என்று கூறி இருக்கிறார். அடையாள அட்டையைக் காட்டச் சொல்லியதற்கு காட்டவில்லை. நான் போய் கேட்டதற்கு அவர், என்னை அடிக்க வந்ததால் தடுத்து நிறுத்தினேன். மற்றபடி நான் எந்தத் தவறும் செய்யவில்லை'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு