Published:Updated:

ஓ.பி.எஸ் 180 டிகிரி வளைவார்... இ.பி.எஸ் 150 டிகிரி வளைவார்!

விளாசும் கே.சி.பழனிசாமி

பிரீமியம் ஸ்டோரி
அ.தி.மு.க-வுக்குள் நிகழ்ந்துவந்த களேபரங்கள் ஒருவழியாக முடிவுக்கு வந்துவிட்டன. “எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர்” என்று ஓ.பன்னீர்செல்வமே அறிவித்துவிட்டார். கட்சி வழிகாட்டுதல்குழுவும் அமைக்கப்பட்டுவிட்டது. இந்தநிலையில், கட்சிக்குள் சாதியை முன்னிலைப்படுத்துவது, குறிப்பிட்ட அமைச்சர் களின் ஆதிக்கம், தலைமையின் கொள்கையற்ற, உறுதியற்ற நிலை எனப் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்துப் பேசிவருகிறார் அ.தி.மு.க தலைமையால், கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருக்கும் கே.சி.பழனிசாமி. அவரைச் சந்தித்துப் பேசினோம்...

“அ.தி.மு.க-வில் பிரச்னைகள் ஒருவழியாக முடிந்துவிட்டது தானே..?”

“என்னால் அப்படி உணர முடியவில்லை. இதில் ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் சகாப்தம் முடிவுக்கு வந்து, நாவலரைப்போல இரண்டாம் இடத்துக்கு மட்டுமே தகுதியானவர் என நிறுத்தப்பட்டிருக்கிறார். நான்கு பேர் போட்டியிட்டு, அதிலிருந்து இ.பி.எஸ் தேர்ந்தெடுக்கப் பட்டிருந்தால் அது சரியாக இருந்திருக்கும். ஆனால், யாருமே போட்டியிடவில்லை. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலங்களில், அடிப்படைத் தொண்டன் பொதுச் செயலாளரைத் தேர்ந்தெடுத்து, அவர் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்படுவார். வரும் தேர்தலில் ஆட்சியைப் பிடிக்காவிட்டால், இ.பி.எஸ்-ஓ.பி.எஸ் இருவரும் இல்லாமல், ஒரு புதிய தலைமையைத் தொண்டர்கள் உருவாக்குவார்கள்.”

“முடிவு செய்யப்பட்டிருக்கும் இந்தத் தலைமை எந்த வகையிலும் அ.தி.மு.க-வுக்குச் சாதகமாக இருக்காதா?”

“எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, கருணாநிதி போன்ற தலைவர்கள் இதுபோலத் தேர்ந்தெடுக்கப்படும்போது, தொண்டர்களுக்கு அவர்கள் எழுதும் கடிதத்தில் கொள்கை முழக்கம் வலுவாக இருக்கும். அதுவே எல்லோரிடமும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். எடப்பாடி பழனிசாமியும் கடிதம் எழுதியிருக்கிறார். அதில், ‘உழவனும் முதல்வராக முடியும், வாரிசு அரசியல் இருக்காது’ என்பதைத்தான் சொல்கிறார். எந்தக் கொள்கை முழக்கமும் அதில் இல்லை. ஊழல் இருக்காது என்று சொல்ல அவரது மனசாட்சியே இடம் கொடுக்கவில்லை. மேலும், அ.தி.மு.க சாதிய பிம்பம் கொண்டதல்ல. ஆனால் இன்று, சாதியைப் பிரதானமாக வைத்துத்தான் தேர்வுகளே நடந்திருக்கின்றன. சாதியைவைத்து அரசியல் செய்வது ஆபத்தைத்தான் ஏற்படுத்தும். அ.தி.மு.க-வுக்கு வாக்களித்த மக்களும் தொண்டர்களும் தோற்றுவிட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.”

“7-ம் தேதி அதிகாலை வரை பேச்சுவார்த்தை நடந்தது என்கிறார்கள். முடிவு எப்படி எடுக்கப்பட்டது, என்னதான் நடந்தது?”

“பா.ஜ.க தலையீடுதான். இந்தக் காலகட்டத்தில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் யதேச்சையாகத்தான் இருந்தார் என நான் நம்பவில்லை. தமிழகத்தில் `திராவிடம் Vs இந்துத்வா’ என்ற நிலையை உருவாக்கத்தான் பா.ஜ.க, காய்நகர்த்திவருகிறது. அதற்காக, அது சில குழப்பங்களை ஏற்படுத்தி, பேரமும் நடத்தியிருக்கிறது.”

கே.சி.பழனிசாமி
கே.சி.பழனிசாமி

“ `புனித ஜார்ஜ் கோட்டையில் புது வரலாறு படைப்போம்’ என இ.பி.எஸ் அறிக்கையில் சொல்லியிருக்கிறாரே..?”

“குறைந்தபட்சம் நல்ல சிந்தனையாளராகப் பார்த்து, எழுதி வாங்கி அறிக்கை வெளியிட்டிருக்கலாம். உழவன் மகன் முதல்வராவதால் என்ன நடக்கப்போகிறது... அவரது குடும்பம் நன்றாக இருக்கலாம். கூடவே, தங்கமணியும் வேலுமணியும் நன்றாக இருக்கலாம். ஒருபக்கம், மத்திய அரசின் வேளாண்மைச் சட்டங்களை ஆதரிக்கிறார். மறுபக்கம், `நான் ஒரு விவசாயி’ என்று பெருமிதப்படுகிறார். `விவசாயிகள் எல்லோரும் வேளாண்மையை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்து கான்ட்ராக்ட் எடுத்துச் சம்பாதித்துக்கொள்ளுங்கள்’ என்று சொல்கிறாரா? மேலும், அவர் 1970-களில் கிளைச்செயலாளராகத் தனது பயணத்தைத் தொடங்கியதாகச் சொல்கிறார்; அது தவறு. அப்போது அவர் கட்சியிலேயே இல்லை. 87-88 காலகட்டத்தில்தான் ‘ஜெ’ பேரவையிலேயே இணைந்தார்.”

“சரி, இவர்களின் டீலிங்தான் என்ன?”

“பர்சன்டேஜ், பங்கீடுதான் இவர்களின் டீலிங். இவர்கள் எல்லோருமே இப்போது சசிகலாவைக் குற்றம்சாட்டுகிறார்கள். ஆனால், ஒரு காலத்தில் இவர்கள் சசிகலாவுக்கு ஏஜென்ட்டுகளாக இருந்த வர்கள்தான். சசிகலாவின் கஜானா காப்பாளராக இருந்தவரே இ.பி.எஸ்-தான். இந்த ஏஜென்ட்டு களெல்லாம் சேர்ந்து ஒரு முடிவெடுத்தால் என்னவாகும்... அவர்களின் வளர்ச்சி பெருகும்.”

“வழிகாட்டுதல்குழுவில் பல சீனியர்களின் பெயர்கள் இல்லையே..?”

“இது, வழிநடத்துகிற குழு அல்ல. ஓ.பி.எஸ், இ.பி.எஸ் கட்டளைகளின் வழிநடக்கும் குழு. செங்கோட்டையன், அன்வர் ராஜா போன்றோரைக் குழுவில் இணைத்திருக்க வேண்டும். ஜெயக்குமார், இ.பி.எஸ் சொல்வதை தினசரி பேட்டியாகக் கொடுப்பார். தங்கமணியும் வேலுமணியும் அவர்களின் கொள்முதல் ஏஜென்ட்டுகளாக இருப்பார்கள். மோகன் எதுவுமே பேச மாட்டார். 69 பேருக்குப் புதிதாக மாவட்டச் செயலாளர் பதவி கொடுத்திருக்கிறார்கள். அவர்களுடன் சேர்த்து இந்த 11 பேருக்கும் சீட் கிடைக்கும், இது ஊழலை அதிகப்படுத்துவதாகத்தான் இருக்கும்.”

“இந்த முடிவு நிலையானதாக இருக்குமா?”

“ஓ.பி.எஸ் 180 டிகிரி வளைவார் என்றால், இ.பி.எஸ் 150 டிகிரி வளைவார். அவ்வளவுதான் வித்தியாசம். அமைச்சர்களும் அப்படித்தான். எப்போது வேண்டுமானாலும் யூ-டர்ன் அடிப்பார்கள். நாளைக்கே மகனுக்கு சீட் இல்லை என்றாலோ, தனக்கு அமைச்சர் பதவி இல்லை என்றாலோ, ‘இ.பி.எஸ்-க்கு செக் வைக்க வேண்டும்’ என பா.ஜ.க சிக்னல் கொடுத்தாலோ, ஓ.பி.எஸ் மீண்டும் தர்மயுத்தம் நடத்துவார்.”

“எந்தவிதத்திலும் இனி உங்களை ஏற்க மாட்டார்கள் என்ற நிலைக்கு வந்துவிட்டதால், நீங்கள் அவர்களைக் கடுமையாக எதிர்க்கிறீர்களா?”

“பொதுச்செயலாளர் நியமனம் தொடர்பாக, அவர்களுடன் இணக்கமாக இருந்த காலகட்டத்திலேயே தேர்தல் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தேன். நான் எந்தக் காலத்திலும் அ.தி.மு.க-வுக்கு எதிராக இருக்க மாட்டேன். தேர்தலில் அனைவரும் இணைந்து பணியாற்றி, அ.தி.மு.க-வை வெற்றிபெறவைக்க நான் தயார். அதற்காக எனது கொள்கைகளிலிருந்து பின்வாங்க மாட்டேன்.”

“முதலமைச்சர் வேட்பாளர் அறிவிக்கப்பட்ட அதே நாளில், சசிகலாவின் 2,000 கோடி ரூபாய் சொத்தை வருமானவரித் துறை முடக்கியிருக்கிறதே..?”

“அ.தி.மு.க சம்பந்தப்பட்ட விஷயங்களை பா.ஜ.க-தான் முடிவுசெய்கிறது என்பதைச் செயலால் உணர்த்தியிருக்கிறார்கள். `எங்கள் முடிவுகளால்தான் இது அரங்கேற்றப் பட்டிருக்கிறது’ என்ற செய்திதான் அது.

அ.தி.மு.க-வை வாழவும் விடாமல், சாகவும் விடாமல் தங்களது கட்டுப்பாட்டிலேயே வைத்திருப்பார்கள் என்பதைத்தான் இது மீண்டும் உணர்த்துகிறது”.

“வரும் தேர்தல் அ.தி.மு.க-வுக்கு எப்படி இருக்கும்?”

“வழிநடத்துதல்குழுவில், அனைத்துச் சமூகம் சார்ந்தவர்களும் இருக்க வேண்டும். அப்படி நடக்கவில்லை. இதனால், தென் மாவட்டத்தினர் மற்றும் சிறுபான்மையினர் மத்தியில் அதிருப்தி நிலவும். இது தேர்தலில் எதிரொலிக்கும். கட்சியின் வளர்ச்சி நிதி, சில அமைச்சர்களின் வசம் மட்டுமே இருக்கிறது. அவர்கள் கைகாட்டுபவர்களுக்கு சீட் கொடுத்தால்தான், செலவு செய்வோம் எனச் சொல்கிறார்கள். முழுக்க முழுக்கப் பணத்தை நம்பி மட்டுமே தேர்தலைச் சந்திக்கத் தயாராகிறார்கள். அ.தி.முக-வின் வெற்றியை இந்த முடிவுகள் கடுமையாக்கியிருக்கின்றன.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு